கட்டுரை, அரசியல், சட்டம், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை

ப.சிதம்பரம்
01 Jan 2024, 5:00 am
1

நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளையும் திட்டங்களையும் விவாதிப்பதற்கான இடம். அது அப்படித்தான் விவாத அரங்கமாக இருக்க வேண்டும். பொது விவாதங்களை நடத்த முடியாத இடமாகிவிட்டால் அதுவே அதற்குப் பெரிய களங்கமாகிவிடும்.

நாடாளுமன்றம் என்பது சட்டங்களை இயற்றுவதற்கான இடம் மட்டுமே என்பது தவறான நம்பிக்கை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுள்ள அரசியல் கூட்டணி அல்லது கட்சிதான் ஆட்சியை நடத்த முடியும். எனவே, பெரும்பான்மை வலிமையைக் கொண்டு மசோதாக்களை விவாதம் இல்லாமலேயே நிறைவேற்றிவிடலாம் என்ற எண்ணம் சரியல்ல.

விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் சட்டங்கள் தொடர்பாக மக்களிடையே சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கே, சட்டப்படியாக நிறைவேற்றப்பட்ட அங்கீகாரம் இருக்கும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நிதியமைச்சர் பதிலும் நிலைகுலைவும்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 2023 டிசம்பர் 4இல் தொடங்கியது. டிசம்பர் 21இல் அது முடிய வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.

முக்கியமான சில சட்டங்கள் உள்பட மிகப் பெரிய நிகழ்ச்சி நிரலை அரசு தயாரித்திருந்தது; எதிர்க்கட்சிகளும் மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகள் குறித்து விவாதமும் அரசிடம் விளக்கம் கோரும் கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும் சிறப்பு விவாதத் தீர்மானங்களையும் அரசிடம் முன்வைத்தன; இரு தரப்பினருடைய நிகழ்ச்சிகளும் கோரிக்கைகளும் ஏற்கப்படவும் அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறவும் ஒத்துழைப்பதாக, இரு தரப்புமே பரஸ்பரம் உறுதியளித்தன.

அவைக்குத் தலைமை தாங்கும் தலைவர்கள் வழக்கம்போல சம்பிரதாயமான நடைமுறைகள் குறித்துப் பேசினார்கள்; இரு அவைகளிலுமே நடவடிக்கைகள் அமைதியாகத்தான் தொடங்கின.

ஒரு வாரத்துக்கும் மேலாக இரு அவைகளிலும் விவாதங்கள் நடந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, அவையின் உரிமைகளையும் நெறிகளையும் மீறியதாகக் கூறி, நியாயமற்ற முறையில் அவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட விதம் பெரும் திகைப்பை ஏற்படுத்தியபோதிலும்கூட, அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைக்கவில்லை.

பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவையில் நீண்ட விவாதம் நடந்தது. என்னுடைய விவாதத்தை ஒரு கேள்வியுடன் முடித்திருந்தேன். நிதியமைச்சரின் பதில் என்னை நிலைகுலையச் செய்தது. அவர் என்ன சொன்னார் அல்லது சொல்ல விரும்பினார் என்று இன்னமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, பொருளாதாரம் அல்லது ஆங்கில மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று – அல்லது இரண்டுமே – புரியாதபடிக்கு இருக்கிறோமே என்று என்னை நானே நொந்துகொள்கிறேன்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மஹ்வா மொய்த்ராவின் வீழ்ச்சி

ஸ்வாமிநாத் ஈஸ்வர் 31 Oct 2023

பாதுகாப்பு மீறல்

2001 டிசம்பர் 13ஆம் நாள், நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் அப்போது உயிரிழந்தவர்கள் பற்றியும் அவையில் நினைவாஞ்சலி செலுத்தப்பட்டது.  இரு அவைகளும் அன்றைய அலுவல்களை நடத்தத் தொடங்கின. பிற்பகல் 1 மணிக்கு சற்று முன்னதாக, மக்களவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து கீழே குதித்த இரண்டு இளைஞர்கள் வாயு நிரம்பிய டப்பாக்களைத் திறந்துவிட்டனர்.

அவர்கள் நினைத்திருந்தால் அதைவிடக் கொடிதான செயலைக்கூட அரங்கேற்றியிருக்க முடியும். உடனே அவை உறுப்பினர்கள் எச்சரிக்கை அடைந்தனர், என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத குழப்பமும் சில விநாடிகள் நீடித்தன. அதேசமயம், அவை உறுப்பினர்களில் சிலர் ஓடிச் சென்று அவ்விருவரையும் மேற்கொண்டு நகரவிடாமல் தடுத்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பில் இச்சம்பவம், கவலைப்பட வைக்கும் மிகப் பெரிய குறைபாடாகும்.

அந்த இருவரும் அவைக்குள் வருவதற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, அனுமதிச் சீட்டு வழங்கியிருந்தார் என்பது சில மணி நேரங்களுக்குள் தெரிந்தது. அவர் எப்போதுமே தீவிர வலதுசாரி கருத்துகளைத் தெரிவிப்பார். (அவர் மட்டும் பாஜக அல்லாமல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்றவற்றைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இச்சம்பவத்துக்குப் பிறகு அவரை கடவுளால்கூட காப்பாற்றியிருக்க முடியாது).

அதிர்ச்சியைத் தரும் வகையில் நடந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாண்புமிகு உள்துறை அமைச்சரிடமிருந்து விளக்க அறிக்கை வேண்டுமென்று எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர், இது எல்லா ஜனநாயக அமைப்புகளிலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். நடந்த சம்பவம் குறித்து அரசுத் தரப்பிலிருந்து தானாகவே விளக்கம் தந்திருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகள் இணைந்து வலியுறுத்திய பிறகாவது அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு விளக்கம் தரவே மறுத்துவிட்டது.

இதனால்தான் அவையில் பெரிய அமளியும், விளக்கம் தரும்வரை வேறு அலுவல்களை நடத்தக் கூடாது என்ற வலுவான கோரிக்கையும் எழுந்தன.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்

ஆசிரியர் 20 Dec 2023

முன்னுதாரணங்கள்

அரசுத் தரப்பில், ‘அவையின் பாதுகாப்பில் எங்கோ தவறு நடந்திருக்கிறது, அதைக் குறித்து விசாரிக்கிறோம், வழக்குப் பதிவுசெய்திருக்கிறோம், விசாரணை முடிந்த பிறகு முழு விவரத்தையும் அவைக்குத் தெரிவிக்கிறோம்’ என்று விளக்கம் அளித்திருந்தால்கூட பதற்றம் தணிந்திருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சமாதானமாகியிருப்பார்கள். ஏனென்றே புரியாத காரணங்களால் அரசு விளக்கமும் தரவில்லை, விவாதிக்கவும் அனுமதிக்கவில்லை, எந்த ஓர் எதிர்னையையும் ஆற்ற அரசு தயாராக இல்லை. சம்பவம் குறித்து விளக்கவும் முடியாது, அறிக்கையும் கிடையாது என்பதில் அரசு பிடிவாதமாக இருந்தது. எனவே, நிலைமை அப்படியே தொடர்ந்தது.

இதே நாடாளுமன்றத்தில் இதைப் போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்தபோது அரசுகள் செயல்பட்ட முன்னுதாரணங்கள் வேறு மாதிரியாக உள்ளன.

  • 2001 டிசம்பர் 13 வியாழக்கிழமை நாடாளுமன்றம் தாக்கப்பட்டது.
  • அதற்குப் பிறகு டிசம்பர் 18இல் அரசின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை அளித்தார்.
  • டிசம்பர் 18, 19 ஆகிய இரு நாள்களில் அவையில் விவாதம் நடந்தது.
  • உள்துறை அமைச்சர் அத்வானி, 18 – 19 ஆகிய இரு நாள்களிலும் இரு அவைகளிலும் விளக்கங்களை அளித்தார்.
  • பிரதமர் வாஜ்பாய் டிசம்பர் 19இல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் குறித்துப் பேசினார்.

அதேபோல மும்பை மாநகரின் மீது பயங்கரவாதிகள் 2008 நவம்பர் 26-29இல் தாக்குதல் நடத்தினர். பிறகு குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான 2008 டிசம்பர் 11இல் அன்றைய உள்துறை அமைச்சர் (ப.சிதம்பரம்), தாக்குதல் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார், அதே அறிக்கை மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சரால் வெளியிடப்பட்டது. இரு அவைகளிலும் அது தொடர்பாக விரிவான விவாதம் நடந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இதுதான் சட்ட சீர்திருத்தமா?

ப.சிதம்பரம் 27 Nov 2023

விவாதமும் இல்லை, அக்கறையும் இல்லை

இவ்வாறு அவையில் விளக்கம் அளித்த முன்னுதாரணங்கள் இருக்கும்போது, நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அவைத் தலைவர்கள்தான் காரணம் என்று ஏற்க முடியாத வாதத்தை முன்வைத்து, பதில் அளிக்கும் பொறுப்பிலிருந்து விலகப் பார்த்தது அரசு. தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக விசாரணை முடிந்து அறிக்கை பெறும்வரையில் அரசால் அவைக்கு விளக்கம் தர முடியாது என்றும் கூறப்பட்டது.

இவை மட்டுமல்லாது பிரதமரும் உள்துறை அமைச்சரும் அடுத்த சில நாள்களுக்கு இரு அவைகளுக்கும் வராமலேயே தவிர்த்தனர். அதேசமயம் உள்துறை அமைச்சர் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதே சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கிக்கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இப்படி அமளியால் முழுமையாக நடைபெறவில்லையே என்ற கவலை அரசுக்குத் துளியும் இல்லை. இரு அவைகளிலும் விளக்கம் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிற நடவடிக்கைகளைத் தடுத்தபோது அவர்கள் அனைவரையும் அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய அரசு தயங்கவில்லை. கூட்டத் தொடரே டிசம்பர் 20ஆம் நாளுடன், திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ளப்பட்டது.

இரு அவைகளிலும் சேர்த்து இதுவரை இருந்திராத வகையில் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அன்றாடம் சில உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துகொண்டே 10 முதல் 12 மசோதாக்களையும் விவாதமில்லாமல் நிறைவேற்றினர். அதில் மூன்று இந்திய தண்டனையியல், குற்றவியல், சாட்சியச் சட்டம் தொடர்பானவை, சர்ச்சைக்குரியவை. விவாதமின்றியே மூன்றையும் நிறைவேற்றிக்கொண்டனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

எந்தச் சட்டம், யாருடைய ஆணை?

ப.சிதம்பரம் 24 Apr 2023

விவாதமே நடைபெறாத – அமளிதுமளிப்பட்ட நாடாளுமன்றம் தொடர்பாக – அக்கறை காட்ட ஏதுமில்லை என்ற அணுகுமுறையே இந்த அரசிடம் நிலவுகிறது என்பது மிகவும் கவலையை அளிக்கிறது. அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பிரதிநிதிகள் அவையாக மட்டும் - சில நாடுகளில் இருப்பதைப் போலவே - இந்திய நாடாளுமன்றத்தின் முக்கியத்துவமும் குறைக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் வளர்ந்துகொண்டேவருகிறது. 2023இல் நடந்துள்ள குளிர்கால கூட்டத் தொடர் சீர்குலைப்புச் சம்பவம் எனது அச்சங்களையும் ஐயங்களையும் மேலும் வலுப்படுத்திவிட்டன.

இருந்தாலும், இன்னும் நம்பிக்கை இருக்கிறது - அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்
சர்வாதிகாரத்துக்கான சட்டங்கள்
இதுதான் சட்ட சீர்திருத்தமா?
எந்தச் சட்டம், யாருடைய ஆணை?
தண்டனைச் சட்டம் மாறாதவரை சித்திரவதைகளுக்கு முடிவில்லை
மஹ்வா மொய்த்ராவின் வீழ்ச்சி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2





1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    11 months ago

விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் வாயிலாக மக்களை நாங்கள் மதிக்கவில்லை என்பதை மத்திய அரசு‌ பத்தாயிரத்து ஒரு முறையாகக் காட்டுகிறது.உறுப்பினர்கள் அமளி செய்ய வேண்டும், அதைக் காரணம் காட்டி அவர்களை நீக்கி, விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டே பாஜக அமைச்சர் வழியாக மிக மிதமான பாதுகாப்பு பிரச்சினையை மத்தியில் ஆள்பவர்கள் கொண்டு வந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது! திரு.ப.சிதம்பரம் அவர்களைத் தமக்கு பொருளாதாரமோ ஆங்கிலமோ தெரியாதோ என்று குழம்பிப் போக வைக்கிற அளவுக்கு பேசுகிற நிதியமைச்சர் அமைந்தது இந்த நாட்டின் தலையெழுத்து 🤦🏻‍♀️. மக்களுக்கு இன்னும் மிச்சமிருக்கும் நம்பிக்கை 2024 இன் பொதுத் தேர்தல் தான் .

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

முல்லைக்கலியின் குறிப்புகள்காந்தஹார்சிஐஎஸ்எப் காவலர்கள்அரசமைப்புச் சட்டபிரிட்டன் ராணிThirunavukkarasar Samas Interviewபிராந்தியக் கட்சிகள்மு.க.அழகிரிதேசியப் பூங்காக்களும்சமூக வலைத்தளம்கல்விக் கட்டமைப்புவேற்சொற்களின் களஞ்சியம்நாங்குநேரிநயத்தக்க நாகரிகம்இந்திய மாடல்நெடுஞ்சாலைசம பிரதிநிதித்துவம்ஜெய் ஸ்ரீராம்அருந்ததியர்டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?டிரெண்டிங்காது கேளாமை ஏன்?காஷ்மீர் இந்துக்கள் படுகொலைவெள்ளியங்கிரி மலைஅ.ராமசாமி கட்டுரைஅல்சர் துளைஉத்தர பிரதேசம் பெயர் பெற்ற வரலாறு!செயல்பட விடுவார்களா?அரசு வேலைஃபருக்காபாத்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!