கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
இந்திய சுதந்திரம் அடைந்த 1947, ஆகஸ்ட் 15 அன்று லண்டனின் ஆல்ட்விச் பகுதிக்குப் பெரும் கூட்டம் வருவதும் செல்வதுமாக இருந்தது. புகழ்பெற்ற ‘இந்தியா ஹவுஸ்’ கட்டிடம் அங்குதான் இருக்கிறது. உயர்ந்த மாடங்களுடன் அமைந்த நூலகக் கட்டிடத்தில் இந்திய விடுதலையைக் கொண்டாடுவதற்கான கூட்டம் அன்று நடைபெற்றது. ஒளி வெள்ளத்தின் நடுவே அங்கே வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்தின் முன் சில பிரிட்டிஷாரும்கூட நின்று சென்றனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு உரைகளில் தொடங்கி குக்கிராமங்களின் சாமானியர்களுடைய பேச்சுகள் வரை காந்தி நிறைந்திருந்தார். ஒட்டுமொத்த கொண்டாட்டங்களிலிருந்தும் விலகியவராக, ரத்தக்குளியல் நடத்தியிருந்த கல்கத்தாவின் பெலியகட்டாவில் அமைதியைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்தார் காந்தி. அவருடைய பிரார்த்தனைகள் முழுவதும் நாட்டின் எதிர்காலப் போக்குகள் மீதான கவலையில் உறைந்திருந்தன.
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு தருணத்தைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு இந்தியரும் தத்தமது தெருக்களில், வீடுகளில், அலுவலகங்களில், கடைகளில் தேசிய கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியபோது கல்கத்தாவில் அமர்ந்திருந்த காந்தி நினைவுக்கு வந்தார்.
இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து ஒரு தேசமாக நிலைத்திருப்பது சாத்தியம் இன்று உலகின் வல்லமை மிக்க சக்திகளில் ஒன்றாக எழுந்து நிற்பதுடன் நூற்றாண்டை நோக்கி விரையும் ஒரு ஜனநாயகப் பெரியவராகவும் உருவெடுத்திருக்கிறது இந்தியா.
நிச்சயம் இதை நாம் கொண்டாட வேண்டும். அதேசமயம், கொடி ஏற்றி மிட்டாய்களைப் பரிமாறிக்கொண்டதோடு, கலைந்துவிடும் சிறுவயது காலகட்டத்தை இந்த தேசம் கடந்துவிட்டது என்பதை இந்திய அரசும் அதன் ஆட்சியாளர்களும் உணர வேண்டும். நூற்றாண்டு தருணம் நோக்கி இந்தியா விரையும் சூழலில், அதன் சுதந்திர, ஜனநாயக, குடியரசுப் பண்புக்குப் பரிபூரணம் தரும் வேலையை எப்போது ஆரம்பிக்கப்போகிறோம் என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும். அதுதான் அசலான கொண்டாட்டத்துக்கு அர்த்தம் தரும்.
காத்திருக்கும் அதிகாரப் பகிர்வு
சுதந்திர இந்தியா தன் 75ஆவது வயதைக் கடக்கும் இதே காலகட்டத்தில் முக்கியமான இன்னொரு நிகழ்வும் நடக்கிறது. உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற இடம் நோக்கி அது நகர்கிறது. இன்னும் சில மாதங்களில் 140 கோடி என்னும் எண்ணிக்கையுடன் சீனாவை விஞ்சி நிற்கும் இந்தியா. இன்றைக்கு உலகின் 17.5% மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இது தொடர்ந்தும் வளரும். 2030இல் இந்த எண்ணிக்கை 150 கோடி ஆகும்.
சுதந்திரம் அடைந்த 1947இல் இந்தியாவின் மக்கள்தொகை 34 கோடி. இப்போது அது நான்கு மடங்கு ஆகியிருக்கிறது. முக்கியமாக ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். இவ்வளவு வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நாம் அதிகாரப் பகிர்வை வளர்த்திருக்கிறோமா? குறிப்பாக, நாடாளுமன்றத்தில் 543 மக்களவை உறுப்பினர்கள், 250 மாநிலங்களவை உறுப்பினர்கள் எனும் நிலை அப்படியே நீடிப்பது சரியா?
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?
01 Jun 2023
வளரும் ஜனநாயக நாடுகள் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்வது அவசியம். ஏனென்றால், ஒரு கிராமத்தின் மக்கள்தொகை நூறாக இருக்கும்போதும் அந்த ஊருக்கு ஒரே ஒரு கவுன்சிலர், ஆயிரம் ஆகிவிட்டாலும் ஒரே ஒரு கவுன்சிலர் எனும் நிலையானது மிச்சம் தொள்ளாயிரம் பேருக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு வாக்காளரும் செலுத்தும் வரிப் பங்களிப்பிலேயே நாட்டின் வரவு செலவு நடக்கிறது. ஒரு வாக்காளர் விரும்பும்போது தன்னுடைய பிரதிநிதியைச் சந்திப்பதும், தன்னுடைய பிரச்சினைகளை முன்வைத்துத் தீர்வு தேடுவதும் அவசியம். இன்று நாட்டிலேயே பெரியதான தெலங்கானாவின் மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியை எடுத்துக்கொண்டால், அங்கே 31.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள மக்களவை உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களைச் சந்திக்க ஒருவருக்கு ஐந்து நிமிடம் என்று தினமும் எட்டு மணி நேரம் ஒதுக்கினாலும்கூட, ஐந்தாண்டுகளில் 8.76 லட்சம் பேரைத்தான் அவரால் சந்திக்க முடியும். மிச்சம் 22.74 லட்சம் வாக்காளர்களுக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பே இருக்காது.
ஆக, மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை இந்தியா அதிகரிப்பது அவசியம் என்பதை எல்லோரும் உணர்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு மடங்கு ஆக அதிகரிக்கலாம். அப்படியென்றால் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை? ஆம். அதையும் அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், இந்திய அரசமைப்பின்படி நாட்டில் மேற்கொள்ள வேண்டிய ஆகப் பெரும் மாற்றங்கள் எதற்கும் இரு அவைகளின் கூட்டுப்பெரும்பான்மை அவசியம் ஆகிறது. மக்களவை – மாநிலங்களவை இடையேயான அதிகாரச் சமநிலைக்கு இரு அவைகளின் எண்ணிக்கை ஒரே விகிதத்தில் உயர்த்தப்படுதல் அவசியம். அடுத்து, மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் இது பிரதிபலிக்கும்.
சரிதான்! எப்போது, எப்படி இதைச் செய்யப்போகிறோம்?
எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்
இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் விஸ்தரிக்கப்படுவதும், அவைகளின் பரப்பளவு அதிகரிக்கப்படுவதும் - நம்முடைய ஆட்சியாளர்கள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும்கூட – மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் தேவையை அவர்கள் உணர்ந்திருப்பதை உணர்த்துகிறது. கூடவே இன்னொரு ரகசியமும் பேசப்படுகிறது. அரை நூற்றாண்டாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை’யின் ஊடாக 2026இல் இந்த விஸ்தரிப்பு நடக்கும் என்பதே அது.
இந்திய அரசமைப்பின்படி, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தொகுதிகள் மறுவரையறையும் செய்யப்பட வேண்டும். அது எப்படி என்றால், மக்கள்தொகை வளரும் மாநிலங்கள் அதற்கேற்ப கூடுதலான தொகுதிகளைப் பெறும்; மக்கள்தொகை குறையும் மாநிலங்கள் அதற்கேற்ப தொகுதிகளை இழக்கும்.
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு: அண்ணா ஃபார்முலா!
28 Sep 2022
இந்திய அரசானது, ‘மக்கள்தொகை கட்டுப்பாடு’ எனும் கொள்கையைத் தீவிரமாக அமலாக்கலானபோது, இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. ஏனென்றால், இந்திய அரசின் முடிவை ஏற்று தீவிரமாக மக்கள்தொகைக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மாநிலங்களுக்கு இந்தத் தொகுதி மறுசீரமைப்பு ஏற்பாடானது தண்டனையை அளிப்பதாக மாறிவிடும்; அதற்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மாறாக, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப் பெறும்; அவற்றுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகம் ஆகும். இப்படி நடக்கக் கூடாது என்பதற்காக 1976 முதலாக இதை நிறுத்திவைத்திருக்கிறது அரசு.
பிரச்சினை என்னவென்றால், 50 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; 2026இல் மீண்டும் தொகுதி மறுவரையறையை நாம் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது வட இந்தியாவில் வேகமாக ஒலிக்கின்றன.
அவர்கள் சுட்டிக்காட்டும் நியாயம் இது: “புதுச்சேரியையும் உள்ளடக்கி தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 7 கோடி. உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகையோ 21 கோடி. தமிழ்நாட்டுக்கு மக்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 40. உத்தர பிரதேசத்தின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையோ வெறும் 80. அதாவது, தமிழ்நாட்டு மக்கள்தொகை – பிரதிநிதித்துவத்தோடு ஒப்பிட்டு, 7 கோடி பேருக்கு 40 உறுப்பினர்கள் என்று கணக்கிட்டால் உத்தர பிரதேசத்தில், 14 கோடி பேருக்கே 80 உறுப்பினர்கள் நிறைந்துவிடுகிறது. அதாவது, உத்தர பிரதேசத்தில் இன்னொரு 7 கோடி பேர், அதாவது ஒரு முழு தமிழ்நாடு அளவிலான மக்கள் நாடாளுமன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறார்கள். இது எப்படி சரியாகும்?”
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, உத்தர பிரதேசக்காரர்களின் இந்தக் கேள்வி நியாயமான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற மாநிலங்களின் கூட்டுக் கலவையான நாடுகளில், மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டும் பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், ஜனநாயகத்தின் ஆதாரப் பண்பையே அது நாசமாக்கிவிடும்.
இந்திய ஜனநாயகத்தின் ஆதாரப் பண்பு அதன் கூட்டாட்சித்தன்மை. அதாவது, சமூகங்களுக்கு இடையிலான சமத்துவம்; சமத்துவத்தின் அடிப்படையிலான பிரதிநிதித்துவம். இங்கே சமூகங்கள் என்ற இடத்தில் இருப்பவை மாநிலங்கள். மாநிலங்களை அங்கத்தினர்களாக வைத்து, அதன் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வை நாம் மேற்கொள்ள வேண்டும். மாநிலம் என்பது இங்கே மொழி, பிராந்திய, பண்பாட்டு அடிப்படையிலான தனித்த அடையாளத்துடன் கூடிய அங்கங்களைக் குறிக்கிறது. இதற்குப் பதிலாக மாநிலங்களை வெறும் நிலம் சார்ந்த அடையாளமற்ற ஜனத் திரளாகக் கொண்டு பகிர்வு நடந்தால் பெரும்பான்மையியமே மேலோங்கி நிற்கும்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது
20 Sep 2022
கூட்டாட்சியே நம்மாட்சி
உலகின் முன்னோடி கூட்டாட்சி நாடுகளான சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட கூட்டாட்சிகளை ஒப்பிட இந்தியா ஏற்கெனவே கூட்டாட்சித்தன்மை குறைந்து, பெரும்பான்மைத்தன்மை கூடிய நாடு.
அமெரிக்க நாடாளுமன்றமும் இந்தியாவைப் போல மக்களவையில் ஜனத்தொகைக்கு ஏற்ப பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்கள், சிறிய மாநிலங்களுக்குக் குறைந்த இடங்கள் எனும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சமமான இடம் எனும் பிரதிநிதித்துவத்தை அது கொடுக்கிறது. அமெரிக்க மாநிலங்களவையில் பெரிய மாநிலமான கலிஃபோர்னியாவுக்கும் இரண்டு இடங்கள்தான், சிறிய மாநிலமான வயோமிங்குக்கும் இரண்டு இடங்கள்தான். இந்தியாவின் மாநிலங்களவையிலோ சிக்கிமுக்கு 1 இடம், உத்தர பிரதேசத்துக்கு 31 இடங்கள்!
புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மக்கள்தொகைக்கேற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்றெல்லாம் பேசுபவர்கள் இந்தப் பாகுபாட்டை இங்கு பேசுவதில்லை.
நாடாளுமன்றத்தில் இன்றைய சூழலில் தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24.31% என்றால், இந்தி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 41%. கடந்த 50 ஆண்டுகளில் தென் இந்திய மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்திருக்கிறது; அதை ஒப்பிட இந்தி மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.
1971இல் ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 7.52% என்றால், 2026இல் 5.44% ஆகக் குறைகிறது. மாறாக, 1971இல் 15.30% ஆக இருந்த உத்தர பிரதேசத்தின் பங்கு 2026இல் 17.03% ஆக உயர்கிறது. அன்று தமிழ்நாடு, பிஹார் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்தன; அதனாலேயே மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த இடைப்பட்ட 50 ஆண்டுகளில் 50% அளவுக்கு அதிகரித்து, இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிட ஒன்றரை மடங்கு ஆகிவிட்டிருக்கிறது பிஹாரின் மக்கள்தொகை.
அப்படியென்றால், என்னவாகும்? ஏற்கெனவே உள்ள ஏற்றத்தாழ்வு மிக்க அமைப்பின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தை விஸ்தரிப்பதானது, ஏற்கெனவே அதிகாரத்தின் உயரத்தில் உள்ள இந்தி மாநிலங்களின் அதிகாரத்தை மேலும் உச்சத்தில் கொண்டுபோய் வைப்பதாகவும், ஏனைய மாநிலங்களை மேலும் கீழே தள்ளுவதாகவும் அமையும். கிட்டத்தட்ட இந்தி பிராந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் நாட்டை இது கொண்டுபோய் வைத்துவிடும். அதற்கு இடம் தராத வகையில், மாநிலங்கள் இடையிலான சமநிலையைப் பராமரிக்கும் ஒரு மாற்று ஏற்பாட்டை நாம் உருவாக்க வேண்டும்.
என்றைக்குமான ஆபத்து
இது இன்றைய ஆபத்து என்பதைக் காட்டிலும் எப்போதைக்கும் இந்தியா எனும் அமைப்பு எதிர்கொள்ளும் அபாயம் என்று இந்த ஏற்றத்தாழ்வுச் சூழலை நம்முடைய ஆட்சியாளர்கள் அங்கீகரிக்க வேண்டும். பிரிவினைக் கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் இடையே நாடு சுதந்திரம் அடைந்த சூழலில், அச்சத்தின் விளைவாக ஓர் அவசரகதி ஏற்பாடாக அதிகாரங்களை மையப்படுத்திய, ஜனத்தொகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஓர் அமைப்பை நாம் உருவாக்கினோம். இப்போது நாம் வலுவான ஓர் இடத்தை வந்தடைந்திருக்கிறோம். அதிகாரங்களை இனியேனும் நாம் நியாயமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதற்கேற்ப நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சிமன்றம் வரை சமூகப் பிரதிநிதித்துவ அடிப்படையில் மறுவரையறுக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் எனும் பார்வைக்கு மாற்றாக, எல்லா மாநிலங்களுக்கும் சம பிரதிநிதித்துவம் எனும் பார்வைக்கு நாம் மாற வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்களவை – மாநிலங்களவை இடையே அதிகாரச் சமநிலையைத் திட்டவட்டமாக உருவாக்க வேண்டும். மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சமமான இடங்கள் எனும் அடிப்படையிலும், மக்களவையில் இந்தியாவின் 1976 மக்கள்தொகை அடிப்படையிலான விகிதாசாரம் எனும் அடிப்படையிலும் இடங்கள் ஒதுக்கீட்டை அளவுகோலாக்க வேண்டும். எந்த ஒரு முக்கியச் சட்டத்தையும் நிறைவேற்ற இரு அவைகளின் அனுமதியும் கட்டாயத் தேவை எனும் அடிப்படையை மேலும் தீவிரமாக்க வேண்டும்.
தேசப் பிதா காந்தி சொன்னதுபோல, கடைசி மனிதருக்கும் உரிமைகளையும், அதிகாரங்களையும் கொண்டுசேர்க்க வேண்டும். நூற்றாண்டு தருணத்திலேனும் இந்தியாவை முழுமையான சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் கொண்ட நாடாக நாம் பரிபூரணப்படுத்த வேண்டும். அதுவே உண்மையான கொண்டாட்டம்!
-‘குமுதம்’, ஆகஸ்ட், 2022
தொடர்புடைய கட்டுரைகள்
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?
அது சோழர் செங்கோலே இல்லை
நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு: அண்ணா ஃபார்முலா!
கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?
காஷ்மீர் சட்டமன்ற மறுவரையறைத் திட்டம் ஆபத்தான விளையாட்டு
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது
5
3
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
நல்ல தரமான,. அதே சமயத்தில் பேசப்படவேண்டிய தலைப்பிலான கட்டுரை.. மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் மாநிலங்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணநிப்பது பெரும் கேடாக அமையக்கூடும். 1976 மக்கள்தொகை அடிப்படையில் எண்ணிக்கையை நிர்ணயிப்பது நல்ல முடிவே. அதே சமயத்தில் பெருகிவரும் மக்களதொகை அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதையும் முழுமையாக தவிர்க்கமுடியாது. இச்சூழ்நிலையில் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக் செயல்படும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதில் அம்மாநிலங்களுக்கு கூடுதல் இடங்களை அளிப்பதற்கான பார்முலா ஒன்றின் அடிப்படையில் செயல்படுத்துவது அதிகாரப்பகிர்வின் சமதிலையை உறுதிசெய்ய உதவும்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
ராஜன் குறை கிருஷ்ணன் 2 years ago
முக்கியமான கட்டுரை. மக்களவை-மாநிலங்களவை ஆகியவற்றினை சமப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை பகிர்வதை விட, மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலமாகவே சரியான மக்களாட்சியை, குடியரசை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தின் பணிகளை, பொறுப்புகளை பெருமளவு குறைப்பதுதான் நிரந்தரத் தீர்வு. பாதுகாப்பு, செலாவணி, வெளியுறவு ஆகிய மூன்றைத் தவிர அனைத்து துறைகளையும் முழுமையாக மாநில அரசுகளின் பொறுப்பில் விடுவதுதான் பகுத்தறிவு, தொலை நோக்குப் பார்வை. ஏனெனில் இந்திய மாநிலங்கள் பலவற்றின் மக்கள் தொகை உலக நாடுகளின் பலவற்றின் மக்கள் தொகையை விட கூடுதலானது என்பது அனைவரும் அறிந்ததே. எதிர்காலத்தில் இது கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.