கட்டுரை, தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

விவாதிக்கத்தானே ஆட்சிமன்றங்கள்?

ஆசிரியர்
21 Feb 2022, 5:00 am
3

தேர்தலுக்காக இந்திய அரசியலர்கள் செலவிடும் நேரமும், உழைப்பும் தொகையும் மூச்சுமுட்ட வைப்பவை. சரி, பெரும் பாடுபட்டு தேர்தலில் வென்று, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்கள் எந்த அளவுக்கு அந்தப் பதவிக்கான நியாயத்தைச் செய்கிறார்கள்? இப்படியொரு கேள்வியைக் கேட்டுக்கொண்டால், கிடைக்கும் தரவுகள் நம்மைச் சலிப்படைய வைக்கின்றன. நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் நடக்கும் விவாதங்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க, இப்படியான கூடுகைகளே உலக அளவில் இந்தியாவில் குறைந்துகொண்டேவருகிறது என்கிற சூழலானது, ஜனநாயகத்தைக் கேலிசெய்வதாக இருக்கிறது. 

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு மொத்தம் 30 நாட்களே கூட்டத்தை நடத்துகின்றன பெரும்பாலான சட்டப்பேரவைகள். கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், அதிகமாகக் கூடும் சராசரியைக் கொண்ட மாநிலங்கள் ஒடிஷா, கேரளம் மட்டுமே. ஆண்டுக்கு முறையே 46, 43 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டங்களை இந்த மாநிலங்கள் நடத்தியிருக்கின்றன. பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் மோசமான சராசரியைக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஆண்டுக்கு 15 நாட்களுக்கும் குறைவாகவே இவை சட்டப்பேரவையைக் கூட்டியிருக்கின்றன. தமிழ்நாடு சராசரியாக 37 நாட்களே பேரவையைக் கூட்டியிருக்கிறது.

உலகிலேயே குறைவான நாட்களே கூடும் மக்களவையைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவை 2020-ல் 163 நாட்களும், 2021-ல் 166 நாட்களும் கூடியது; செனட் இரு ஆண்டுகளிலும் 192 நாட்கள் கூடியது. பிரிட்டனை எடுத்துக்கொண்டால், காமன்ஸ் சபை 2020-ல் 147 நாட்கள் கூடியது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 155 நாட்களுக்குக் கூடியிருக்கிறது. ஜப்பானின் டயட் ஆண்டுக்கு 150 நாட்கள் கூடியிருக்கிறது. கனடாவின் காமன்ஸ் சபை ஆண்டுக்கு 127 நாட்கள் கூடியிருக்கிறது. ஜெர்மனியின் புந்தேஸ்டாக் 104 நாட்கள் கூடுகிறது. இது தவிர சிறப்புக் கூட்டங்கள் உண்டு என்பதுபோக, ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்றம் கூடுகிறபோது அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றாக வேண்டும் என்ற கட்டாயமும் உண்டு.

இந்திய மக்களவையோ, 2020-ல் 33 நாட்கள் மட்டுமே கூடியிருக்கிறது. மக்களவை இந்த லட்சணம் என்றால், சட்டப்பேரவைகள் இன்னும் மோசம் என்பதையே மேற்கண்ட தரவுகள் சொல்கின்றன. அவைக் கூட்டங்களை அதிகமான நாட்கள் நடத்துவது, அரசு கொண்டுவரவிருக்கும் சட்டங்கள் மீது விரிவான விவாதங்களை நடத்துவது, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இருதரப்பும் போட்டிபோட்டு விவாதிப்பது என்பதில் இந்திய அரசியலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தையும் நம்பிக்கையையும் இழந்துவருவது அகில இந்திய அளவிலேயே ஒரு போக்காக உருவெடுத்துவருவதைக் கவனிக்க முடிகிறது. விவாதங்களை எதிர்கொள்வதில் ஆட்சியாளர்களுக்கு உள்ள அச்சமும், போதிய திறமையின்மையும்கூட இதற்கான காரணங்களில் அடக்கம் எனலாம். 

2005-ம் ஆண்டில்கூட 85 நாட்கள் கூடியது இந்திய மக்களவை. நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை 1960-கள் வரை சராசரியாக 47 நாட்கள் கூடியிருக்கிறது;/2000 வாக்கில் இது, 30 நாட்கள் ஆனது; இப்போது 22 நாட்களாகச் சுருங்கிவிட்டது. நம்முடைய தமிழ்நாடு சட்டப்பேரவையானது, விரிவான விவாதங்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்த ஒன்றாகும். 2000 வரைகூட, 51 நாட்கள் சராசரியாக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்த மாநிலம் இது. 2000-க்குப் பிறகு இது 37 நாட்கள் ஆகிவிட்டது.

எத்தனை மணி நேரம் அவை கூடியிருக்கிறது; எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்கு வந்திருக்கின்றனர் என்கின்ற கணக்குகளையும் புரட்டினால் மேலும் கவலை உயரக் கூடும். ஏனென்றால், ஒரு மணி நேரம் கூடி கலைந்தாலும், ஒரு நாள் கூடுகையாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டப் பங்கேற்பு குறைவு. ஆக, எதன் பொருட்டு அவைக்குச் செல்ல வேண்டும் என்று அரசியலர்கள் ஆசைப்படுகிறார்களோ, அந்தப் பிரதான வேலையே உருப்படியாக நடப்பதில்லை. விளைவாக புயல் வேகத்தில், மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. மக்களுடைய பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கான வெளி குறைகிறது. மொத்தத்தில் ஜனநாயகம் அடிவாங்குகிறது.

இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஊடகங்கள் உள்பட ஜனநாயகத்தின் கண்காணிப்பாளர்கள் இந்த விஷயத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். கூட்டங்கள் கூடும் நாட்களும், உறுப்பினர்களின் பங்கேற்பும் விவாத விவரங்களும் மக்களுக்கு அதற்குரிய முக்கியத்துவத்தோடு கொண்டுசேர்க்கப்படும்போதும், இதுதொடர்பான விமர்சனங்கள் உரத்து எழும்போதும், இந்த விஷயம் அதற்குரிய தீவிரத்தைப் பெறும். அரசுகளை மதிப்பிடுவதற்கான அளவுகளின் ஒன்றாகக் கூடுகைகள் கருதப்பட வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

9

2





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Porpadham.T Thiruchitrambalam   2 years ago

சனநாயகத்தை நேசிக்ககும் குடிமகனின், அக்கறை பதிவு. நன்றி. ஆசிரியர்.. திருமிகு. சமஸ்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

SABARINATHAN NAGARAJ   2 years ago

இத்தரவுகளோடு நாடாளுமன்ற / சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகின்ற சமயங்கள் ஆகின்ற செலவினங்களையும் கணக்கிலெடுத்து இக்கட்டுரையை அணுகினால் இன்னும் நம் மனம் சலிப்படையவே செய்யும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

தினக்கூலி 500 வாங்குபவருக்கு கூட விடுமுறை எடுத்தால் சம்பளம் தரப்படுவதில்லை.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

அறிவியல் தமிழ்அருஞ்சொல் சமஸ் பேட்டிஅருண் நேருவரிமுறைஅச்சத்தை மறைக்கப் பார்க்கிறது அரசுமுஸ்லிம்கள்Amulபெரிய சவால்கள்காலனியாதிக்கம்அமெரிக்காவில் சாதிகரிகாலன்தேர்தல் நன்கொடைகடன்வரிச் சலுகைகள் முக்கியமல்லபுதிய முன்னுதாரணம்ட்விட்டர்கார்ட்டூன்வரவேற்புஎதிர்காலம்வயற்களம்மென்பொருள்ஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிஅளிப்புஉருவக்கேலிமோடியிடம் எந்த மாற்றமும் இல்லை!முடக்கம்சரண் சிங்அண்ணன் பெயர்நாஜிக்கள்பாதுகாக்கப்பட்ட பகுதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!