பேட்டி, கலை, வரலாறு, சமஸ் கட்டுரை, புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு

நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கர் ஸ்தபதி பேட்டி

சமஸ்
07 Jan 2024, 5:00 am
0

சோழர் காலத்தின் மரபுத் தொடர்ச்சி என்று வித்யாசங்கர் ஸ்தபதியைக் கூற அவருடைய பரம்பரை வரலாற்றைத் துணைக்கு அழைக்க வேண்டியது இல்லை; அவருடைய கலைப் பங்களிப்புகளே போதுமானவை. சுவாமிமலை மரபில் வந்தவரும் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்தவருமான வித்யாசங்கர் மரபும் நவீனமும் ஒருங்கே இணைந்தவர். கடந்த காலக் கலை வடிவங்களைத் தற்காலத்துக்கு இழுத்துப் பார்ப்பவர்.

இவருடைய புகழ்பெற்ற மங்கை வரிசைச் சிற்பங்களும் ஆடவல்லான் வரிசைச் சிற்பங்களும் இத்தகைய வெளிப்பாடுகள். நவீனச் சிந்தனையைச் சோழர் காலச் சிற்பக் கலை மீது ஏவினால் என்னவாகுமோ அதை வித்யாசங்கரின் சிற்பங்கள் பிரதிபலிக்கின்றன. சோழர் காலக் கலையின் முக்கியத்துவத்தை வித்யாசங்கர் இங்கே பேசுகிறார். ‘சோழர்கள் இன்று’ நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.

நவீனச் சிற்பியான உங்களை எது சோழர் காலம் நோக்கிச் செல்ல வைத்தது?

சோழர் காலத்தின் அபாரமான ஞானம்தான் என் கையைப் பிடித்து இழுத்தது.

என் கொள்ளுத்தாத்தா ராமசாமி ஸ்தபதியார் சென்னை கவின்கலைக் கல்லூரியில் உலோகச் சிற்பக் கலைப் பிரிவினுடைய முதல் தலைவராக இருந்தவர். தாத்தா முத்துசாமி ஸ்தபதி, தந்தை கௌரிசங்கர் ஸ்தபதி இவர்கள் எல்லாமும் லேசுபட்டவர்கள் இல்லை என்றாலும், பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டவர்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் கொடிமரம், ஆனந்த விமானம், வாகனங்களைச் செய்தவர் என்னுடைய அப்பா.

எனக்கு நான் என்னுடைய கொள்ளுத்தாத்தாவினுடைய தொடர்ச்சியாக வேண்டும் என்று ஆசை. நான் என் தந்தைக்குப் பக்கத்தில் இருந்து வளர்ந்தேன். பாரம்பரியக் கலை எனக்குச் சின்ன வயதிலிருந்தே பரிச்சயமாக இருந்தது. நான் கொள்ளுத்தாத்தாவை முந்த வேண்டும் என்று நினைத்தேன். 

இப்படித்தான் சென்னை கவின்கலைக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். பணிக்கர்தான் அப்போது முதல்வர். அவர்தான் உலோகப் பிரிவுக்குப் போ என்றார். ‘அதுதான் நமக்குத் தெரியுமே!’ என்று வேண்டாவெறுப்பாகத்தான் அங்கே படித்தேன். முதல் சிற்பமாகவே பெண்தான் வந்தாள். ‘பானை ஏந்திய பெண்’.

அவள் எப்போது வந்துவிட்டாளோ அப்போதே நான் மெல்லப் பின்னோக்கிப் போக ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கலைஞன் என்றால், சோழர் காலப் பெண் சிற்பங்களை உங்களால் கடக்காமல் இருக்கவே முடியாது. அந்த ஈர்ப்பு அப்போது எனக்கு அப்போது சாதாரணமாகத்தான் தோன்றியது. 

கோயில்களிலேயே திரிந்து வளர்ந்தவன் நான். சிற்பங்கள் எப்போதும் ஈர்க்கும். இப்போது இன்னும் கூர்ந்து பார்க்கிறோமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இது அணங்கின் இழுப்பு என்பது பின்னர்தான் புரிந்தது. மெல்ல இது புரிபடலானபோது மங்கைச் சிற்பங்களுக்குள் நான் மறைந்துவிட்டேன்.

ஐம்பது வருஷங்களாக என்ன செய்திருக்கிறேன் என்று இன்றைக்கு யோசித்தால், திரும்பத் திரும்ப மங்கையையும் ஆடவல்லானையும்தான் வெவ்வேறு வடிவங்களில் செய்துகொண்டிருந்திருக்கிறேன் அல்லது அந்த வடிவங்களுக்கு வெவ்வேறு ரூபங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். கடல் அலைகள்போல என்னைச் சோழர் காலச் சிற்பங்களும், நான் சோழர் காலச் சிற்பங்களையும் துரத்திக்கொண்டிருக்கிறோம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சோழ தூதர் மு.கருணாநிதி

எஸ்.அப்துல் ஹமீது 03 Jan 2024

வரலாற்றில் எவ்வளவோ காலகட்டங்கள் இருக்க ஏன் சோழர் காலச் சிற்பங்களைத் துரத்துகிறீர்கள்? 

நம் சமூகத்தில் முந்த முடியாத சாதனையாளர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். வேறு வழியில்லை, நான் ஆயிரம் வருஷம் பின்னோக்கித்தான் ஓட வேண்டும். 

சோழர் காலம் என்றாலே, எனக்கு ஒரு சொல்தான் காதில் ஒலிக்கும்: ஒளிமானம். ஆயிரம் வருஷம் என்று நாம் பேசும் கணக்கெல்லாம் ராஜாக்கள் அரசாண்ட கணக்கு. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிற்காலச் சோழர் காலத்தில் இப்படி ஓர் உன்னத நிலையை அடைய வேண்டும் என்றால், அதற்கு முன் எத்தனை நூற்றாண்டுகள் அனுபவமும் ஞானமும் திரண்டிருக்க வேண்டும்?

முற்காலச் சோழர் சிற்பங்கள் அந்தப் பாதையை நமக்குக் காட்டும். முற்காலச் சோழர் சிற்பங்கள் எளிமையாக இருக்கும்; பிற்காலச் சோழர் சிற்பங்களில் உடலில் தீர்க்கம் கூடியிருக்கும்; அணிகலன்கள் கூடியிருக்கும்; ஆபரணங்களில் வேலைப்பாடு கூடியிருக்கும். இதற்கு மட்டும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டியிருக்கின்றன? அப்படியென்றால், முழுமையாக எத்தனை ஆயிரம் வருஷங்களில் இந்தச் சமூகம் இப்படி ஒரு நிலையை அடைந்திருக்கும்? 

எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்கும் சிற்பங்கள் அவை.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிதைந்துபோன ஓவியங்களைப் பாருங்கள், அதுவும் அந்த திரிபராந்தகர் ஓவியம்… என்ன ஒரு வெளிப்பாடு! இங்கே தாராசுரம் கோயிலின் விரலளவு சிற்பங்கள்… எப்படியான ஒரு நுட்பம்! 

நான் தற்காலத்தில் இருக்கிறேன்; நவீனக் கலைஞன் என்ற பெயரில் எல்லா இலக்கணங்களையும் உடைத்து எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். வெறும் கை, கால்களை மட்டும் செய்தும் இதுதான் மங்கை என்று உங்களை நம்ப வைக்கிறேன். அவர்கள் காலத்தில் அப்படியெல்லாம் முடியாது. எல்லாம் இலக்கணத்துக்குள், சீர்மைக்குள் இயங்க வேண்டும்; கட்டத்துக்குள்தான் ஆட்டம்; அதற்குள் எவ்வளவு பாய்ச்சல்கள்!

சோழர் காலக் கோயில்களை ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு வகையில் பார்க்கிறார்கள். நீங்கள் ஒரு கலைஞராக எப்படிப் பார்க்கிறீர்கள்? உள்ளபடி என்னதான் நடந்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

அது ஒரு விளையாட்டு. ஆளாளுக்கு விளையாடியிருக்கிறார்கள்; அரசனுக்கு அது அவனுடைய அரசியலை வெளிப்படுத்தும் விளையாட்டு; சித்தாந்திக்கு அவனுடைய தத்துவத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு; கலைஞன்தான் இந்த விளையாட்டுகள் எல்லாவற்றுக்கும் உருவம் கொடுக்க வேண்டும்; எல்லோர் விளையாட்டுகளுக்கும் மத்தியில் அவன் ஒரு விளையாட்டை ஆடுகிறான். ஆடவல்லான் ஆடுவதை ஆட்டம் என்றும் சொல்லலாம்; உலகின் இயக்கம் என்றும் சொல்லலாம். 

சோழர்கள் கோபுரங்களைக் காட்டிலும் விமானங்களை உயரமாக்கினார்கள் என்று சிலர் சொல்வார்கள். கோபுரக் கலைக்கும் சோழர்கள்தான் அடித்தளம்.

ராஜராஜன் காலத்தில் பெரிய கோயில் கேரளாந்தகன் கோபுரம்தான் உயரமான கோபுரம். சுதைச் சிற்பங்களில் பல கதைகளையும் கொண்டுவந்து சேர்த்தனர். கோபுரத்தில் எல்லாவற்றையும் செய்துவிட்டு, அப்படியே விமானத்தை மேலே தூக்கி நிறுத்தினார்கள்.

என்ன விளையாட்டு இது? பெரிய கோயில் கருவறையைச் சுற்றியுள்ள கர்ணங்களைக் கையில் விளக்குடன் சென்று பார்க்க வேண்டும். ஒளி பட்டால் சிற்பங்களின் கோணம் மாறும்; புன்னகைக்கும். எல்லாம் அதிசயம்!

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

கற்சிலைகளிலிருந்து உலோகச் சிலை நோக்கிச் செல்கிறார்களா, உலோகச் சிலைகளிலிருந்து கற்சிலை நோக்கிச் செல்கிறார்களா?

வரலாற்றில் இரண்டும் சமமான பாதையில் வருகின்றன. பாறையில் எழுத்தைச் செதுக்கிய காலகட்டத்திலேயேதான் மண்ணைப் பிசைந்து உருவங்களையும் உருவாக்கியிருக்கிறான். கலை வடிவங்கள் எப்போதும் சங்கமமாகத்தான் நிகழ்கின்றன.

சோழர் காலக் கலை நம்முடைய இன்றைய கலையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகிறது?

கோபுரம் நமக்கு அதுதான். அதுதான் நமக்கு இன்றைக்கு அடித்தளமாகவும் இருப்பதால், நமக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை.

சிற்பிக்குப் பல சாஸ்திரங்கள் தெரிய வேண்டும். இசை தெரிய வேண்டும், நாட்டியம் தெரிய வேண்டும், வான சாஸ்திரம் தெரிய வேண்டும், ஆண் – பெண் உடல் தெரிய வேண்டும்… சொல்லிக்கொண்டே போகலாம். 

இவ்வளவும் தெரிந்தவனுடன் அன்றைக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் ஞானம் வாய்ந்தவன்கள் கூடுகிறான்கள். அப்படி ஒரு சேர்க்கை! 

எல்லாம் ஆண்டுக் கணக்கில் உட்கார்ந்து திட்டமிடுகிறார்கள். ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் பல ஆண்டுகள் உழைக்கிறார்கள். பெரிய கோயில் கட்டப்பட்டது என்னவோ ஆறு ஆண்டுகள்; திட்டம் எட்டாண்டுகள் போட்டார்கள் என்று சொல்வார்கள். அப்படி ஒரு நிதானம்.

கலைக்கு இது முக்கியம். கலைஞனுக்கான இந்த அவகாசம், இந்த மூலதனம், இந்த அறிவுச் சேர்க்கை… அது எல்லாம் ஒன்றுகூடிய காலம் அது. நாம் அந்தச் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று நினைக்கலாம். 

எப்படி அதை முறியடிப்பது? தத்துவ அடிப்படையில் இந்த முறியடிப்பு நடக்க வேண்டும். ஒரு சமூகம் அவ்வளவு உயரத்துக்குப் போகும்போது அது முகிழும். ஒரு பூ பூப்பது மாதிரி. அது சும்மா இல்லை. சிலைக்குக் கண் திறந்தால் சாமி ஆகிவிடுகிறது என்று நம்புகிறார்கள். அந்தக் கண்களைப் பார்த்தால் ஒளி வர வேண்டும்.

நான் சிற்பங்களைச் செய்துவிட்டு இரவிலும், பகலிலும் வெவ்வேறு ஒளிச்சேர்க்கையில் பார்த்துக்கொண்டே இருப்பேன். எந்தச் சிற்பம் எப்போது கண் திறக்கிறது என்பது எனக்குத் தெரிந்ததே இல்லை. 

திரும்பவும் இந்தச் சமூகத்தின் கண் திறக்குமா?

சமூகம் ஒட்டுமொத்தமாக அதற்குக் கனவு காண வேண்டும். நமக்கு அருள் இருந்தால், நடக்கும்!

- ‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நூலைப் பெற அணுகவும்:

சோழர்கள் இன்று 
தொகுப்பாசிரியர்: சமஸ் 
விலை: 500 
நூலை வாங்குவதற்கான இணைப்பு:
https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view

செல்பேசி எண்: 1800 425 7700
ஜிபே மூலம் ரூ.500 செலுத்தி, முகவரி அனுப்பி, கூரியர் வழி நூலைப் பெறுவதற்கான வாட்ஸப் எண்: 75500 09565

க்யூஆர் கோட்:

தொடர்புடைய கட்டுரைகள்

சோழர்கள் இன்று
எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி
மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்: ஜெயமோகன் பேட்டி
சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது? கா.ராஜன் பேட்டி
சோழ தூதர் மு.கருணாநிதி
மக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேட்டி
சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்: ட்ராட்ஸ்கி மருது பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இயம்இஸ்லாமியர்கள்வீரப்பன் சகோதரர்இந்தித் திணிப்புபிர்லா மந்திர்இந்தப் பேரவலத்தில் இஸ்ரேலின் பங்கு என்ன?சங்கீதம்இருவேறு உலகம்காலம் மாறிப்போச்சு காங்கிரஸ்காரரே!சிறுநீரகக் கற்கள்ஐஏஎஸ் பணிவிதிகளில் திருத்தம்உத்தர பிரதேசஅறிவொளி இயக்க முன்னோடிஇன்பம்பசுமைத் தோட்டம்இயர் பிளக்இலவச மின்சாரம்ராஜாஜியின் கட்டுரைபோலி ஆவணங்கள்ஸ்டாலின்உமர் அப்துல்லாகழிவு மேலாண்மைஓம் சகோதர்யம் சர்வத்ரகலைக் கல்லூரிஎம்.எஸ்.கோல்வால்கர்அழகியலும் மேலாதிக்க சுயமும்மனுதர்மம்அறிவாளிகள் எண்ணிக்கை பெருகவே தாய்மொழிக் கல்விஆரியம்அம்பேத்கர் - அருஞ்சொல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!