இந்தியாவின் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பாக என்னுடைய விருப்பப் பட்டியலில் இருந்த நான்கு விஷயங்கள் பற்றி, 2009 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தில்லி பத்திரிகைக்குக் கட்டுரை எழுதினேன்; அந்த விருப்பங்கள் மூலம் இந்திய ஜனநாயகத்துக்குப் புத்துயிர் ஊட்டிவிட முடியும் என்று நம்பினேன்.
உருண்டோடிய 15 ஆண்டுகள்
முதலாவதாக, நேரு - இந்திரா குடும்பத்தவரின் செல்வாக்குக்கு ஆள்படாத காங்கிரஸ் கட்சி உருவாக வேண்டும் என்று நினைத்தேன். இரண்டாவதாக, ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்தும் அதன் இந்து ராஷ்டிர கொள்கையிலிருந்தும் விலகி நிற்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி இருந்தால் நல்லது என்று விரும்பினேன்.
மூன்றாவதாக, இந்திய இடதுசாரிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் சீர்திருத்தங்களில் அவர்கள் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், வன்செயல்களைக் கைவிட வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம்தான் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன்.
இறுதியாக, பெருகிக்கொண்டேவரும் இந்திய நடுத்தர வர்க்கத்தின் தேவைகளை – விருப்பங்களைப் புரிந்துகொண்டு சாதி – மதம் பேதம் பார்க்காத, எந்த ஒரு பிரிவுக்கும் இனத்துக்கும் சாதகமாக இல்லாத நடுநிலைக் கொள்கையை ஆதரிக்கும் புதிய அரசியல் கட்சியாவது உருவெடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இந்தக் கட்டுரை எழுதி 15 ஆண்டுகள் உருண்டோடிய பிறகு, மக்களவைக்கு மூன்று பொதுத் தேர்தல்களும் நடந்து முடிந்த பிறகு என்னுடைய விருப்பப் பட்டியலை நினைவுகூர்ந்தால் எதுவுமே நிறைவேறவில்லை என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்தியத் தலைவராக இப்போது பதவி வகிக்கிறார் என்றாலும், கட்சி என்னவோ இன்னமும் அந்தக் குடும்பத்தின் பிடியிலேதான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே பாரத் ஜோடோ யாத்திரை நடக்கும் இடத்துக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ‘இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் வர வேண்டும்’ என்று தனது விருப்பத்தை அறிவித்தார். பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் ராகுல் என்ற கருத்துருவை சமூக ஊடகத்தில் காங்கிரஸ் உருவாக்கியது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைத்த பிறகு இந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. ஆனால், இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்தும் காங்கிரஸ் வட்டாரங்களிலேயே அபூர்வமாக வெளிப்படுகிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்கள், பிரதமர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தியை முன்மொழிகிறார்கள்!
இந்துத்துவச் செல்வாக்கு
பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்தும் இந்துத்துவக் கொள்கைகளிலிருந்தும் விலகி நிற்பதற்குப் பதிலாக அந்த இரண்டின் இரும்புப் பிடிக்குள் மேலும் வலுவாக சிக்கிக்கொண்டுவிட்டது. அந்தக் கட்சிக்கு மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை என்பது அந்தக் கட்சி சிறுபான்மையர்களை எப்படி நடத்துகிறது என்று உணர்த்துகிறது; அதிலும் முஸ்லிம்களை நாட்டின் சம உரிமையுள்ள குடிகளாகவே அது கருதுவதில்லை என்பதையே பறைசாற்றுகிறது. பாடப் புத்தகங்களைத் திருத்தி எழுதுவதும் பாடத் திட்டத்தையே மாற்றுவதும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதும் ஆளுங்கட்சியின் பேரினவாதக் கொள்கையின் அப்பட்டமான வெளிப்பாடுகள்.
பாரதிய ஜனதா தலைமையிலான முதலாவது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் (1998-2004) அரசின் கொள்கைகளும் திட்டங்களும் இந்துத்துவ செல்வாக்கிலிருந்து முழுமையாக விலகியிருக்கவில்லை. இருந்தாலும் இந்தக் கொள்கைகள் அனைத்தும் அடக்கியே வாசிக்கப்பட்டன. பிறகு 2014இல் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் இந்துத்துவக் கொள்கைகள் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கின.
அரசின் கொள்கைகளில் இந்துத்துவம் தோய்ந்தது ஒரு பக்கமிருக்க, கட்சியும் ஆட்சியும் தனிநபர் துதியில் இறங்கிவிட்டன. கடந்த காலங்களில் எந்த ஒரு தலைவரையும் கட்சியைவிடப் பெரிதாகக் கருதிவிடாத நிலை பாரதிய ஜனதாவில் இருந்தது. அந்த வகையில் இந்திரா காந்திக்கு அடிமைப்பட்ட காங்கிரஸ் கட்சியிலிருந்து வித்தியாசமாக இருந்தது. இப்போது அந்த மனத் தயக்கம் கட்சியினரிடம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையே போட்டா போட்டியே நடக்கிறது.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது பேரினவாதமும் தனிநபர் துதியும் தூக்கலாகவே இருந்தன. அடையாளமாக மட்டுமில்லாமல் உள்ளுறைப் பொருளாகவும் அவை வெளிப்பட்டன. புதிய கட்டிடத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரும் துணை குடியரசுத் தலைவரும் பங்கேற்கவில்லை, மத்திய அமைச்சர்களும் முழு எண்ணிக்கையிலோ, முன் வரிசையிலோ இல்லை.
ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து முன்னிலைப்படுத்தினர், இந்து மத ஆசார்யர்கள் அந்த நிகழ்ச்சியையே இந்து மத சடங்காகவே நடத்தி முடித்தனர். பாரதிய ஜனதாவினரும் சங்கப் பரிவாரங்களும் பிரதமரை இந்து மதச் சாம்ராட் நிலைக்கு உயர்த்திவிட்டனர்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
14 Apr 2022
இடதுசாரிகள்
அடுத்து இடதுசாரிகளுக்கு வருவோம். நான் விரும்பிய அளவுக்கு இடதுசாரிகள் சீர்திருத்தம் அடையவே இல்லை. நக்சலைட்டுகள் தலைமறைவு வாழ்க்கையைக் கைவிட்டு பொதுவெளிக்கு வந்து பல கட்சி ஜனநாயக அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்குப் பதிலாக, தங்களுக்கு செல்வாக்கிருக்கும் மாவட்டங்களில் தொடர்ந்து வன்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்ற இடதுசாரிகள் இப்போது கேரள மாநிலத்தில் மட்டும்தான் ஆட்சியில் இருக்கின்றனர். அங்கும் அவர்கள் அரசு நிர்வாகம் தொடர்பான தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவே இல்லை. கேரளத்தின் கல்விச் சிறப்பும் சுகாதாரக் கட்டமைப்பும் அந்த மாநிலத்துக்கு நிறைய தொழில் முதலீட்டை ஈர்த்திருக்க வேண்டும், ஆனால் அப்படியில்லை.
காரணம் மார்க்சிஸ்டுகள் இன்னமும் எல்லாம் அரசின் கட்டளைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டுத்தான் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றனர்.
தனிநபர் துதி
என்னுடைய விருப்பப் பட்டியலின் கடைசியான அம்சம், இந்திய நடுத்தர மக்களுடைய விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய மதச்சார்பற்ற அரசியல் கட்சி வேண்டும் என்பது. பெயரளவில் இந்தக் கோரிக்கை நிறைவேறியதைப் போலத் தோற்றம் தந்தது 2012இல் தோன்றிய ஆம் ஆத்மி கட்சி (ஆஆக). அதன் ஆதரவாளர்கள் விரும்பியதைப் போல கடந்த காலத்திலிருந்து புரட்சிகரமான மாற்றம் கொண்ட நடுத்தர வர்க்கக் கட்சியாக அது முழுமை பெறவில்லை.
பொதுக் கல்வி, பொது சுகாதாரம் வழங்குவதில் தில்லியில் அது நல்ல பெயரெடுத்தது என்றாலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை முன்னிலைப்படுத்தும் தனிநபர் துதி அந்தக் கட்சியிலும் பெருத்துவிட்டது, அத்துடன் தில்லி கலவரத்தில் பாதிப்படைந்த சிறுபான்மையர்களுக்கு ஆதரவாக நிற்க அக்கட்சி மறுத்துவிட்டது.
இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பையே மாற்றியமைக்கும் வகையில் நான்கு அம்ச திட்டம் கொண்ட என்னுடைய விருப்பத்தை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்டுரையில் வடித்திருந்தேன். அதற்குப் பிறகு நாடு மூன்று மக்களவை பொதுத் தேர்தல்களைச் சந்தித்துவிட்டது. என்னுடைய கனவுகள் எதுவுமே நிறைவேறவில்லை என்றால் கனவு கண்ட நான் ஒரு பித்துக்குளி, அசட்டுத்தனமான லட்சியவாதி என்ற முடிவுக்குக்கூட வந்துவிடலாம்.
இந்திரா குடும்பத்தை காங்கிரஸ் கைவிட வேண்டும், ஆர்எஸ்எஸ் இயக்கத் தொடர்பை பாரதிய ஜனதா துண்டித்துக்கொள்ள வேண்டும், மாவோ – லெனின் கொள்கைகளை இடதுசாரிகள் கைவிட வேண்டும், ஆம் ஆத்மி கட்சி ஜெர்மனியில் உள்ள பெண்ணியத்துக்கு ஆதரவான பசுமைக் கட்சி போல இந்தியாவில் உருவாக வேண்டும் என்றெல்லாம் விரும்பக் கூடாது என்பதை இந்தப் பதினைந்து ஆண்டு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டுவிட்டேன்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது
15 Mar 2022
புதிதாக ஓர் ஆசை
நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கிறது. கடந்த காலத்தைப் போல இல்லாமல், புதிய ஆசையுள்ள ஒரு பட்டியலை வெளியிட விரும்புகிறேன். இது எளிதில் நிறைவேறக்கூடியது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது வேறொன்றுமில்லை, அடுத்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது, பெரிய அரசியல் கட்சிக்கு அது கிடைக்கவே கூடாது. இப்போது பிரதமராக இருப்பவர் இயல்பாகவே சர்வாதிகார மனோபாவம் கொண்டவர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அடுத்தடுத்து கிடைத்த பெரும்பான்மை பலம் அவரை மேலும் கடுமையான சர்வாதிகாரியாக மாற்றிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால், 1971இல் கிடைத்த அறுதிப் பெரும்பான்மை பலத்தால் இந்திரா காந்தி, ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடிக்காமல் சர்வாதிகாரி போல நடந்துகொண்டார். இந்திரா காந்திக்கும் மோடிக்கும் இடையில் 1984 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 400 இடங்களை அளித்து ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கினார்கள் வாக்காளர்கள். அதன் விளைவுகள் நாட்டின் நிர்வாகத்திலும் அரசியலிலும் எதிரொலித்தது.
இந்தியா மிகப் பெரிய, பன்மைத்துவம் கொண்ட நாடு. இங்கே ஆட்சியாளர் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனையையும் ஆதரவையும் பெற்றுத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும். ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் ஆளுங்கட்சித் தலைவர் அகம்பாவத்துடனும் இறுமாப்புடனும் நடந்துகொள்கிறார். சக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவதில்லை, எதிர்க்கட்சிகளைத் துச்சமாக மதிக்கிறார், பத்திரிகைகளை அடக்கியாள்கிறார், மாநிலங்களுக்கு உரிய உரிமைகளைத் தராமல் அவமதிக்கிறார், மாநில நலன்களைக் கவனிக்கத் தவறுகிறார், அதுவும் மாற்றுக்கட்சியால் ஆளப்படும் மாநிலம் என்றால் மாற்றாந்தாய் போக்கில் நடந்துகொள்கிறார்.
தனிப் பெரும்பான்மை இல்லாமை
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரேந்திர மோடியைவிட பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் சிறந்த நிர்வாகத்தை அளித்தார்கள் என்று எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்வார்கள். அதற்குக் காரணம் ராவ், வாஜ்பாய், மன்மோகன் போன்றோர் இந்திரா, ராஜீவ், மோடியைவிட அறிவாளிகள் என்பதல்ல, அவர்கள் ஆண்ட காலத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாததால் எல்லோரையும் அனுசரித்தும் ஆலோசனை கலந்தும் நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள் என்பதுதான். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஒன்றிய அமைச்சர்கள் முழுச் சுதந்திரத்துடன் செயல்பட்டார்கள், தோழமைக் கட்சியினர் அரவணைக்கப்பட்டார்கள், எதிர்க்கட்சியினர் ஆலோசனைக்கு அழைத்து மதிக்கப்பட்டார்கள்.
கூட்டணி அரசுகள் பதவியில் இருந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சித் தத்துவம், சிறுபான்மையினர் நலன், அரசு நிறுவனங்களின் சுயாட்சித்தன்மை ஆகியவை நல்ல நிலையில் இருந்தன. அறுதிப் பெரும்பான்மை வலுபெற்ற ஆளுங்கட்சி இல்லாதபோதும் ஆணவம் மிக்க பிரதமர் இல்லாதபோதும் நாட்டில் நல்லாட்சியே நிலவியது.
நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், இந்தியாவின் ஜனநாயகம், பன்மைத்துவம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்குப் பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எதிர்க்கட்சிகள் மேலும் உதாசீனப்படுத்தப்படும், ஊடகங்களின் சுதந்திரம் மேலும் பறிபோகும், சிறுபான்மையினர் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அச்சப்படுவார்கள், மாநில அரசுகள் ஒன்றிய அரசின் முன்னால் மண்டியிட வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலை வந்தால் அது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துவிடும். (கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரதமருக்கும் மோடி செய்ததைப் போல உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிக்கும் ஆணவம் ஏற்படாது).
இதுதான் என்னுடைய ஒற்றை, சாமானிய, அரசியல் விருப்பமாகும். 2024 மக்களவை பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் 250 இடங்களுக்கு மேல் – இன்னும் சொல்லப்போனால் 200 இடங்கள்கூட – கிடைக்கவே கூடாது.
தொடர்புடைய கட்டுரைகள்
சர்வாதிகார ஜனநாயகம்
இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது
கூட்டாட்சியைக் கொல்ல ஐந்து வழிகள்!
தமிழில்: வ.ரங்காசாரி
2
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.