கட்டுரை, அரசியல், வரலாறு, சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

புதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே?

சமஸ் | Samas
08 Jun 2023, 5:00 am
2

ந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்றைய புகைப்படங்களில் எனக்குப் பிடித்த ஒன்று உண்டு. நாடாளுமன்ற வளாகத்தில், அலையலையாகச் சாமானிய மக்கள் வந்து சென்ற வண்ணம் இருக்க, ஜவஹர்லால் நேரு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு படம்.

நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாயிலின் மேல் தளத்தில் நின்றபடி மக்களை நெகிழ்ச்சியாகப் பார்க்கும் நேருவின் கண்களில் ஏராளமான செய்திகள் பொதிந்திருக்கும். வெறுப்பும் பிரிவினையும் ரத்தச் சகதியும் சூழ்ந்திருந்த அந்த நாட்களில் பெரும் நம்பிக்கையோடு புதிதாக உருவாக இருக்கும் ஜனநாயத்தை நோக்கிப் பரவசத்தோடு ஓடி வரும் மக்களின் நம்பிக்கையைப் பார்வையால் கை நீட்டி அணைக்க முற்படுவதுபோல் இருக்கும் நேருவின் தோற்றம். ஜனநாயகத்தின் மீதுதான் மக்களுக்கு எத்தனை நம்பிக்கை! நேருவின் கண்களில் அந்த மாபெரும் நம்பிக்கை மீதான நெகிழ்ச்சியும் வெளிப்படும்; அந்த நம்பிக்கையைக் காக்க வேண்டிய பொறுப்பின் பெரும் பகுதி தன் தலை மீது சுமத்தப்பட்டிருக்கும் அழுத்தமும் வெளிப்படும்.

அதுவரை அதிகார வர்க்கமும் மேட்டுக்குடிகளும் மட்டுமே நுழைய முடிந்த நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வளையங்கள் அன்றைக்கு இற்றுப்போயிருந்தன. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மனம் முழுக்க உற்சாகத்தோடு, அதேசமயம் விட்டால் வெடித்து அழுதுவிடக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்போடு அங்கே சூழ்ந்திருந்தது. இந்தியத் துணைக் கண்டத்தின் அத்தனை மனிதர்ளும் – அவரை மனதார வெறுத்தவர்கள் உட்பட - அன்றைக்கு தேடிய கிழவர் டெல்லியில் இல்லை. நாட்டின் பல பகுதிகளிலும் அவருடைய படங்களை வைத்துதான் இனிப்புகளைப் பரிமாறி மக்கள் சுந்ததிரத்தைக் கொண்டாடினார்கள். அந்த மனிதர் கல்கத்தாவின் பெலியகட்டா பகுதியில் இருந்தார். இந்துகள் – முஸ்லிம்கள் இடையே கலவரங்களும் வன்முறைகளும் சூழ்ந்திருந்த பிராந்தியத்தில் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுதந்திர நாளில் கல்கத்தாவிலும் சூழல் கொஞ்சம் மாறியிருந்தது. ‘வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று வீதிகள் அதிரும் முழக்கங்களோடு காந்தி இருந்த இடத்தை நோக்கி மக்கள் வந்தபடி இருந்தனர். எதுவுமே சிறு சலனத்தையும் அவரிடம் ஏற்படுத்தவில்லை. காந்தி ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தார். பிரார்த்தனையில் அவர் ஈடுபட்டிருந்தார். சுயாட்சி என்பது பிறப்புரிமை என்று கடையரில் கடையருக்கும் நம்பிக்கை ஒளியைக் கொடுத்தவர் அவர். இன்றைக்கு அந்தச் சுயாட்சிக்கான முன்நிபந்தனை ஒட்டுமொத்தச் சமூக நல்லிணக்கமும் அரவணைப்புமே என்பதைச் சொல்லாமல் தன்னுடைய மௌனத்தால் அழுத்தமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 

இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறியதைத் தொலைநோக்குள்ள தலைவர்கள் எவருமே பரிபூரண விடுதலையாகக் கருதவில்லை. காந்தி, நேருவைப் போலவே ஒவ்வொருவரும் எதிர்நோக்கியிருந்த சவால்களைச் சுட்டும் இடத்தில் இருந்தனர். அரசமைப்புச் சட்டத்தின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கர் கூறியதுபோல, சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் உண்மையான சுந்ததிரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய இந்தியா இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்று பலரும் எண்ணினார்கள். இந்தியாவில் கூட்டாட்சிக்கான முன்னோடியான அண்ணா இதைப் பாதி சுதந்திரமாக அல்லது பரிபூரண குடியரசை நோக்கிய முதல் கட்டத் தாவலாகப் பார்த்தார். அன்றைய தலைவர்கள் நாடு எதிர்நோக்கியிருந்த நெருக்கடிகளைத் தங்கள் முன்னுள்ள பொறுப்புகளாகவும் கண்டார்கள். எல்லோர் முன்னும் ஒரு பெரும் சவால் இருந்தது, ‘எப்படி மாபெரும் இந்தச் சமூகத்தை ஒருங்கிணைப்பது?’

டெல்லியிலுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்கு 1947, ஆகஸ்ட் 15 நிகழ்வுகளும் புகைப்படங்களும்தான் நினைவில் வரும். காந்தியும் நேருவும் சுமந்திருந்த பொறுப்பு உண்மையில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையிலுமே காலாகாலத்துக்குமாகச் சுமத்தப்பட்டிருப்பதாகவே தோன்றும்.

எந்த ஓர் ஒடுக்கப்பட்ட சமூகமும் தன்னுடைய விடுதலைக்குப் பிறகு தன்னை ஆண்டுகொள்வதற்கு என்று ஓர் ஆட்சி மன்றத்தை புதிதாக உருவாக்கிக்கொள்ள முற்படுவது இயல்பு. அப்படி உருவாக்கப்படும் ஆட்சி மன்றமானது, கடந்த கால ஆதிக்க நினைவுகளின் எச்சத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதோடு எதிர்வரும் காலத்துக்கான கனவையும் அந்தக் கட்டுமானத்தின் வழி வெளிப்படுத்த முற்படும். ஆம், அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த கற்பனையும் படைப்பாற்றலும் அந்தப் புதிய கட்டிடத்தின் கட்டுமானத்தில் பிரதிபலிக்கத்தான் வேண்டும். ஒரு சமூகத்தில் எத்தனை தரப்புகள் இருக்கிறார்களோ அத்தனை தரப்புகளின் கைகளும் கூடி அந்தக் கட்டுமானத்தில் ஒன்று கலக்க வேண்டும். உலகில் முன்னோடி நாடுகளின் ஆட்சி மன்றங்கள் இப்படித்தான் பிரமிக்க வைக்கும் கலைப் படைப்புகளாகவும் திகழ்கின்றன. இன்றைய மோடி அரசு உருவாக்கி இருக்கிற நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் இந்த அம்சங்கள் எதையேனும் பிரதிபலிப்பதாகச் சொல்ல முடியுமா?

நூறாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட இன்றைய நாடாளுமன்றக் கட்டிடம் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதுகாப்பு அம்சம் மற்றும் இடநெருக்கடி சார்ந்து பழைமையான அந்தக் கட்டிடம் புதிய கட்டிடம் ஒன்றுக்கான தேவையை உருவாக்கியது. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், 2012இல் அன்றைய மக்களவைத் தலைவர் மீரா குமார் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மாற்று ஏற்பாடுகளுக்காக ஒரு குழுவை நியமித்ததை இங்கே நினைவுகூரலாம். அடுத்து வந்த பாஜக, நாடாளுமன்ற வளாகத்தை உள்ளடக்கிய நிர்வாகப் பகுதியை மறுவடிவமைக்கும் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை 2019இல் அறிவித்தது; 2020இல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தியது; இப்போது 2023இல் கட்டிடத்தின் திறப்பு விழாவை நடத்துகிறது.

முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏற்கெனவே உள்ள அமைப்பின் நீட்சியாக அல்லாமல், புதிய ஒரு தொடக்கம் போன்ற ஒரு தோற்றத்தை இதன் வழி மோடி அரசு உருவாக்க விழைகிறது. மோடியின் ‘புதிய இந்தியா முழக்கம்’ முதல் ‘செங்கோல் அதிகார மாற்றக் கதை’ வரை பெரிய திட்டம் ஒன்றின் அங்கமாகவே இந்தக் கட்டிட கட்டுமானத்தைப் பார்க்க வைக்கின்றன. இந்தக் கட்டிடத்தின் வரைபட உருவாக்கம் தொடங்கி கட்டிடத் திறப்பு விழா திட்டமிடல் வரை எல்லா நிலைகளிலும் தன்னிச்சையான முடிவுப் போக்கையே மோடியின் அரசு கடைப்பிடித்தது. திறப்பு விழாவில் நாட்டின் எதிர்க்கட்சிகள் 20க்கும் மேற்பட்டவை புறக்கணிப்பதாக அறிவித்தும், அதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் விழாவை பாஜக நடத்துகிறது.

சென்ற ஏழு தசாப்தங்களில் எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இல்லாமல் ஆட்சி செய்த ஒரே பிரதமரான மோடி பல வகைகளிலும் நாடாளுமன்றத்தில் செயல்பாட்டைக் குறுக்கியதற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுவது உறுதி. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில், ஒன்பது ஆண்டுகளில் 24 முறை மட்டுமே உரை நிகழ்த்தியவர் மோடி. வரலாற்றில் மிக அதிகமான அவசரச் சட்டங்களை இயற்றிய அரசு அவருடையது. நிதிநிலை அறிக்கையைக்கூட பெரிய விவாதங்கள் இன்றி நிறைவேற்ற தலைப்பட்ட அரசு இது. உலகின் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடு, பெரிய ஜனநாயகம் என்ற பெருமைக்குரிய இந்தியா, நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ் உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் எதுவும் பங்கேற்காமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது எத்தனை துரதிஷ்டவசமான ஒன்று! இப்படி ஒரு நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என்றே நான் சொல்வேன். ஆனால், இதற்கான பொறுப்பை பிரதமர் மோடியே ஏற்க வேண்டும்.

எல்லாம் அவரவர் மனம்படி நடக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விரும்பாத ஒரு பிரதமர் புதிதாக எல்லாவற்றிலும் தானே முதன்மை வகிக்கும் ஒரு கட்டிடத்தைத் திறக்கிறார். குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்கள் பெயர்கள்கூட அழைப்பிதழில் இல்லை; சர்வதேச நாடுகள் இதுபற்றி என்ன எண்ணும் என்றுகூட ஆளுங்கட்சிக்கு எந்த லஜ்ஜையும் இல்லை.

எந்தவொரு கட்டிடமும் அதன் அங்கத்தினர்களாலும் செயல்பாடுகளாலும் பண்புகளாலுமே மதிப்பைப் பெறுகின்றன. ஆசியரியரும் மாணவர்களும் அமர்ந்து முறையாகக் கற்றல் நடந்தால் மரத்தடியும்கூட பள்ளிக்கூடம்தான். இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாளில் அலையலையாக சாமனிய மக்கள் நம்பிக்கையோடு பங்கெடுத்த சுதந்திர நாளின் நாடாளுமன்ற கட்டிடம் எங்கே; எதிர்க்கட்சிகளே அவநம்பிக்கையாகப் பார்க்க, அவர்கள் இடம்பெறாமல் திறப்பு விழா காணும் நாடாளுமன்ற காட்டிடம் எங்கே? மக்களாட்சியின் ஆட்சி மன்றத்துக்கு உண்மையான ஒளியை எதிர்க்கட்சிகளின் குரல்களே உருவாக்குகின்றன. புதிய கட்டிடத்தின் ஒளி வெளியே இருக்கிறது. ஒருவேளை காந்தி இருந்திருந்தால் 2023 செப்டம்பர் 28 அன்றும் பிரார்த்தனையில்தான் ஈடுபட்டிருப்பார். அவருடைய பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும் இடம் டெல்லியாக இருந்திருக்கும்!

-‘குமுதம்’, மே, 2023 

 

தொடர்புடைய கட்டுரைகள்

செங்கோல் கதை மூலம் மோடி சொல்ல வரும் செய்தி என்ன?
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?
அது சோழர் செங்கோலே இல்லை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

4

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

KILLIVALAVAN P.K   1 year ago

28 மே 2023 ? கட்டுரை மக்களாட்சித் தத்துவம் கேலியாகி வருவதைத் தெளிவாகவே சுட்டுகிறது. நன்றி!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

KILLIVALAVAN P.K   1 year ago

ஒருவேளை காந்தி இருந்திருந்தால் 2023 செப்டம்பர் 28 அன்றும் பிரார்த்தனையில்தான் | .....என்ன என்று விளக்கம் கட்டுரையில் இல்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

வர்த்தகம்புரோட்டா – சால்னாகீர்த்தி பாண்டியன்ஆட்சியாளர்சமத்துவச் சமூகம்பீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ் அருஞ்சொல் பேட்டிமிதமானது முதல் வலுவானது வரைசிங்கப்பூர்சட்டப்பேரவைத் தேர்தல்ஆளுநரைப் பதவி நீக்க முடியுமா?மோடிக்கு சரியான போட்டி கார்கேஎழுத்துக் கலை: ஆர்வெல்லின் ஆறு விதிகள்பாஜக எம்பிஆயில் மசாஜ்கரும்பு சாகுபடிமாநிலக் கட்சிகளின் வாரிசுத் தலைமைகளுக்கு ஒரு சேதிமனிதவளம்இளவேனில்குழந்தைகள்சுவாசம்மாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்ஏழைகளே இல்லை - இந்தியாவில்!பன்மைக் கலாச்சாரம்நெடுஞ்சாலைகோபால்கிருஷ்ண காந்தி கட்டுரைஜாதிதங்கம் திரையரங்கம்பெற்றோர்திருமாமபி: என்ன செய்வார் மாமாஜி?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!