கட்டுரை, அரசியல், பொருளாதாரம், தொழில் 4 நிமிட வாசிப்பு

அரசியல் அகராதிக்குப் புதுவரவு ‘மோதானி’

யோகேந்திர யாதவ்
30 Mar 2023, 5:00 am
0

ந்திய அரசியல் அகராதியில் இடம்பிடித்துவிட்ட புதிய சொல் ‘மோதானி’. ராகுல் காந்தியின் ‘ட்விட்டர்’ இந்த வார்த்தையைப் பயன்படுத்திவருகிறது, காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரச்சாரமான, ‘ஹம் அதானி கி ஹைன் கௌன்’ என்பதிலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் எழுப்பும் கூட்டு முழக்கத்திலும் இது முக்கியமாகிவிட்டது.

இந்த வார்த்தை பிரபலமானதில் எனக்கும் சிறிய பங்கு உண்டு; காணொலிகளிலும் சமூக ஊடக விமர்சனங்களிலும் ஹிண்டென்பர்க் நிறுவனம் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தியதை ஒட்டி எழுதிய கட்டுரையிலும் இதைக் கையாண்டிருக்கிறேன். ஆனால், இந்த வார்த்தையை உருவாக்கியது நானில்லை. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயத் தொண்டரும், சோஷலிஸ்ட் தலைவருமான என் நண்பர் டாக்டர் சுனிலத்திடம் இருந்துதான் முதலில் இந்த வார்த்தையைக் கேட்டேன். அவர் இதைக் கடந்த சில ஆண்டுகளாகவே பயன்படுத்துகிறார். 

ஆனால், குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது இந்த வார்த்தையை உருவாக்கியதாக காங்கிரஸ் சேவாதளத் தலைவரும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் என்னுடன் பங்கேற்றவருமான லால்ஜிபாய் தேசாய் தெரிவித்தார். நாட்டுப்புறப் பாடல்களையும் அரசியல் முழக்கங்களையும் ‘காப்புரிமை’ கட்டணம் தராமலேயே பயன்படுத்தும் உரிமை இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கிறது!

மோதானி எனும் கருத்தாக்கம்

‘மோதானி’ என்பது முழக்கம் மட்டுமல்ல, புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டும்கூட; பிரதமர் மீது தனிப்பட்ட முறையிலோ – வலுவில்லாமலோ வார்த்தைகளால் தாக்குவதைவிட மோடிக்கும் – அதானிக்குமுள்ள அரசியல் - தொழில் உறவைச் சித்தரிக்கும் இந்த ஒரே வார்த்தை, அவர்களை நிலைகுலைய வைக்கும் சிறந்த அரசியல் ஆயுதம். ‘சூட்-பூட்- கி சர்க்கார்’ என்ற வாசகத்தைப் போல இது நம்முடைய அரசியல் கலாச்சாரத்தை அப்படியே குத்திக் கிழிக்கும் வார்த்தையாகும். (முந்தைய தலைமுறையினர் டாட்டா - பிர்லாவுக்கான அரசு என்று பழித்தனர்).

‘மோதானி’ என்பது சாப வார்த்தை அல்ல, அது எதைக் குறிக்கிறதோ அதை - ஆராயச் சொல்கிறது. இந்திய அரசியல் பொருளாதாரத்தில் எந்த மாதிரியான கூட்டுச் சேர்க்கை நடந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. அரசியல் அதிகாரத்துக்கும் தொழில் துறை பண பலத்துக்கும் இடையிலான நட்பு, இந்த அரசில் எந்த அளவுக்கு ஆழ வேரோடியிருக்கிறது என்பதையும், இது மோடி, அதானிக்கும் அப்பாற்பட்டது என்பதையும் காட்டுகிறது. இதன் பின்னால் உள்ள கருத்துரு நீடித்து வாழும் என்றே கருதுகிறேன். எனவே, இதை ஆராய்வது நல்லது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

குஜராத் மாதிரியை இப்போதுதான் பேச வேண்டும்!

சமஸ் | Samas 29 Mar 2023

தொழில் துறையும் அரசியலும்

தொழில் துறைக்கும் அரசியலுக்கும் உள்ள கூட்டு என்பது புதியதல்ல. இந்திய ஜனநாயகத்தின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அல்லது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே தொடர்ந்துவருவதுதான். நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுகளிலேயே அரசியல் தலைவர்களுக்கும் தொழிலதிபர்களுக்குமான கள்ளக்கூட்டு வெளிப்படத் தொடங்கிவிட்டது.

பஞ்சாபில் பிரதாப் சிங் கெய்ரோன் அரசின் ஊழல், நகர்வாலா என்பவர் அன்றைய பிரதமர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறி பாரத ஸ்டேட் வங்கியின் டெல்லி கிளையிலிருந்து பெரும் தொகையைப் பெற்ற மர்மம், போஃபர்ஸ் பீரங்கி பேரம், 2ஜி அலைக்கற்றை ஏல முறைகேடு, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் முறைகேடு என்று அரசியலர்களுக்கும் தொழிலகங்களுக்குமான கள்ளக்கூட்டு பற்றிய செய்திகள்தான் இந்திய அரசியலில் அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

‘இந்தியாவில் தொழிலகங்களும் அரசியலும்’ (Business and Politics in India) என்ற தலைப்பில் கிறிஸ்டோப் ஜாப்ரலோட், அதுல் கோஹ்லி, காந்தா முரளி எழுதியுள்ள சமீபத்திய புத்தகமானது இந்த உறவு எப்படி சமீபத்திய ஆண்டுகளில் மாற்றம் பெற்று வலுவடைந்திருக்கிறது என்று காட்டுகிறது. வெவ்வேறு காலங்களில், அரசுகளில், துறைகளில் இந்த உறவு எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று வெவ்வேறு கட்டுரைகள் விவரிக்கின்றன. 1990கள் வரையில் ஒரு கட்டம் என்று குறிப்பிடும் இந்நூல், அப்போது தொழில் நிறுவனங்கள் தங்களை நேரடியாக பாதிக்கும் அரசின் நடவடிக்கைகளை மட்டும் வேண்டாம் என்று நிராகரிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்திருந்தன.

1991இல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாகத் தொடங்கிய பிறகு நாட்டின் தொழில் துறை கொள்கை, பொருளாதாரக் கொள்கை - அவை தொடர்பான சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அதிகாரம் மிக்க அரசியலர்களுடன் சேர்ந்து தீர்மானிக்கும் செல்வாக்கைத் தொழில் துறை பெறத் தொடங்கியது. இது இரண்டாவது கட்டமாகும்.

2014இல் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு இந்த உறவு மேலும் ஆழமாகிவிட்டது. அரசின் கொள்கைகள் மீதும் கட்சி அரசியல் மீதும் தொழில் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு இவை மாறிவிட்டன. ‘மோதானி’ என்ற வார்த்தை இந்தக் காலகட்டத்துக்கான பிரபலமான சொல்லாக இருக்கக்கூடும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!

சமஸ் | Samas 04 Jun 2015

புதிய மாதிரியின் அம்சங்கள்!

இந்த மோதானி மாதிரியின் சில அம்சங்களை நோக்குவோம். முதலில், இது வெளிப்படையான, நேரடியான அரசியல் தலைவர்கள் – தொழிலதிபர்கள் கூட்டைக் காட்டுகிறது. சோஷலிஸ்ட் அரசு காலத்தில் இந்த உறவு வெளியே தெரியாமல் திரைபோட்டு மூடப்பட்டிருந்தது. தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நலனுக்காக வெளிப்படையாகவே கோரிக்கைகளை வைக்கின்றன. பொருளாதாரக் கொள்கையில் மட்டுமல்ல சுகாதாரம், வேளாண் துறைகளில்கூட தங்களுடைய நலனுக்காக அவை குரல் கொடுக்கின்றன. இரு தரப்புக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுவிட்ட மிகப் பெரிய மாற்றத்தைக் குறிக்கும் நிகழ்வுதான், அதானியின் விமானத்தில் பிரச்சாரத்துக்கு மோடி செல்வதும், விமானத்தில் மோடியுடன் அதானி செல்வதும்.

இரண்டாவதாக, சந்தைக்கு ஆதரவான கொள்கையிலிருந்து குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவதை இந்த மோதானி மாடல் சுட்டிக்காட்டுகிறது. வெளிப்படையான சந்தைக் கொள்கைக்கு முரணாக, தன்னலத் தொழிலதிபர்கள் குழுசார் முதலீட்டியக் கொள்கை செல்வாக்கு பெறுகிறது. இந்த வார்த்தையை நான் இடதுசாரிகளிடமிருந்து கடன் வாங்கவில்லை. இந்திய அரசியல் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து எழுதும் அறிஞர் பிரணாப் பர்தன் பயன்படுத்தும் வார்த்தை இது. மோடி அரசில், குறைந்தளவே உற்பத்தித் திறன் கொண்ட தன்னிச்சையான தன்னல முதலீட்டியக் கொள்கை பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த வகையிலான தொழில் கொள்கையால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவால் போட்டியிட முடியாது. இந்த வகை தொழில் நிறுவனங்கள் உலக அளவில் அதிக போட்டியைச் சந்திக்காத, வியாபாரம் செய்யப்படாத பொருள்களுக்கான சந்தையில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் அதிக லாபத்தை ஈட்டுவது மட்டுமே அந்த நிறுவனங்களின் நோக்கமாக இருக்கும். ‘ஆத்மநிர்பார்’ போன்ற சுயசார்பு கொள்கைகள் வாயிலாக - வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடன் போட்டிக்கு வராமல் தடுத்துவிடும்.

உள்நாட்டிலும் தங்கள் துறையில் தங்களுக்குப் போட்டியாளர்கள் வராமல் பார்த்துக்கொள்ளும். கடந்த காலங்களில் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய உரிமச் சலுகை, இறக்குமதி – ஏற்றுமதித் தீர்வைச் சலுகை ஆகியவற்றைத்தான் கேட்டுப் பெறும். இப்போதோ போட்டிகளே இல்லாத, கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட உற்பத்தித் துறை சலுகைகளை இந்த நிறுவனங்கள் கேட்டுப் பெறுகின்றன. இந்தப் போக்கை ‘பெருநிறுவன கூட்டு முதலீட்டியம்’ என்கிறார் ஹரீஷ் தாமோதரன்.

மூன்றாவது அம்சம், ஏற்றத்தாழ்வுகளில் காணப்படும் அதிகரிப்பு. இப்போது சமத்துவம் என்ற கொள்கையில் பெருமை கொள்வதில்லை முதலீட்டியம். நம்முடைய நாட்டிலும் சாதி, பால் உள்பட எதிலுமே நாம் சமத்துவத்தை விரும்புவதில்லை. இந்தியாவில் எந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன என்பதற்கு சமீபத்திய உலக அசமத்துவ அறிக்கையும், ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும் நல்ல நினைவூட்டல் உதாரணங்கள். இதை ‘லத்தீன் அமெரிக்க நாடுகள் பாணி மர்மப் பொருளாதாரம்’ என்கிறார் பிரணாப் பர்தன்.

வரையறுக்கப்பட்ட சில துறைகளில் அதிக முதலீடும் அதிகத் தொழில் உற்பத்தித் திறனும் தேவைப்படும், அங்கு மட்டும் முதலீடு அளிக்கப்பட்டு சமூகத்தின் உயர்தட்டு மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்; இதர பொதுவான துறைகளுக்கு முதலீடு கிடைக்காமல் உற்பத்திக் கொள்ளளவும் முழுதாகப் பயன்படுத்தப்படாமல், உற்பத்திக்கேற்ற தேவை மக்களிடமிருந்து வராமலும் போய் அங்கே சோகையாகக் காட்சி தரும். இதனாலேயே முதலீடும் வேலைவாய்ப்பும் அந்தத் துறைகளில் பெருகவும் பெருகாது.

ரிலையன்ஸ், டாட்டா, ஆதித்ய பிர்லா, அதானி, பாரதி ஆகிய பெருநிறுவனங்கள் செயற்கையாக விலையை உயர்த்தி பணவீக்கத்தை அதிகப்படுத்துகின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா குற்றஞ்சாட்டியிருக்கிறார். முதலீட்டியப் பொருளாதாரம் அடைய நினைக்கும் பொருளாதார வளர்ச்சிக்குக்கூட இந்தச் சமத்துவமின்மை பெரும் இடையூறாக வந்துவிடுகிறது.

நான்காவதாக, மோதானி மாதிரி என்பது புதுவிதமான, அரசியல் ஆதரவுபெற்ற சூழல் எதிர்ப்பியக் கொள்கையாகும். இதுவும் ரகசியமானது அல்ல. கடந்த நாற்பது ஆண்டுகளாக  படிப்படியாக உருவாக்கப்பட்ட சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அரசு அர்த்தமில்லாததாக ஆக்கிவிட்டது. சூழலியலாளர் ஆசிஷ் கோத்தாரி, சூழல் பாதுகாப்பில் அரசு கல்வியறிவே இல்லாதாவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதாக கடுமையாக சாடியிருக்கிறார்.

முதலீட்டியமும் ஜனநாயகமும்

இத்தனைக் குறைகள் இருந்தாலும் இவையெல்லாம் இந்தியாவை வலிமை குறைந்த அரசாக மாற்றிவிடவில்லை. நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசியல் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்று அறிய மார்க்ஸின் ஆதரவாளர்களுடைய கருத்துருக்களை படிப்பதைவிட, லூயி போனபார்ட் தொடர்பாக மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதைப் படிப்பதே உதவும். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சி.பி.கிருஷ்ணன் 06 Feb 2023

முதலாளிகளுக்குப் பணிந்துபோய்விடாமல் முதலீட்டியத்துக்கே மூக்கணாங்கயிறு மாட்டி அதிகபட்ச பலன்களைக் கறந்துகொள்ளும் அரசியல் ஆதிக்க நிலைக்கு வந்திருக்கிறோம்.  

முதலீட்டியத்தை ஆதரிக்கும் ஜனநாயகத்தில் அடிப்படையாகவே ஒரு முரண்பாடு நிலவுகிறது. ஜனநாயகம் என்பது அரசியல் சமத்துவத்துக்காக போராடுவது, முதலீட்டியமோ செல்வம் ஒருபக்கம் குவிவதையே நோக்கமாகக் கொண்டது. 

இதுவரை மூடிமறைக்கப்பட்ட முரண்பாட்டை, ‘மோதானி’ என்ற சொல் வெளிப்படையாகக் கொண்டுவந்திருக்கிறது. அரசியல் என்ற வியாபாரத்தில் ஆழ்ந்த மாறுதலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமா அல்லது அரசியலில் கலந்த தொழிலைப் பார்க்காமல், அரசியலே தொழிலாக மாறிவிட்ட நிலையைப் பார்க்கிறோமா?

 

தொடர்புடைய கட்டுரைகள்

குஜராத் மாதிரியை இப்போதுதான் பேச வேண்டும்!
நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!
ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் புதிய முகம்
அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
அதானி: காற்றடைத்த பலூன்
மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






ஜிஎஸ்டி ஆணையம்காங்கிரஸ் மடிந்துவிட வேண்டும்ராகுல் காந்திE=mc2நவீன இலக்கிய வாசிப்புவெற்றியின் சூத்திரம்பாகிஸ்தான் வெற்றிக்குக் கொண்டாட்டம்ருவாண்டா அரசுப் படைகள்பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்இந்து தேசம்வலிப்பு வருவது ஏன்?ஒரு செய்திமுத்துசாமி பேட்டிவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பசித்ரா ராமகிருஷ்ணாஜோதிர் ஆதித்ய சிந்தியாபுறக்கணிக்கும் கட்சி மேலிடம்98வது தலைவர்நாடாளுமன்ற உரைஇமையம் அருஞ்சொல்யூஎஸ்எஸ்டிகுடும்பச் சூழல்மாணவர் நலன்நேரு வெறுப்புகபில்தேவ்ஆயில் மசாஜ்எஸ்.பாலசுப்ரமணியன்எப்படிப் பேசுகிறது உலகம்வாசிமறுவாழ்வு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!