கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

2024 களத்தையே மாற்றிவிட்டது பிஹார் எழுச்சி

யோகேந்திர யாதவ்
12 Aug 2022, 5:00 am
2

பாஜகவுக்கு 2024 மக்களவைப் பொதுத் தேர்தல் இனி ‘மடியில் விழுந்த மாங்கனி’யாக இருக்காது. பிஹாரில் நடந்துள்ள அரசியல் எழுச்சி இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றிவிட்டது. 

ஒட்டுமொத்த இந்தியாவை மூன்று வகையான அரசியல் களங்களாகப் பகுத்தால் அவற்றில் ஒன்றில் மட்டும்தான் பாஜக ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து முக்கிய தோழமைக் கட்சிகளும் விட்டு விலகிவிட்டதாலும், எஞ்சியவை செல்வாக்கு இழந்ததாலும் கூட்டணியே கரைந்து, தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயர் மட்டுமே எஞ்சி நிற்கிறது. 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருவது, பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

பாஜகவைத் தூக்கி எறிந்துவிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் சேர நிதீஷ்குமார் முடிவெடுத்துவிட்டார் என்ற செய்தி வெளியானதும், என்னுடைய காந்திய-சோஷலிஸ்ட் தோழர் தலீப் சிங் இப்படி அறிவித்தார்: ‘இந்தியாவின் வரலாறு என்பது பிஹாரின் வரலாறுதான்!’ கற்பனை வானத்தில் பறந்தபடியே அவர் மேலும் கூறினார்: “புத்தரின் காலத்திலிருந்து மிகப் பெரிய எழுச்சிகள் அனைத்தும் பிஹார் மண்ணிலிருந்துதான் உதயமாகியுள்ளன. நிதீஷ் இப்போது ஏற்படுத்தியுள்ள எழுச்சி மோடி அரசுக்கு முடிவுரை எழுதிவிடும்” என்றார்.

நண்பர் சொல்வது சாத்தியமல்ல என்று அவருடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. மதச்சார்பற்றவர்கள் முகாமில் இப்படி எதையாவது நம்பிக்கையுடன் பேசுவதே சமீப காலங்களில் அரிதாகிவருகிறது. சுற்றிச் சுற்றி பறந்து ரீங்காரமிடும் சில் வண்டைப் போன்ற சுபாவமுள்ள அந்தத் தோழர், தான் சொல்வதையெல்லாம் மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று எதிர்பார்ப்பவரும் அல்ல. எதையாவது சொல்லி உங்களை மேற்கொண்டு சிந்தனையில் ஆழ்த்த வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதில் அவர் வென்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

எழுச்சி வலிமையானது

உண்மைதான், பிஹாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது இந்திய அரசியல் எதிர்காலத்தையே மாற்றும் அளவுக்கு வலிமையானது. 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணிதான் மீண்டும் வெற்றிபெறும், அதை மாற்ற முடியாது என்று பலராலும் பேசப்பட்டு மனதில் பதிந்துவிட்ட நேரத்தில்தான் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்கள் வந்தன. அவற்றின் முடிவுகளும் எதிர்க்கட்சிகளைத் துவளவைத்துவிட்டன. இந்த நிலையில்தான் பிஹாரில் நடந்துள்ள ஆட்சி மாற்றம், ‘பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது சாத்தியம்தான்’ என்ற நம்பிக்கைக்கு உரம் ஊட்டியிருக்கிறது.

1970இல் ஊழல் ஆட்சிக்கு எதிராக பிஹாரில் தோன்றிய மாணவர் கிளர்ச்சி, படிப்படியாக வலுப்பெற்று நாடெங்கும் பரவி, 1977இல் தேர்தல் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு இந்திய அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 1990களில் இந்திய அரசியலில் மண்டல் சகாப்தத்தையும் பிஹார்தான் தொடங்கியது.

பிஹார் இப்போது மீண்டும் வழிகாட்டுவதைப் போலத் தெரிகிறது. ‘அந்தகாரத்துக்கு நடுவே தெரியுது ஒரு பிரகாசம் – அது ஜெயப்பிரகாசம், ஜெயப்பிரகாசம்’ என்ற அறைகூவல் பிஹார் இயக்கத்தின்போது பிரபலமானது. வைர விழாவை நோக்கி நடைபெறும் இந்தியக் குடியரசைச் சூழ்ந்துள்ள கருமேகங்களுக்கு இடையில், நம்பிக்கையூட்டும் மின்னல் கீற்றாக இப்போது பிஹார் எழுச்சி பிறந்திருக்கிறது.

ஒரேயொரு கட்சி, கூட்டணியை மாற்றிக்கொண்டு ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் செய்திருப்பதை வைத்து ஒரேயடியாக மிகைப்படுத்திச் சொல்கிறேனோ? தேர்தல் அறிவியலில் எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் வாக்கு கணக்குப்படி, இந்த மாற்றம் எந்த அளவுக்கு முக்கியமானது, வரலாற்றை மாற்றக்கூடியது என்பதை ஆதாரங்களுடன் விளக்க அனுமதி கோருகிறேன்.

பாஜகவுக்கு சவாலானது 2024

இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்வோம்.

முதலாவது – கடற்கரையோர மாநிலங்கள். வங்கம் தொடங்கி கேரளம் வரையில் பரவியிருப்பவை. இத்துடன் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இங்கெல்லாம் பாஜக செல்வாக்கான அரசியல் கட்சி அல்ல. இந்தப் பகுதிகளில் மொத்தம் 190 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் பாஜக இவற்றில் 36 இடங்களில் மட்டுமே வென்றது. தோழமைக் கட்சிகளைச் சேர்த்தால் 42. இவற்றில் 18 தொகுதிகள் வங்கத்திலிருந்து கிடைத்தன.

வங்க சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் பாஜகவின் சரியும் செல்வாக்கு நிலையைப் பார்க்கும்போது, அந்த மாநிலத்தில் இனி 5 தொகுதிகளில் வெல்லவே அந்தக் கட்சி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். ஒடிஷாவில் இழக்கப்போகும் சில தொகுதிகளை, தெலங்கானாவில் அது மீட்பதாகவே வைத்துக்கொண்டாலும் இந்தப் பகுதியில் மொத்தமாக அதிகபட்சம் 25 தொகுதிகளில்தான் அதனால் வெல்ல முடியும். எஞ்சியுள்ள 353 தொகுதிகளில் 250 தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும். இது மிகவும் கடினமான இலக்கு என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

பாஜகவுக்கு அதிக இடங்கள் மேற்கு, வடக்கு மாநிலங்களிலிருந்துதான் கிடைத்திருக்கிறது. அங்கும் இந்தி பேசும் மாநிலங்களான பிஹார், ஜார்க்கண்ட் ஆகியவற்றை இந்த முறை கழித்துவிடுங்கள். குஜராத் மேற்கில் இருக்கிறது. உத்தர பிரதேசம் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ்தான் பாஜகவுக்குப் பிரதான எதிர்க்கட்சி என்பதால் அங்கெல்லாம் நேருக்கு நேர் போட்டியிட்டு மொத்தமுள்ள 203 தொகுதிகளில் 182 இடங்களை 2014, 2019 மக்களவைப் பொது தேர்தலில் வென்றது பாஜக. சிறிய தோழமைக் கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைத்தன.

பாஜகவுக்கு அதே செல்வாக்கு நீடிப்பதாகவே வைத்துக்கொள்வோம், ஹரியாணா, இமாசலம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகளில் சிறிதளவு சதவீதம் குறைந்தாலும்கூட தொகுதிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே குறையக்கூடும். அதேசமயம், காங்கிரஸ் கட்சி சிறிதளவாவது மக்களுடைய செல்வாக்கை அதிகப்படுத்திக்கொண்டால், பாஜகவின் இந்த எதிர்பார்ப்பும் குலைந்துவிடும். இருந்தாலும் இந்தப் பகுதியில் பாஜகவுக்கு 150 தொகுதிகள் கிடைக்கின்றன என்றுகூட வைத்துக்கொள்வோம்.

எஞ்சியுள்ள 150 தொகுதிகளில் 100 தொகுதிகள் கிடைத்தால்தான் பாஜகவால் முன்பைப்போல ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மை வலு கிடைக்கும். இந்த 150 தொகுதிகள் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், பிஹார் மாநிலங்களில் பெருமளவு உள்ளன. அசாம், திரிபுரா, மேகாலயம், மணிப்பூர் ஆகியவற்றையும் இத்துடன் சேர்த்துக்கொள்ளுங்கள். இங்கெல்லாம் பாஜகவின் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. 2019இல் பாஜக கூட்டணி 130 தொகுதிகளை வென்றது. 88 பாஜகவுக்கே கிடைத்தன.

இங்குதான் கூட்டணிக் கட்சிகள் பாஜகவுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது. சிவசேனை 18 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் வென்றன. அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வியைத் தரவல்ல, பிரச்சினைக்குரிய மாநிலங்களாக இவைதான் அமையப்போகின்றன.

பாஜகவின் கைகளிலிருந்து கர்நாடகம் நழுவிக்கொண்டிருக்கிறது. கடந்த முறைபோல மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25ஐ பாஜகவால் கைப்பற்றிவிட முடியாது. காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துக்கொண்டால், இதில் பாதித் தொகுதியில்கூட பாஜகவால் வெற்றிபெற முடியாது. நிதீஷ்குமார் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டுவிட்டார் என்றவுடனே மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவ கவுடா அதை வரவேற்று அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை (தாக்கரே) கட்சிகளிடையேயான அரசியல் தோழமை (மகா விகாஸ் அகாடி) மேலும் வலுப்பட்டுவிட்டது.

எனவே பாஜக - ஷிண்டே அணி எவ்வளவுதான் முயன்றாலும் 2019இல் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை வென்றதைப்போல மீண்டும் ஒரு முறை பாஜக கூட்டணியால் மகாராஷ்டிரத்தில் கைப்பற்றிவிட முடியாது. அசாமிலும் பிற மலை மாநிலங்களிலும் கடந்த தேர்தலைப் போலவே பாஜக வெற்றிபெற்றாலும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் தோழமைக் கட்சிகளுக்கும் சேர்த்து 25 தொகுதிகளும் குறைந்துவிடும்.

பிஹார்தான் மாற்றுகிறது

இதுவரை நாம் 503 தொகுதிகளை ஆய்வுசெய்துவிட்டோம். யதார்த்தம் கலந்த இந்த ஆய்வைத் தொடர்ந்தால், இப்போது இருக்கும் செல்வாக்கை அப்படியே தக்கவைத்துக் கொண்டாலும்கூட பாஜகவால் 235 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெற முடியாது.

எனவேதான் சொல்கிறேன், பிஹாரில் நடந்துள்ள எழுச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. பிஹாரில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தபட்சம் 37 தொகுதிகளில் வெல்ல வேண்டும். நிதீஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வானுடன் வைத்த கூட்டணியால்தான் இதை பாஜகவால் கடந்த முறை சாதிக்க முடிந்தது. ஒரு தொகுதியைத் தவிர எஞ்சிய அனைத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, எல்ஜேபி 6 தொகுதிகளில் வென்றன. இப்படி மீண்டும் வெல்வது சாத்தியமே இல்லை. நிதீஷ்குமார், அணி மாறியதால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பாஜகவுக்குக் கிடைத்த அமோக வெற்றி இப்போது அப்படியே மகா கூட்டணி வசமாகப்போகிறது. காரணம், இதில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும்கூட இணைந்துள்ளன.

பிஹாரில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியின் மதிப்பைக் கொண்டு இதை ஆராய்வோம். மக்களவைப் பொதுத் தேர்தல் வரை நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் கூட்டு நீடித்தால் மகா கட்பந்தனில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இணைந்து நிற்கும். இதற்கு எதிராக பாஜக, எல்ஜேபி கட்சிகள் போட்டியிடும். 2015 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள் கிட்டத்தட்ட உண்மை நிலையைப் பிரதிபலிப்பவை. சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 20% வாக்குகளையும் மக்களவை பொதுத் தேர்தலில் 25% வாக்குகளையும் பாஜக பெற்றிருந்தது.

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 23% வாக்குகளைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரிரு சதவீதம் மட்டுமே குறைந்தது. பேரவை, மக்களவை இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 15% வாக்குகளைப் பெற்றது. இதர கட்சிகளுக்கு குறைவான, ஆனால் நிலையான வாக்குகள் உண்டு. காங்கிரஸுக்கு 7% முதல் 9% வரையில் இடதுசாரி கட்சிகளுக்கு 4% முதல் 5% வரையில், எல்ஜேபி கட்சிக்கு 6% வாக்குகள் கிடைத்தன. இடதுசாரிகளில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிக்கு செல்வாக்கு அதிகம்.

எனவே தோராயமாக கணக்கிட்டால்கூட, மகா கட்பந்தனுக்கு 45% வாக்குகளும் பாஜக கூட்டணிக்கு 35% வாக்குகளும் கிடைக்கும். அதுவும் எல்ஜேபி பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும், வேறு சில கட்சிகளும் சேரும் என்று நம்பினால்கூட இந்த வாக்குகள் அளவு இவ்வளவுக்கு மேல் போகாது. இரண்டு கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்காளர்கள் சமூக கட்டமைப்பைப் பார்த்தால் (‘அகடா’ – ‘பிச்சடா’) ‘முன்னேறிய சமூகம்’ எதிர் ‘பிற்படுத்தப்பட்ட சமூகம்’ என்றே இருக்கும்.

பிஹாரில் இப்படிப்பட்ட போட்டி எப்போது நடந்தாலும் அதில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை இணைக்கும் அணிதான் பெரு வெற்றிபெறும். கடந்த தேர்தலில் பாஜகவை எதிர்த்த கட்சிகள் தங்களுடைய தலை முழுகாமல் பார்த்துக்கொள்ளத் திணறின, இந்த முறை விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில் வெற்றிபெறக்கூட பாஜக கூட்டணி கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்.

பாஜகவுக்கு கடுமையான சோதனை

இப்படி மூன்று பிரிவுகளில் இடைப்பட்ட பிரிவில் 150 தொகுதிகள் உள்ளன. பிஹாரில் பாஜகவுக்கு 5 முதல் 10 தொகுதிகள்தான் அதிகபட்சம் கிடைக்கும் என்றால் பாஜக கூட்டணிக்கு முன்பு கிடைத்த 88 தொகுதிகள் 65 ஆகவும் அதன் கூட்டணிக்குக் கிடைத்த தொகுதிகள் 130லிருந்து 75ஆகவும் சரியும். இப்படி உத்தேசமாகவே மூன்று பகுதிகளிலிருந்து பாஜகவுக்குக் கிடைக்கக்கூடிய தொகுதிகளைக் கூட்டினால் 240கூட வரவில்லை. அறுதிப் பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளை எங்கிருந்து எட்டுவது? பிஹாரில் மட்டும் 30 தொகுதிகளை இழப்பதால் பாஜகவுக்கு ஏற்படக்கூடிய இழப்புதான் இது.

இந்த இழப்பை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் இட்டு நிரப்பிவிட முடியாதா? தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பெயரில்தான் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை. அகாலிகள் விலகிவிட்டார்கள். அதிமுக பிளவுபட்டுவிட்டது. சிவசேனையை உடைத்து ஒரு பகுதியை பாஜக கடத்திவிட்டது. ஐக்கிய ஜனதா தளமும் இப்போது விலகிவிட்டது. வட கிழக்கிலும் வேறு மாநிலங்களிலும் முன்னர் தோழமைக் கட்சிகளாக இருந்தவற்றிலிருந்து பிரிந்துவிட்ட சின்னஞ்சிறு கட்சிகள்தான் இருக்கின்றன. அதிகபட்சம் இவற்றால் 10 முதல் 15 தொகுதிகளில்தான் வெல்ல முடியும். இதனால் அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிடாது. தோழமைக் கட்சிகளை பலமிழக்க வைத்து அழிக்கும் அரசியல் ராஜதந்திரம் இப்போது பாஜகவையே பதம் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.

தோழர் இப்போது என்னைப் பார்த்து, “அப்போதே சொன்னேனே கேட்டியா?” என்று பொக்கை வாயைக் காட்டி சிரிக்கிறார். இந்த நேரத்தில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். 2024 மக்களவை பொதுத் தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்கப்போகிறது என்று தேர்தல் முடிவை நான் முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை. அப்படிச் செய்வது முட்டாள்தனமாகவும் இருக்கும்.

பிஹாரில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தேசிய அளவில் தேர்தல் முடிவுகள் எப்படிப் போகும் என்பதை உணர்த்துவதுதான் நோக்கம். 2024 தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவோம் என்று பாஜக, பந்தா காட்டுவதற்கு இரையாகிவிடாதீர்கள். பலாகோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் காட்டி பராக்கிரமத்தைவிட அதிகம் காட்டினால்தான் பாஜகவால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குலைந்து, பாஜகவுக்கு கதவைத் திறந்துவிட்டால்தான் அதுவும் சாத்தியம்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.


4

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

With the recent President and Vice-President election results in the back of our mind, one need not be too euphoric about the recent developments in Bihar politics. The unity of the opposition is too fragile and too early to come to a conclusion. Secondly, the present ruling party (BJP), especially its silent partner (RSS) is too cunning and dangerous and may go to any low level to break the opposition unity.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Hejope   2 years ago

What about BJD in odisha and YSRCP in andra pradesh ?. Both parties are supported every legislation of present government. If the situation get worse BJP come with desperate moves to add them in NDA.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

நோய்கள்ஸ்டாலினின் காமராஜர் தருணம்கருத்தொற்றுமைசுவாரசியமான தேர்தல் களம் தயார்பாடத் திட்டம்மனச்சோர்வுபொதிகைச் சோலைமுதியவர்கள்பாரசீக மொழிஅரசமைப்புச் சட்டம்முகமது யூனுஸ்மணீஷ் சபர்வால் கட்டுரைஅசோக் வர்தன் ஷெட்டிமுத்தலாக் தடை சட்டம்சமஸ் வி.பி. சிங் சுயாட்சி – திரு. ஆசாத்ப.சிதம்பரம் பேட்டிலடாக்இன அழிப்பு அருங்காட்சியகம்நிதியமைச்சரிடம் நாடு என்ன எதிர்பார்க்கிறது?சமஸ் செந்தில்வேல்தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்வில்லியம் ஹேக்சூத்திரர்கள் இடம்மாநில மொத்த உற்பத்தி மதிப்புசமூக ஒற்றுமைஜீன் டிரேஸ் கட்டுரைதேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?எத்தியோப்பியாவிவசாயிகளைத் தாக்காதீர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!