கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 10 நிமிட வாசிப்பு

மோடி அரசின் ‘முடிவுக் காலம்’ நெருங்குகிறதா?

யோகேந்திர யாதவ்
24 Aug 2022, 5:00 am
0

மோடி அரசின் முடிவுக் காலம் ஆரம்பமாகிவிட்டதா? அப்படியொரு முடிவுக்கு வருவது முந்திரிக்கொட்டைத் தனமானது, சோம்பல் மிகுந்தது.

நாடு முழுவதும் ‘இந்தியா டுடே’ நாளிதழ் நிறுவனம்  மக்களிடம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டு, பதிலைப் பெற்று அதன் அடிப்படையில் வெளியிட்ட கணிப்புகள், நரேந்திர மோடி அரசுக்கு மூன்று முக்கிய அம்சங்களையே வலியுறுத்துகின்றன. அவை, பொருளாதாரம்! பொருளாதாரம்!! பொருளாதாரம்!!!

சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு கொண்டாட்ட ஆர்ப்பாட்டங்களைவிட உரத்து ஒலிக்கின்றன இந்த எச்சரிக்கை ஒலிகள். எதிர்க்கட்சிகளுக்கு இது அரிய சந்தர்ப்பம் – வரலாற்றுப் பொறுப்பும்கூட.

ஆனால், அனைவருமே இந்த ஆய்வறிக்கையை இப்படித்தான் புரிந்துகொள்வார்கள் என்பதில்லை. தேர்தலுக்கு முன்னதாக மக்களுடைய மனநிலை என்ன என்று கருத்தறியும் அடிப்படையில் முடிவுகளை அறிந்துகொள்கிறோம். இந்தப் பணியில் முன்னர் ஈடுபட்டவன் என்ற வகையில், இந்த முடிவுகள் என்னைத் தொல்லைப்படுத்துகின்றன. இரண்டு பொதுத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட நாள்களில் கருத்துக் கணிப்பு நடத்தி, தொகுதிகள் இந்த எண்ணிக்கையில் மாறும் என்று ஆய்வுகள் அடிப்படையில் அப்படியே நம்பிவிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆய்வானது அடுத்த தேர்தலில் வாக்குகள் எப்படி விழும் என்பதைவிட, மக்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகள் என்ன, மக்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.

எனவே, ‘இந்தியா டுடே’ நிறுவனம் நடத்திய மக்களுடைய மனநிலை குறித்த ஆய்வு, இந்த ஆண்டு ஜூலை 15 முதல் 31 வரையில் நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 283 இடங்களும் (2019இல் கிடைத்தவை 303), அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 307 தொகுதிகளும் (கடந்த முறை 353) கிடைக்கும் என்கிறது.

வழிமுறையில் - வழக்கமற்ற முறை!

உண்மையான பொதுத் தேர்தலுக்கு 20 மாதங்களுக்கு முன்னால் வரையில், எந்தத் தேர்தல் கணிப்பும் துல்லியமாக இருக்கும் என்று கருத வேண்டியதில்லை. அடுத்து, பிஹாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற எதிர்க்கட்சிகளுடனான புதிய அரசு பதவியேற்பதற்கு முன்னதாக நடத்தப்பட்டவை இந்த ஆய்வுகள். அப்படியும் இந்த வாக்கெடுப்பை நடத்தியவர்கள், அதற்கும் சேர்த்து வேகவேகமாக ஒரு கணக்கெடுப்பை நடத்தி, பிஹாரில் மட்டும் பாஜகவுக்கு 8 தொகுதிகளும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 21 தொகுதிகளும் குறையும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்தக் கணிப்பு குறித்து நான் அதிருப்தி கொள்ள இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தக் கணிப்புகள் அனைத்தும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து கேள்விகள் கேட்டு பதிவுசெய்யப்பட்டவை அல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாக, தேர்தலுக்கு முன்னதாக வாக்குகள் எப்படி விழும் என்று கணித்தவர்கள் அனைவரும் பல்வேறு தரப்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்துக் கேள்விகள் கேட்டு பதில் பெற்றுத்தான் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். ‘சிஎஸ்டிஎஸ்’ போன்ற நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் இப்போதும் அந்த வழியைத்தான் கடைப்பிடிக்கின்றன.

ஆனால், ‘இந்தியா டுடே’வின் ‘சி-வோட்டர்’ நிறுவனமோ தொலைபேசி வழியிலான பேட்டிகள் மூலமே முழு கருத்துக் கணிப்பையும் நடத்தியுள்ளன. தொலைபேசி வழியாக ஆய்வுசெய்வதற்கு அதிகம் செலவாவதில்லை என்பதால் உலகம் முழுக்க இப்போது இந்த வழிக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்பதும் உண்மையே. ஆனால், எல்லோருக்கும் அவை கிடைத்துவிடவில்லை. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களுடைய கருத்துகள், அதில் பெரும்பாலும் பதிவாவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் கருத்தறியும் வாக்கெடுப்புகளை மிகவும் தரமாக நடத்தியதற்காகப் புகழ்பெற்ற ‘இந்தியா டுடே’ பத்திரிகை நிறுவனம், தான் ஆய்வு நடத்திய விதத்தை வெளிப்படையாகக் கூறாமல் ‘சிஏடிஐ’ மூலம் நடத்திய நேர்காணல் என்று பூடகமாக அறிவித்திருப்பது ஏமாற்றம் தருகிறது. ‘சிஏடிஐ’ என்றால் ‘கணினி உதவியுடனான தொலைபேசி நேர்காணல்’ என்று பொருள். அதாவது கருத்துகளைக் கேட்டவர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள்.

கருத்துத் தெரிவித்தவர்களின் பாலினம், வர்க்க நிலை, சாதி ஆகியவை குறித்துத் தகவல் இல்லை. வெவ்வேறு கேள்விகளுக்கு வெவ்வேறு மத, வர்க்க மக்களுடைய பதில்கள் என்ன என்ற விவரமும் தரப்படவில்லை. பொருளாதார நிலை குறித்து ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர மக்கள் என்ன நினைக்கிறார்கள், வகுப்பு பதற்றம் குறித்து எந்தெந்த மதத்தவர்கள் என்ன கருத்துள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதும் முக்கியம்.

பொருளாதாரம்தான், முட்டாள்களே!

இந்தக் குறைகள் இருந்தாலும், இந்த ஆய்வு ஏராளமான தகவல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பொது மக்களுடைய கருத்தோட்டம் எப்படிப் போகிறது என்பதற்கு வலுவான பல முன்னோட்டங்கள் தெரிகின்றன. ஆய்வின் தலைப்பைக் கண்டுபிடிப்பதில் சிரமமே இல்லை, ‘பொருளாதாரம்தான் – முட்டாள்களே’ என்றே அது கூவுகிறது. இந்தியா இப்போது சந்தித்துவரும் மூன்று பெரிய நெருக்கடிகள் என்ன என்ற கேள்விக்கு விலைவாசி உயர்வுதான் என்று 27%, வேலையில்லாத் திண்டாட்டம் என்று 25%, வறுமை என்று 7% பேர் கூறியுள்ளனர். பொருளாதாரப் பிரச்சினைகள்தான் அனைவருடைய மனங்களிலும் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் குறித்து அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் பொதுவெளியிலும் கிடைக்கும் தரவுகளைப் பார்த்தால் இது உண்மை என்பது புரியும். விலைவாசி உயர்வுதான் அனைவரையும் முதலில் பாதிக்கிறது. பணவீக்க விகிதம் குறைவு என்று அரசின் தரவு சொன்னாலும், மக்களின் அன்றாட அனுபவம் இதை வெளிப்படுத்துகிறது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிடவில்லை என்றாலும், வருமானம் உயராத நிலையில் அல்லது வேலையே இல்லாத நிலையில் பெருந்துயரமடைந்துள்ளனர் மக்கள். வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்றே கருத்து தெரிவித்தவர்களில் 56% வலியுறுத்தியுள்ளனர். 9% பேர் மட்டுமே அது பிரச்சினையில்லை என்றுள்ளனர்.

எனக்கு வியப்பளித்தது எதுவென்றால் இப்போதுள்ள மோசமான பொருளாதார நிலைமை ‘இப்படியே தொடரும்’ என்று அதிகம் பேர் கூறியிருப்பதுதான். இந்தியர்கள் எவ்வளவுதான் துயரப்பட்டாலும், ‘நாளை நல்லதாக விடியும்’ என்றே நம்பிக்கையுடன் பேசுகிறவர்கள். அப்படியிருக்க 34% பேர் ‘அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார நிலை மேலும் மோசமாகிவிடும்’ என்று அச்சம் தெரிவித்துள்ளனர். ‘நிலைமை மேம்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தவர்களோ 31%தான். கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது கட்டத்துக்கு முன்னால்வரை இந்தியர்கள் இப்படி பெரும் எண்ணிக்கையில் பொருளாதாரம் குறித்து அவநம்பிக்கையோடு கருத்து தெரிவித்ததே கிடையாது.

நாட்டின் பொருளாதாரத்தைவிட தங்களுடைய வீட்டுப் பொருளாதாரம் தொடர்பாக மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளை நாம் நம்புகிறேன். தேசப் பொருளாதாரம் மீட்சி அடையும், வளர்ச்சி அடையும், உச்சத்துக்குப் போகும் என்றெல்லாம் மக்களை ஏமாற்றலாம், அவரவர் வீட்டு நிலைமை எப்படி இருக்கும் என்று கதை சொல்லி ஏமாற்ற முடியாது. ‘நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற 2014 முதல் உங்களுடைய பொருளாதார நிலைமை எப்படி மாறியிருக்கிறது?’ என்ற கேள்வியை ‘இந்தியா டுடே’ நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்டு பதிவுசெய்கிறது.

மோடியின் பெயரைச் சொல்லியே கேள்விகள் கேட்கப்படுவதாலும், மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற தலைவர் என்று கருதப்படுவதாலும், பதிலும் அதற்கேற்ப நேர்மறையாக - அதாவது நம்பிக்கையுடன்தான் இருக்க வேண்டும். ஆனால், 36% பேர் தங்களுடைய வாழ்வாதாரம் சரிந்துவருவதாகக் கூறியுள்ளனர். 28% பேர் மேம்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மேலும் மோசமாகிவிடும் என்று அச்சப்பட்டவர்கள்தான் அதிகம்.

பொருளாதாரத்திலிருந்து அரசியலுக்கு

ஆனால், இவ்வளவு மோசமான பொருளாதார நிலைமைக்கு அரசுதான் காரணம் என்று மக்கள் முழுதாக நினைத்தால்தான் தேர்தல் முடிவுகளும் அரசுக்குத் தோல்வியாக இருக்கும். இங்கே மோடி அரசுக்கு ‘நற்செய்திதான்’ பதிலாக இருக்கிறது. இந்த அரசு பொருளாதாரரீதியாக நல்ல நிர்வாகத்தைத் தருகிறது என்று 48% பேர் கருத்து தெரிவிதுள்ளனர். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக இப்படி ஆதரித்தவர்களின் எண்ணிக்கையிலேயே இதுதான் மிகவும் குறைந்த அளவிலானது. அதேவேளையில், பொருளாதார நிர்வாகம் சரியில்லை என்றவர்களின் எண்ணிக்கை 29%. அதாவது இந்த அளவுக்கு அதிகம் பேர் இந்த அரசின் மீது நம்பிக்கை இழப்பது இதுவே தொடக்கம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மிகப் பெரிய தோல்விகள் என்று எதைக் கருதுவீர்கள் என்று கேட்டதற்கு விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையே அதிகம் பேர் கூறியுள்ளனர். அரசின் பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்போர் எண்ணிக்கையைவிட, எதிர்ப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிடவில்லைதான். ஆனால், ஒட்டுமொத்தமாக அரசுக்கு ஆதரவு இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.

காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து விவகாரம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவது, ஊழல் ஆகியவற்றை அரசு சிறப்பாகவே கையாண்டிருப்பதாகப் பலரும் நினைக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றைக்கூட அரசு நன்றாக கட்டுப்படுத்தியதாகவே பலரும் குறிப்பிட்டுள்ளனர். விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்டமும் குறையும் அறிகுறியே இல்லாமல் இருப்பதால் ஒன்றிய அரசு நிச்சயம் கவலைப்படத்தான் வேண்டும்.

மோடி அரசின் முடிவுக்காலம் தொடங்கிவிட்டதா? 

ஆம்! என்று சொல்வது அவசரமான, சோம்பல் மிகுந்த முடிவாகிவிடும். மோடியின் நிர்வாகம் ‘மோசம்’ – ‘மிகவும் மோசம்’ என்று சொல்வோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர் செல்வாக்குள்ளவராகவே இருக்கிறார். மக்களிடம் செல்வாக்கு என்று பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர்கூட அவருக்கு அருகில் நெருங்க முடியாத இடங்களில்தான் இருக்கின்றனர்.

ஜனநாயகம் குறித்து கவலைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்போர் எண்ணிக்கை, ‘ஆபத்தில்லை’ என்பவர்களைவிட அதிகமாகிவிட்டது. அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்கள் அழிக்கப்படுவது குறித்தோ, பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் அதிகமாவது குறித்தோ மக்களிடையே கோபம் அதிகமாகவில்லை. அரசின் ஆணவம், பழிவாங்கும் போக்கு குறித்து உணர்ச்சிவசப்படும் இந்தியர்கள், நாகரிகமான ஜனநாயக நடைமுறைகள் கைவிடப்படுவது குறித்தும் அதிகம் கவலைப்படுவதில்லை.

கடந்த கட்டுரையில் நான் எழுதியதைப்போல, 2024 மக்களவைத் தேர்தல் முடிவு ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கப்போகிறது என்ற முடிவுக்கு வர இந்த ஆய்வறிக்கையில் ஏதுமில்லை. அப்படி மக்களை நினைக்க வைப்பது பாஜகவின் தந்திரம். இதில் அக்கட்சி மிகுந்த தேர்ச்சி பெற்றுள்ளது. அதேவேளையில், பாஜக பெருந்தோல்வியை நோக்கித்தான் செல்கிறது என்றும் நாம் முடிவு கட்டிவிடக் கூடாது. நாட்டின் பொருளாதார நிலைமை எதைச் சுட்டுகிறது என்றால் 2024 மக்களவை பொதுத் தேர்தல் களம் வலுவான போட்டிக்கே இடம் தரப்போகிறது. வரலாறு தரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு.

தொடர்புடைய கட்டுரை: 
2024 களத்தையே மாற்றிவிட்டது பிஹார் எழுச்சி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.


2

1

மென் இந்துத்துவம்சார்லி சாப்ளின்லால்தன்வாலாசீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!அடிப்படைச் செயலிகள்கொள்கைகள்காலனித்துவத்தை எப்படி எதிர்கொள்வது?சகிப்பின்மைசினிமாபிடிஆர்களின் இடம் என்ன?மார்ட்டின் லூதர் கிங்காந்தி கிணறுதிட்டங்களில் நீதிப் பார்வைஜனநாயகத்தின் தற்காப்புக் கேடயம் ‘என்டிடிவி’விடுதலைப் போராட்டங்கள்சாதிவெறிசெய்தியாசிரியர்புனித சூசையப்பர் தேவாலயம்நபர்வாரி வருமானம்முன்னோடி மாநிலம்வஹிதா நிஜாம்மத்திய பல்கலைக்கழகங்கள்யூத வெறுப்புஅன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்தேசியப் புள்ளியியல் அலுவலகம்காசாஒலி மாசுவாசிக்க வேண்டிய 50 நூல்கள்தொன்மைராஜஸ்தான்: நீ அல்லது நான் ஆட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!