கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு
எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
சோழர்களின் வரலாற்றைப் புரிந்துகொள்ள பண்டைய தமிழ்நாட்டின் நிலவியலைப் புரிந்துகொள்வது முக்கியம். இன்றைய தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்களின் கடந்த கால ஆட்சியாளர்களில் சிலரையேனும் அறிந்திருப்பதும் முக்கியம். சில அடிப்படைகளை அறிந்துகொள்ளுங்கள்!
தமிழ்நாடு அன்றைக்கு எப்படி இருந்தது?
தமிழ்நாடு இன்றுள்ள வரைபடத்தில் இருப்பதுபோல அன்றைக்கு ஒரே அரசியல் அலகாக இல்லை. பண்டைய தமிழ்நாடு என்பது மேலே திருப்பதி முதலாகக் கீழே குமரி வரை இருபுறமும் கடல் சூழ தமிழ் பேசும் மக்களைக் கொண்டிருந்தது; நாம் 2,500 ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இதில் சரிபாதி காலம் வரை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இன்றைய கேரளமும் இருந்தது. ஏனென்றால், பொது ஆண்டு (கி.பி.) 800 வரை மலையாளம் ஒரு தனி மொழியாக உருவெடுக்கவில்லை. அது தமிழின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆகையால், பண்டைத் தமிழகத்தின் நிலமானது இன்றைக் காட்டிலும் பெரியது. ஆனால், இந்த நிலப் பகுதி பல அரசர்களால் ஆளப்பட்டது.
சேர, சோழ, பாண்டியர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை எப்போது ஆண்டார்கள்?
பண்டைத் தமிழகத்தின் ஏராளமான அரச குடியினரில், சேர, சோழ, பாண்டியர்கள் பெரும் நிலப் பகுதிகளை ஆண்டவர்கள். அதாவது, பல துண்டுப் பரப்புகளாக இருந்த தமிழ் நிலத்தில் பெரும் பரப்புகளை ஆண்டவர்கள் இவர்கள் என்று சொல்லலாம். சேரர்கள் இன்றைய கேரளத்தின் கணிசமான பகுதியை உள்ளடக்கி அங்கே முசிறியிலிருந்து இங்கே கரூர் வரை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர். பிற்பாடு கேரளம் தனி பிராந்தியமாக உருவெடுத்ததும், தமிழ் நிலத்தைப் பொறுத்த அளவில் கொங்கு பிராந்தியம் மட்டுமே சேரர்களின் நிலமாக இருந்தது. சோழர்கள் திருச்சி உறையூரிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான பிராந்தியத்தில் கணிசமான பகுதியை ஆண்டார்கள். பாண்டியர்கள் மதுரையில் இருந்து குமரி வரையிலான பிராந்தியத்தில் கணிசமான பகுதியை ஆண்டார்கள்.
அப்படியென்றால், சேர சோழ, பாண்டியர்கள் என்ன சிற்றரசர்களா?
இல்லை. மேலே சொன்னது அவர்களுடைய பாரம்பரியப் பகுதி. இதைத் தாண்டியும் அவர்கள் ஆண்டிருக்கிறார்கள். பொதுவாக, தமிழ் மன்னர்கள் ஒருவர் மீது படையெடுத்து வென்றாலும், பொருள்களைச் சூறையாடி வருவது, எதிரியைத் தனக்குக் கப்பம் கட்ட வைப்பது என்பதான அணுகுமுறையையே கையாண்டிருக்கிறார்கள். தங்கள் ராஜ்யத்துக்கு அருகில் உள்ள பகுதியை வேண்டுமானால் தேவை கருதி வளைத்துக்கொள்வார்கள். முற்றுமுதலாக முழுத் தமிழ்நாட்டையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவருவது என்பதை முதன்முதலில் சோழர்கள்தான் செய்தார்கள். ராஜராஜன் காலத்தில் இது நடந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அவர்களுடைய முழு ஆட்சியின் கீழ் தமிழ்நாடு இருந்தது. பிற்பாடு பாண்டியர்களும் அப்படிச் செய்தார்கள். சேரர்கள் தொடர்பில் மிகக் குறைந்த விவரங்களே கிடைக்கின்றன.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
சரி, சேர சோழ, பாண்டியர்களின் பாரம்பரிய பிராந்தியங்கள் நீங்கலாக ஏனைய பகுதிகளை யார் ஆண்டார்கள்?
நூற்றுக்கும் மேற்பட்ட அரசர்கள் ஆண்டனர். இவர்களில் புகழ் மிக்க பல குடிகள் உண்டு. இன்றைய தருமபுரி பகுதியை ஆண்ட அதியமான்கள் அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் உதாரணம். அசோகனுடைய கல்வெட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் பெயர்களைப் போல இவர்களுடைய பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. இதேபோல, புகழ் பெற்ற இன்னொரு குடியினர் ஆய் அரசர்கள். பாண்டி நாட்டுப் பகுதியையும், சேர நாட்டுப் பகுதியையும் ஒட்டி செங்கோட்டைப் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கியது ஆய் நாடு. சம்புவராயர் இன்னோர் அரச குடி. பிற்பாடு பல்லவர்களுடைய ஆட்சிக்குக் கீழே வந்த தொண்டை நாட்டை ஆட்சி செய்தவர்கள் இவர்கள். அதேபோல், இதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு அரச குடியினர் காடவராயர்கள். புகழ் பெற்ற இன்னோர் ஆட்சியாளர்கள் மலையமான்கள். இவர்கள் இன்றைய திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம் பிராந்தியத்தின் கணிசமான பகுதியை ஆண்டவர்கள். முற்காலத்தில் மிலாடு என்றும் பிற்பாடு நடுவில் நாடு என்றும் இந்த பிராந்தியம் அறியப்பட்டது.
இன்னும் கொஞ்சம் எளிமையாக விளக்க முடியுமா?
ஒரு புரிதலுக்காக நாம் தமிழ்நாட்டின் பகுதிகளை ஏழு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம்: சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சேர நாடு மற்றும் கொங்கு நாடு; சோழ நாடு; பாண்டிய நாடு; மலையமான்களின் நடுவில் நாடு, பிற்காலத்தில் பல்லவர்கள் நிலமான தொண்டை நாடு, இன்றைய ஆந்திரம், கர்நாடகத்தின் அன்றைய ஆட்சியாளர்களின் செல்வாக்கில் ஆட்பட்டிருந்த கங்க நாடு.
சேர, சோழ, பாண்டிய நாடுகள் புரிகின்றன. கொங்கு நாடும் நடுவில் நாடும்கூடப் புரிகிறது. அதென்ன கங்க நாடு?
அதாவது, தமிழ்நாட்டின் மேற்பகுதி எல்லையை ஒட்டிய சென்னை – திருத்தணி – ஓசூர் – மேட்டூர் – சத்தியமங்கலம் - வேலூர்… அந்த ஓட்டம்! இது ஆந்திர, கர்நாடக எல்லைகளை ஒட்டி இருப்பதால், அங்கு ஆட்சி செய்தவர்களுடைய ஆதிக்கம் இந்த ஓட்டத்தை அவ்வப்போது பாதிக்கும். கங்கர்கள் என்பவர்கள் இன்றைய கர்நாடகம் – ஆந்திரத்தை ஆண்ட ஓர் அரச வம்சத்தினர். இவர்களுடைய ஆட்சிப் பிரதேசம் ‘கங்க நாடு’ என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு பல அரச வம்சத்தினர் அங்கே மாறினாலும், கங்கர்கள் ஆண்ட பிராந்தியத்தை ஒட்டியுள்ள ஓட்டத்தை - அது தமிழகத்தின் பகுதியாக இருந்தாலும் - ‘கங்க நாடு’ என்றே நம் வரலாற்றாய்வாளர்கள் சுட்டுகிறார்கள்.
கங்கர்களைப் போலவே மேலும் சில அரச வம்சத்தினரை நாம் அறிந்துகொள்வது அவசியம். சாதவாகனர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், போசாளர்கள் என்றழைக்கப்படும் ஹொய்சாளர்கள். இவர்கள் எல்லாம் இன்றைய தமிழ்நாட்டின் வடக்கு எல்லையான கர்நாடகம் அல்லது ஆந்திரத்தின் பல பகுதிகளை ஆண்டவர்கள். ஏன் இவர்களை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், இவர்களுடைய தலையீடு தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்கள் மூவருக்கும் இடையிலான போர்களில் இவர்கள் தலையீடு இருந்திருக்கிறது. தமிழக மன்னர்கள் இவர்களோடு போரிட்டும் இருக்கிறார்கள், பெண் கொடுத்து பெண் எடுத்தும் இருக்கிறார்கள்.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
சரி, இவ்வளவு பேர் ஆண்டிருக்கும்போது மூவேந்தர்களுக்கு அடுத்து ஏன் களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், பிரிட்டிஷார் இவர்களைப் பற்றியே அதிகம் நாம் பேசுகிறோம்?
மூவேந்தர்கள் தமிழர்கள். தமிழ் நிலத்தை அடித்தளமாகக் கொண்டு ஆண்டவர்கள். நாம் கடந்த 2,500 ஆண்டு வரலாற்றை எடுத்துக்கொண்டால், மூவேந்தர்களும் தமிழகத்தின் ஏதோ ஒரு நிலப் பகுதியைக் குறைந்தது 1,000 ஆண்டுகளேனும் ஆண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏனைய தமிழ் அரசர்களுடைய ஆட்சிக் காலகட்டமும் குறைவு; அதேபோல், அவர்களுடைய ஆட்சிப் பரப்பும் மிகக் குறைவு.
மூவேந்தர்களுக்கு அடுத்ததாக எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் பங்களித்திருப்பவர்கள் களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், பிரிட்டிஷார் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் கணிசமான பகுதியை இவர்கள் நால்வரும் ஆண்ட காலகட்டம் என்று கணக்கில் கொண்டால் அதுவே குறைந்தது 1,300 ஆண்டுகளுக்கு மேல் வரும். வெளியிலிருந்து வந்தவர்கள் என்றாலும், நிறையப் பங்களித்திருக்கிறார்கள்; சூறையாடிக்கொண்டு ஓடிப்போனவர்கள் இல்லை. குறிப்பாக, கர்நாடகப் பின்னணியைக் கொண்ட களப்பிரர்கள், ஆந்திரப் பின்னணியைக் கொண்ட பல்லவர்கள், நாயக்கர்கள் காலகட்டங்களில் அங்கிருந்து இங்கு கணிசமான மக்கள் வந்திருப்பது தெரியவருகிறது. இந்த மண்ணோடும் மக்களோடும் அவர்கள் கலந்தார்கள். தமிழ் நிலத்தின் மக்கள்தொகையும் பலமும் அதிகரித்தன; அதன் பண்பாடு மேலும் செழுமை அடைந்தது.
தமிழகத்தில் முன்பு பல நாடுகள் இருந்திருப்பது தெரியவருகிறது. அப்படியென்றால், தமிழ்நாடு ராஜராஜன் காலத்தில்தான் தோன்றியதா?
முழு நிலத்தையும் முதலில் ஆண்டவர் ராஜராஜன் என்றாலும், அதற்கு முன் இந்நிலம் பல துண்டுகளாகப் பலரால் ஆட்சி செய்யப்பட்டாலும், ‘வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்நாடு’ எனும் உணர்வு மட்டும் தொன்று தொட்டு நம் மக்களிடம் இருந்தது. நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் – அவை எந்தப் பகுதியிலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் – தமிழ்நாடு எனும் உணர்வை எப்போதும் பிரதிபலித்தன. உணர்வால் இந்த மண்ணையும் நம் மக்களையும் தமிழ் எனும் உயிர் மொழி எப்போதும் பிணைத்திருக்கிறது!
- ‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...
சோழர்கள் நூலைப் பெற முந்துங்கள்:
புத்தகம்: சோழர்கள் இன்று
தொகுப்பாசிரியர்: சமஸ்
விலை: 500
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇
75500 09565
இணையம் வழியே வாங்குவதற்கான இணைப்பு: https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view
கட்டணமில்லா இந்த எண்ணில் விசாரிக்கலாம்: 1800 425 7700
தொடர்புடைய கட்டுரைகள்
சோழர்கள் இன்று
சோழர்கள் இன்று: முரசொலி சொல்லும் செய்தி என்ன?
தமிழகத்தின் வரலாற்றைப் பேசும் ‘சோழர்கள் இன்று’
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.