கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
எதிர்க்கட்சிகளின் கூட்டணி: நல்ல திருப்பம்
‘இந்தியா’ என்ற குறும்பெயர் வருமாறு எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள அரசியல் கூட்டணி, 2024இல் நல்ல திருப்பமாக அமையப்போகிறது, அதேசமயம் வெறும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முயற்சியாக மட்டும் இது நின்றுவிடக் கூடாது.
தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணியாக இருந்தாலும், கூடுதலாக வாக்குகள் சேருவதும் தொகுதிகள் கிடைப்பதும் நிச்சயம் நல்ல பலன்களையே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தரும். ‘ஜூடேகா பாரத் – ஜீத்தேகா இந்தியா’ (பாரதமே ஒன்றுபடு – இந்தியாவே வெற்றிபெறு) என்ற அதன் முழுக்கத்துக்கு உயிர் கொடுக்க, சமூகப் படிநிலையில் அடி வரிசைகளில் இருக்கும் ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து தங்களுடைய ஆற்றல் முழுவதையும் அதற்குச் செலவழித்தால் இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாகவே மாறிவிடும்.
இந்தத் திசையில் அது ஏற்கெனவே சில அடிகளை எடுத்துவைத்துவிட்டது. பீஹார் தலைநகரம் பாட்னாவில் ஜூன் 23இல் நடந்த எதிர்க்கட்சிகள் சந்திப்பு, வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி எல்லாம் நடக்க முடியாத விஷயம் என்ற அவநம்பிக்கையைப் போக்கிவிட்டது. அவை ஒன்றாக அமர்ந்ததுடன் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தையும் அப்போது வகுத்தன. அடுத்து கர்நாடகத் தலைநகரம் பெங்களூருவில் நடந்த ஜூலை 17 - 18 கூட்டம், சிறு சிறு வேறுபாடுகளையும் களையும் ஆற்றல் தங்களுக்கு இருப்பதை வெளிப்படுத்தின.
கருத்தொற்றுமை அடிப்படையில் கூட்டறிக்கையைத் தயார்செய்ததுடன், கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மனதில் பதியும் வண்ணம் புதிய பெயரையும் தேர்வுசெய்ய முடிந்தது. கிட்டத்தட்ட மரித்தேவிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உடனடியாக புத்துயிர் ஊட்ட ஆளுங்கட்சி முனைந்திருப்பதும், புதிய பெயர் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளும் அவர்கள் அரண்டு போய்விட்டதையே காட்டுகின்றன. இதுவே நல்ல தொடக்கம்தான்!
இன்டியா...
‘இந்திய தேசத்தின் அனைவருக்குமான முன்னேற்றக் கூட்டணி’ என்ற வார்த்தைகளின் ஆங்கில முதல் எழுத்து குறுக்கமே ‘இன்டியா’ (INDIA – INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE). இதை அப்படியே நினைவில் கொள்ள முடியாவிட்டாலும் ‘இன்டியா’ என்ற ஒற்றைச் சொல் போதும்; மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் மிகுந்த அறிவுக்கூர்மையுடன் ஒரு செயலைச் செய்திருக்கின்றன. இந்தியா என்ற கருத்துருவாக்கத்தை மீட்டிருப்பதுடன், பாஜகவும் ஊடகங்களில் உள்ள அதன் அடிவருடிகளும் வழிநடத்திய தவறான பாதையிலிருந்து நாடு மீண்டுவர இது நிச்சயம் உதவும்.
இந்தப் பெயர் பாஜக வட்டாரங்களை மிகவும் துயரப்பட வைத்துவிட்டது என்பது அதன் முதல் விமர்சனத்திலிருந்தே தெரிகிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் என்பார்களே, அந்த நிலையில் அவை தவிக்கின்றன.
‘இன்டியா’ என்ற வார்த்தையை மோடி அரசு பல திட்டங்களுக்கு சூட்டியிருக்கிறது. ஸ்டார்ட் அப் இன்டியா, மேக் இன் இன்டியா, ஸ்கில் இன்டியா, டிஜிட்டல் இன்டியா - இன்னும் சில. எனவே, ‘இன்டியா’ என்ற வார்த்தையை அதனால் உதாசீனப்படுத்த முடியாது. ‘இந்தியா எதிர் பாரத்’ என்றெல்லாம் இளைய தலைமுறையிடம் பசப்ப முடியாது என்று மோடிக்குத் தெரியும். அதேசமயம், இந்தப் பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதை அவரால் அனுமதிக்கவும் முடியாது.
அழகான பெயர் மட்டுமே வேலையை சாதித்துவிடாது. எதிர்க்கட்சிகள் இந்தப் பெயர் தேர்வில் கிடைத்த வெற்றியை எப்படி அடுத்து வளர்க்கப்போகின்றன என்பதுதான் முக்கியம். எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்றாலே பழைய பாணியில் அதை ஏளனப் பார்வையோடு இனி பார்க்க முடியாது. இது வெறும் வாக்குகளை சேர்க்கவும் தொகுதிகளை அதிகம் வெல்வதற்குமானது மட்டும் அல்ல. மக்களுடைய நம்பிக்கையை இணைப்பதும் வீதிகளில் ஆதரவைப் பெருக்குவதற்குமானது.
வாக்குக் குவிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றிய பேச்சு வந்தபோது ஒரு கட்டுரை எழுதினேன். தேர்தலுக்கு முன்னால் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைப்பது மட்டும் பாஜகவின் தோல்வியை உறுதிசெய்துவிடாது என்று எழுதினேன், அது இன்றைக்கும் பொருந்தும். எதிர்க்கட்சிகளுடைய வாக்குகள் ஒன்று சேர்ந்தால் ஆளுங்கட்சியைத் தோற்கடித்துவிடலாம் என்ற வாதம் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தால் பொருந்தும் அளவுக்கு, பாஜகவுக்குப் பொருந்தாது.
அதற்குக் காரணம், இந்தியாவின் புவியியல் அமைப்பு சார்ந்த தேர்தல் களம். கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜக இன்னமும் ஒரு சக்தியாகவே உருவெடுக்கவில்லை. எனவே, இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்ப்பதோ, கூட்டணி அமைப்பதோ பெரிய பலனைத் தந்துவிடப் போவதில்லை. சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களில் பாஜகவுக்கு தோழமைக் கட்சிகள் தேவைப்படவில்லை. காங்கிரஸுடன் நேருக்கு நேர் மோதும் மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் இரண்டு கட்சிகளுமே கூட்டணி வைக்கும் அளவுக்குப் பெரிய கட்சிகள் வேறெதுவுமில்லை.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுபடுவதால் பாஜகவுக்கு ஆதாயம் கிட்டக்கூடிய மாநிலங்கள் மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், பீஹார், அசாம் ஆகியவைதான். அங்கே மாநில அளவில் ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டன. இந்த நிலையில் தில்லி மாநிலம், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் மட்டும்தான் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதால் அவற்றுக்குப் பெரிய ஆதாயம் கிட்டும்.
ஆனால், இந்த மாநிலங்களின் அரசியல் பின்னணி காரணமாகவும், வினோதங்களாலும் இங்கே எதிர்க்கட்சிகள் கூட்டணி வைப்பதும் - தேர்தல் தொகுதி உடன்பாடு காண்பதும் எளிதான செயல் அல்ல. இந்த மாநிலங்களிலிருந்து இன்டியா பெரிய ஆதாயத்தை எட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. வாக்காளர்கள் பாஜகவை எதிர்த்தும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்களிக்கக் காத்திருக்கிறார்கள் என்று மட்டும் தவறாக நினைத்துவிடக் கூடாது.
தொகுதிகளை அதிகமாக்குவது
எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மிகவும் எளிது, நம்முடைய நாட்டின் புவியரசியல் அமைப்பில் பொருத்தமானதும்கூட. வெவ்வேறு மாநிலக் கட்சிகள் தங்களுடைய மாநிலங்களில் அதிகபட்சத் தொகுதிகளில் வென்று தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் இடம்பெற ஆதரவு தெரிவிக்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசு 2004இல் அப்படித்தான் அமைந்தது. தேர்தலுக்கு முன்னதாகவே இன்டியா கூட்டு அமைந்திருப்பதால், தேர்தல் முடிவு வந்த பிறகு கூட்டணி அரசை அமைப்பதற்கு இது உதவும்.
தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அரசு அமைவது பற்றி அதிக முக்கியத்துவம் தந்து பேசுவது எதிர்மறையான பலனையும் தரக்கூடும்; “பார்த்தீர்களா இது சந்தர்ப்பவாத கூட்டணி, ஒரேயொருவரைப் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமல்ல பசையுள்ள பதவி – இலாக்காக்களுக்குத்தான் இந்தக் கூட்டு” என்று பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும். 2024 மக்களவைத் தேர்தல் முடிவு வந்த பிறகு அரசியல் களம் எப்படியிருக்கும் என்று இப்போதே சிந்திப்பதும் சரியானதல்ல. 2024 மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்த 39 தோழமைக் கட்சிகளும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 26 கட்சிகளும் என்ன நிலையை எடுக்கும், எங்கே நகரும் என்று இப்போதே கூறிவிட முடியாது.
எனவே, இன்டியா கூட்டணியை வைத்து எவ்வளவு வாக்குகள், தொகுதிகள் என்று மதிப்பிட்டு எதையும் சிந்திக்க முடியாது. அதற்கும் மாறாக மக்களுடைய மனநிலையில் என்ன மாற்றங்களை இந்தக் கூட்டணியால் ஏற்படுத்த முடியும், நல்லாட்சியைத் தருவதாக எப்படி நம்பிக்கையை ஏற்படுத்த முடியும், அதற்கான உத்திகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டும்.
வீதியில் பெருந்திரள்
இன்டியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஏற்பட்டவுடன் 26 கட்சிகளும் இணைந்து, எந்தெந்த காரணங்களுக்காக பாஜக கூட்டணியைத் தாங்கள் எதிர்க்கிறோம் என்று அறிவித்தன. சர்வாதிகார அரசியல் (அரசமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல், கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயக உரிமைகள், அரசியல்ரீதியிலான எதிர்ப்பு) கொள்கைகளுக்கு எதிராக, சமூக விலக்கலுக்கு எதிராக (சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வு, வன்செயல்கள், பல சமூகங்களைச் சேர்ந்த விளிம்புநிலை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்), பொருளாதார நெருக்கடிகள் (விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சலுகைசார் முதலாளித்துவம், தேசியச் சொத்துகளைத் தனியாருக்கு விற்பது, விவசாயிகளின் நிலை) ஆகியவை தொடர்பாக பாஜக கூட்டணியை எதிர்க்கும் கூட்டு முடிவை அறிவித்தன. இவை அனைத்துமே உண்மையான பிரச்சினைகள், உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியவை.
எதிர்க்கட்சிகளுக்கு உண்மையான சோதனை எதுவென்றால் தேர்தலில் பேசப்பட வேண்டிய இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்குமாக இப்போது போராடுவதைவிட, மக்களை மிகவும் பாதிக்கும் பிரச்சினைகள் சிலவற்றுக்காக தேசம் முழுவதும் இணைந்து போராடி மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெறுவதுதான்; 2024க்கு முன்னதாகவே தேசிய அளவில் மக்கள் இயக்கத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டும்.
பாஜக அரசின் அதிகார துஷ்பிரயோகங்களால் எதிர்க்கட்சித் தலைவர்கள் திடீர் சோதனைகளுக்கும் கைதுகளுக்கும் ஆளாவது குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யலாம், ஆனால் அது தலைவர்களின் சொந்த நலனுக்கான பிரச்சாரமாகத் தெரியும்; விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து போராட்டம் அறிவிக்கலாம். இவை நாடு முழுவதையும் பாதிக்கும் பிரச்சினைகள். விவசாய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டால் நாட்டின் எல்லா கிராமங்களையும் இதன் மூலம் அடைய முடியும்.
மோதானி பிரச்சினை
பாஜக அரசைத் தாக்குவதற்கு வலுவான ஆயுதம் எதுவென்றால் மோடி – அதானி கூட்டு என்கிற மோதானிதான். எதிர்ப்பு, ஊர்வலம், போராட்டம் என்று அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் மக்கள் அமைப்புகளையும் இதில் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்த வேண்டும். தொகுதி உடன்பாட்டைவிட, போராட்டத்தின்போது வீதிகளில் செல்வோரிடையே ஏற்படும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே 2024 அரசியல் மாற்றத்துக்குப் பெரிதும் உதவும்.
நம்பிக்கை திரட்டு
இன்டியா மூலம் மக்கள் எல்லாத் துறைகளிலும் நல்லாட்சியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இப்போதைய ஆட்சியில் மக்களை பாதிக்கும் அம்சங்களைச் சுட்டிக்காட்டி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவையெல்லாம் எப்படி களையப்படும், புதிதாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விளக்கப்பட வேண்டும். அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் மாற்று செயல்திட்டத்தை எதிர்க்கட்சிகள் தரும், அரசின் செயல்படும் முறையும் தன்மையும் மாறும் என்று கூட்டறிக்கை அதன் திசை வழியைக் காட்டியிருக்கிறது.
ஆனால், இதில் நம்பிக்கையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தின் மீதும் மக்களுக்கு அவநம்பிக்கை நிலவுகிறது, அவற்றில் சில எதிர்க்கட்சி அணியிலும் இருக்கின்றன. எதிர்க்கட்சி கூட்டணி பற்றி ஆளுங்கட்சியும் அதன் ஆதரவு ஊடகங்களும் செய்யும் பிரச்சாரங்களையும் திசை திருப்பல்களையும் எதிர்த்து வெல்வது எளிதல்ல. ஆனாலும், எதிர்க்கட்சிகள் அதைச் செய்தாக வேண்டும். வாக்காளர்களுடைய மனங்களையும் இதயத்தையும் வெல்வதன் மூலம் அதைச் சாதிக்க முடியும்.
தொடர்புடைய கட்டுரைகள்
மக்களவையில் தமிழகத்தின் இடங்கள் குறைகிறதா?
2024: யாருக்கு வெற்றி?
பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லை
அரசியல் அகராதிக்குப் புதுவரவு ‘மோதானி’
புதிய ராகுல்
2024 களத்தையே மாற்றிவிட்டது பிஹார் எழுச்சி
பிஹாரிலிருந்து ஆரம்பிக்கும் 2024 ஆட்டம்
மோடி அரசின் ‘முடிவுக் காலம்’ நெருங்குகிறதா?
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.