பேட்டி, வரலாறு, சமஸ் கட்டுரை, புத்தகங்கள், தொழில்நுட்பம் 4 நிமிட வாசிப்பு
கடலை நன்கு அறிந்திருந்தார்கள் சோழர்கள்: விஜய் சகுஜா
இந்தியக் கடற்படையில் பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்தவர், இத்துறையில் கால் நூற்றாண்டு அனுபவம் மிக்கவர் டாக்டர் விஜய் சகுஜா. குஜராத்தின் ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட கரையோரக் கடல்பரப்புப் பாதுகாப்பு ஆய்வுகள் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநராகப் பதவி வகிக்கிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கடல் தொடர்பான கல்வி - ஆய்வுக் குழுக்களில் இருக்கிறார்.
இந்திய - பசிபிக் கடல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். சோழர்களின் கடற்படைத் தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்தவர். ‘ஏஷியன் மாரிடைம் பவர் இன் தி ட்வென்டிஃபர்ஸ்ட் செஞ்சுரி: ஸ்ட்ராடஜிக் ட்ரான்சாக்ஷன்ஸ் சைனா, இண்டியா அண்டு சௌத் ஏஷியா’ இவருடைய குறிப்பிடத்தக்க நூல் ஆகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது சோழர்கள் எத்தகு கடற்திறனைக் கொண்டிருந்தனர் என்று பேசுகிறார். ‘சோழர்கள் இன்று’ நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.
நாம் பேசும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்களின் படையெடுப்பு நிகழ்ந்த காலகட்டத்தில், சோழர்களின் கடல் செல்வாக்கு என்னவாக இருந்தது?
உலக வரலாற்றில் கடற்படைகள் கோலோச்சிய காலங்கள் பல; மெகஸ்தனீஸ் தனது பயணக் குறிப்புகளிலேயே இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை விவரித்திருக்கிறார். கடல் வழியே சென்று பிற நாடுகளுடன் கடலிலும் தரையிலும் போரிடுவதற்காகவே தனித் துறையாகப் பல பேரரசுகளும் கடற்படையை உருவாக்கின. சோழர்கள் – குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்திலும் அவருடைய மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் – தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தில் முன்னுதாரணமற்ற செல்வாக்கைக் கடல் வழியே செலுத்தினர்.
அன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு கடல் படையெடுப்பை நிகழ்த்த வேண்டும் என்றால், சோழர்களின் கடற்படைக்கு எத்தகைய கட்டமைப்பும் தொழில்நுட்பமும் தேவைப்பட்டிருக்கும்? கடற்படையை ஒரு ராணுவத்தின் நுட்பத்துக்கு உதாரணமாகக் கருத முடியுமா?
சோழர்கள் பல விதமான படைகளையும் கொண்ட ராணுவத்தைக் கொண்டிருந்தனர். கப்பற்படை வலிமை மிக்கதாகவும் தன்னிகரில்லாததாகவும் இருந்தது. காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்று பல அணிகளையும் வைத்திருந்ததோடு, அம்பு எய்வதில் நிபுணர்களான வில்லிகள், வாள் வீச்சில் நிபுணர்களான கைக்கோளர்கள் என்று விசேஷப் பிரிவினரையும் வைத்திருந்தார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சோழப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இத்தகு பாசறைகள் இருந்த இடம் ‘கடகம்’ என்று அழைக்கப்பட்டன. சோழர்களின் கடற்படை தன்னிகரில்லாததாக இருந்தது.
சோழ ராணுவத்தின் வலிமை குறித்து 1178இல் சீன எழுத்தாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். சோழர்களின் கடற்படையில் மட்டும் அறுபதாயிரம் யானைகள் இருந்ததாகவும் அந்த யானைகளின் மேலே ‘வீடுகள்’ (பல்லக்கு போன்ற அமைப்பு) இருந்ததாகவும், அந்த வீட்டுக்குள்ளிருந்து தொலைவில் இருந்த எதிரிகள் மீது அம்புகளை எய்தும், அருகிலிருந்த எதிரிகள் மீது ஈட்டியை எறிந்தும் வீழ்த்தினார்கள் என்றும் அவர் விவரித்திருக்கிறார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
எந்த ஒரு கடல் பயணத்துக்கும் பயணத் திட்டம் முக்கியம். நமக்குச் சோழர்கள் கடல் தாக்குதலுக்கான முழுத் தடயங்களும் கிடைக்கவில்லை என்றாலும்கூட, இப்படி ஒரு தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்றால், எத்தகைய திறன்களைச் சோழர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று யூகிக்கிறீர்கள்?
பெருங்கடலில் செல்வதற்கே விரிவான, துல்லியமான பயணத் திட்டம் அவசியம். கடல் பயணம் என்றாலே காற்றின் வேகம், வீசும் திசை, வீசும் காலம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டியது அடிப்படை அம்சம். அடுத்தது பருவநிலை எப்படி மாறும், கடலில் நீரோட்டம் எப்படி இருக்கும் என்றும் பார்க்க வேண்டும். போகும் வழியில் உள்ள துறைமுகங்கள் எவையெவை, அங்கே கப்பல்களை நிறுத்துவதற்கு உள்ள வசதிகள் என்ன, உணவு – குடிநீர் தீர்ந்துபோனால் புதிதாகப் பெற்றுக்கொள்ள வழியிருக்கிறதா, கப்பல்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பழுதுபார்க்க உதவி கிடைக்குமா, இயற்கையாலோ – மனிதர்களாலோ கப்பல்களுக்கு ஏதேனும் சேதம் நேரிடுமா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
சோழர்கள் சென்ற மரக்கலங்களில் கப்பல் செல்லும் திசையைத் தேவைக்கேற்ப மாற்றுவதற்குச் சுக்கான் கிடையாது; திசையைக் காட்ட பின்னாளில் பயன்பாட்டுக்கு வந்த காந்த ஊசி கொண்ட திசைகாட்டிக் கருவியும் கிடையாது; ஆகையால், கடற்கரைக்கு இணையாகவோ அல்லது கடலோரமாகவோதான் அவர்கள் கலங்களில் சென்றிருக்க முடியும். அத்துடன் மிகப் பெரிய பாய்மரங்களை விரித்து வைத்தால்தான் கப்பலைச் செலுத்துவதும் எளிதாக இருந்திருக்கும். அதிலிருந்தே அவர்கள் கடல் காற்றையும் கடல் நீரோட்டங்களையும் நன்கு அறிந்து அவற்றைத் திறமையாகக் கையாண்டிருப்பது புரிகிறது.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்: ட்ராட்ஸ்கி மருது பேட்டி
06 Jan 2024
செல்லும் வழியில் உள்ள நாடுகள், துறைமுகங்கள், கடல்கள் பற்றிய வரைபடங்கள் இல்லாத நிலையில், அந்த நாடுகளுக்குச் சென்றுவந்த சோழத் தூதரக அதிகாரிகள், வாணிபத்துக்காகச் சென்ற கடலோடிகள், அங்கிருந்து வந்த பயணிகள் அல்லது இங்கிருந்து சென்று திரும்பியவர்கள் ஆகியோர் கூறிய தகவல்களைத் திரட்டித்தான் இந்தக் கடல் பாதை குறித்துத் தகவல்களைத் திரட்டியிருக்க வேண்டும்.
சோழர் படையில், கப்பல்களை ஓட்டியவர்கள் கடலில் மரக்கலங்களைச் செலுத்துவதில் கை தேர்ந்தவர்களாகவும், கடலில் நாடுகளின் இருப்பையும் தாங்கள் செல்லும் பாதையை விண்மீன்களின் துணையோடு பின்பற்றும் வானியல் நிபுணர்களாகவும் இருந்திருக்கின்றனர். வங்காளம், தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனம் வரை இருந்த கடலின் தன்மை குறித்தும் காற்றின் நிலைமை குறித்தும் நன்கு பழகியுள்ளனர்.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
நாகப்பட்டினத்திலிருந்து தங்கள் படைகளின் பயணத்தைத் தொடங்கிய சோழர்கள் மூன்று விதமான கலங்களை இந்தப் பயணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் எனில், அந்தக் கலங்கள் எப்படியானவையாக இருந்திருக்க வேண்டும்?
சோழர்களின் கடல் வாணிபக் கப்பல்கள் மூன்று வெவ்வேறு விதமான மரக்கலங்கள் என்று அறிகிறோம். அவை 1.சங்காரம், 2.சோழாந்தியம், 3.கட்டுமரங்கள்.
சங்காரம் என்பது நீண்ட ஒரே மரத்துண்டுகளால் இணைத்துக் கட்டப்பட்ட கப்பல், இது கடலோரம் மட்டுமே செல்லத்தக்கது. இத்தகைய கலங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் சரக்குகளை ஏற்றிக்கொள்ளலாம்.
சோழாந்தியம் என்பதுதான் மலேயா, சுமத்திரா மற்றும் கங்கைச் சமவெளியை ஒட்டிய கலிங்கம், வங்கம் போன்ற நாடுகளுக்குச் செல்லப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தகு கலங்கள் ஆட்களையும் யானைகள் – குதிரைகள் போன்றவற்றையும் வீரர்களையும் நீண்ட தொலைவுக்கு ஏற்றிச் செல்ல தக்கவை. உருவில் இந்நாளைய பெரிய கப்பல்களுக்கு இணையானவை.
கடலில் செல்வதற்கு முன் சமையலுக்கான அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள், சமைப்பதற்கு அடுப்பெரிக்க விறகு, மனிதர்களும் பிராணிகளும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் நல்ல தண்ணீர், வீரர்களுக்குத் தேவைப்படும் கள் போன்றவற்றை நிறைய அளவு ஏற்றுவதற்கு வசதியாக இந்த மரக்கலங்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும். மாலுமிகள், கப்பல் பணியாளர்கள், மருத்துவர்கள், வான சாஸ்திரம் அறிந்தவர்கள், போர் வியூக நிபுணர்கள் என்று பலரும் இருந்திருப்பார்கள்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கர் ஸ்தபதி பேட்டி
07 Jan 2024
இரவில் நட்சத்திரங்களின் இருப்பிடங்களை அறிய ‘ராப்பலகை, கப்பலின் வேகத்தையும் காற்றின் வேகத்தையும் கணிக்க ‘தப்புப் பலகை’, கடலிலிருந்து நட்சத்திரங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன என்பதைக் கணிக்க ‘கை’, கடலில் நீரின் ஆழம் எவ்வளவு என்று அறிய ‘வெண்கலத் தாம்பாளத் தட்டுகள்’என்று பல விதமான கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். கப்பலிலிருந்து கரை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று அறிய கப்பலிலேயே நிறைய புறாக்களை வளர்த்துள்ளனர். இவ்வளவுக்கும் இடம் அளிப்பதாக இந்தக் கலங்கள் இருந்திருக்க வேண்டும். இத்தகு ஆற்றல் இருந்ததால்தான் சோழ மண்டலக் கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் சோழர்களால் வைத்திருக்க முடிந்தது.
வரலாற்றிலிருந்து பார்க்கும்போது நாம் நம்முடைய கடல் வளங்களையும் வணிக வாய்ப்புகளையும் உரிய அளவுக்கு வளர்த்தெடுத்து இருக்கிறோமா?
ஆசிய நாடுகளில் கடல் வாணிபத்திலும் கப்பல் போக்குவரத்திலும் உன்னதமான இடத்தில் முன்பு நம்மவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், நவீன காலத்தில் கடல் வாணிபமும் கப்பல் போக்குவரத்தும் சரிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளின் கடல் மேலாதிக்கமும் காலனியாக நாம் கட்டுப்பட நேர்ந்ததும் இதற்கு முக்கியக் காரணங்கள். தொழில் புரட்சியும் நவீனத் தொழில்நுட்பங்களும் முழு வலிமையை அவர்களுக்குத் தந்தன. வரலாற்றுச் சக்கரம் மீண்டும் இப்போது சுழல்கிறது. மீண்டும் முக்கிய இடம் நோக்கி நாம் நகர்கிறோம்!
- ‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...
நூலைப் பெற அணுகவும்:
சோழர்கள் இன்று
தொகுப்பாசிரியர்: சமஸ்
விலை: 500
நூலை வாங்குவதற்கான இணைப்பு:
https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view
செல்பேசி எண்: 1800 425 7700
ஜிபே மூலம் ரூ.500 செலுத்தி, முகவரி அனுப்பி, கூரியர் வழி நூலைப் பெறுவதற்கான வாட்ஸப் எண்: 75500 09565
க்யூஆர் கோட்:
தொடர்புடைய கட்டுரைகள்
சோழர்கள் இன்று
எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி
மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்: ஜெயமோகன் பேட்டி
சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது? கா.ராஜன் பேட்டி
சோழ தூதர் மு.கருணாநிதி
மக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேட்டி
சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்: ட்ராட்ஸ்கி மருது பேட்டி
நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கர் ஸ்தபதி பேட்டி
1
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.