கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு
உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு (2023 – 2024) முதல் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே மதம் (ஒரே சாதி வேண்டும் என்று மறந்தும் சொல்ல மாட்டார்கள்) என்னும் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலகட்டத்தில் அவற்றை எதிர்த்துப் பன்மைத்துவத்தையும் மாநில சுயாட்சி அதிகாரத்தையும் வலியுறுத்தும் கட்சியாகிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ‘ஒரே பாடத்திட்டம்’ வருவதை எப்படிப் புரிந்துகொள்வது? அதன் தேவை என்ன?
பாடத்திட்டத்தில் என்ன பன்மைத்துவம்?
ஒரு துறை சார்ந்த பட்டப் படிப்பைப் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தைப் பயில்வதுதான் சரியானது என்பது மேலோட்டமாகப் பார்த்தால் பொருத்தமான கருத்தாகத் தோன்றும். ஆனால், ‘ஒன்று’ என்பது ஏகத்துவத்தை வலியுறுத்துவது; பன்மைத்துவத்தை அழிப்பது என்பதைக் கணக்கில் எடுத்து இதைப் பார்க்க வேண்டும். பாடத்திட்டத்தில் என்ன பன்மைத்துவம்? தமிழ்நாடு பல்வேறு வகைப்பட்ட நில அமைப்பையும் அதற்கேற்ற தொழில், பண்பாடுகளையும் கொண்டது. தமிழ் மொழியும் ஒரே தன்மையுடையது அல்ல. நிலத்தின் இயல்புக்கேற்ற வட்டார மொழிகள் உள்ளன. அதற்கேற்பப் பன்மைத்துவம் கொண்ட பாடத்திட்டம் ஏற்கெனவே நிலவுகின்றது.
நிர்வாக வசதிக்காகக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு எனக் கிட்டத்தட்டப் பத்துப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களின் முக்கியப் பணி, அவற்றின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்குப் பாடத்திட்டம் தயார் செய்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல் ஆகியவை. ஒவ்வொரு துறை சார்ந்த பட்ட வகுப்புக்கும் பாடத்திட்டம் வகுப்பதற்கு என ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டக் குழு உள்ளது. குறிப்பிட்ட துறையின் அடிப்படைப் பாடங்கள், சிறப்புப் பாடங்கள், அரசு கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ள பாடங்கள் (மனித உரிமைகள், யோகா போன்றவை) ஆகியவற்றோடு பல்கலைக்கழகம் செயல்படும் நிலவியல் இயல்பு உள்ளிட்ட காரணங்களைக் கருதித் தனித்துவமான பாடங்கள் எனப் பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொண்டு பாடத்திட்டத்தை அக்குழு வகுக்கின்றது.
பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் இருக்கின்றன. அவை பாடத்திட்டங்களைத் தாமே வகுத்துக்கொள்ளவும் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுவதற்கும் அதிகாரம் பெற்றவை. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தோடு ஒப்பிடும்போது தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மேம்பட்டதாக இருக்கிறது என்பது வெளிப்படை. மாணவர்களுக்கான துறைசார் அறிவு மேம்பாட்டையும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கேற்ற வகையில் அக்கல்லூரிகள் பாடத்திட்டம் வகுக்கின்றன. அதனால் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை விடவும் நவீனத்தன்மை மிகுந்ததாகத் தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் இருக்கின்றன.
1986 முதல் 1988 வரை கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். அக்கல்லூரியில் இளநிலை, முதுநிலைப் பட்ட வகுப்புகள் பலவற்றுக்குத் தட்டச்சுப் பயிலல் கட்டாயமாக இருந்தது. கல்லூரியிலேயே தட்டச்சுப் பயிலகம் இருந்தது. அங்கே சென்று கற்றுக்கொள்ளலாம். அந்தப் பயிலகம் நடத்தும் தேர்வில் பங்கேற்றுத் தேர்ச்சி பெறலாம். தனியாக வெளியில் போய்ப் பயின்று அரசு நடத்தும் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை வழங்கலாம். ஆங்கிலமோ தமிழோ ஏதோ ஒரு மொழியில் தட்டச்சுப் பயின்றிருப்பது கட்டாயம். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பட்டம் கிடைக்காது. அந்தக் கட்டாயத்தின் காரணமாகத் தட்டச்சுப் பயின்றவன் நான். அப்பயிற்சி என் வாழ்நாள் முழுதும் பயன்பட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூர் வரலாற்றுப் பாடம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது தட்டச்சு இயந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பலருக்கு ஆய்வேடுகளைத் தட்டச்சு செய்து தந்திருக்கிறேன். அதன் மூலம் என் தேவைக்கு வருமானம் ஈட்ட முடிந்தது. என் ஆய்வேடுகளை நானேதான் தட்டச்சு செய்துகொண்டேன். தட்டச்சு தெரிந்த காரணத்தால் 2005 முதல் கணினியைப் பயன்படுத்தி எழுதுகிறேன். அது எனக்கு எளிதாகக் கைவசமானது. வேலைவாய்ப்பு குறைவு எனக் கல்லூரி கருதிய சில பட்டப் படிப்புகளுக்குத் தட்டச்சுப் பாடத்தை வைத்ததன் காரணம் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்செய்வதுதான். அப்போது தட்டச்சர் பணிக்கு நிறையப் பேர் தேவைப்பட்டனர்.
அக்கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கிய மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் ‘மானிட மதிப்புகள்’ என்னும் பாடம் வைக்கப்பட்டிருந்தது. அப்போதைய துறைத் தலைவர் முனைவர் ஈ.கோ.பாஸ்கரதாஸ் அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். ஆகவே, விழுமியங்களை இலக்கியத்தோடு தொடர்புறுத்தும் வகையில் அப்பாடம் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கற்றதன் வழியாகவே ‘விழுமியங்கள்’ தொடர்பான பார்வை எனக்கு உருவாயிற்று. இன்று வரைக்கும் என் எழுத்துக்கும் ஆய்வுக்கும் அப்பார்வை பெரிதும் உதவுகிறது. இப்பாடம் வேறெந்தக் கல்லூரியிலும் இல்லாத ஒன்று.
‘கொங்கு நாட்டு வரலாறு’ என்னும் பாடத்தையும் அப்போது பயின்றேன். கல்லூரி அமைந்திருக்கும் நிலவியலைக் கருத்தில் கொண்டு ‘உள்ளூர் வரலாறு’ வகையில் அப்பாடம் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் பெயரளவுக்குக்கூடக் குறிப்பிடாத கொங்கு நாட்டு வரலாற்றை விரிவாகப் பயிலும் வாய்ப்பு அதன் மூலம் கிடைத்தது. இந்தப் பகுதியின் நிலவியல், பண்பாடு, வாய்மொழி வழக்காறுகள் முதலிய பலவற்றை அறிதற்கு அப்பாடம் உதவியது. இலக்கியம் சார்ந்த எனது இயக்கத்தில் அதற்கு முக்கிய இடம் உண்டு. தமிழிலக்கியப் பாடத்திட்டம் மட்டுமல்ல, எந்தத் துறை சார்ந்ததாக இருப்பினும் உள்ளூர்த்தன்மை கொண்ட பாடம் சில இருப்பது இயல்பு. கொங்குப் பகுதிப் பல்கலைக்கழகங்களில் இங்கிருக்கும் தொழில்களோடு தொடர்புடைய பாடங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் தன்னாட்சி அதிகாரம் மூலமாகவே சாத்தியமாகி உள்ளன.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?
08 Apr 2023
தன்னாட்சிக் கல்லூரிகளின் தேவை
ஒரு பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது தன்னாட்சிக் கல்லூரிப் பாடங்களுக்கு அந்தந்தப் பகுதியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே பாடநூல்கள் எழுதுகின்றனர். சில கல்லூரிகளில் ஆசிரியர்கள் சேர்ந்தெழுதுவதும் உண்டு. கோபி கலைக் கல்லூரியில் முனைவர் கு.மகுடீஸ்வரன் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தில் அக்கல்லூரி ஆசிரியர்கள் ஒருபொருள் சார்ந்து எழுதிய கட்டுரைகள் பாடநூல்களாக அமைந்தன. அதேபோல அந்தந்தப் பகுதி எழுத்தாளர்களின் படைப்புகள் பாடத்தில் இடம்பெறும் சாத்தியமும் இருந்தது. கோபி கலைக் கல்லூரியில் ஆர்.ஷண்முகசுந்தரம், சங்கர்ராம், கௌதம சித்தார்த்தன் முதலிய எழுத்தாளர்களின் படைப்புகள் பாடத்தில் இடம்பெற்றன.
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் அத்தகைய வாய்ப்புகள் இருந்தன. சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் ‘தலித் இலக்கியம்’ பாடமாக வைக்கப்பட்டபோது நான் தொகுத்த ‘தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்’ நூலும் பாடத்தில் இருந்தது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மாவட்டப் படைப்பாளர்கள் பலர் நூல்கள் இருந்தன. கொங்கு நாட்டு வரலாறு பாடமும் உண்டு. பெரியார் பெயரில் அமைந்த பல்கலைக்கழகம் என்பதால் ‘பெரியாரியல்’ ஒரு தாளாக இருக்கிறது. சங்க இலக்கியம் தாளில் நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரியைப் பற்றிய பாடல்களும் தகடூர் என்னும் தருமபுரியை ஆட்சி செய்த அதியமானைப் போற்றிய பாடல்களும் பாடத்தில் இங்கே அமையும். சிற்றிலக்கியம் என்றால் கொல்லிமலை அறப்பள்ளீசுவரைப் போற்றும் ‘அறப்பளீசுர சதகம்’ பாடத்தில் இருக்கும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் அமைவிடம், பெயர், பண்பாடு ஆகியவற்றுக்கேற்ற பாடங்கள் இப்போது இருக்கின்றன. தன்னாட்சிக் கல்லூரிகள் புதிய புதிய தாள்களை வைத்திருக்கின்றன. பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர் பணித் தகுதித் தேர்வு / முனைவர் பட்ட இளைநிலை ஆய்வாளர் உதவித் தொகைக்கான தேர்வுக்கு (UGC NET / JRF) மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் சில கல்லூரிகளில் பாடம் இருக்கிறது. தமிழ்ப் பாடம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அதைச் சான்று காட்டுகிறேன். மற்றபடி பிற துறைகளின் பாடத்திட்டங்களிலும் உள்ளூர்த்தன்மை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையமிட்ட தன்மைகள் உள்ளன.
பாடநூல்களை எழுதுவோர், உரைநூல்களை உருவாக்குவோர், அவற்றை வெளியிடும் பதிப்பகத்தார் என அனைவருக்கும் இந்த உள்ளூர்த்தன்மை உண்டு. அவையெல்லாம் எத்தகைய தரத்தைக் கொண்டவை என்பதில் எனக்குக் கடும் விமர்சனம் இருக்கிறது. அவற்றைத் தரப்படுத்த வேண்டியது தேவை; ஒழித்துவிடக் கூடாது. பல்கலைக்கழக அளவிலும் கல்லூரி நிலையிலும் பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல பேராசிரியர்கள் எழுதுபவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கையொப்பம் இடுவதற்கும் மாணவர் வருகைப் பதிவு போடுவதற்கும் தேர்வுத்தாள் திருத்துவதற்கும் மட்டுமே பேனா பிடிப்பவர்களாக மாறிப் போவார்கள். பாட நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பலவும் உள்ளூர் சார்ந்தவையாக இருக்கின்றன. ஒரே பாடத்திட்டம் என்றால் குறிப்பிட்ட சில பதிப்பகங்களின் மேலாதிக்கம் பாடநூல் வெளியீட்டில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதைப் பதிப்பகத்தாரும் கவனத்தில் இருத்த வேண்டும்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
தமிழ் வழி உயர்கல்விக்கு வேண்டும் முக்கியத்துவம்
18 Nov 2022
ஒழிக்கப்படுகிறதா உள்ளூர்த்தன்மை?
‘ஒரே பாடத்திட்டம்’ என்பது இப்போதிருக்கும் நல்ல கூறான பன்மைத்துவத்தை அழித்துவிடும். பாடத்திட்டத்தில் மிகக் முக்கியமான கூறான உள்ளூர்த்தன்மை முற்ற முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும். அதுவும் ஒரே பாடத்திட்டத்துக்கு என ‘தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்’ உருவாக்கி வெளியிட்டிருக்கும் தமிழ்ப் பாடத்திட்டத்தைப் பார்த்தால் பெருவேதனையாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க ஒரே பாடத்திட்டத்தை உருவாக்குவது என்றால் பலவிதப் புள்ளி விவரங்களைத் திரட்டி ஆய்வு செய்ய வேண்டாமா? இப்போதிருக்கும் பன்மைத்துவத்தை எப்படிப் பேணுவது என்று விவாதித்திருக்க வேண்டாமா? வல்லுநர்களைக் கொண்ட அற்புதமான பாடத்திட்டக் குழுவை அமைத்திருக்க வேண்டாமா? எதுவுமே நடக்கவில்லை.
உயர்கல்வி மன்றம் வெளியிட்டிருக்கும் தமிழ்ப் பாடத்திட்டத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் முதுகலை மாணவரும் எழுத்தாளருமான இஸ்க்ரா “அனைத்துக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களையும் ஓரிடத்தில் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு, நோகாமல் தரவிறக்கம் செய்து தன் இஷ்டப்படி கத்தரித்து ஒட்டியதுபோல் இருக்கிறது. துறைரீதியாக, பாட வாரியாக இதற்கென அமைக்கப்பட்ட எக்ஸ்பர்ட் குழுவை (TANSCHE) அடையாளம் காட்டுமா?” என்று கேட்கிறார். இத்தனை பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்போது அதைச் செயல்படுத்துபவர்கள் துறைசார் புலமை, கல்வி பற்றிய நவீனப் பார்வை, பொதுப் பாடத்திட்டம் பற்றிய ஆய்வு, அனுபவம் ஆகிய அனைத்தும் நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இப்போதைய பாடத்திட்டக் குழுக்களோடும் கற்பிக்கும் ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் கலந்துரையாடிக் கருத்துக்களைப் பெற்றுப் பிறகல்லவா பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும்?
75 விழுக்காடு பொதுப் பாடத்திட்டம் என்றும் 25 விழுக்காடு அவரவர் விருப்பம் போல வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எந்த 25 விழுக்காடு விருப்பத்துக்கு உரியது என்பதைப் பற்றித் தெளிவில்லை. பொதுத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் நவீன கவிதைகள் வைக்கப்பட்டுள்ளன. அப்துல் ரகுமானும் மு.மேத்தாவும் வைரமுத்துவும் இன்னும் எத்தனை காலம்தான் இடம்பெறுவார்கள்? தமிழ்க் கவிதை எவ்வளவோ தூரம் நகர்ந்து வந்துவிட்டது. மு.மேத்தாவின் ‘வாழை மரம்’ பேசுகிற கவிதை பாடத்தில் இருக்கிறது. அதையெல்லாம் இப்போது வாசித்தால் மாணவர்கள் மூக்கால் சிரிப்பார்கள். இளங்கலைப் பாடத்திலிருக்கும் சில பகுதிகள் மாற்றமில்லாமல் முதுகலையிலும் இருக்கின்றன. இரண்டையும் ஒப்பிட்டுக்கூடப் பார்க்காமல் எப்படிப் பாடத்திட்டம் தயாரித்தனர்? தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவமும் இந்தப் பாடத்திட்டத்தில் இல்லை. இப்படி ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை அடுக்கலாம்.
இதில் நல்லவையே இல்லையா என்றால் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். பிற பட்ட வகுப்பு மாணவர்கள் படிக்கும் பொதுத் தமிழ்ப் பாடத்தையே இளங்கலைத் தமிழ்ப் படிக்கும் மாணவர்களும் இதுவரை பயின்று வந்தனர். இப்போது இளங்கலைத் தமிழிலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கெனப் பொதுத் தமிழ்ப் பாடத்திட்டம் தனியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பான்மைப் பகுதிகள் மொழிப் பயன்பாடு சார்ந்து இருக்கின்றன. பொது ஆங்கிலப் பாடத்திலும் இந்த மாற்றம் இருக்கிறது. இதை நடைமுறைபடுத்துவது நல்லது. இப்படி மிகக் குறைவாகவே பாராட்டுக்குரிய கூறுகள் உள்ளன.
பின்னுக்குச் செல்லும் கல்விமுறை!
பொதுப் பாடத்திட்டத்தை இப்போது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தை நவீனமாக்கினால் அது வளர்ச்சி. இன்னும் பின்னுக்குக் கொண்டு செல்வது இழிவு. ஒரு துறையில் அடிப்படைத் தாள்கள் எவை என்பதைக் கண்டறிந்து அவற்றைக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று சொல்லலாம். ஒரு துறையில் பட்டம் பெறுவோர் அனைவரும் இத்தகைய அடிப்படைப் பாடங்களைக் கற்றிருக்க வேண்டும் என்பதில் ஒருவகை நியாயம் இருக்கிறது.
தமிழில் இலக்கணப் பாடங்கள் அத்தகையவை. இளநிலைப் பட்டம் பயிலும் மாணவர் ஐந்திலக்கணம் பற்றியும் அடிப்படை அறிவுடையவராக இருக்க வேண்டும். சிற்றிலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், அற இலக்கியம், சங்க இலக்கியம் என்னும் இலக்கியப் பாட வரிசையில் எந்தெந்தப் பாடல்கள், நூல்கள் இருக்கலாம் என்பதை அவரவர் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று விருப்பத்துக்கு விட வேண்டும். இக்கால இலக்கியப் பாடம் என்றால் அதில் வைக்கப்படும் சிறுகதைகள், புதினம், நாடகம், கவிதை, உரைநடை ஆகியவற்றை அவரவர் தீர்மானித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பொதுப்பாடம் 50 விழுக்காடு, சிறப்புப் பாடம் 50 விழுக்காடு என்றிருந்தால்கூட ஓரளவு பரவாயில்லை. அவை எந்தெந்தப் பகுதிகள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இன்று பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பல்நோக்குப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முப்பது தாள்கள் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் அவற்றில் பதினைந்து தாள்கள் கட்டாயம். மீதமுள்ள பதினைந்து தாள்களை மாணவரே தேர்வுசெய்துகொள்ளலாம். இவ்வாறெல்லாம் கல்வியில் மாற்றங்கள் வந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. இவை எதையும் கணக்கில் கொள்ளாமல் ஒரே பாடத்திட்டம் என்று சொல்லி நம் கல்விமுறையைப் பின்னுக்கு இழுப்பது சரியல்ல.
தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு காரணமாகச் சமூக நீதி பெருமளவு நிலைநாட்டப்பட்டுப் பெரும்பான்மை மக்கள் கல்வி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், நாம் வழங்கும் கல்வி எத்தகையது என்பதை உயர்கல்வி மன்றம் வெளியிட்டுள்ள பாடத்திட்டமே வெட்ட வெளிச்சமாக்குகிறது. இவ்வளவு மோசமான பாடத்திட்டம் கொண்ட கல்வியைக் கற்று என்ன பயன்? சமூக நீதி என்பது எல்லோருக்கும் ஒதுக்கீடு தருவதாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. நவீனப் பார்வை கொண்ட தரமான கல்வியை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். ‘ஒரே பாடத்திட்ட’ முறையை உடனடியாகக் கைவிட்டு விரிவான ஆய்வுக்குப் பிறகு தரமான பாடத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த உயர்கல்வித் துறை முன்வர வேண்டும். அதற்கு உரிய கால அளவை வழங்க வேண்டும். இன்னொரு கல்வியாண்டு ஆனாலும் பரவாயில்லை.
பயன்பட்டவை:
தொடர்புடைய கட்டுரைகள்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?
தமிழ் வழி உயர்கல்விக்கு வேண்டும் முக்கியத்துவம்
உயர்கல்வியின் தமிழ்: செய்ய வேண்டியது என்ன?
2
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
இரா.ப.இராக்கண்ணன் 1 year ago
சரியான பார்வை. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.