பேட்டி, வரலாறு, சமஸ் கட்டுரை, ஆளுமைகள், புத்தகங்கள், மொழி 4 நிமிட வாசிப்பு
மக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேட்டி
நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் சர்வதேசக் கவனம் ஈர்த்தவர்களில் முதன்மையானவர் பெருமாள் முருகன். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அடிப்படையில் தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர். சோழர் காலத்தில் தமிழ் மொழியில் என்ன நடந்தது என்பதை இங்கே பேசுகிறார். ‘சோழர்கள் இன்று’ நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.
முற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் மூலம் நாம் உணர்ந்துகொள்ளும் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்திருக்கிறது?
சங்க காலத்தைச் சேர்ந்தவர்கள் முற்காலச் சோழர்கள். அன்றைக்குத் தமிழ்ச் சமூகத்தின் நகர நாகரிகம் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்திருக்கிறது என்பதற்குப் ‘பட்டினப்பாலை’ சிறந்த சான்று. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்பது அக இலக்கணம்.
ஆனால், ஒருவர் பெயர் சுட்டியும் பாடலாம்; இலக்கண ஏற்பையும் பெறலாம் என்று விதிமீறலை ஏற்புடன் செய்த நூல். அதாவது, பாடல் முழுக்கவும் சோழன் கரிகாலனின் புகழும் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினமும் போற்றப்படுகின்றன. கடைசி இரண்டடிகள் மட்டும் நூலை அகமாக மாற்றிவிடுகின்றன. இலக்கணக் கட்டுக்குள் இலக்கியத்தை அடக்கிட முடியாது என்று புலவர் காட்டும் படைப்புத் தந்திரம் இது.
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அரசியல் பார்வையும் ஆழ்ந்த நோக்கும் ஒருங்கிணைந்தவர். அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் பல்லாண்டு கால மொழியின் விளைச்சல்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
நாம் பெரிதாகப் பேசும் பிற்காலச் சோழர் காலத்தில் தமிழில் நடந்திருக்கும் முக்கியமான வளர்ச்சிகள் / மாற்றங்கள் என்னென்ன?
தமிழ் இலக்கியம் பெருவளர்ச்சி அடைந்தது. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இலக்கணங்கள் என்று அதுவரை இல்லாத அளவுக்கு விரிவான இலக்கியப் பரப்பை இக்காலத்தில்தான் காண்கிறோம். பல்வேறு வட்டார வழக்குகள் தொடர்பான பதிவுகளும் கிடைக்கின்றன. பன்னிரு திருமுறைத் தொகுப்புப் பணி நடந்தது. பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதும் மரபும் தொடங்கியது.
‘பழந்தமிழ் இலக்கியக் காப்பு’ இக்காலத்தில் நிகழ்ந்தது. அதேசமயம், சம்ஸ்கிருதத் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ள நேர்ந்தது இக்காலத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம். அக்காலத்தில் உருவான மொழி அரசியலின் சில கூறுகள் இன்றும் தொடர்கின்றன.
சோழர் காலத்தைச் சேர்ந்தவரும் தமிழில் உச்சம் தொட்டவர்களில் ஒருவருமான கம்பருடைய இடம் எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்?
மிகப் பெரிய காப்பியமான கம்பராமாயணச் சுவடிகள் பல கிடைத்தன. வேறெந்த நூலுக்கும் இத்தனை சுவடிகள் கிடைக்கவில்லை. பாட வேறுபாடு இல்லாத பாடல்கள் நான்கோ ஐந்தோதான். அப்படியானால், எவ்வளவு விரிவான கற்றலுக்கு அந்நூல் உள்ளாகியிருக்க வேண்டும் என்பதை அறியலாம். அது காலத்தை மீறி எழுந்த ஒரு படைப்பாளியின் சாதனை.
வழக்கிலிருந்த புகழ்பெற்ற கதை ஒன்றை எடுத்து அதில் தம் படைப்பு மனநிலை சார்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து, சமகால விழுமியங்களுடன் புதிய பார்வைகளையும் இணைத்துச் செய்த காப்பியம் அது. கம்பரின் இடம் என்றைக்குமே முதல் வரிசையில் இருக்கும்.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
ஜெயங்கொண்டாரின் ‘கலிங்கத்துப்பரணி’, சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’ இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழில் ‘போர் இலக்கியம்’ என்று பார்த்தால் கலிங்கத்துப்பரணி அதில் முதலிடம் வகிக்கும். போரின் கொடூரத்தை அதைப் போல் பேசிய ஒரு நூல் இல்லை. பிற்காலச் சிற்றிலக்கிய வகைகள் உருவாக அது ஒரு முன்னோடி நூலும்கூட. கதைகளைத் திரட்டிக் கொடுத்தவர் சேக்கிழார். தம் சமகாலச் சமூகத்தின் சாதிஎத்தன்மையையும் மதங்களின் இருப்பு முரண்களையும் பேசுவது பெரிய புராணம். இலக்கியமாக ஈர்க்கவில்லை என்றாலும், ஆவண மதிப்பால் அது நிற்கும்.
உரையாசிரியர்கள் மரபின் முக்கியத்துவம் என்ன?
இன்று நாம் போற்றும் பழந்தமிழ்ப் பெருமைக்கான ஆதார நூல்களை எல்லாம் காத்துக் கொடுத்தது உரை மரபுதான். உரை இல்லாத நூல்களை வாசிப்பது சிரமம். உரை இல்லாத ‘மணிமேகலை’யைப் பதிப்பிக்க உ.வே.சாமிநாதையர் பெரும் சிரமப்பட்டார். உரை வழியேதான் அடுத்த காலத்திற்கு ஒரு நூலை எடுத்துச் செல்கிறோம்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது? கா.ராஜன் பேட்டி
02 Jan 2024
சோழர் காலத்தில்தான் தமிழ் நிலம் முழுவதும் எழுத்து வடிவம் ஒன்றாகிறது; இப்படித் தமிழ் ஒன்றிணையும் வேறு விஷயங்களைச் சொல்லலாமா?
ஆட்சிப் பரப்பு விரிந்த இக்காலத்தில்தான் இலக்கிய வாசிப்பும் பரவலானது. ஆவணங்கள் பரவலான காலமும் இதுதான். சிறுகோயிலில்கூடக் கல்வெட்டுகளைக் காணலாம். இலக்கிய ஆட்சி என்று மட்டுமில்லாமல் மக்கள் மொழியாக நாடு முழுவதும் தமிழ் நின்றதும் முக்கியமானது!
-‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...
நூலைப் பெற அணுகவும்:
சோழர்கள் இன்று
தொகுப்பாசிரியர்: சமஸ்
விலை: 500
நூலை வாங்குவதற்கான இணைப்பு:
https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view
செல்பேசி எண்: 1800 425 7700
ஜிபே மூலம் ரூ.500 செலுத்தி, முகவரி அனுப்பி, கூரியர் வழி நூலைப் பெறுவதற்கான வாட்ஸப் எண்: 75500 09565
க்யூஆர் கோட்:
தொடர்புடைய கட்டுரைகள்
சோழர்கள் இன்று
எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி
மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்: ஜெயமோகன் பேட்டி
சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது? கா.ராஜன் பேட்டி
சோழ தூதர் மு.கருணாநிதி
3
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
SUNDARAN M 9 months ago
சிறப்பான பதிவு. 👌🎉❤️
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.