கட்டுரை, வரலாறு, ஆளுமைகள், புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு
சோழ தூதர் மு.கருணாநிதி
தமிழகத்தின் பேராட்சியாளர்களான சோழர்கள் வரலாறு ஒரு நூற்றாண்டு முன்பு வரை பலருக்கும் தெரியாததாகவே இருந்தது. தமிழர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களை உண்டாக்கிய சோழர்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்ததில் பலருடைய உழைப்பு இருக்கிறது. கலைஞர் மு.கருணாநிதி, மக்களிடம் சோழர்களைக் கொண்டுவந்து கொடுத்த அந்தச் சோழ தூதர்களில் ஒருவர். ‘சோழர்கள் இன்று’ நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான கட்டுரைகளில் ஒன்று இது.
அரசியல் தளத்தில் சோழர்கள் கற்பனையை விஸ்தரித்தவர் தமிழ்நாட்டின் நெடுநாள் முதல்வரான கலைஞர் மு.கருணாநிதி.
தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் எப்போதும் தமிழ் மன்னர்கள் வரலாற்றைப் பேசிவந்தன. கூட்டாட்சி அதிகாரம் பேச கடந்த கால வரலாற்றிலிருந்து தனக்கான ஒரு சுயாட்சி மொழியைத் தமிழர்கள் உருவாக்க வேண்டியிருந்தது. இப்படி முந்தைய முடியாட்சி வரலாற்றைப் பேசுகையில், தமிழ்க் கொடியைக் கடல் தாண்டிப் பறக்கவிட்ட சோழர்கள் முக்கிய இடம் பெற்றார்கள். அண்ணா தன் மேடைகளில் இதை ஒரு போக்காக மாற்றினார். அடுத்து வந்த கருணாநிதி சோழக் கதையாடலுக்குச் செயல்வடிவமும் கொடுத்தார்.
திருவாரூர் அருகேயுள்ள திருக்குவளையில் 1924, ஜூன் 3இல் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் கருணாநிதி. இளவயதிலேயே அரசியல் ஆர்வத்துடன் இருந்தவர் பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா என்று பயணப்பட்டார். காவிரிப் பிராந்தியத்தில் பிறந்தவர் என்பதால், இயல்பாகவே சோழர் வரலாற்றில் அவருக்கு ஆர்வம் இருந்தது; அவர் சூட்டிக்கொண்ட ஆரம்ப காலப் புனைபெயர்களில் ஒன்று கரிகாலன். தமிழ் அரசியல் இந்த ஆர்வத்துக்கு நீர் பாய்ச்சியது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ஒவியம்: எம்.சுந்தரன்
பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட தமிழ் நிலத்தைக் கதைப் பரப்பால் ஒன்றிணைப்பதோடு, ஒரு குடிநபரைக் கதாநாயகியாகக் கொண்ட காவியம், ‘சிலப்பதிகாரம்’.
செழித்த பூம்புகார் நகரமும், நீதி கேட்கும் கண்ணகியும் தமிழ் மனதில் ஆழ நிலைத்த படிமங்கள்; அவற்றைத் தனதாக்கிக்கொண்டார் கருணாநிதி. கண்ணகியை மையமாகக் கொண்டு 1964இல் அவர் எழுதி, தயாரித்த படத்துக்குச் சோழர்களின் தலைநகரான ‘பூம்புகார்’ பெயரைச் சூட்டினார். ஆய்வு நூல், நாவல், நாடகம் வரிசையில் சினிமாவுக்கும் சென்றார்கள் சோழர்கள்.
அடுத்து, கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தபோது, சோழர்களை நினைவுகூரும் கட்டுமானங்கள் முளைக்கலாயின. 1972இல் தஞ்சாவூரில் ராஜராஜனுக்குச் சிலை வைத்தார் கருணாநிதி. கூடவே சிறு கிராமமாகிக் கேட்பாரற்றுக் கிடந்த பூம்புகார் கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்து, எழிலார்ந்த கட்டுமானங்களை உருவாக்கினார்.
தமிழக அரசின் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்குப் பூம்புகார் பெயரைச் சூட்டினார். சென்னையில் அவர் வள்ளுவருக்காக உருவாக்கிய கோட்டமும் சோழர் காலப் பாணியைப் பிரதிபலித்தது.
சோழர்களை நினைவுகூரும் சொற்களையும் ஆட்சி நிர்வாகத்தில் கொண்டுவந்தார் கருணாநிதி. குடிசைகளில் வாழ்ந்தோருக்குக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுக்கும் அமைப்பை உருவாக்கி அதற்குச் சூட்டிய பெயர் ‘குடிசை மாற்று வாரியம்’. பிற்பாடு, தொழிலாளர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் பலவும் சோழர்கள் காலச் சொல்லான வாரியத்தைச் சூடிக்கொண்டன.
அரசியலின் எதிர் வரிசையிலும் சோழர்கள் கொண்டாடப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு 1984இல் அறிவித்த எழுத்தாளர்களுக்கான பிரம்மாண்டமான பரிசுக்கு ‘ராஜராஜன் விருது’ என்ற பெயர் சூட்டினார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். தஞ்சாவூரில் அவர் அமைத்த தமிழ்ப் பல்கலைக்கழகமும் சோழர் பெருமையைப் பிரதிபலித்தது.
அடுத்து, ஜெயலலிதா முதல்வரானபோது உலகத் தமிழ் மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். ராஜராஜன் மணிமண்டபம் உள்பட பல கட்டுமானங்கள் சோழர்களை நினைவுகூரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டன; பிற்பாடு கரிகாலனுக்கும் மணிமண்டபம் அமைத்தார் ஜெயலலிதா.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565
பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
கருணாநிதி கடைசி முறை முதல்வராக இருந்த சமயத்தில் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட ஆயிரமாவது ஆண்டு வந்தது.
பிரம்மாண்டமான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர், மிக அரிதாக அந்த நிகழ்வில் பட்டு உடுத்தி, குடும்பத்தினரோடு பங்கேற்றார். “இது ஏதோ ராஜராஜனைப் பெருமைப்படுத்துவதற்கு நடத்தப்படும் நிகழ்ச்சி இல்லை. அவருக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி!” என்றதோடு, “ஏன், இந்த ஆட்சியே ராஜராஜனின் ஆட்சிதான்!” என்றார்.
நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் தலைமையில் ஆயிரம் நடன மங்கைகள் ஆடும் நாட்டியத்தைக் குடும்பத்தோடு கருணாநிதி அமர்ந்து கண்டுகளித்ததைப் பார்த்து, “அவர் தன்னை இன்னொரு ராஜராஜனாகக் கற்பனை செய்துகொள்கிறாரா?” என்று கேட்டவர்களும் உண்டு; “இது ஒரு வரலாற்றுத் தலைகீழாக்கம்” என்று சொன்னவர்களும் உண்டு; இரு தரப்பாரையுமே தன் சிரிப்பால் அவர் புறம் ஒதுக்கினார்.
2018, ஆகஸ்ட் 8இல் கருணாநிதி காலமானார். சோழர்களை நவீன அரசியல் தளத்தில் நினைவூட்டிக்கொண்டே இருந்த ஒரு குரல் ஓய்ந்தது!
- ‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...
நூலைப் பெற அணுகவும்:
சோழர்கள் இன்று
தொகுப்பாசிரியர்: சமஸ்
விலை: 500
நூலை வாங்குவதற்கான இணைப்பு:
https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view
செல்பேசி எண்: 1800 425 7700
ஜிபே மூலம் ரூ.500 செலுத்தி, முகவரி அனுப்பி, கூரியர் வழி நூலைப் பெறுவதற்கான வாட்ஸப் எண்: 75500 09565
க்யூஆர் கோட்:
தொடர்புடைய கட்டுரைகள்
சோழர்கள் இன்று
எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி
மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்: ஜெயமோகன் பேட்டி
சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது? கா.ராஜன் பேட்டி

1

2

1




பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.