கட்டுரை, சமஸ் கட்டுரை, கல்வி 4 நிமிட வாசிப்பு

மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்

சமஸ் | Samas
27 Jun 2023, 5:00 am
5

ங்களுடைய பிள்ளை திடீரென்று பன்னிரண்டாம் வகுப்பின் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டால், ஒரு பெற்றோராக உங்களுக்கு எப்படி இருக்கும்? என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே நாம் விவாதிக்க வேண்டிய விவகாரம் இது என்று எண்ணுகிறேன்.  தமிழ்நாட்டில் 2023 பிளஸ் 2 தேர்வின் முதல் நாள் அன்று 50,000 மாணவர்கள் வரவில்லை. இது முதல் நாள் தமிழ்த் தேர்வு அன்றைய நிலைமை. அடுத்தடுத்த நாட்களில் ஆங்கிலம், இன்னபிற முதன்மைப் பாடத் தேர்வுகளைப் புறக்கணித்தவர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். 

தமிழ்நாட்டில் 2023இல் பிளஸ் 2 தேர்வு எழுத 8.51 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் தட்டுத் தடுமாறி பள்ளி வாழ்க்கையை நிறைவுசெய்யும் தருணத்தில், பல ஆயிரம் மாணவர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்றால், இது தீவிரமான ஒரு பிரச்சினை. தமிழக அரசும் கல்வித் துறையும் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த சமூகம் ஆழ்ந்து விவாதித்திருக்க வேண்டும். போகிறப்போக்கில் நம் சமூகம் இந்தச் செய்தியைக் கடந்தது மோசம். “ஒவ்வொரு வருஷமும் சுமார் 5% மாணவர்கள் வரை இப்படிச் செல்வது சமீப ஆண்டுகளாகவே வழக்கமாக இருக்கிறது. இந்த ஆண்டு கொஞ்சம் இந்த எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது” என்று வெளியான அடுத்த செய்தி மேலும் மோசம்!

நான் பல ஆசிரியர்களிடமும் பேசினேன். “பத்தாண்டுகளாகவே மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அதிகரித்தபடி இருக்கிறது. இப்போது நீங்கள் தேர்வில் பார்க்கும் வெளியேற்றம் என்பது கடலின் மேல் பரப்பில் நமக்குத் தெரியும் மலையின் நுனி; கடல் அடியில் நம் கவனத்துக்கு வராத பெரும் மலை இருக்கிறது. நம்முடைய பள்ளிக்கூடங்களின் மேல்நிலை வகுப்புகளில் பெரிய களேபரங்கள் நடக்கின்றன. யாரும் அதற்கு உரிய கவனம் அளிக்கவில்லை அல்லது தப்பும் தவறுமான தீர்வுகளை யோசிக்கிறோம்!” என்கிறார்கள்.

ஆசிரியர்கள் சொல்லும் பத்தாண்டு கணக்கு என்பது, 2013இல் அறிமுகமான மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நம் சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களைக் குறிக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 17 நிமிட கவனம்

நம்முடைய கல்விமுறையே அநீதியானது

24 Jun 2023

இதற்கு முன்பிருந்தே பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான பொது நுழைத் தேர்வுகள் இருந்தாலும், ஒரு மாணவர் முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று ஐஐடி போன்ற நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்றால், அவர் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும்; இல்லையெனில் அண்ணா பல்கலைக்கழகம் போன்று மாநில அரசு நடத்தும் நிறுவனங்களிலேயே அவர் படிக்கலாம். இதற்கென்று விசேஷமாக எதுவும் அவர் தயாராக வேண்டியது இல்லை. பள்ளித் தேர்வை நல்லபடி எழுதினால் போதும்!

ஆனால், மத்தியக் கல்வி நிறுவனங்களில் மட்டும் அல்லாது உள்ளூர் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவும்கூட நுழைவுத் தேர்வும், சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் முக்கியம் எனும் நிலையை நீட் தேர்வு உண்டாக்கியது. மாநிலக் கல்வி வாரியப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது என்ற நிலையை நீட் கேள்வித் தாள்கள் உண்டாக்கின. விளைவாக, பதினோராம் வகுப்பில் நுழைவதற்கு முன்பே நீட் தேர்வுக்கான மனநிலைக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. இந்தச் சூழல் உண்டாக்கிய மோசமான விளைவு என்னவென்றால், நம்முடைய ஒட்டுமொத்த சமூகத்தையும் அறிவியலை மையப்படுத்தியும் ஏனைய துறைகளைப் புறந்தள்ளியும் சிந்திக்க நிர்ப்பந்தித்திருக்கிறது.

எப்படி ஒரு வன்முறையை இன்று நம் பள்ளிக்கூடங்களில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்பதை என்னிடம் ஓர் ஆசிரியர் விளக்கினார். “தமிழக ஆட்சியாளர்களால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாத சூழலில், அது பெரும் அரசியல் அழுத்தத்தை அவர்களிடம் உருவாக்கியது. ஏனென்றால், மொத்தம் 8 லட்சம் சொச்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள் என்றால், அவர்களில் 6 லட்சம் சொச்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள். நீட் தேர்வுக்குப் பிறகு, ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளிலிருந்தும் ஒரு மாணவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவதே பெரும் சவால் எனும் சூழல் உருவாகிவிட்டது. நீட் கேள்வித் தாளானது, தேசியப் பாட வாரிய நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது ஆகும். ஆக, நீட் தேர்வுக்குத் தயாராகும் அளவுக்கு மாநிலப் பாட வாரிய நூல்களையும் மேம்படுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அறிவியல் பாட நூல்களில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாடு எல்லாத் துறை நூல்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. எல்லாம் பல நூறு பக்கங்கள். பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் இன்று நிலைக்குலைந்து போகிறார்கள்!”

நமக்குப் பொதுவாக இங்கே ஓர் அசட்டுத்தனமான கேள்வி புத்திசாலித்தனமாகத் தோன்றும். “பாட நூல்களை மேம்படுத்துவது என்பது சரிதானே!”

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஒடுக்குமுறைத் தேர்வுகள்

சமஸ் | Samas 15 Jan 2020

இன்னோர் ஆசிரியர் இதற்குப் பதில் சொன்னார். “சரிதான், ஆனால் குறிப்பிட்ட பக்கங்களுக்குள் இந்த மேம்பாடு நடக்க வேண்டும். இன்றைக்குப் பதினோராம் வகுப்பில் அறிவியல் படிக்கும் ஒரு மாணவர் படிக்க வேண்டிய பக்கங்கள் எத்தனை தெரியுமா? தமிழ் - 236, ஆங்கிலம் - 210, இயற்பியல் இரு தொகுதிகள் - 312+316, வேதியல் இரு தொகுதிகள் - 294+316, கணிதம் இரு தொகுதிகள் - 312+284; உயிரியல் -  விலங்கியல் 272 + தாவரவியல் 312, ஆக மொத்தம் – 2864 பக்கங்கள்!

அரசாங்கம் சார்பில் பாட நூல்கள் உருவாக்கத்தில் என்னவோ பெரும் அக்கறை செலுத்தினார்கள். ஆனால், இவ்வளவு பக்கங்கள் பெரும் வன்முறை. நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை மையப்படுத்தி நாம் இதைச் செய்தோம். ஆனால், இந்தியா முழுவதும் இந்தத் தேர்வுகளில் அதிகம் தேறும் மாணவர்கள் யார்? எத்தகைய வர்க்கப் பின்னணியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பின் வசதி என்ன? வெளியே எத்தனை வகையான சிறப்புப் பயிற்சிகளைப் பெறும் வசதியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? நேர் எதிரே நம்முடைய தமிழ்நாட்டின் பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்கள் யார்? எத்தகைய வர்க்கப் பின்னணியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பின் வசதி என்ன? வெளியே எத்தனை வகையான சிறப்புப் பயிற்சிகளைப் பெறும் வசதியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்? இதை யோசிக்க நாம் மறந்துவிட்டோம்!”

ஆசிரியர்கள் எனக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு விவரங்களை என்னிடம் தந்தனர். தமிழ்நாட்டில் 2023இல் நீட் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1.31 லட்சம். இவர்களில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 12,997. அதாவது, ஒரு சதவிகிதம்கூட இல்லை. நீட் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து மொத்தமாகத் தேர்ச்சி பெற்றவர்கள் 78,693 பேர். இவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர்.

"இங்கே தேர்ச்சி என்று நாம் குறிப்பிடுவது பன்னிரண்டாம் வகுப்பு வரை 35% மதிப்பெண்களுக்கு மேல் பெறும் எல்லோரையும் குறிப்பிடுவது தேர்ச்சி பெற்றோர் என்று குறிப்பதைப் போன்று, நீட் தேர்வில், உத்தேசமாக 20% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற எல்லோரையும் குறிப்பிடுவதாகும்; உண்மையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க வேண்டும் எனில், இடஒதுக்கீட்டில் ஒரு பழங்குடி மாணவர் செல்லவே குறைந்தது 60% மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு நீங்கலாக அரசுப் பள்ளிகளிலிருந்து மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் என்று 100 பேர்கூட இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். எனில், நாம் நீட் போன்ற ஒரு தேர்வையே ஒழிக்க வேண்டும்; அது சாத்தியப்படும் வரை அரசுப் பள்ளி மாணவர்களில் மருத்துவம் படிக்கும் ஆர்வமும், ஆற்றலும் உடையவர்களை மட்டும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அரசு சார்பில் சிறப்புப் பயிற்சி வழங்குவதே முறையாக இருக்கும். இப்படித் தேர்ந்தெடுத்தால் சில ஆயிரம் மாணவர்கள் அந்த வட்டத்துக்குள் வருவார்கள். அதை விட்டுவிட்டு, பல லட்சம் மாணவர்களை நாம் வதைக்கிறோம்."

என்னால் பிரச்சினையை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கல்வியை நான் முடித்தேன். அப்போதெல்லாம் வகுப்புக்கு 50 மாணவர்கள் இருந்தால், 5 பேர் முதல் நிலைத் தகுதியுடன் இருப்பார்கள். எனில், அவர்கள் குறைந்தது 90% மதிப்பெண்களைத் தொடர்ச்சியாக எல்லாப் பாடங்களிலும் பெறுவார்கள். இத்தகையோர்தான் மருத்துவம் – பொறியியல் போன்ற கடும் போட்டி நிலவும் படிப்புகளை நோக்கி நகர்வார்கள். ஏனைய மாணவர்களுக்குத் தெரியும், ‘நமக்கு இது ஆகாது; நாம் ஏதாவது அடுத்த நிலைப் படிப்புகளைப் பார்ப்போம்!’

இப்படித்தான் அடுத்து வேறு எந்தப் பாடத்தில், துறையில் ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அந்தப் படிப்பு நோக்கிப் பெரும்பான்மை மாணவர்கள் நகர்வார்கள். நமக்கு இதுதான் சரிபடும் என்பதில் மாணவர்களுக்கும் தெளிவு இருக்கும்; பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் தெளிவு இருக்கும். முதல் நிலை மாணவர்கள் ‘மருத்துவம் – பொறியியல்’ கனவுகளோடு அதற்குரிய அழுத்தத்தை எதிர்கொள்வார்கள்; ஏனையோருக்கு அந்தச் சிரமம் இருக்காது. அதேசமயம், பத்தாம் வகுப்பில் 70%-60% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களைப் பிற்பாடு  வரலாற்றுத் துறையிலும்கூட பார்க்க முடியும்; அங்கே அவர்கள் புதிய ஆற்றலுடன் முன்னணியில் இருப்பார்கள்.

இப்போது ஒட்டுமொத்த மாணவர்களையும் மருத்துவம் / பொறியியல் படிப்புகளின் பெயரால் அறிவியல் அழுத்தத்தில் நாம் தள்ளியிருக்கிறோம். இரு மோசமான பின்விளைவுகளை இது கொண்டிருக்கிறது. கடும் மன அழுத்தத்திலும் இயலாமையிலும் மாணவர்களைத் தள்ளியிருக்கிறோம்; கூடவே, அறிவியல் நீங்கலாக வேறு எந்தத் துறையிலும் எதிர்காலத்தில் வலுவான ஆளுமைகள் உருவெடுக்க முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல வரலாற்றாய்வாளர், ஒரு நல்ல தமிழாசிரியர், ஒரு நல்ல பொருளியலர் எப்படி இந்தப் பள்ளிக்கூடச் சூழலிலிருந்து நமக்கு எதிர்காலத்தில்  உருவாவார்?

தமிழ்நாடு இதுபற்றி விவாதிக்க வேண்டும். மருத்துவம் போன்ற கடும் போட்டி நிலவும் படிப்புகளுக்கு ஆசைப்படும் மாணவர்களுக்கு ஒரு தகுதித்தேர்வு நடத்தி, அதில் வெல்வோருக்கு என்று சிறப்பு நூல்களையும் சிறப்புப் பயிற்சியும் வழக்கலாம்; இந்த வகையில் தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் மாதிரிப் பள்ளிகளை மேலும் விஸ்தரிக்கலாம். ஒட்டுமொத்த அளவில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பாடத்திட்டமும், புத்தகங்களும் ஒன்றுக்குப் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்; நம்முடைய பாடநூல்கள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். அறிவியலுக்கு இணையான மதிப்பை வரலாறு, சமூகவியல் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்குக் கிடைக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்போல மதிப்புமிக்க உயர்கல்வி நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும். பல துறைகளிலும் நல் ஆளுமைகள் வெளிவர நம் பள்ளியமைப்பே தடையாகவுள்ள இன்றைய சூழல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்!

- குமுதம், 2023 

 

தொடர்புடைய கட்டுரைகள்

நம்முடைய கல்விமுறையே அநீதியானது
ஒடுக்குமுறைத் தேர்வுகள்
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?
முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!
தமிழக ஆளுநரின் அதிகார மீறல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

2





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Narayanasamy   11 months ago

இந்த பதிவானது மிகச்சிறந்த ஒன்று என்பதில் ஐயமில்லை. இதில் மறுபக்கமான பெற்றோர்கள் மதிப்பெண்களின் பின்னால் தங்களது குழந்தைகளை ஓடவைக்கிறார்கள். அரசு பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் மத்தியதர குடும்பத்தினராகவே இருக்கின்றனர். இவர்களால் தனிப்பயிற்சி அளிக்க இயலாது என்பதும் மறுக்க இயலாது. இங்கு நாம் சில கசப்பான உண்மைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. 1. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமை. 2. இருக்கும் ஆசிரியர்களுக்கும் பணிச்சமை பலமடங்கு . 3. நல்ல உள் கட்டமைப்பு இல்லாமை. 4. மாணவர்களிடையே ஒழுக்கமின்மை அதிகரித்து வருவது. 5. வீட்டில் தந்தையின் மது பழக்கம். இந்த மது பழக்கம் மற்றும் போதைக்கு அடிமையாதல் காரணமாக நிறைய மாணவ செல்வங்கள் அவர்களும் தவறான பாதையில் செல்கின்றனர். 6. நவோதயா பள்ளி போன்ற திட்டங்களை நாம் கண்மூடித்தனமாக எதிர்கின்றோமோ என்ற எண்ணங்களை தவிர்க்க இயலவில்லை. 7. உலகில் மருத்துவம் மற்றும் பொறியியல் தவிரவும் நிறைய துறைகள் உள்ளன என மாணவர்களுக்கு முக்கியமாக பெற்றோர்களுக்கு எடுத்துரைப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். 8. எதிர்வரும் காலங்களில் கணிணி வல்லுனர்களை விட அதிகம் ஊதியம் பெறும் பணியாக ஓட்டுனர்கள், மோட்டார் வாகன பழுது நீக்குதல் போன்ற பலதுறையிலும் மாற்றம் வரும். 9. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இளைய தலைமுறை தயார் செய்ய வேண்டிய காலம் இது. 10. மக்கள் தொகை கூடிக்கொண்டே போகும் சூழலில் விவசாயம் மிகச் சிறப்பான வாய்ப்பாகும். மேலும் இதில் நாம் செய்ய வேண்டியது மேற்கண்டவற்றில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மாணவர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி தருவது தான் நலம் பயக்கும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Raja   11 months ago

மிக மிக சிறந்த பதிவு. பாட பக்கங்களின் எண்ணிக்கையுடன் துல்லியமாக எழுதப்பட்ட விதம்! பலருக்கு அனுப்பி அவர்களும் இதன் தீவிரத்தை புரிந்து கொண்டார்கள். மேலும் பலருக்கு இந்த கட்டுரை சென்று அடையும். நன்றி, சமஸ் அவர்களுக்கு.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    11 months ago

இத்தகைய கல்வி மற்றும் தேர்வு முறைகளைத் திணிக்கும் இந்திய அரசின் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்,பாடத்திட்டங்களை வகுப்பவர் ,தேர்வு முறைகளை அங்கீகரிப்பவர் என அதிகாரத்தில் உள்ளவர் முன் பொறுப்புள்ள,மனசாட்சியுள்ள சமூகமுமாக வலுவான பொதுக்கருத்தை வைத்து எதிர்க்குரல் எழுப்ப வேண்டியது நம் கடமை! விஷயத்தின் ஆபத்து,அவலம்,தீவிரத்தை உணர்த்துகிறது கட்டுரையின் தலைப்பு!எழுதுவதை எழுதுவோம் வருகிற மதிப்பெண் வரட்டும் கிடைக்கிற படிப்பில் சேருவோம் என்ற அளவுக்கு கூட நம்பிக்கையை, தைரியத்தைத் தராத கல்வி, பள்ளி,குடும்பம், சமூகம்,அரசு... இத்தனையையும் எதிர்கொள்கிற வயசா பிள்ளைகளுக்கு?அரசுப் பாடத்திட்டம் மட்டுமல்ல மற்றப் பாடத்திட்டங்களைப் படிக்க நேர்ந்த பிள்ளைகள் நலனையும் காக்க வேண்டும்; கல்வியைப் பொறுத்த வரை பெற்றோரை நுகர்வோராகக் கருதி அவர்களைச் சமாளிக்கும் வேலையை அரசும் கல்வி அமைப்பும் செய்ய வேண்டியதில்லை,பிள்ளைகளின் மனநலம் தான் முக்கியம். முதல் ஆண்டு மருத்துவப் படிப்பில் படித்த உடற்கூறியலை ஏழாம் வகுப்பு முதல் இப்போது படிக்கின்றனர்,அதற்கேற்ப மருத்துவப் பாடத்திட்டம் முன்னேற்றப் படவில்லை; கல்லூரியில் படிக்க வேண்டியதை ஏழாம் வகுப்பில் ஏன் படிக்க வேண்டும்? வயதுக்கேற்ற கல்வி தருவது தானே நியாயம்? படிக்க எளிதான உயிரியல் இப்படி என்றால் கணக்குப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே அது தங்கள் தகுதிக்கு மீறியதாக ஒப்புக் கொள்கின்றனர்(இது நடந்த உண்மை, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை),அரை மணி நேரத் தேர்வின் கணக்கைப் போட ஆசிரியருக்கு இரண்டு மணி நேரம் ஆனதாக அவர்களே சொல்கின்றனர்,பாடமும் பெற்றோரும் தரும் அழுத்தத்தினால் தற்கொலை எண்ணம் தோன்றுவதாக மாணவர்கள் கூறுவதாக கணக்கு ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்! கல்வியில் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்புகள் பிள்ளைகள் மீது அக்கறை இருந்தால் கணக்குப் பாடத்தைக் கற்பிக்கும் அரசு,தனியார் ஆசிரியர்களிடம் அவர்கள் அடையாளத்தை வெளிக்காட்டாமல் ஒரு survey எடுக்க வேண்டும். தேர்வு முறை மட்டுமல்ல பாடத்திட்டமே பிள்ளைகளுக்குச் செய்யப்படும் அநீதி தான்! பெற்றோர் தொடர் ஓட்டப்பந்தயத்தின் அழுத்தத்தில் இருக்கின்றனர்,பிள்ளைகளை எவ்வளவு உயரத்தில் வைக்க முடியுமோ வைத்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,சேர்க்கிற காசையெல்லாம் பிள்ளைகளின் படிப்பில் முதலீடு செய்கின்றனர்..தன் பிள்ளை அதற்குள் வற்றித் தீய்ந்து காய்ந்து போயிருக்கும் என்றறியாது!600க்கு 600ம் 720க்கு 720ம் வாங்குபவர்களைக் காட்டி இந்த கல்வி, தேர்வு முறைகளை நியாயப்படுத்துபவர்களுக்கு கல்வி என்றால் என்னவென்று தெரியவில்லை என்று அர்த்தம்.பிள்ளைகளுக்கு இந்த வயதில் இழைக்கப்படும் இந்த அநீதி அவர்களுக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வரும்.ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் யாருக்குமே நிம்மதி இருக்காது.

Reply 10 0

Raja   11 months ago

உங்கள் கமெண்ட் முக்கியமான ஒன்று. இந்த கமெண்டை copy பண்ணி பலருக்கு அனுப்பினேன். இதையே நீங்கள் விரிவாக எழுதலாம். வேறு எதற்கும் செலவு பண்ணாமல், சமூக பிரச்சனைகளை பற்றி துளி கூட எண்ணாமல் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம், இல்லாவிட்டால் கடன், அடகு வைத்து ஆவது கல்விக்கு சகட்டுமேனிக்கு செலவு செய்யும் சிலராவது திருந்தலாம். அவர்களின் நம்பிக்கை வெறும் கானல் நீர் என்பதை உணர்கையில் காலம் கடந்து விடுகிறது.

Reply 4 0

Vidhya sankari    11 months ago

ஏழாம் வகுப்பில் இருந்து வருவது உடற்கூறியல் அல்ல உடலியல்(physiology) (அதுவும் முதலாண்டு மருத்துவப் பாடம் தான்).தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்.கட்டுரையின் கடைசிப் பத்தி மிக முக்கியமானது.தமிழகத்தில் எல்லோரும் மருத்துவம்,பொறியியலையே தேர்வு செய்வதற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற தரத்தில் மற்ற படிப்புகளுக்கான உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாதது முக்கியக்காரணம்.உலகில் பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள்(15ஆம் நூற்றாண்டில் இருந்தே) சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து தீவிர ஆர்வத்தால் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்கள்.இங்கு முதல் நிலை கல்வி நிறுவனங்களில் கூட ஆராய்ச்சிகளுக்கு இடமில்லை.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பாம்புவிஞ்ஞானம்ஃபேஸ்புக்ஆம் ஆத்மி கட்சிபாலியல் வல்லுறவுகூட்டுறவுபொதுத் துறை நிர்வாகிபழைய கேள்விஇந்திய தொல்லியல்சர்ச்சைப் பேச்சுவேள்விஅனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!திருநெல்வேலிசாதிப் பிரிவினைமடாதிபதிஅருஞ்சொல் தலையங்கம் சென்னை புத்தகக்காட்சிநிலக்கரிப் படுகைதனிச் சட்டங்களை சீர்திருத்துங்கள்writer balasubramaniam muthusamyமீண்டும் சோழர்கள் காலச் செழுமைக்குக் கொண்டுசெல்ல மஇந்திய அறத்தின் இரு முகங்கள்காலவதியாகும் கருதுகோள்வாழ்வியல்சென்னை சூப்பர் கிங்ஸ்எழுபத்தைந்து ஆண்டுகள்பூக்கள் குலுங்கும் கனவுகோடையில் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்நியாயப் பத்திராதமிழ்ப் பண்பாடுராஜ்பவன்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!