கட்டுரை, அரசியல், கல்வி, நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

உயர்கல்விக்கு 3 சீர்திருத்தங்கள்

வி.ராம்கோபால் ராவ்
11 Aug 2024, 5:00 am
1

ட்சக்கணக்கில் மாணவர்கள் தேர்வெழுதும், கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிக் குவிக்கப்படும் நீட் (NEET) - ஜேஇஇ (JEE) மற்றும் இவை போன்ற பொதுத் தேர்வுகள் அவசியப்படும் நிலைக்கு ஏன் வந்தோம்? 

உயர்கல்வியில் உலகின் தலைசிறந்த நாடாவதற்கான ஆற்றல் நமக்கிருக்கும்போது - பொதுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போலப் பெருகுகின்றன; தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களின் எல்லா நிலைகளிலும் ஊழல் ஊடுருவி நிற்கிறது; நம்பகத்தன்மை குறைந்துவருகிறது; உயர்கல்வி நிறுவனங்களில் கற்பிப்பதைவிட - அதிகாரமுள்ள நிர்வாகத்துக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது; பல்கலைக்கழகக் கல்வியின் தரம் தாழ்ந்துவருகிறது; எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுடன் தொடர்புள்ள இளைஞர்களுக்கு தாங்க முடியாத மன அழுத்தத்தை இவை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் பதிவாகும் தற்கொலைகளில் 35%, 15 வயது முதல் 24 வயதில் உள்ள இளையோர்களுடையவை.

2022இல் மட்டும் இந்தியாவிலிருந்து 7,50,000க்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் சென்றனர் – அதற்கு முந்தைய ஆண்டைவிட 35% அதிகம். வெளிநாட்டுக் கல்விக்காக 2025இல் இந்தியக் குடும்பங்கள் 7,000 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிடப்போகின்றன என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இந்தத் தொகை 2023இல் உயர்கல்விக்காக ஒன்றிய அரசு ஒதுக்கியதைப் போல 14 மடங்கு! 

இந்த மாணவர்களுக்கு இந்தியக் கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காது என்பதால் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை, அங்குள்ள கல்வியின் தரம் கருதியே பெரும்பாலும் செல்கின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

1991 சீர்திருத்தம் போல…

1991இல் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தத்தைப் போன்ற நடவடிக்கை உயர்கல்வியிலும் அவசியப்படுகிறது. நம்முடைய கல்வி நிறுவனங்களை தரத்துக்குப் பொறுப்பேற்க வைக்க, மூன்று முக்கியமான பிரச்சினைகளில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்: 

  1. கல்வி கற்றுத்தரும் பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களின் கல்வித் தரம். 
  2. கல்விக்கான நிதியைப் பெறும் கட்டமைப்பு. 
  3. நிறுவன நிர்வாக முறைமை.

இந்தியக் கல்வி நிறுவனங்கள் இரண்டு வகைப்படும்: தொடர்ந்து செயல்பட அரசின் நிதியுதவியை 90% நாடி நிற்கும் நிறுவனங்கள், மாணவர்கள் தரும் கல்விக் கட்டணங்களை மட்டும் 90% நாடி நிற்கும் நிறுவனங்கள். அரசின் நிதியை அதிகம் நம்பியிருக்கும் நிறுவனத்துக்கு, நிர்வாகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத இக்கட்டும், தேவைக்கேற்ப விரியவும் சுருங்கவும் முடியாத கட்டாயமும் நிலவுகின்றன. மாணவர்கள் தரும் கட்டணங்களையே பெரிதும் நம்பியிருக்கும் நிறுவனங்கள் வழங்கும் கல்வியின் தரம் சந்தேகத்துக்கு உரியவையாகவும் இதர பிரச்சினைகளுடனும் இருக்கின்றன. இரண்டு வகை கல்வி நிறுவனங்களுமே ஆபத்தானவை, குறைகள் நிரம்பியவை. 

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் 23 ஐஐடிக்களில் தோராயமாக 16,000 மாணவர்கள் பட்ட வகுப்பிலும், 20 ஏஐஐஎம்எஸ் உயர்கல்வி நிறுவனங்களில் 2,000 மருத்துவ மாணவர்களும் படிக்கின்றனர். அமெரிக்காவில் ஒரேயொரு பெரிய பல்கலைக்கழகமே, 23 ஐஐடிக்கள் சேர்க்கும் மாணவர்களை ஒரே இடத்தில் மொத்தமாக சேர்த்துக்கொள்கிறது. இதுதான் அளவைப் பொருத்த முக்கிய பிரச்சினை.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஒடுக்குமுறைத் தேர்வுகள்

சமஸ் | Samas 15 Jan 2020

சீர்திருத்தங்கள்! 

உயர்கல்வி மேம்பட தேவைப்படும் 3 முக்கிய சீர்திருத்தங்கள்:

1. இரண்டாவது நிலையில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும்கூட மிகவும் தரமான பேராசிரியர்களைப் பணியில் சேர்க்க வேண்டும்: அமெரிக்காவின் கல்விமுறையில் மிகவும் போற்றப்படும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரும் பேராசிரியர்களுடைய கல்வித் தரத்துக்கு எந்த வகையிலும் குறையாமல்தான், இரண்டாம் நிலை பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிலையங்களிலும் பேராசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள்தான் இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். இந்தியாவில் அந்த நிலை இல்லை. அதனால்தான் சில பல்கலைக்கழகங்களில், சில கல்லூரிகளில் சேர இங்கே கூட்டம் முண்டியடிக்கிறது. 

ஐஐடிக்களையும் ஏஐஐஎம்எஸ்களையும் அதிக எண்ணிக்கையில் அரசு திறப்பதால் இரண்டாம் நிலை கல்வி நிலையங்களில் கற்றுத்தருவோரின் கல்வித் தரமும் குறைந்துகொண்டிருக்கிறது (திறமையானவர்கள் புதிய நிலையங்களுக்குப் போகின்றனர்). விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பதவிக்கான ஆளெடுப்பு இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களில் பெரும்பாலும் சட்டச் சிக்கல்களிலும் நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கிக்கொள்கின்றன. காலியிடங்களுக்கு, பேராசிரியர்கள் - துறைத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகும் அந்தந்த மாநில அரசுகள் அல்லது கல்வியமைப்புகள் ஒப்புதல் தர காலதாமதம் ஆவதால் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில்தான் உயர்கல்விக்கூட நியமனங்கள் நடக்கின்றன. 

உயர்கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை வேலைக்கெடுப்பதில் அவர்களுடைய கல்வித்தரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும். ஐஐடி – ஏஐஐஎம்எஸ் கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்றுத்தரக்கூடிய தரமுள்ளவர்களின் பெரிய பட்டியலைத் தயாரித்து அவர்களை இரண்டாம் நிலை நகரங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஐஐடி – ஏஐஐஎம்எஸ்ஸில் வழங்கும் அளவுக்கு அதே ஊதியம் வழங்க வேண்டும். இவர்களை ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிலையங்கள் உதவியுடன் மற்ற கல்வி நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ள வாய்ப்புகள் தர வேண்டும். அந்தப் பேராசிரியர்களுக்கு பணிச்சுமையை அளவோடு விதிப்பதுடன், உயர் தரத்திலான ஆராய்ச்சிகள் செய்ய தாராளமாக நிதியுதவி (மானியமாகவே) வழங்க வேண்டும். 

இப்படிப்பட்ட தொகுப்பில் சேர்க்கப்படும் பேராசிரியர்கள் எந்த இடத்தில் வேலை செய்தாலும் நல்ல தரத்துடன் பணிபுரியும் கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். காலப்போக்கில் இந்தியாவின் எல்லா உயர் நிலையங்களிலும் கற்பிக்கும் திறன் மேம்படுவதல்லாமல் ஏராளமான மாணவர்கள் உள்நாட்டு கல்வி நிலையங்களையே நாடுவது வழக்கமாகிவிடும்.

2. கல்வி நிலையங்களுக்கு அவற்றின் செயல்பாட்டுக்கேற்ற மானியம் தரப்பட வேண்டும்: அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்க்கவும் ஆராய்ச்சிகளில் அதிகம் பேர் சேர்ந்து சாதிக்கவும் உதவும் கல்வி நிலையங்களுக்கு, அவற்றைப் பொருத்து மானிய உதவிகளை அரசு வழங்கினால் பெரும் ஊக்குவிப்பாக அமையும். வழக்கமான நிதியுதவிகளுடன் இந்த ஊக்குவிப்பும் சிறப்பாகச் செயல்பட ஒரு காரணியாக அமையும். மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை, ஆய்வுகளுக்கான மானிய உதவியின் அளவு, காப்புரிமைகள் பதிவு, தொழில் துறையுடன் இணைந்து பெறும் உரிமம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி பொருள் பொதிந்ததாக இருக்கும். இதனால் நிறுவனங்கள் அதிக மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதுடன் உயர்கல்வி ஆய்வுகளில் உத்வேகமும் போட்டியும் ஏற்படும்.

உயர்கல்வியை எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்த, அந்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிதியை பல்வேறு வழிகளில் திரட்ட வேண்டும். பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகளிடமிருந்து நன்கொடையாக திரட்டலாம், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுடைய உற்பத்திக்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் செய்முறைகளுக்கான ஆலோசனைகளை வழங்கி அதற்குக் கட்டணம் வசூலிக்கலாம், ஆய்வுகளுக்கு பல்வேறு அமைப்புகள் தாராளமாக வழங்கும் நிதிக்கு விண்ணப்பித்துப் பெறலாம். அரசுமே அமெரிக்காவில் உள்ளதைப்போல உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கும் அறக்கட்டளைகள் பெருக ஊக்குவிப்புகளை அளிக்கலாம்.

கல்வி இப்போது – கட்டணம் பிறகு: ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் செய்வதைப் போல இப்போது (கட்டணமின்றி) படியுங்கள், பிறகு (வேலை கிடைத்த பிறகு) கட்டணம் செலுத்துங்கள் என்ற திட்டத்தையும் அமல்படுத்தலாம். இதனால் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமல் படித்து முடித்து வேலை கிடைத்த பிறகு, தங்களின் ஊதியம் குறிப்பிட்ட அளவுக்கும் மேல் போகும்போது (மாணவர்களின் சுய தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்ட பிறகு), கூடுதல் வருமானத்திலிருந்து கட்டண நிலுவையைச் செலுத்த வழிசெய்யலாம். இந்தத் திட்டம் கல்வியில் முதலீடு செய்யும் தனித் திட்டமாகும். மாணவர்களுக்கும் அரசுக்கும் நிதிச்சுமை இல்லை, கல்வி நிலையத்துக்கு இன்னொரு இனத்தில் தொடர் வருவாய் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?

சமஸ் | Samas 12 Mar 2024

3. நிர்வாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுங்கள்: அரசின் தேசிய கல்விக்கொள்கை (2020), கல்வி நிலையங்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்கிறது. ஆனால் நடைமுறையில், அளவுக்கு அதிகமாக அதிகாரவர்க்க குறுக்கீடுகளும் கட்டுப்பாடுகளும்தான் கோலோச்சுகின்றன. இதனால் கல்வி நிலையங்களின் செயல்பாடும் தரமும் நிச்சயம் தாழ்ந்துதான் போகும். புதிய கல்விக்கொள்கை சீர்திருத்தங்களை அமல்செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது. 

வலுவான கல்வி வாரியம் அவசியம். அது நிதி, நிர்வாக, கல்விப்புலத்தில் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க வேண்டும். கல்வித் துறை விரிவடையும் வகையில் நிதி வழங்கலுக்கான முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும், கல்வி கற்கும் மாணவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், நல்ல தரமுள்ள கல்வி வழங்கப்பட வேண்டும், அதேசமயம் அந்தந்த நிறுவன உயர் அதிகாரிகளுக்குச் சுயாதிகாரமும் வழங்கினால் நம்முடைய கல்வி நிறுவனங்களும் செழித்து வளரும். நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் நம்முடைய கண்களைத் திறக்க வேண்டும்.

© டைம்ஸ் ஆஃப் இந்தியா

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!
ராஜஸ்தான் முன்னேறுகிறது, குஜராத் பின்தங்குகிறது
ஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?
ஆசிரியர்களும் கையூட்டும்
உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?
சமத்துவம், துயரம், பன்மைத்துவம்
ஒடுக்குமுறைத் தேர்வுகள்
மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






வர்க்கரீதியில் வாக்களிப்புபொதுச் சார்பியல் கோட்பாடுதுணை முதல்வர்கள்ஐநா சபைஜாட் சமூகத்தைக் கவர உபி அரசியலர்கள் ஏன் அவ்வளவு மெஹெய்ல் செலாசிஇடைத்தேர்தல் சாதி அழிந்துவிடுமா?முதல்வர்மக்களவை பொதுத் தேர்தல் - 2024திருவிழாஎலக்ட்ரான்மாணவிகள்ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணிஊர்வசி புட்டாலியாமத அடிப்படைபிஜு பட்நாயக்நவீன் குமார் ஜிண்டால்காதுவலிஅவர்ணர்கள்அரை வங்காளிமத்திய பணிஆளுநரின் இழுத்தடிப்பு தந்திரம்வக்ஃப் சொத்துகள்P.Chidambaram article in tamilஇரண்டு செய்திகள்விஜயகாந்த் கதை‘அமுத கால’ கேள்விகள்arunchol.comஅபர்ணா கார்த்திகேயன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!