கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

‘கவுட்’ மூட்டுவலி வருவது ஏன்?

கு.கணேசன்
26 Jun 2022, 5:00 am
1

‘வரும் முன் காக்க’ எனும் இந்தத் தொடரில் சென்ற வாரம் ‘மூட்டுவலி’ குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் சின்னச் சின்ன மூட்டுகளில் ஏற்படும் ‘கவுட்’ (Gout) எனும் சிறு கணு மூட்டுவலி தொடர்பில் எழுதவில்லை. ‘அருஞ்சொல்’ வாசகர் ஒருவர் அது தொடர்பாகவும் எழுதும்படி கேட்டுக்கொண்டதால், இந்தக் கட்டுரை.

‘கவுட்’ என்பது என்ன?

‘கவுட்’ என்பது சின்னச் சின்ன எலும்பு மூட்டுகளில் ஏற்படும் ஓர் அழற்சி நிலை. இது பெரும்பாலும் கால் பெருவிரல் எலும்பு மூட்டில் ஏற்படுகிறது. சிலருக்கு, கை விரல், மணிக்கட்டு, முழங்கை மூட்டுகளிலும் இது ஏற்படுகிறது. 

என்ன அறிகுறிகள் ஏற்படும்?

கால் பெருவிரலுக்கு அருகில் வீக்கம் ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறி. அந்த இடம் சிவந்து காணப்படும்; வலிக்கும். இரவு நேரத்தில் வலி கடுமையாகும். உறக்கம் தொலையும் அளவுக்கு வலி படுத்தி எடுக்கும். பகலில் போகப்போக வலி குறையும். வீக்கத்தைத் தொட்டால் சூடாக இருக்கும்; வலி கடுமையாகும்.

பலருக்கு இந்த வலி எந்த சிகிச்சையும் எடுக்காமலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். அடுத்ததாக, சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து மறுபடியும் அந்த வீக்கமும் வலியும் வந்து சேரும். வீட்டுக்கு வருகிற விருந்தாளிபோல ‘கவுட்’ மூட்டுவலி அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும். கடைசியில், பெருவிரல் எலும்பில் வீக்கம் மட்டும் நிரந்தரமாகிவிடும். இதைக் ‘கணுப்பெருவீக்கம்’ (Tophus) என்கிறோம். இது அந்த எலும்பையும் அதைச் சார்ந்த நாண்களையும் சிதைத்துவிடும். இதனால் மறுபடியும் வலி கூடும்.

என்ன காரணம்?

தற்போது நாம் மேற்கொள்ளும் மேற்கத்திய உணவுமுறை காரணமாக ‘கவுட்’ மூட்டுவலி அநேகம் பேருக்கு வருகிறது. உலக அளவில் 100 பேரில் 8 பேருக்கு இந்த நிலைமை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

‘கவுட்’ மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம் ஓர் அமிலம். ‘யூரிக் அமிலம்’ என்பது அதன் பெயர். கவுட் மூட்டுவலியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த அமிலத்தை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யூரிக் அமிலம் என்பது என்ன?

யூரிக் அமிலம் என்பது கல்லீரலில் உண்டாகிற ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ எனும் மரபணுச் சங்கிலியின் உற்பத்திக்குப் பியூரின் எனும் மூலக்கூறுகள் தேவை. இவை நாம் சாப்பிடும் அசைவ உணவில் அதிகம் இருக்கின்றன. சைவ உணவுகளில் தேவைக்கு இருக்கின்றன.

குடலில் இவை உறிஞ்சப்பட்டு, உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதன் கடைசிப் பொருளாகவும் கழிவுப் பொருளாகவும் யூரிக் அமிலத்தை உற்பத்திசெய்கின்றன. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இதை முறைப்படி சிறுநீரில் வெளியேற்றிவிடுகின்றன. மிச்சமிருக்கும் அமிலம் ரத்தத்தில் இருக்கிறது. பெரும்பாலான விலங்குகள் அசைவம்தான் சாப்பிடுகின்றன. அப்படியானால், அவற்றுக்கும் யூரிக் அமிலப் பிரச்சினை வரவேண்டும் அல்லவா? விலங்குகளுக்கு ‘யூரிகேஸ்’ எனும் என்சைம் இருக்கிறது. இது யூரிக் அமிலத்தை முழுவதுமாகச் செரித்துவிடுகிறது. இதனால் விலங்குகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. யூரிகேஸ் என்சைம் நமக்கு இல்லை என்பதால்தான் பிரச்சினை. அளவுக்கு மீறி பியூரின் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால், யூரிக் அமிலம் உடலில் அதிகரித்துவிடும்.

கல்லீரலில் உள்ள பிரச்சினை காரணமாக இது அதிக அளவில் உற்பத்தி ஆனாலும், உடலில் வேறு ஏதாவது உறுப்பில் பிரச்சினை இருந்து, யூரிக் அமிலம் வெளியேறுவதற்கு அது தடையாக இருந்தாலும் இதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும்.

பாதிப்புகள் என்னென்ன?

சாதாரணமாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மி.கி. வரையிலும் ஆண்களுக்கு 8 மி.கி. வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிகங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’ எனும் சிறு கணு மூட்டுவலி வருகிறது. மேலும், இந்த அமிலம் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அப்போது சிறுநீரகங்களையும் பாதிக்கிறது.

மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உள்ளவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிப்பது ஆபத்தானது. அதிகரிக்கும் ஒவ்வொரு மில்லி கிராமும் இதயநோயை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே இதயம் செயல் இழந்திருந்தால் (Heart failure), அந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.

யாருக்கு வருகிறது?

யூரிக் அமில பாதிப்பு பெரும்பாலும் ஆண்களுக்கே அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்றபிறகு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பரம்பரைரீதியாகவும் இது ஏற்படலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு, சோரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, உடற்பருமன் உள்ளவர்களுக்கு இது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது.

அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், இரு சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கும், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ‘லீவோ டோப்பா’ (Levodopa) எனும் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிக்கும்.

என்ன உணவு சாப்பிடுவது?

சிறு தானிய உணவுகள், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், யூரிக் அமிலம் அதிகரிப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவிலும் மதுவிலும்தான் யூரிக் அமிலம் அதிகம். உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. சாராயம் குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது. இந்த அளவு யூரிக் அமிலத்தைச் சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் எவ்வளவு சிரமப்படும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

எனவே, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல், மீன், நண்டு போன்ற அசைவ உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பீர் உள்ளிட்ட மதுவை மறந்தால் யூரிக் அமிலம் அதிகமாவது தடுக்கப்படும். வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கேக், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்ற அதிக இனிப்புள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. சோடா குடிக்க வேண்டாம். உடற்பருமன் உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைத்தாலே இந்த அமிலப் பிரச்சினையும் சரியாகிவிடும். தினமும் ஓர் உடற்பயிற்சி செய்தால் இந்த அமிலம் கட்டுக்குள் வரும்.

மாத்திரை அவசியமா?

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளது எனும் காரணத்தாலேயே அதற்கு மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பதில்லை. உணவிலும் உடல் எடையிலும் கவனம் செலுத்தினாலே, இந்த அமிலம் குறைந்துவிடும். பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் உடலில் உள்ள பிரச்சினையை அடிப்படையாக வைத்து மாத்திரை தேவையா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இதற்கான மாத்திரை விஷயத்தில் மருத்துவரை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

மூட்டுவலியைக் குறைக்க வலி நிவாரணிகளைத் தேவைக்குப் பயன்படுத்தலாம். அதேசமயம், தொடர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. பலருக்கு வலி கடுமையாக இருக்கும்போது ஸ்டீராய்டு மாத்திரையையும் மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டு. அதையும் தொடர்ந்து எடுக்கக் கூடாது.

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

A.kasinathan   2 years ago

நன்றி மேலும் பிராஸ்டேட் சம்மந்தப்பட்ட விளக்கம் தேவைப்படுகின்றது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல்!முக்கியமானவை எண்கள்யூடியூப்சைபர் தொழில்நுட்பம்தடுப்பணைகள்சமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைஜனசங்கம்மக்கள் மொழிமுக்கனிஜோக்துப்புரவுத் தொழிலாளர்மராத்திய பிராமணர்கள்பெண்டென்டின்கலப்புப் பொருளாதாரம்சந்திரபாபு நாயுடுகடல் செல்வாக்குஆர்எஸ்எஸ்: ஆழம் மற்றும் அகலம்நிதின் கட்கரிஆ.சிவசுப்பிரமணியன்அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?தானியங்கித் துறைநவீன இயந்திரச் சூழல்தகவல் அறியும் உரிமைச் சட்டம்தமிழ் ஒன்றே போதும்வல்லபபாய் படேல்வக்ஃப் நிலங்கள்ரத்தமும் சதையும்அனுஷாஅவை பாதுகாப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!