கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

பிஹாரிலிருந்து ஆரம்பிக்கும் 2024 ஆட்டம்

எஸ்.அப்துல் ஹமீது
30 Apr 2022, 5:00 am
4

2024 மக்களவைத் தேர்தலுக்கு எல்லோருக்கும் முந்தித் தயாராகிறது பிஹார். தலைநகர் டெல்லியில் பலரின் பார்வையும் இப்போது பாட்னா நோக்கித் திரும்புகிறது. இளந்தலைவர் தேஜஸ்வியின் காய் நகர்த்தல்கள் அவருடைய தந்தை லாலு பிரசாத் யாதவுடைய இளவயது ஆட்டத்தை நினைவூட்டுவதாகப் பலரும் பேசலாகிறார்கள். ஒரே சமயத்தில் மாநிலத்தை ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தளம், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக, தன்னுடைய தோழமைக் கட்சியான காங்கிரஸ் மூன்றுக்குமே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் தேஜஸ்வி.

2024 மக்களவைத் தேர்தல் வழமையான தேர்தலாக இருக்கப்போவதில்லை; பல விதங்களில் இந்தியாவின் எதிர்காலத்தைத்  தீர்மானிக்ககூடிய தேர்தலாக அது இருக்கும். இதன் தீவிரத்தை காங்கிரஸைக் காட்டிலும் மாநிலக் கட்சிகள் ஆழமாக உணர்ந்திருக்கின்றன. தேசியக் களத்தில் பாஜகவை எதிர்கொள்ள  மாநிலக் கட்சிகள் இன்றளவும் காங்கிரஸையே  முதன்மை வாகனமாகக் கருதிவருகின்றன என்றாலும், காங்கிரஸுக்காகக் காத்திருக்க முடியாது என்ற இடம் நோக்கி அவை வேகமாக நகர்கின்றன.

தேஜஸ்வின் முன்னனுபவம்

2020 பிஹார் சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை உருவாக்கியது ராஷ்டிரிய ஜனதா தளம். 243 இடங்களைக் கொண்ட பிஹார் சட்டமன்றத்தில் 75 இடங்களை அது கைப்பற்றியது; தேர்தல் முடிவின்படி தனிப்பெரும் கட்சி அதுதான். ஆனால், பாஜக கூட்டணி பலத்தில் மீண்டும் முதல்வர் ஆனார் நிதிஷ் குமார்.

தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் பயணித்தும் தேஜஸ்வியால் முதல்வர் பதவியை வசப்படுத்த முடியாமல் போனதற்கு காங்கிரஸும் ஒரு முக்கியமான காரணம். தன்னுடைய பலத்தைத் தாண்டி அதிகமான எண்ணிக்கையில் தேஜஸ்வியிடமிருந்து தொகுதிகளைக் கேட்டு வாங்கியது காங்கிரஸ்; அப்படி வாங்கிய தொகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது. இனியும் இத்தகைய தவறு நடந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறார் தேஜஸ்வி. கூடவே காங்கிரஸின் பிரதான கவனம் பாஜகவை நோக்கி துல்லியப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறார்.

காங்கிரஸுக்கு தேஜஸ்வி சொல்லும் சேதி

பிஹார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தேஜஸ்வி சென்ற வாரத்தில் இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடுசெய்திருந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,  பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார் தேஜஸ்வி. அடுத்த ஆச்சரியம், முதல்வர் நிதிஷ் குமாரும் இதில் கலந்துகொண்டார். பிஹாரில் இப்போது ஐக்கிய ஜனதா தளத்துக்கும், பாஜகவுக்கும் இடையேயான உறவு சரியான திசையில் செல்லவில்லை. சட்டமன்றத்தில் பாஜகவின் பங்கே பெரிது என்பதால், நிதிஷை நீக்கிவிட்டு, பாஜகவிலிருந்து ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் (ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் பாஜக 72 இடங்களையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களையும் சட்டமன்றத்தில் கொண்டிருக்கின்றன).

இதோடு மாநில அரசியலில் தன் காலம் முடிவுக்கு வருகிறது என்பதை நிதீஷ் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதேசமயம், தேசிய அரசியலில் தனக்கான இடம் ஏதேனும் இருக்குமா என்று அவர் பார்க்கிறார். நம்பிக்கை துரோகங்களுக்குப் பேர் போனவர் என்றாலும், பாஜகவை எதிர்கொள்ளும் உத்தியில் நிதீஷை அனுசரிக்கிறார் தேஜஸ்வி. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தேஜஸ்வி தெரிவித்திருக்கும் கருத்துகள்தான் தலைநகர் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ்தான் முக்கியத் தூணாக இருக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, “காங்கிரஸ் பாஜகவுடன் நேரடியாக மோதும் 200 சொச்ச இடங்களில் மட்டும் கவனம் செலுத்தட்டும். அதில் 50% வெற்றியை பெற காங்கிரஸ் முயற்சிக்கட்டும்.  மற்றபடி, பிராந்தியக் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில், காங்கிரஸ் பின் இருக்கையில் அமர்ந்துகொள்ள வேண்டும்” என்றார் தேஜஸ்வி.

இனியும், காங்கிரஸ் தன்னை தேசியக் கட்சி என்று சொல்லிக்கொண்டு ஏனைய கட்சிகளை  மேலாதிக்கம் செய்யக் கூடாது. அது பிராந்திய சூழலோடு பொருந்திப்போக வேண்டும் என்பதையே தேஜஸ்வி சுட்டிக்காட்டுகிறார்.

தேஜஸ்வியின் கருத்து காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்’, ‘தேஜஸ்விக்கு அரசியல் அனுபவம் போதாது’ என்கிற ரீதியில் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றிவருகின்றனர். காங்கிரஸை நோக்கி தேஜஸ்வி சொல்வது இதுதான்: “யதார்த்தத்தைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்!”

களத்திலிருந்து கிடைக்கும் பாடம்

தேஜஸ்வி 2024 தேர்தல் குறித்து உறுதியான  பார்வையைக் கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு மகா கூட்டணி தேவை. ஆனால், அந்தக் கூட்டணி பிராந்தியக் கட்சிகளை முன்னிலைப்படுத்துவதாக இருக்க வேண்டும்; தேசியக் கட்சிகளை அல்ல என்பதுதான் அவரது நிலைப்பாடாக உள்ளது.  வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்.

இது தனிநபர் சார்ந்த நிலைப்பாடு அல்ல. கதையாடலின் நிகழ்ந்திருக்கும் மாற்றம். இந்த இடம் காங்கிரஸுக்கு மிகச் சிக்கலானது. ஏனென்றால், பாஜகவிடம் வலுவான கதையாடல் இருக்கிறது. அந்தக் கதையாடல் மூலமே அக்கட்சி இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வர முடிந்தது. தற்போது பாஜகவை எதிர்க்கும் கதையாடல் காங்கிரஸிடம் இல்லை. மாறாக, பிராந்தியக் கட்சிகளிடம்தான் இருக்கிறது. ஒற்றை இந்தியா, இந்துத்துவம் என்பது பாஜகவின் கதையாடல் என்றால், கூட்டாட்சித் தத்துவம், பிராந்தியவாதம், சமூகநீதி போன்றவை பாஜகவுக்கு எதிரான பிராந்தியக் கட்சிகளின் கதையாடலாக உள்ளது. இதை மாநிலக் கட்சிகளே உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார் தேஜஸ்வி. மேலும், காங்கிரஸுடைய கவனத்தை பாஜக நோக்கித் துல்லியமாக்கவும் விழைகிறார். 

நாடு முழுவதுமே காங்கிரஸ் பலவீனமாகத்தான் இருக்கிறது என்றாலும், பாஜக ஆளும் மாநிலஙகளில் அதன் நிலை படுமோசமாக இருக்கிறது. 2014, 2019 தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற சொற்ப இடங்களும் பெரும்பாலும் பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் அது வென்றவை. ராகுல் காந்தியே உத்தர பிரதேசத்தை விட்டுவிட்டு கேரளத்தில் போட்டியிடும்போது உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை அது மேலும் பலவீனப்படுத்துவதோடு, கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும் பலவீனமாக்கும். இந்த விஷயத்தில்தான் மறைமுகமாகக் கை வைக்கிறார் தேஜஸ்வி. பாஜகவுக்கு எதிரான மகா கூட்டணிக்கு நிச்சயமாக காங்கிரஸ் தலைமை வகிக்க முடியும்; ஆனால், தன்னியல்பாக நடப்பதாக அது இருக்க முடியாது. காங்கிரஸ் தலைமையேற்பதற்கான குறைந்தபட்ச எண்ணிக்கையையேனும் வெல்ல வேண்டும்; அதற்கேற்ப எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த செயல்பட வேண்டும் என்பதே தேஜஸ்வியின் கூற்று உள்ளடக்கியிருக்கும் சேதி.

காங்கிரஸ் இப்போது செயல்பட வேண்டும். இனியேனும் அது வேகமாகச் செயல்பட்டாக வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

தேஜஸ்வி பதினாறு அடி பாயும் குட்டி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

எதிர்க்கட்சிகள் இந்துக்கள் வாக்கு வங்கியை கண்டுகொள்ளாமல் அனைத்து இந்திய இனங்களின் கூட்டமைப்பை உருவாக்கி இந்திய மொழிகளையும் , ஆங்கிலத்தையும் தூக்கிப் பிடித்தால் 2024 நிச்சயம். ஏனெனில் மதம் என்பது பாசகவின் home turf. ஆனால் இனம் என்பது SENA நாடுகளில் விளையாடுவதுபோல். போட்டி சமமாக இருக்கும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

காங்கிரஸ், தான் முதலிரண்டு இடங்களில் வரும் வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் போட்டியிட்டால் அதை BJPயின் B-team என்றே அழைக்கவேண்டி இருக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

John christopher   2 years ago

சிறப்பு

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பொது விநியோக திட்டம்ஆன்லைன் மோசடிஉயிரிப் பன்மைத்துவம்ஒரு ஆங்கில ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்காவிரிப் படுகையை மீட்டெடுக்க ஒரு வழிகூட்டுக் கலாச்சாரம்அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ்கோகலேமிகச் சிறிய மாவட்டங்கள் தேவையா?தொழிலாளர் பற்றாக்குறைஏழைக் குடும்பங்கள்பற்பசைசமஸ் கடிதம்கருக்கலைப்பு உரிமைஐரோப்பிய நாடுகள்உணவு அரசியல்ஆல்பா மேல்ஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்பெண் குழந்தைகள் ஆண்டுகுஷ்பு தேவிவாசகர் கடிதம்என்எஃப்டி முறைபெருமாள்முருகன் அருஞ்சொல்கார்போவுக்கு குட்பைஒருங்கிணைந்த நவீனப் பொதுப் போக்குவரத்து முறைஆட்சி மீது சலிப்புவிளைச்சல்samasஆஸ்டியோபோரோசிஸ்செவிநரம்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!