கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கல்வி, சுற்றுச்சூழல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு
ஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?
உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டபோது, ‘இது வரலாறு’ என்று குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர் முர்மு. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டியதுடன், 17 நாட்களாகச் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளார்களுடைய மனவுறுதியையும், அவர்களுடைய குடும்பத்தாரின் நம்பிக்கையையும் பாராட்டினார் பிரதமர் மோடி.
வரலாற்றின் மிகக் கடுமையான மீட்புப் பணிகளில் ஒன்றுதான் இது. அதேசமயம், ஏற்பட்ட இடரை விபத்து என்று கருதி, ‘பேரிடர் மேலாண்மைச் சாதனை’யாக இதைக் கடந்துவிட முடியுமா?
பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா - தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டபோதே இதுகுறித்த விமர்சனங்கள் இருந்தன. சுற்றுச்சூழல் பார்வைதான் காரணம். உத்தராகண்ட் பருவநிலை சார்ந்த இடர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் ஒரு மாநிலம். சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தாமல் பிரம்மாண்டத் திட்டங்களை முன்னெடுக்கும் பார்வையை நம்முடைய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்பச் சுட்டும் பிராந்தியமும்கூட.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்தியாவில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் இத்தகு நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அரசு சார்பில் முன்னெடுக்கப்படும் பெரும் கட்டுமானப் பணிகள் யாவும் இன்று தனியார் நிறுவனங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்களுக்கேற்ற பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்குவதில் இந்த நிறுவனங்கள் எந்த அளவுக்கு கவனம் அளிக்கின்றன? ஐந்து மாதங்களுக்கு முன் தானேவில் நாக்பூர்-மும்பை சம்ருதி விரைவுச் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிரேன் சரிந்து விழுந்தால், 20 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்திலும், இப்போதைய சில்க்யாரா சம்பவத்தில் தொடர்புடைய அதே நவயுகா நிறுவனம்தான் ஒப்பந்ததாரர்.
பொதுவாக, கட்டுமானத் துறை சார்ந்த பெரும் இடர்கள் நேரும்போதெல்லாம், அங்கே ரூர்க்கி ஐஐடியின் நிபுணர்கள் அழைக்கப்பட்டு, இடர் தொடர்பான ஆய்வறிக்கை அவர்களிடமிருந்து பெறப்படுவது நம்மூரில் ஒரு வழக்கம். சில மாதங்களுக்கு முன் பிஹாரில், அகுவானி – சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தபோதுகூட அதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்தனர் ரூர்க்கி ஐஐடி நிபுணர்கள். ஆனால், ரூர்க்கியிலிருந்து சில மணி நேரப் பயணத்தில் அடையக்கூடிய தொலைவில் நடந்த இந்தச் சுரங்க இடரின்போது அவர்கள் பதற்றத்தில் ஆழ்ந்திருந்தனர். ஏனென்றால், இந்த மீட்புப் பணிக்காக இந்தியாவுக்குள் எத்தனையோ துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்திருந்தாலும், முக்கியமான வழிகாட்டலை வழங்க ஆஸ்திரேலியாவிலிருந்து அர்னால்ட் டிக்ஸ் வர வேண்டியிருந்தது. சுரங்க நிபுணரான டிக்ஸின் அர்ப்பணிப்பை இந்தியர்கள் கொண்டாடினர். சரிதான்… அதேசமயம், கட்டுமானப் பொறியியலுக்குப் பேர் போன ரூர்க்கி ஐஐடியால் ஏன் அப்படி ஒரு சுரங்க நிபுணரை உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியும் முக்கியமானது இல்லையா?
இதையும் வாசியுங்கள்... 9 நிமிட வாசிப்பு
சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்
18 Nov 2021
ஆச்சரியமூட்டும் வகையில், ஆஸ்திரேலியாவில் முதல் பல்கலைக்கழகமான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 1847இல் ரூர்க்கியில் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரியின் தொடர்ச்சிதான் இன்று அங்கு செயல்படும் ஐஐடி. “இமயமலைக்கு அமைந்திருப்பது ரூர்க்கி ஐஐடியின் சிறப்பம்சங்களில் ஒன்று. இயல்பாகவே மலைகள், பாறைகள், சுரங்கங்கள் சம்பந்தமான நல்ல அறிதலை இப்படியான ஒரு நிறுவனமும் அதன் ஆசிரியர்களும் பெற்றிருக்க வேண்டும். இல்லை. நாம் ஆஸ்திரேலியாவிலிருந்து நிபுணரை அழைக்கிறோம். ஏன்? பதில் எளிமையானது. ரூர்க்கி ஐஐடியில் உள்ள 523 ஆசிரியர்களில் பழங்குடியினத்தவர் ஒருவர், தலித் ஒருவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அறுவர்; ஏனைய அனைவரும் முற்பட்ட சாதியினர்” என்று சுட்டிக்காட்டினார் சமூகவியலாளர் திலீப் மண்டல்.
ரூர்க்கி ஐஐடியில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, படிப்பில் போதிய முன்னேற்றம் இல்லை என்று சொல்லி, 73 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்; அவர்களில் 90% பேர் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மனசாட்சி உள்ள எவரையுமே இது சங்கடத்தில் தள்ளியது. “படிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதால் இவர்கள் எல்லாம் படிப்பில் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை. இந்த மாணவர்களால் இங்கே சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்றால், அது அவர்களின் தவறு அல்ல; நம்முடைய அமைப்பின் தோல்வி” என்று கூறிய கௌரவ் சர்மா, ஏபிவிபி நிர்வாகியாக இருந்தபோதும் அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் போராட்டத்தில் அமர்ந்தவர். சமயங்களில் அரசியல் செயல்பாட்டாளர்களிடம் உள்ள நெகிழ்வுகூட கல்வித்தளத்தில் செயலாற்றுவோரிடம் இல்லாமல் போவது இந்திய துரதிருஷ்டம்.
நிறுவனத்துக்குள் பல தரப்பு மாணவர்களையும் அனுமதிப்பதோடு சமூகநீதி முடிந்துவிடுவதில்லை. பல தரப்பு அறிவுகளுக்கும் நிறுவனத்தில் இடம் இருக்கிறதா, பல தரப்புத் திறன்களுக்கும் சமமான வாய்ப்பு இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. சமூகத்தில் பின்தங்கிய சூழலிலிருந்து தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் பெரும்பான்மை மாணவர்கள் எதிர்கொள்ளும் முதன்மை அழுத்தம், ஆங்கிலம்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை நன்கு படித்து, நுழைவுத் தேர்வுகளிலும் முந்தைய இடங்களில் வந்த பல மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது?
பயிற்றுமொழியில் ஆரம்பித்து தேர்வுமுறை வரை சகல விஷயங்களிலும் மாற்றம் தேவை என்பது தொடர்ந்து பேசப்பட்டாலும், நம்முடைய சாதிய கல்வியமைப்பு நிராகரிக்கிறது. கடல் பொறியியலுக்கு என்று ஒரு கல்வி நிறுவனம் உருவாக்கப்படும்போது, அதன் நிர்ணயம் தொடங்கி நிர்வாகம் வரை கடலோடி சமூங்களுக்கு முக்கியமான இடம் இருக்க வேண்டுமா, இல்லையா?
இந்தியா இதைத் தொடர்ந்து மறுதலிக்கிறது. இத்தனைக்கும் ஏற்கெனவே உள்ள அமைப்பு பெரிய சாதனைகளைச் செய்திடவில்லை. நோபல் விருதுகளுக்கும் நம்முடைய கல்வி நிலையங்களுக்கும் கிட்டத்தட்ட சம்பந்தமே இல்லை. 365 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரூர்க்கி ஐஐடியின் வரலாறு 175 ஆண்டு பெருமைகளைப் பேசுகிறது. ஏன் பொறியியல் சார்ந்த ஒரு நோபல் விருதாளரைக்கூட உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியை அது ஒருபோதும் கேட்டுக்கொள்வதில்லை.
அர்னால்ட் டிக்ஸ் படித்த ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் 1958இல் நிறுவப்பட்டிருக்கிறது; ஆஸ்திரேலிய சமூகமும் அப்படி ஒன்றும் சமத்துவச் சமூகம் இல்லை; உள்ளூர் பூர்வக்குடி சமூகங்களிலிருந்து வரும் மாணவர்கள் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெரும் முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்; எனில், கல்வியின் தார்மிகத்துக்குக் கடமைப்பட்டவர்களாக அவர்கள் நடந்துகொள்ள முற்படுவது தெரிகிறது.
பல தரப்புகளையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணையும்போதுதான் பல தரப்பு அக்கறைகளும் அங்கே உரிய மதிப்பைப் பெறுகின்றன. பல தரப்பு அறிவும் ஒன்றிணைந்து பேராற்றல் ஆகிறது. நம்முடைய ஐஐடிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் கொள்கை உருவாக்கத்திலேயே முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன்; உதாரணமாக, சில்க்வாரா திட்டத்தை அனுமதிக்கலாமா எனும் ஆய்வைச் சுதந்திரமாக மேற்கொண்டு அறிக்கை அளிக்கும் அளவுக்கும், அந்த அறிக்கைகள் அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கும் ரூர்க்கி ஐஐடி சுயாட்சி பெற வேண்டும். அப்படி ஓர் இடம் சமூகத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு உருவாக வேண்டும் என்றால், தார்மிக அடிப்படையில் தனக்கான மாண்பை உருவாக்கிக்கொள்ளும் இடத்துக்கு முதலில் நம் நிறுவனங்கள் நகர வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்
சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்
இந்த தேசத்தை உருவாக்கியவர்கள்
நாசிர்: பேசப்பட வேண்டிய ஒரு முன்னோடி
உங்கள் வீட்டுக்குத் தண்ணீர் ஏன் முக்கியம்?
4
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.