பேட்டி, வரலாறு, சமஸ் கட்டுரை, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்: ஜெயமோகன் பேட்டி

சமஸ்
23 Jul 2023, 5:00 am
1

மகாலத்தின் முக்கியமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன், ஓர் இலக்கிய இயக்கம் என்றே சொல்லலாம். சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், ஆன்மிகம், தத்துவம், அரசியல், பண்பாடு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, பயணம் என்று பல்வேறு தளங்களிலும் கட்டுரை நூல்கள், புதுக் காப்பியங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தவர். மகாபாரதத்தை நவீனப் புனைவாக்கி 22,400 பக்கங்களில் ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ உலகின் நீளமான இலக்கியப் படைப்புகளில் ஒன்று. ஜெயமோகன் பிறந்து வளர்ந்தது சோழர்கள் ஆளுகைக்கு உள்பட்டிருந்த பகுதி.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஆயினும் தமிழ் மொழியோடும் மண்ணோடும் கலந்தவர். சோழர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதிவருபவர். கூடவே ‘மன்னராட்சிக் காலகட்டத்தைப் பொறுத்த அளவில் ராஜராஜ சோழனுடைய ஆட்சிக் காலம்தான் பொற்காலம்’ என்றும் கூறுபவர். சோழர் காலத்தைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதும், தமிழ்த் திரையுலகில் பெரும் வசூலைக் குவித்ததுமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர். ஒரு படைப்பாளியாகச் சோழர் காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று இங்கே பேசுகிறார்.

'அருஞ்சொல்' உருவாக்கத்தில் 'தினமலர்' வெளியீடாக வந்திருக்கும் 'சோழர்கள் இன்று' நூலில் இடம்பெற்றுள்ள இப்பேட்டியை நம் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

பொதுவாக, தம்முடைய பாரம்பரிய எல்லையைத் தாண்டிச் சென்று தன் ஆட்சியை விஸ்தரிக்கும் எந்த ஓர் அரச மரபினரும் பிற்காலத்தில் அந்த மக்களால் ஆக்கிரமிப்பாளர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்று நோக்கில் இப்படியான பார்வை அர்த்தமற்றது என்றாலும், வெகுஜனப் பார்வையில் இது இயல்பானது. தமிழ் நிலத்துக்கு வெளியே சோழர்கள் ஆண்ட பகுதிகளில் அவர்களைப் பற்றிய பார்வை எப்படி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? மலையாளச் சமூகத்தோடு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர் என்பதோடு, தெலுங்கு, கன்னடச் சமூகங்கள் சார்ந்த கவனமும் கொண்டவராக இதுபற்றிப் பேசலாமா?

நம்மூரில் தர்க்கபூர்வமாக வரலாறு பேசுபவர்கள் குறைவு. அனைவரும் ஏதோ ஒரு பற்றில் இருந்துதான் வரலாற்றைப் பேசுகிறார்கள். அது உண்மையான வரலாற்றாய்வு அல்ல. ஒரு முழுமையான பார்வையுடன் பற்றின்றி வரலாற்றை ஆய்வுசெய்வதே ஆய்வு முறைமை. பொதுவாகத் தன்னுடைய மண்ணைச் சாராத ஆட்சியாளர்களை எந்தச் சமுகமும் பொதுவில் ஆக்கிரமிப்பாளர்களாகவே கருதும் என்றாலும், தென்னகத்தைப் பொறுத்த அளவில் பொதுவாகவே பெரிய அளவில் இப்படியான குரோத உணர்வு கிடையாது. அதற்குக் காரணம் முன்னோடி வரலாற்றாய்வாளர்களிடமிருந்த வரலாற்றுணர்வுதான்.

கேரளத்தை எடுத்துக்கொண்டால், இரணியசிங்கநல்லூர் என்னும் இரணியல் நகரை ஆட்சி செய்த சேர மன்னர் பாஸ்கர ரவி வர்மா ராஜராஜனால் கொல்லப்படுகிறார். அநபாயன் என்னும் மூன்றாம் குலோத்துங்கன் படையெடுப்பில் கோட்டாறு புகையால் மூடியது என்று சொல்லும் அளவுக்குப் போர் நடந்ததாக ஒரு கல்வெட்டுக் குறிப்பு சொல்கிறது. ஆனால், இன்றைக்கு அது அன்றைய யதார்த்தம், அவ்வளவுதான். கேரள வரலாற்று ஆய்வாளர்கள், ஓரளவு மார்க்ஸிய அணுகுமுறை கொண்டவர்கள் என்பதால், வரலாற்று நோக்கில் வரலாற்றை அணுகும் தன்மை அவர்களிடம் உண்டு. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சோழர்களைச் சொல்லவில்லை. 

சோழர்கள் படையெடுத்துதானே கேரளத்தைப் பிடித்தார்கள் என்று ஒருவர் கேட்டதற்கு பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார், ‘சோழன் படையெடுத்து வந்தபோது என்ன அழிவைச் செய்தானோ, அதே அழிவைத்தான் திருவனந்தபுரத்துக்காரன் கேரளத்திலேயே இருக்கும் காயங்குளத்துக்குப் படையெடுத்தபோதும் செய்திருக்கிறான். திருவிதாங்கூர் ராஜா கிளம்பிப் போய் கொல்லம் ராஜாவை அடித்திருக்கிறான். அவன் ஆக்கிரமிப்பாளன் இல்லையா? ஒட்டுமொத்தமாகத்தான் ஓர் ஆட்சியாளனை மதிப்பிட வேண்டும். காலம் கடந்து நிற்கும் நன்மையை அவன் சமூகத்துக்குச் செய்திருக்கிறானா? அதுதான் கேள்வி. அப்படிப் பார்த்தால் சோழன் செய்திருக்கிறான்.’

சோழர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் எல்லாம் தங்களுடைய நிர்வாக முறையையும் கொண்டுசென்றிருக்கின்றனர். கேரளத்திலும் அதைச் செய்தார்கள். கேரளத்தில் ‘நாடு’ என்னும் அமைப்பை உருவாக்கியது சோழர்கள்தான். கேரளத்தில் 56 நாடுகளை உருவாக்கினார்கள். அது ஒருவகையிலான அதிகாரப் பகிர்வு. அதிலொன்றுதான் வேணாடு. அந்த 56 நாடுகளின் தலைவர்கள் ‘நாடுவாழிகள்’ என்னும் பெயரில் பின்னால் குறுநில மன்னர்கள் ஆனார்கள். சோழர் கால நிலப்பகுப்பும் ஆட்சிமுறையும் சுதந்திரம் கிடைக்கும் வரை இருந்தது. அந்த வகையில் சோழர்களின் தொடர்ச்சி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தது எனலாம். 

சோழர்கள் தமிழகத்தைப் போலவே இங்கும் நல்ல பாசனக் கட்டமைப்பையும் நீர் நிர்வாகத்தையும் உருவாக்கினார்கள். கேரளத்தில் மழை அதிகம் பெய்யும். அதனால், ஏரிகளுக்கான தேவை குறைவு. அதேசமயம், மழை நீரைச் சேகரிக்கும் அமைப்பு இல்லாவிட்டால் தண்ணீர் 45 நிமிடங்களில் கடலுக்குப் போய்விடும். அப்படி ஒரு மலைசார் நில அமைப்பு கேரளத்தினுடையது. அதனால் மலையடிவாரப் பகுதிகளை ஒட்டி ஏராளமான குளங்களை வெட்டியுள்ளனர். சோழர்கள் கட்டிய கோயில்களே கேரளத்தில் இன்னமும் மிகுதி. அவர்கள் உருவாக்கிய ஏரிகளும் சாலைகளும் இன்றைய கேரளத்துக்குச் செல்வங்கள். இந்த விஷயங்கள் எல்லாம் அவற்றுக்கு உரிய தன்மையோடுதான் கேரளத்தில் அணுகப்படுகின்றன.

தெலுங்கு, கன்னட சமூகங்களிலும் இதே தன்மையைத்தான் பார்க்கிறேன். அங்கும் சோழர்கள் ஆண்ட பகுதிகளில் பாசனம், சாலைகள் ஆகியவற்றில் அவர்களின் பங்களிப்புகள் இன்றைக்கும் இருக்கின்றன. எல்லா இடங்களிலுமே ஒரு சின்னக் கூட்டம் அடிப்படைவாதம் பேசிக்கொண்டும் வெறுப்பைப் பரப்பிக்கொண்டும் இருக்கும். அவர்களைத் தவிர்த்துவிட்டால் சோழர்கள் மீது மோசமான சித்திரம் பொதுவாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு வரலாற்றுக் களங்களுக்கும் சுற்றுகிறீர்கள். வரலாற்றைப் புத்தகங்களில் வாசிப்பதற்கு அப்பாற்பட்டு, இப்படி வரலாற்றோடு தொடர்புடைய ஊர்களைச் சென்று பார்ப்பதன் வழி நமக்கு ஒரு புரிதல் உண்டாகும். பேரரசுகள் உருவாக்கம் தொடர்பில் நீங்கள் அப்படி அடைந்த புரிதல் என்ன?

வரலாற்றை நேரில் சென்று பார்ப்பது உண்மையான புரிதலை அளிக்கும். மகாபாரதம் சொல்லும் தொன்மையான நாடுகளை  எல்லாம் நேரில் போய் பார்த்தால் ஒவ்வொன்றும் ஓர் ஊராட்சி அளவில்தான் இருக்கிறது. கங்கையின் கரையில் இருக்கும் குட்டி, குட்டி நகர நாடுகள்தான் அவை. அதாவது ஒரு நகரம்தான் ஒரு நாடு; அந்நகரம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செல்வாக்கு செலுத்தும்போது நாடு என்று ஆகிவிடுகிறது.

நமக்குத் தெரிய இந்தியத் துணைக் கண்டத்தில் முதலில் தோன்றும் பேரரசு மெளரியப் பேரரசு. அது இப்படிப்பட்ட சின்னச் சின்ன நாடுகளை ஒரு பொதுவான புரிதலின்கீழ் ஒருங்கிணைத்து ஒரு மைய அரசை உருவாக்கியது. அந்த வகையான தொகுப்புமுறை அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும். பேரரசுகள் உருவாக்கத்தில் இரு படிநிலைகள் இருப்பதை உணர முடிகிறது. மௌரியப் பேரரசு போன்ற முதல் படிநிலைப் பேரரசுகள் நாடுகளுடைய கூட்டரசாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

கூட்டரசு என்று எப்படிச் சொல்கிறேன் என்றால், முற்றிலும் தனித்த நாடுகள்; ஒரு சடங்கு அல்லது சில சம்பிரதாயங்களால் மட்டுமே ஒன்றிணைந்திருப்பது. அதாவது, இவை ஒன்றுக்கு ஒன்று போர் புரியாது, சுற்றியிருக்கும் ஊர்களின் வணிக வழிகள் தொடர்பாக இணக்கமான ஓர் ஏற்பாடு… அப்படித்தான் இருந்திருக்க முடியும். இல்லாவிட்டால், இன்றைக்கு இந்தப் பக்கம் ஆஃப்கன் வரை, அந்தப் பக்கம் வங்கம் வரை நீண்டிருக்கும் அவ்வளவு நீளமான பகுதியை அசோகரால் ஆண்டிருக்க முடியுமா என்ன? அது சாத்தியமே இல்லை.

அதற்கு அடுத்த படிநிலை என்பது அரசனுக்கு முழு முற்றான அதிகாரமும், நிலையான பெரிய ராணுவமும் கொண்ட பேரரசு... அந்த வகை பேரரசுகளில் ஒன்றாகச் சோழப் பேரரசைச் சொல்லலாம். எல்லா ஊர்களையும் சுற்றி வந்த பிறகு சோழப் பேரரசு எனக்கு ஓர் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், ஒரு பேரரசு தமிழகத்தில் உருவாவதில் நிறைய சவால்கள் இருந்திருக்கும். முதன்மையான சிக்கல், மக்கள்தொகை. அன்றைய பிற இந்தியப் பேரரசுகள் எல்லாம் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட பிராந்தியங்களில்தான் உருவெடுத்தன. வடக்கே பார்த்தால், கங்கைப் படுகை, தெற்கே பார்த்தால் கிருஷ்ணா - கோதாவரிப் படுகை. இந்த இரண்டையும் ஒட்டியே பேரரசுகள் உருவாகின. மௌரியப் பேரரசு கங்கைச் சமவெளியில் என்றால், சதகர்ணிகள் கிருஷ்ணா கோதாவரிப் படுகையில். மக்கள்தொகை அடர்த்திதான் முக்கியமான காரணம். இங்கே தமிழகத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்தது. அதனாலேயே வெளியே இருந்து ஏராளமான படையெடுப்புகளைச் சோழர் காலத்துக்கு முன்பும் பின்பும் தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் தமிழ் நிலம் சுதந்திரமாக இருந்த காலமே குறைவு. முற்றதிகாரத்துடன் பேரரசாக இருந்த காலம் சோழர்களின் காலம்தான்!

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சோழர்கள் இன்று

சமஸ் 16 May 2023

இன்றைக்கு பேரரசு எனும் பார்வையே ஒதுக்கப்பட வேண்டியது என்ற ஜனநாயக மனநிலையை  நாம் வந்தடைந்திருக்கிறோம். ஆனால், வரலாற்றின் போக்கில் கடந்த காலத்தில் பேரரசு என்ற ஒன்றுக்கான நியாயம் எங்கிருந்து உருவாகியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

உலக வரலாற்றைப் பார்க்கும்போது, பழங்குடிப் பண்பாட்டிலிருந்து ஒரு சமூகம் மேலே ஏறி வருவதற்கு இப்படிப் பேரரசு தோன்றுவது அத்தியாவசியமான ஒன்றாகத் தோன்றுகிறது. பழங்குடிப் பண்பாட்டில் இருந்து குட்டிக்குட்டி அரசாட்சிகள் உருவாகின்றன. அவை அன்றைய சின்ன நாடுகள் ஆகின்றன. அந்த ஒவ்வொரு நாடும் இன்னொன்றுடன் சதா போர்களில் ஈடுபட்டிருந்தவை. இதை எந்தப் பழங்குடிப் பண்பாட்டிலும் நாம் பார்க்கலாம். தமிழ்ச் சமூகத்திலும் போர்கள் மலிந்திருந்ததை சங்க இலக்கியங்கள் விரிவாகச் சொல்கின்றன. மக்களின் ஆற்றலிலும் செல்வத்திலும் பெரும் பகுதி போர்களில்தான் அழிந்திருக்கிறது. வணிகம் வளர முடியாது. விவசாயம் வளர முடியாது. உபரியே சேகரமாக முடியாது.

சின்ன நாடுகளில் ஒன்று மற்றவற்றை வென்று அல்லது தொகுத்துக்கொண்டு பேரரசு ஆகும்போது அந்த அதிகாரத்தின் எல்லைக்குள் போர்கள் தவிர்க்கப்படுகின்றன. அதாவது, பேரரசுகளுடைய காலகட்டத்தில் போர்கள் பெரும்பாலும் தமிழ் நிலத்துக்குள் நடக்கவில்லை. வெளிநிலங்களைச் சேர்ந்தவர்களோடு நடந்தன. எல்லையில்தான் போர். உள்நாட்டில் அமைதி. விளைவாக ஒட்டுமொத்தச் சமூகமும் உற்பத்தியில் ஈடுபடும் சூழல் உருவாகிறது. இப்படிக் கூட்டான முழு உழைப்பின் வழியாகவே உற்பத்தி பெருகி, உபரி உருவாகிறது. பெரிய நிதி உருவாகும்போதே அதைக் கொண்டு அணைக்கட்டுகள், சாலைகள், ஏரிகள், கோயில்கள் போன்ற பெரும் மக்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது. இப்படித்தான் பேரரசின் பலமும் செழிப்பான பண்பாடும் உருவாகின்றன. அதாவது, பேரரசுகளின் காலத்தில்தான் பழங்குடிச் சமூகம் நிலவுடைமைச் சமூகமாக ஆகிறது. இது ஒரு பெரும் சமூகப் பாய்ச்சல்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

சோழர்கள் இன்று: முரசொலி சொல்லும் செய்தி என்ன?

15 May 2023

நிலவுடைமைச் சமூகமாக ஒரு சமூகம் இப்படி உருவெடுக்கும்போது ஏற்படும் மாற்றங்கள், முந்தைய பழங்குடி வாழ்க்கையின் எளிய சமத்துவக் கூறுகளை அழித்துவிடுகின்றன அல்லவா?

ஆமாம். அதுவும் வரலாறுதானே! கறாரான தொழில் பிரிவினைகளும் அந்தத் தொழில் பிரிவினைகளை ஒட்டிச் சமூக வரையறைகளும் உருவாகும். சமூகத்தில் ஏற்கெனவே உள்ள படிநிலைகள் மேலும் இறுக்கம் ஆகும். இப்படித்தான் அடிமை முறை உருவாகிறது. இங்கே சாதியமைப்பு உருவாகிறது. ஆனால், அதன் வழியாகத்தான் உற்பத்தி உபரியும் உருவாகிறது. அந்த உபரியே நாகரிக வளர்ச்சிக்குக் காரணமாகவும் அமைகிறது. உலகம் முழுக்க ஒரு விஷயத்தை நாம் பார்க்கலாம். எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச் சமூகம் உருவாகி, உற்பத்தி உபரி திரட்டப்பட்டு, நாகரிகமும் பண்பாடும் வளர்ந்திருக்கிறது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக் கொடுமையான வன்முறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டல்களும் நடந்திருக்கின்றன. சுரண்டல் இல்லாவிட்டால் உபரி இல்லை. உபரி இல்லாவிட்டால் நாகரிகம் இல்லை. இந்த முரண்பாடு உலகம் எங்கும் உண்டு. 

வரலாற்றில் வரிசையாக ஒரு கதவைத் திறந்தால்தான் அடுத்த கதவு நோக்கிச் செல்ல முடிந்திருக்கிறது. பழங்குடியினச் சமூக முறை, நிலவுடமைச் சமூக முறை, முதலாளித்துவச் சமூக முறை; மூன்றாவது கதவில் நுழைந்த பிறகுதான் நாம் ஜனநாயகம், சமூக நீதி எல்லாம் பேசுகிறோம். ஆனால், இப்போதும் வன்முறைகள், சுரண்டல்கள், ஏற்றத்தாழ்வுகளோடுதான் இருக்கிறோம். இங்கிருந்து நாம் அடுத்த கட்டத்துக்குப் போகலாம்.

சோழப் பேரரசர் ராஜராஜனுடைய காலகட்டத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? 

ராஜராஜனை நாம் இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடக் கூடாது. அவர் ஆட்சி செய்த அதே பத்தாம் நூற்றாண்டு சீனா, ஐரோப்பாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் அல்லது ஜப்பான், அரேபியாவுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். எல்லா இடங்களிலும் ரத்த ஆறுதான் ஓடியிருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் யதார்த்தம் அது. பல சிற்றரசுகளை அழித்துதான் ஒரு பேரரசு உருவாகிறது. ஒப்பீட்டு அளவில், ராஜராஜன்தான் எனக்கு மேம்பட்ட அரசராகத் தெரிகிறார். ஏனென்றால், இங்கு எல்லோரையும் அவர் அழிக்கவில்லை. கூடுமானவரை அணைக்கிறார். ஒருங்கிணைத்துக்கொள்கிறார். தமிழர்களை மட்டுமல்ல; தமிழ் நிலத்துக்கு வெளியில் அவர் ஆட்சிப் பரப்பு நீண்ட பகுதிகளில் உள்ளவர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். திருமண உறவுகளை உண்டாக்குகிறார். இதெல்லாம் முடியாதபோதுதான் போர்கள் நடக்கின்றன. 

பொதுவாகவே இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய பண்பைப் பார்க்க முடிகிறது. ‘குலசேகரன்’ என்ற பட்டம் பல மன்னர்களுக்கு இங்கே இருக்கிறது. ‘குலங்களின் சேகரமாக அமைந்தவன், அதாவது குலங்களைத் தொகுத்தவன்’ என்று பொருள். குட்டி அரசுகளை அழித்தொழிக்காமல் சமரசம் மூலமே அவர்களை இணைத்து ஒரு மைய அதிகாரத்தை உருவாக்கும் உத்தியைக் கையாளுதல். திருமண உறவு இதில் ஒரு முக்கியமான வழிமுறை. சோழர்கள் தோற்றாலும் சரி, வென்றாலும் சரி; மணவுறவை ஏற்படுத்திக்கொள்ளத் தயங்கியதே இல்லை.

பேரரசுகள் உருவாவதற்கு இணைப்பு சக்தியாக அமையும் மூன்று வழிமுறைகளைப் பார்க்க முடிகிறது. ஒன்று, இன அடையாளம்; உதாரணம் மங்கோலிய இனப் பேரரசு. இரண்டு, மத அடையாளம்; உதாரணம், முகலாயப் பேரரசு. மூன்று, பண்பாட்டு அடையாளம்; சோழப் பேரரசை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ராஜராஜன் தமிழ்ப் பண்பாடு வழியாக தன்னுடைய பேரரசை ஒருங்கிணைத்தார். மொழி, இலக்கியம், கலை, சமயம் ஆகியவையே சோழப் பேரரசின் அடிப்படை. இன்றைக்கும் சோழர்கள் உருவாக்கிய பண்பாட்டைத்தான் நாம் தமிழ்ப் பண்பாடு என்று சொல்கிறோம்.

ஹானிபல், செங்கிஸ்கான், நெப்போலியன், தைமூர் போன்றெல்லாம் ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் மனித குலத்துக்கு இழைத்துவிடவில்லை. உலகமெங்கும் அவர்களையே கொண்டாடுகிறார்கள். நாம் நமது மாமன்னனைக் கொண்டாடுவதில் எந்தப் பிழையும் இல்லை.

சோழப் பேரரசு என்றதும், எதெல்லாம் நம் நினைவுக்கு உடனே வருகின்றன? சோழர்களுடைய நீர்க் கட்டமைப்புகள், கோயில்கள், அதிகாரப் பகிர்வு. குண்டூருக்குப் போனாலும், திருவனந்தபுரத்துக்குப் போனாலும் சோழர்களின் நீர்க் கட்டமைப்புகளைப் பார்க்க முடியும்; தமிழ் நிலத்தையே எடுத்துக்கொண்டால் இன்றைய சென்னையில் ஆரம்பித்துக் கன்னியாகுமரி வரை சோழர்களின் நீர்க் கட்டமைப்புகள் இருக்கின்றன. அப்படியென்றால், அவர்கள் ஆக்கபூர்வமான பணிகளில் பேதம் பார்க்கவில்லை என்பது தெளிவு. பொதுவாகச் சோழ அரசர்கள் எல்லோரிடமும் இந்தத் தன்மை இருந்தது.

தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி, ராஜாதித்த சோழனால் வெட்டப்பட்டது. வீரநாராயணமங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் 20 கி.மீ. நீளமும் 5 கி.மீ அகலமும் கொண்டதாக இருந்திருக்கிறது. அதைத் தூர்வாருவதற்கே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். ஆனால், சென்னை வரைக்கும் அந்த வீராணம் ஏரியைக் குடிநீருக்கு நம்பி இருக்கிறோம். இன்றைக்கு அப்படி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றால், பல்லாயிரம் கோடிகள் வேண்டும். அப்படியென்றால், அது எப்பேர்ப்பட்ட வைப்பு நிதி? தமிழகத்தில் சோழர் காலத்தில் மட்டும் இப்படி 5,000 ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம்; சில லட்சம் குளங்கள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப் பெரிய பாரம்பரியச் சொத்துகள் அல்லவா இவை? ஆயிரம் வருடங்களாக நாம் குடிக்கும் தண்ணீரில், சாப்பிடும் சோற்றில் சோழர்கள் பங்கு இருக்கிறது. 

தமிழகத்தின் வறண்ட நிலப் பகுதிகளில் நீர்நிலைகள் உருவாக்கப்படுகின்றன. நிறைய வேளாண் நிலங்கள் உருவாக்கப்படுகின்றன. சந்தைகளும் சாலைகளும் சாலையோரம் கோயில்களும் கோயில்களைச் சுற்றி வீதிகளும் ஊர்களும் உருவாகின்றன. இப்படி உருவாகும்போது தமிழகத்தின் சமூகங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்பையும் கொண்டுவருகிறார் ராஜராஜன். கோயில்களை அதற்கான இணைப்புக் கண்ணியாகப் பயன்படுத்துகிறார். ஒரே ஆகம முறை, ஒரே நிர்வாக முறைதான் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கும், தஞ்சாவூரில் இருக்கும் சின்னஞ்சிறு கோயிலுக்கும் என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் சொல்கிறார். அதற்காக ஏதோ ராஜராஜன் புதிதாக ஒரு சமயத்தையோ, வழிபாட்டு முறையையோ உருவாக்கிவிட்டார் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, இங்கே பல சமூகங்களிலும் இருக்கும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகளைத் தொகுக்கிறார் என்று சொல்லலாம். கோயில்கள் அரசு அலுவல்கள் நடக்கும் இடங்களாகவும், கலைப் பண்பாட்டு மையங்களாகவும் செயல்படுகின்றன. எல்லாவற்றிலும் கோயிலுக்குப் பங்கு இருக்கிறது. 

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

நிர்வாகம் எல்லாவற்றிலும் அதிகாரப் பரவலாக்கலைக் கொண்டுவருகிறார். சோழர் காலகட்டத்தின் முக்கியமான சாதனையே இந்த நிர்வாக அமைப்புதான். வட்டார அளவில்தான் நிதி செலவிடப்பட்டது; வட்டார அளவில்தான் நீதி வழங்கப்பட்டது.

சரி, ராஜராஜன் காலகட்டத்தில் கொடுமைகளே இல்லையா என்றால், ராஜராஜன் காலத்தில்தான் தமிழகத்தில் அடிமை முறை உறுதிப்பட்டது; சாதியம் இறுகியது; அந்தக் காலகட்டத்தில் உள்ள நீதிமுறை குலம் நோக்கியே அளிக்கப்பட்டிருக்கும்; வரி வசூலில் வன்முறை நடந்திருக்கும். நாம் நினைவில் கொள்ள வேண்டியது, இவை அத்தனையும் உலகெங்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகள். இந்தக் காலகட்டத்தை உடைத்துத் தாண்டித்தான் அடுத்து நாம் நவீன காலகட்டத்துக்குள் புக முடிந்தது!

இன்றைய மதிப்பீடுகளைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சமூகத்தையும் ஆட்சியையும் நாம் மதிப்பிடக் கூடாது. அடிமை முறையை நீங்கள் குறை கூறுவீர்கள் என்றால், நில அடிமை முறை இல்லாமல் நிலப்பிரபுத்துவக் காலத்தில் எங்குமே விவசாயம் நடந்திருக்க முடியாது என்பதே உண்மை. நூறு பேர் விவசாயம் செய்து, நூறு பேர் சாப்பிட்டால் விவசாயம் நஷ்டம். சிலர் அடிமைகளான பின்புதான் விவசாயம் லாபம் ஆனது. முதலில் மிருகம் அடிமை. அடுத்து, மனிதர்களும் அடிமையானபோதுதான் பெரிய அளவில் விவசாயம் நடக்கிறது. இது சுரண்டல் இல்லையா? மார்க்ஸிய நோக்கில், ஆமாம் சுரண்டல்தான். ஆனால், சுரண்டப்படாமல் உபரி கிடையாது. இந்த உபரி இல்லாமல் நாம் இன்று பெருமை கொள்ளும் கோயில்கள், ஏரிகள், சாலைகள், சந்தைகள், விளைநிலங்கள், நகரங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் இயந்திரமயமாக்கல்தான் மனிதர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைத்தனத்திலிருந்து மீட்டது, மீட்கிறது. ஆனால், சுரண்டல் எப்போதும் நடக்கிறது. இன்று நாம் குருதியற்ற தூய சமூகத்திலா அமர்ந்திருக்கிறோம்? நாம் இருக்கும் கான்கிரீட் வீடுகள், உடுத்தும் உடைகள், உண்ணும் உணவு எல்லாவற்றுக்குப் பின்னணியிலும் முகமற்ற தொழிலாளர்களுடைய சல்லிசான உழைப்பு இல்லையா?

நான் ராஜராஜனை வரலாற்றின் போக்கில் வைத்தே புரிந்துகொள்கிறேன், மதிப்பிடுகிறேன். ஒட்டுமொத்த மன்னராட்சிக் காலத்திலும் அவர் உருவாக்கிய பேரரசின் காலத்தில்தான் தமிழ் நிலம் கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர்கள் குறைந்து அமைதியாக இருந்தது. சோழர்கள் வீழ்ச்சி அடைந்த பிறகு, அடுத்த முந்நூறாண்டுகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட அந்நியப் படையெடுப்புகள் நடந்து, தமிழகத்தில் பெரும் அழிவும் பஞ்சங்களும் வந்தன. பல்லாயிரக்கணக்கானோர் போர்களிலும் பஞ்சங்களிலும் இறந்தனர்; அகதிகளாக வெளியேறினர். 

சோழர்கள் நம்மைக் காத்தனர். உற்பத்தி, மொழி, கலைகள் அனைத்தும் உச்சம் சென்றன. முக்கியமாக, சமய நல்லிணக்கம். சோழர்கள் என்னவோ சைவர்கள்தான். ஆனால், சாக்த சமயம் பெருவளர்ச்சி அடைந்தது சோழர் காலத்தில்தான். குறைவான அளவுக்குத்தான் இருந்தார்கள் என்றாலும், இஸ்லாமியர்கள் சோழர்களால் பேணப்பட்ட வரலாறும் இருக்கிறது. சைவத்துக்கு நேர்ப் போட்டி வைணவம். சோழர் காலத்தில்தான் தமிழர்களின் மகத்தான வைணவ இலக்கியமான கம்பராமாயணம் உருவாகி இருக்கிறது. வைணவர்களுக்கான ராஜராஜப் பெரும்பள்ளி, ராஜேந்திரப் பெரும்பள்ளி இரண்டும் நிறுவப்பட்டன. ராஜராஜன் போன்ற ஒரு மன்னர் பத்தாம் நூற்றாண்டில் உலகிலேயே கிடையாது. நமக்கு இன்றும் பயன்படும் பணிகளை மேற்கொண்ட சோழர் காலத்தை மன்னாரட்சிக் காலத்தைப் பொறுத்த அளவில் பொற்காலம் என்று சொல்வதில் எந்தப் பிழையும் இல்லை. 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

சமகாலத்தில் சோழர்கள் மீதான பெரும் குற்றச்சாட்டு, ‘சோழர் காலத்தில்தான் பிராமணியம் உச்சத்துக்குச் சென்றது. பிராமணர்களுக்கான ஏராளமான நிலங்கள் வழங்கப்பட்டன; பெரும் செல்வாக்கோடு அவர்கள் இருந்தார்கள்; சம்ஸ்கிருதத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்தது’ என்பது ஆகும். அந்தக் காலகட்டத்தின் சூழல் என்னவாக இருந்தது என்பதைப் பல ஆய்வாளர்கள் பேசிவிட்டாலும், தொடர்ந்து இப்படி ஒரு பேச்சின் வழி சோழர்களை நிராகரிப்பதும் நடக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதை அவரவருடைய இன்றைய அரசியலுக்கானதாகவே பார்க்கிறேன். சோழர் காலத்தில் ஏன் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் அதிகமானது என்று கேள்வி எழுப்புபவர்கள் உலகம் முழுக்க நிலவுடைமைச் சமூகங்களில் பூசகர்கள் எத்தகைய செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். நிலவுடைமைச் சமூகத்தைக் கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட பூசகர்கள் இன்றியமையாதவர்கள். அப்படிப் பார்க்கையில் பூசகர்கள் குறைவான அதிகாரத்துடனேயே சோழர் காலத்தில் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்; ஏனென்றால், இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்ததோடு அடுத்த ஐந்நூறு ஆண்டுகளுக்கும் அந்த நிலையிலேயே முடங்கிக் கிடந்தது.

மார்க்ஸிய அறிஞர் கோசாம்பியைப் படித்தால், அன்றைய காலகட்ட அரசில் மதத்தின் பங்கு தொடர்பில் ஒரு தெளிவு நமக்குக் கிடைத்துவிடும். செங்கற்கள் எல்லாவற்றையும் இணைக்கும் சிமென்ட் போன்ற வேலையைத்தான் அன்றைக்கு சமயம் பார்த்திருக்கிறது. சோழர் காலகட்டத்தில் இந்த ஒருங்கிணைப்பானது சைவ, வைணவ சமயங்களினால் நடந்தது. அகச் சமயம், புறச் சமயம் என்று ஆறு, ஆறாகப் பன்னிரண்டு வகைகளாகச் சைவம் அதற்கு முன்பு இருந்தது. சோழர் காலத்தில் அத்தனையும் இணைந்து சைவப் பெருசமயம் உருவானது. ராமாநுஜர் காலத்திற்கு முன்பு வைணவத்தில் இரு மரபுகள் இருந்தன. பின்னாளில் ராமாநுஜர் ஒருங்கிணைத்தார். சோழர் காலத்தில்தான் வைணவப் பெருமதமும் உருவானது. படைகளால் வெல்ல முடியாதவர்களைத் தத்துவத்தால் ஒன்றிணைக்க முடியும். அன்றைக்கு இருந்த தத்துவம் சமய வழியிலானதுதான். அப்படியானால் ஒவ்வொரு சமூகத்தையும் உள்ளிழுத்து உள்ளணைக்க எல்லாச் சமூகங்களின் வழிபாட்டையும் தெய்வங்களையும் உள்ளே இழுத்துப் போட வேண்டும். இப்படித்தான் இணைப்பு நடந்திருக்கிறது.

இந்த இடத்தில் பிராமணர்களின் பங்கு என்ன? அதையும் கோசாம்பி சொல்கிறார். சடங்குகளையும் தர்ம சாஸ்திரங்களையும் பிராமணர்கள் செய்கிறார்கள். வெவ்வேறு வழிபாட்டு வழக்கங்களைக் கொண்ட மக்களை இவற்றின் மூலம் ஒன்றாகத் திரட்ட முடிந்தது. அடுத்தது, சோதிடம். பருவநிலையைக் கணித்தல். தலைமுறை தலைமுறையாகப் பிராமணர்கள் இதைச் செய்தனர். கும்பகோணம் பஞ்சாங்கத்தை வைத்து 1,500 வருட மழைக் கணக்கைச் சொல்ல முடியும் என்கிறார்கள். அப்படி ஒருவர் விவசாயத்துக்குத் தேவை. எப்படிக் கொல்லர்கள், ஆசாரிகள் தேவையோ அப்படித்தான் இந்த அமைப்புக்கு பிராமணர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பிராமணர்கள் இந்த வேலைகளில் மட்டும்தான் அப்போது ஈடுபட்டிருந்தார்கள். ஆகையால், அவர்களைப் பேணுவது அரசர்களின் கடமையாகக் கருதப்பட்டது. அப்படித்தான் அவர்களுக்கு நிலங்களும் சலுகைகளும் அளிக்கப்பட்டன.

சரி, பிராமணர்களுக்கு மட்டும்தான் இப்படிக் கொடுக்கப்பட்டதா? ஆய்வாளர்கள் நொபோரு கராஷிமா, பர்ட்டன் ஸ்டெய்ன் போன்றவர்கள் இதைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். போர் வீரர்களில் தொடங்கி கலைஞர்கள் வரை யாரெல்லாம் அரசர்களால் பேணப்பட வேண்டியர்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் கொடைகள் அளிக்கப்பட்டன. சோழர் காலத்தில்தான் தமிழகத்தில் வேளாள ஆதிக்கமும் வலுவாக நிலைநாட்டப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நிலங்களை வேளாண்மைக்குக் கொண்டுவரும்போதெல்லாம் நில நிர்வாகம் செய்யும் சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்தது. புதிய நில உடைமையாளர்கள் உருவாகி அவர்கள் வேளாளர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் வந்தபடியே இருந்தார்கள். தமிழகத்தின் இன்றைய நிலவுடைமைச் சாதிகள் பலவும் சோழர் காலத்தில் எழுச்சி பெற்றவைதான். ஏனென்றால், அவ்வளவு நிலமும் அப்போதுதான் வேளாண் நிலமாக உருவெடுத்தது. 

கிட்டத்தட்ட பிராமணர்கள் செய்த இதே வேலைகளை அவர்களுக்கு நிகராகவே பௌத்த, சமணத் துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். ஆனால், பேரரசுகளை உருவாக்கவும் நீட்டிக்கவும் அவை போதுமான அளவுக்கு உதவவில்லை என்று அரசர்கள் கருதினார்கள். முக்கியமாக, பல்வேறு நாட்டார் வழிபாட்டு முறைகளையும் பௌத்தத்தாலோ, சமணத்தாலோ உள்ளிழுக்க முடியவில்லை; பிராமணியத்தால் அது முடிந்தது. பிராமணர்கள் செல்வாக்குப் பெற இதுவும் காரணமாக இருந்தது.

பிராமணர்கள் செல்வாக்கு பெற்றபோது சம்ஸ்கிருதமும் செல்வாக்கு பெற்றது; இணைப்புமொழியாக! அதற்கும் என்ன காரணம் என்றால், சோழர்களுடைய ஆட்சிப் பரப்பும் நிர்வாகத் தொடர்புகளும் பல மொழி எல்லைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆகையால், தங்களுடைய ஆட்சிப் பரப்புக்கு வெளியே சம்ஸ்கிருதமும் சோழர்களுக்குத் தேவைப்படுகிறது; அதற்கும் பிராமணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், உள்ளூரில் தமிழ்தான் கோலோச்சுகிறது. சோழர் காலத்தில்தான் தமிழ் மொழி வளர்ச்சியில் பெரும் தாவல்கள் நடந்தன. பல சாதனைகள் நிகழ்ந்தன.

இன்றைக்கு ஆங்கிலம் ஏன் நமக்குத் தேவைப்படுகிறது; சென்னையைத் தாண்டி வெளியே செல்லும்போது நமக்குள் ஆங்கிலம் பேசுவோருக்கு என்ன முக்கியத்துவம் தருகிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டால் சோழர் காலச் சூழல் விளங்கிவிடும். பிற்பாடு பிரிட்டிஷார் காலத்தில் அரசுப் பணிகளில் எல்லாத் துறைகளிலும் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துக்கொண்டு பிராமணர்கள் உண்டாக்கிய ஆதிக்கமும் அதற்கு எதிரான போராட்டங்களும் வேறு; இந்தச் சுமையை அன்றைய சோழர்கள், பிராமணர்கள் மீது திணிக்க முடியாது. நாம் இன்றைக்கு ஒரு ஜனநாயகக் கட்டமைப்புக்குள் வந்திருக்கிறோம். சமத்துவம் சார்ந்து சிந்திக்கிறோம். இது நல்லது. ஆனால், கடந்த காலத்துக்குள் நுழைந்து இன்றைய மதிப்பீடுகளால் தீர்ப்பளிக்க முடியாது. அன்றைய வரலாற்றை அன்றைய உலகளாவிய சூழலோடுதான் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சோழர் காலத்தில் கலைகள் உச்சத்துக்குச் செல்கின்றன. ஒரு படைப்பாளியாக உங்களை ஈர்க்கும் கலைப் படைப்பு எது?

இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், நிகழ்த்துக் கலை இவ்வளவும் சேர்ந்துதான் மேலே செல்கின்றன. இந்தப் படைப்புகளின் உச்சம் என்று ஆடவல்லான் (நடராஜர்) சிலையைச் சொல்வேன். ஓப்ரா எப்படிப் பல கலை வடிவங்களின் கூட்டுச் சங்கமமோ அப்படித்தான் எனக்கு ஆடவல்லானுடைய சிலை தோன்றும். அது சிற்பக் கலையை மட்டும் வெளிப்படுத்தவில்லை; அதில் ஒரு நடனம் இருக்கிறது; அந்த நடனத்தின் பின் ஓர் இசை இருக்கிறது; அந்த நடனத்தையே ஒரு பிரபஞ்ச நடனமாக உருவகித்துக் காட்டும் ஒரு தத்துவம் இருக்கிறது; அதன் பின்னே ஆழ்ந்த ஆன்மிகம் இருக்கிறது; இவ்வளவையும் சிந்திக்கும் மொழி இருக்கிறது. தமிழ்தான் அதன் அடிநாதம்!

- ‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து... 

 

சோழர்கள் இன்று 
தொகுப்பாசிரியர்: சமஸ் 
விலை: 500 
நூலை வாங்குவதற்கான இணைப்பு: https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view

செல்பேசி எண்: 1800 425 7700

(காலை 7 முதல் இரவு 7 மணி வரையில் தொடர்புகொள்ளவும்).

ஜிபே மூலம் ரூ.500 செலுத்தி, முகவரி அனுப்பி, கூரியர் வழி நூலைப் பெறுவதற்கான வாட்ஸப் எண்: 75500 09565


க்யூஆர் கோட்:

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   9 months ago

அப்பேர்ப்பட்ட ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலுக்குள் நுழைவதற்கே தயங்கும் இன்றைய தலைவர்களின் ஆளுமையை என்னவென்று சொல்வது?

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நடராசன்தமிழ் முனைஉத்தரப் பிரதேச வளர்ச்சிபிரேன் சிங்பொருளாதாரக் கொள்கைகள்எகிறி அடி அணுகுமுறைசாதிவியூக அறிக்கைஇளமையில் வழுக்கை ஏன்?பாலியல் சமன்பாடுபிறந்த நாள்உமர் காலித்மூன்றிலக்க சிவிவி எண்உஷா மேத்தாதிராவிடம்உருவாக்கம்வறிய மாநிலங்கள்ஹார்ட் அட்டாக்சமஸ் நயன்தாரா குஹாஃபெட்எக்ஸ்தேசிய சட்டமன்றம்வெளியேற்றம்பொறியாளர்கள்சிங்கப்பூர்பொது சுகாதாரம்துப்புரவுப் பணியாளர்கள்சிறுநீரகக் கல்ஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?பி.ஆர்.அம்பேத்கர்மாணவி உயிரிழப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!