கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

என்னவாகும் இந்திய ஜனநாயகம்?

யோகேந்திர யாதவ்
19 Sep 2023, 5:00 am
0

ந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயகப் பயணம் குறித்து சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன பேசப் போகிறார்கள்? நான் நினைக்கிறேன், மூன்று வெவ்வேறு விதமான கதைகளை இந்த சிறப்புத் தொடரில் நாம் கேட்க வாய்ப்பிருக்கிறது. அந்த மூன்றுமே தவறாகவும் நம்மைத் தீவிரமாக திசை திருப்பிவிடவும்கூட முடியும். அவற்றுக்குப் பதிலாக நமக்கு நாமே, உண்மையானதாகவும், நமக்குத் தகுதியைத் தருவதாகவும் உள்ளதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

மனிதர்கள் என்றாலே கதை சொல்லும் பிராணிகள்தானே! நாம் சொல்லும் கதைதான், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் வெளிப்படுத்தும். கதைகள் எப்போதுமே பழங்காலத்தின் தாங்க முடியாத மனச் சுமைகளை நம் மீது அடுக்குபவையாகவும் இருக்கும், நல்ல எதிர்காலத்துக்கு இட்டுச் செல்லும் வரங்களாகவும் அமைந்துவிடும். 

ஜனநாயகத்தின் தாய்

என்னென்ன கதைகளைக் கேட்க நேரலாம்?

* ‘பாரத்’ – அதாவது ஜனநாயகத்தின் தாய் – ஆங்கில மோகம் கொண்ட மேற்கத்திய பாணி முறையால் பல பத்தாண்டுகளுக்குப் பெரிதும் களங்கப்பட்டு கிடந்தது. நம்முடைய கலாச்சாரம் தொடர்பாகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க இந்த ‘அன்னியமான அமைப்பு’ மிகவும் குறைந்த அளவுக்கே வாய்ப்பளித்தது. 2014இல் உதயமான ‘உண்மையான ஜனநாயகம்’ காரணமாக, ஜனநாயகப் பெரும்பான்மை நீடித்தது. புதிய பெயர், புதிய பார்வை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் ‘பாரதம்’ இறுதியாக, ‘இனிமையான சங்கம’த்தை அடைந்துவிட்டது. ஆளும் தரப்பிலிருந்து இப்படி ஒரு கதையைக் கேட்க நேரலாம்.

* நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய ஜனநாயகம் அப்படியே உயர்ந்துகொண்டேவந்தது, 2014இல் அது மிகப் பெரிய விபத்தைச் சந்தித்து, சர்வாதிகார எண்ணம் கொண்டவர்களின் திடீர் புரட்சியால் தாக்கப்பட்டு மரணித்துவிட்டது. எதிர்த் தரப்பிலிருந்து இப்படி ஒரு கதையைக் கேட்க நேரலாம்.

* புரட்சிகரமான முற்போக்குச் சிந்தை உள்ளவர்களிடையே மூன்றாவது கதை பேசப்படும். ‘இந்தியாவில் ஜனநாயகம் இப்படியே குன்றிக்கொண்டேவந்து ஒருநாள் தரைமட்டமமாக வீழ்ந்துவிடும்’ என்று அந்தக் கதை கூறும். இந்தக் கதை சொல்லிகள் கூற்றுப்படி, ‘ஜனநாயகம் என்பதே சாதனையாகிவிடாது, அது வெறும் பாவனை மட்டுமே’; ஜனநாயகம் ஏன் நொறுங்கிவிடும் என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணமே வேறு; ஜனநாயகமற்ற கலாச்சாரத்தையே தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஜனநாயகம் வீழ்ந்துவிடும். அல்லது சாதீயப் படிநிலைகள், சாதி அமைப்புமுறை காரணமாக ஜனநாயகம் வீழ்ச்சி அடையும். அல்லது இந்திய பாணி முதலாளித்துவம் காரணமாகவும் ஜனநாயகம் வீழ்ச்சி அடையும் என்பார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்

ராமச்சந்திர குஹா 02 Aug 2023

உதவாதக் கதைகள்

முக்கியமாக, இவர்கள் அனைவருமே ஒப்புக்கொள்ளும் விஷயம், ‘இந்தியாவில் ஒருநாள் ஜனநாயகம் இல்லாமலே போய்விடும்’!

இந்தக் கதைகள் அனைத்துமே உண்மையல்ல என்பதல்ல பிரச்சினை. இந்தக் கதைகள் அனைத்துமே நம்முடைய எதிர்காலத்துக்கு வழிகாட்ட ஒரு வகையிலும் உதவாது என்பதே உண்மை.

நாம் பெற்ற ஜனநாயகமானது பல தரப்பினருடைய எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கிவிட்டது. ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமென்றால் அந்த நாடு செல்வச் செழிப்பில் உச்சம் பெற்றிருக்க வேண்டும், மக்கள் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்து. இது மட்டும் உண்மையாக இருந்தால், இந்தியா முதலில் ஜனநாயக நாடாகவே மாறியிருக்க முடியாது.

ஜனநாயகத்தில் ஆட்சி, ஒரு கட்சியிடமிருந்து இன்னொரு கட்சிக்கு மாறி மாறிப் போய்க்கொண்டே இருந்தால்தான் நல்லது என்ற அடிப்படையில், இங்கே பல கட்சிகளுக்கும் இடம் தரும் ‘பல கட்சி ஆட்சிமுறை’ ஏற்கப்பட்டது. அப்படியென்றால், நாடு சுதந்திரம் பெற்ற முதல் இருபதாண்டுகள் வரையில் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆளுங்கட்சியாக செல்வாக்கு பெற்றிருந்ததை ஜனநாயகமானது என்றே கூறிவிட முடியாது.

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசியல் எல்லைகளும் கலாச்சார எல்லைகளும் ஓரிடத்தில் சந்திப்பது அவசியம், அதைத் தாண்டக் கூடாது என்பது ஐரோப்பிய அறிஞரகள் அரசியலுக்கு வகுத்த இலக்கணம்; அதன்படி பார்த்தால் தீவிரமான பன்மைத்துவம் பல அம்சங்களில் நிலவும் நாட்டில், முதல் பத்தாண்டுகளுக்கு மேல் ஜனநாயகம் மட்டுமல்ல நாடே ஒன்றாக நீடித்திருக்க முடியாது.

வலிமையான நிறுவனங்கள் இருந்தால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்பது உண்மையானால், ‘நெருக்கடிநிலை’ அமலுக்குப் பிறகு இந்தியாவே காணாமல் போயிருக்க வேண்டும். ஜனநாயகம் மட்டும்தான் இங்கு முக்கியம் என்று கூறி, இதுவரை இருந்திராத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்டியிருந்தால், இன்றைக்கு சந்திக்கும் நெருக்கடியை இந்திய ஜனநாயகம் எதிர்கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.

ஜனநாயக நெருக்கடி

எவ்வளவோ பெரிய சவால்கள், தாக்குதல்களை எதிர்கொண்டபோதிலும் இந்தியாவில் ஏன் ஜனநாயகம் நொறுங்கிவிடவில்லை என்பதை எந்தக் கதையும் விளக்கிவிடவில்லை. 1960களில் சீனப் படையெடுப்பு சமயத்திலும் இல்லை, ஜவாஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகும் இல்லை, அடுத்தடுத்து நாட்டில் ஏற்பட்ட கடுமையான உணவுப் பஞ்சங்களின்போதும் இல்லை, பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவித்து மக்களுடைய அடிப்படை உரிமைகளை எல்லாம் முடக்கியபோதும் இல்லை, அதற்குப் பிறகு ஏற்பட்ட நிலையற்ற கூட்டணி அரசுகளின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளும், அதையடுத்த அயோத்தி ராமர் கோயில் கிளர்ச்சிகளும் ஜனநாயகத்தை வீழ்த்திவிடவில்லை; காங்கிரஸ் கட்சியின் திடீர் வலிமையிழப்பும், பொருளாதார நெருக்கடியும்கூட ஜனநாயகத்தைப் பதம் பார்த்துவிடவில்லை. 1990களில் ஏற்பட்ட சோதனைகளைக்கூட சந்தித்து நாடு மீண்டது. இவற்றுடன் ஒப்பிடும்போது 2014 என்பது ஜனநாயகம் நொறுங்கிவிடக்கூடிய ஒரு தருணம் என்பது எந்த வகையிலும் பொருத்தப்பாடு இல்லாதது.

நம்முடைய ஜனநாயகத்துக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பது, பல அடுக்குகளைக் கொண்ட உண்மையான கதையாகும். இந்திய ஜனநாயகம் இப்போது சந்தித்துள்ள நெருக்கடியை, ‘கைப்பற்றப்பட்ட ஜனநாயகம்’, அல்லது ‘சர்வாதிகாரி கைப்பற்றிய ஜனநாயகம்‘ அல்லது ‘ஜனநாயக நெருக்கடி’ என்று அழைக்கலாம். இந்தக் கைப்பற்றலில் ஜனநாயகம்தான் கைப்பற்றலுக்கான இலக்கு, அதுவே பேசுபொருளும்கூட!

அரசமைப்புச் சட்டப்படி புனிதப்படுத்தப்பட்ட, சித்தாந்தரீதியாக நியாயமென்று ஏற்கப்பட்ட சாதனமான ஜனநாயகம்தான் இங்கே கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதைக் கைப்பற்றிய வழிமுறையும் ஜனநாயகப்பூர்வமானதுதான் – அதாவது பார்க்கும்போது அப்படித்தோன் தோன்றுகிறது, ‘சுதந்திரமாகவும்’ ‘நேர்மையாகவும்’ நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். ஜனநாயகத்தின் முறைப்படியான வழிமுறைகளைக் கையாண்டே, ஜனநாயகத்தின் சாரத்தைச் சிதைத்திருக்கிறார்கள். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

புதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே?

சமஸ் | Samas 08 Jun 2023

கற்பனை உலக உண்மைகள்

இப்படிச் சிதைத்திருப்பது தற்செயலான செயல் அல்ல, நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதுதான். இந்திய ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத சரிவுக்கும் வீழ்ச்சிக்கும் இது இறுதியான அம்சமாக இருந்துவிடப்போவதில்லை. இப்படி ஜனநாயக வழிமுறைகள் மூலமே ஜனநாயகத்தைக் கைப்பற்றியதற்கான சூழ்நிலை, நாடு சுதந்திரம் அடைந்த பிறகான வரலாறால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, ஆனால் இது தவிர்க்க முடியாமல் நடந்துவிட்ட நிகழ்வல்ல.

உண்மையில் இது தற்செயலாக நடந்ததாகக்கூட இருக்கலாம், ஆனால் எதிர்பாராமல் நடந்த விபத்தோ, சீரற்ற வெற்றியோ அல்ல. அரசியல் தலைவர்கள் அடிக்கடி எதைச் செய்வார்களோ அதைத்தான் மோடியும் செய்தார்: மிகவும் கடினமானதொரு வாய்ப்பு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த வெற்றியைத் தன்னுடைய தனிப்பட்ட வெற்றியாக்கிவிட்டார். அதேசமயம், இந்திய ஜனநாயகக் கட்டமைப்பில் உள்ளார்ந்த பலவீனம் ஏதுமில்லாமல் இது நிகழ்ந்திருக்க முடியாது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வாஸ்து அமைப்பின் காரணமாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய ‘ஞானம்’ பிறக்கும் என்று கற்பனை செய்வோம். நாடாளுமன்றம் இப்படிச் சொல்லக்கூடும்: ‘கடந்த 75 ஆண்டுகளாக நிகழ்ந்த பயணம் எங்களுக்குச் சொந்தமானது. நாங்கள் ஐரோப்பியர்களின் வாழ்க்கை வரலாற்றையோ, சுய வரலாற்றையோ மீண்டும் வாழ்ந்து பார்க்கவில்லை. பண்டைய இந்தியக் குடியரசுகளின் முடிவுறாத பயணங்களையும் நாங்கள் மீண்டும் தொடங்கிவிடவில்லை. நம்முடைய ஜனநாயக செயல்பாடானது முன்கூட்டியே திட்டமிட்ட தொடக்கப் புள்ளியோ, நிலையான பாதையோ, தீர்மானிக்கப்பட்ட இலக்கோ இல்லாத - எப்போது தொடங்கினோம் எப்போது முடியும் என்பதோ நிச்சயமில்லாதது.

அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விழுமியங்கள்தான் எங்களை வழிநடத்த வேண்டும்; நம்முடைய பாரம்பரிய நாகரிகத்தின் தூய்மையான ஞானத்தின் வடிவம் அது; நாங்கள் பயணப்படும்போதே வழிகளையும் செம்மைப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்; ஆபத்தான வளைவுகளை சாதுர்யமாகக் கடந்தோம், ஆனால் சிறிது சோம்பலுக்கும் இடம்கொடுத்துவிட்டோம்; நாட்டையுமே சில வேளைகளில் விட்டுக்கொடுத்துவிட்டோம்; நம்முடைய ஜனநாயகம் கைப்பற்றப்பட நாங்களும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இந்தியர்களாகிய நாங்கள் இறையாண்மையுள்ள, சமத்துவ, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசைக் காப்போம் என்று உறுதி ஏற்கிறோம்’.

என்ன நம்ப முடியாமல் இருக்கிறதா? 

சமீபத்தில்தான் ‘ஜவான்’ திரைப்படம் பார்த்தேன், எனவே கற்பனை உலக உண்மைகளை ஆராயத் தொடங்கியிருக்கிறேன், அதன் விளைவே இந்தக் கட்டுரை.

(இதில் உள்ள சில கருத்துகள், ‘இந்திய ஜனநாயகத்துக்குப் பொருள் கொள்வது எப்படி’ என்ற என்னுடைய நூலில் இடம்பெற்றைவை).

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
புதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






சமூக உளவியல் சிக்கல்சாவர்க்கர் பெரியார் காந்திமோசமான மேலாளர்தென்னாப்பிரிக்க நாவல்பட்ஜெட் அருஞ்சொல்மாரிமுத்தாப் பிள்ளையு.அஜய் சந்திர வாசகம் கட்டுரைநூற்றாண்டு விழாதுணிச்சலான புதிய பார்வைஇமாச்சல் பிரதேசம்சிறப்புச் சட்டம்பேருந்துகருணாநிதி சகாப்தம்வைத் ராய் கட்டுரைபழைய நிலைப்பாடுகள்தேசிய குடும்ப நலம்: நல்லதுசீனிவாச ராமாநுஜம்உள்ளத்தைப் பேசுவோம்எஸ். அப்துல் மஜீத்செயல் வீரர் கார்கேதமிழ் சைவ மடாதிபதிபெகஸஸ்நிதிப் பகிர்வுநெருக்கடிநிலைஐராவதம் மகாதேவன்உள்ளாட்சி அமைப்புமெஷின் லேர்னிங்இதயச் செயல் இழப்புஞானம்கதைசொல்லல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!