கட்டுரை, அரசியல், கல்வி 10 நிமிட வாசிப்பு

கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?

மு.இராமநாதன்
09 Apr 2022, 5:00 am
3

ஒரு புதிய நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது. கியூட் அதன் பெயர் (CUET - Central University Eligiblity Test). மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தகுதித் தேர்வு என்பது பொருள். இனிமேல் மத்திய பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மாணவர்கள் கால் பதிக்க வேண்டுமானால், இந்தத் தேர்வில் அவர்கள் கை நிறைய மதிப்பெண்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்துவருகிறது. இது தவிர கேட் என்றொரு நுழைவுத் தேர்வும் நடந்துவருகிறது; இது பொறியியல் முதுநிலைப் படிப்பிற்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. ஏன் இப்படியான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன?

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையானது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குப் போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது (பத்தி 4.42, பக்கம் 19). அதாவது அடுத்தகட்டமாக இந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. இந்தத் தேர்வுகள் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால், தமிழ்நாடு இந்தத் தேர்வுகளைத் தடைக்கற்களாகப் பார்க்கிறது, ஏன்?

கியூட்டின் கதை

கியூட்டில் தொடங்குவோம். இந்தியாவில் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவை ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும். இவை கலை-அறிவியல் பாடங்களில் இளங்கலையும் முதுகலையும் கற்பிக்கின்றன; ஆய்வுப் படிப்பும் உண்டு. ஜவகர்லால் நேரு (ஜேஎன்யூ), பனராஸ், அலிகார் முஸ்லிம், ஜாமியா மிலியா முதலான புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் மத்திய பல்கலைக்கழகங்கள்தாம்.

இவை அனைத்தும் இதுவரை +2 மதிப்பெண்களின் அடிப்படையிலும், கூடவே அவை நடத்திவந்த நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையிலும் அனுமதி வழங்கிவந்தன. இனி அப்படிச் செய்ய முடியாது.

நாடு முழுதும் கியூட் தேர்வு நடக்கும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். +2 பாடங்களில் 50% வாங்கியிருந்தால் போதுமானது. தமிழகத்தில் இரண்டு (சென்னை, திருவாரூர்) மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. புதுவையில் ஒன்று இருக்கிறது. தமிழக அரசு இந்த கியூட் தேர்வை எதிர்க்கிறது. வியப்பொன்றுமில்லை. நீட் (National Eligibility cum Entrance Test - NEET) தேர்வுக்கு எதிரான பல நியாயங்கள் கியூட்டுக்கும் பொருந்தும்.

நீட்டின் கதை

முதலாவதாக, தமிழக அரசும், அரசியலர்களும், கல்வியாளர்களும் மறுதலிக்கிற நீட் தேர்வை மாநிலத்தின் மீது திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

அடுத்ததாக, ஆங்கிலப் பயிற்றுமொழி வாயிலாக, நகர்ப்புறத்தில், பெரிய தனியார் பள்ளிகளில் படித்த, முக்கியமாகத் தனிப்பயிற்சி வகுப்புகளில் படிக்கும் வசதி படைத்த பிள்ளைகளால்தான் நீட் தேர்வைத் தாண்டிக் குதிக்க முடிகிறது.

மூன்றாவதாக, பள்ளித் தேர்வுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு நாடு முழுதும் ஒரே நாளில் ஒற்றைத் தேர்வு நடத்தும் முறை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பள்ளி இறுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு, இவற்றுடன் விளையாட்டு, ஓவியம், கலை, சமூகப்பணி போன்ற துறைகளில் இருக்கும் ஈடுபாடு, கட்டுரை எழுதும் திறன் முதலான பல அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

இப்படியான சர்வதேச நடைமுறைகளுக்கு மாறானது நீட். அது நுழைவுத் தேர்வு எனும் ஒற்றைச் சாளரத்தின் வழியாக மட்டுமே பிள்ளைகளை அனுமதிக்கிறது. அது நமது சமூகத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. இதற்கு சரஸ்வதி ஓர் எடுத்துக்காட்டு.

சரஸ்வதி* எனது நண்பனின் மகள், நன்றாகப் படிப்பாள். நண்பனுக்கு எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சிற்றூர். அவள் டாக்டராக வேண்டும் என்பது அவளது கனவு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவளது +2 முடிவுகள் வந்தன. அவளது படம் மலையாள நாளிதழ்களில் வெளியாகியது. அவள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். அதைப் பார்ப்பதற்கு நண்பன் இல்லை. அவனைப் புற்றுநோய் கொண்டு போயிருந்தது. 2012க்கு முன்பாக இருந்திருந்தால் அவள் சுலபமாக மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்திருப்பாள். இப்போது நீட் எழுத வேண்டும். எழுதினாள். தேற முடியவில்லை. அப்பாவின் கனவை நிறைவேற்ற ஓராண்டு தனிப் பயிற்சி வகுப்புக்கும் போனாள். அப்படியும் முடியவில்லை. கடந்த ஆண்டு சித்த மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட்டாள்.

நன்றாகப் படிக்கக்கூடிய கிராமப்புறப் பிள்ளைகளுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது சவாலாக இருக்கிறது. ஏன்? நீட் தேர்வில் கொள்குறிக் கேள்விகள் (Objective Questions) மட்டுமே இருக்கும். ஒவ்வொரு கேள்விக்குக் கீழும் நான்கு பதில்கள் இருக்கும். பதில்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும் இருக்கும். அவற்றிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கேள்வியில் பொதிந்திருக்கும் சூதும் தந்திரமும் புரிய வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் நீண்ட பத்திகள் வாயிலாகவும் வரைபடங்களின் வாயிலாகவும், கணக்குகள் வாயிலாகவும் பதிலளிப்பதில் பயிற்சி பெற்ற பிள்ளைகளுக்கு இந்தக் கொள்குறிக் கேள்விகளில் இருக்கும் கண்ணாமூச்சி புரிபடுவதில்லை.

கேட்டின் கதை

நீட் போலவே கேட் (Graduate Aptitude Test for Engineers- GATE) தேர்வுகளும் கொள்குறிக் கேள்விகளால் ஆனவை. பொறியியல் முதுநிலைப் படிப்பிற்கு இந்த கேட் வழியாகத்தான் நுழைய முடியும்.

கேட் தொடர்பான எனது அனுபவமொன்றைப் பகிர்ந்துகொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஓர் அறியப்பட்ட பொறியியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்குப் போயிருந்தேன். கல்லூரியில் முதுநிலை பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவர்களும் பங்கேற்றனர். பேராளர் பட்டியலில் அவர்களது பெயர்களும் இருந்தன. அந்த மாணவர்களில் சரிபாதி ஆந்திரர்கள். அவர்களது பெயர்களிலிருந்து அது புலனாகியது.

கருத்தரங்கை ஒருங்கிணைத்தவர் எனது ஒரு சாலை மாணவர். அவரிடம் காரணம் கேட்டேன். அவர் சொன்னார்: 'தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் பல சிறிய சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு எந்தச் சந்தை மதிப்பும் இல்லை. இந்த மாணவர்கள் தங்கள் இளங்நிலைப் படிப்பின் கடைசி இரண்டாண்டுகள் கேட் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குப் போவார்கள். இளங்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றால் (மட்டும்) போதுமானது. கேட் மதிப்பெண் மூலம் பெரிய பொறியியல் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்பில் இடம்பிடிப்பார்கள். முதுநிலை முடித்ததும் இந்தக் கல்லூரிகளின் மதிப்பை வேலைவாய்ப்புச் சந்தையில் பயன்படுத்திக்கொள்வார்கள்' என்று முடித்தார். இது கேட்டின் கதை.

கியூட் தேர்விலும் கொள்குறிக் கேள்விகள் மட்டுமே இருக்கும். இது மாதிரியான கேள்விகளில் உள்ள இன்னொரு பிரச்சினை, இவை மாணவர்களின் எழுதும் திறனுக்கு மதிப்பளிப்பதில்லை.

மருத்துவர்களும் பொறியாளர்களும்கூட தங்கள் தொழிலில் நிறைய எழுத வேண்டும். அதிலும் கலை, அறிவியல் துறைகளில் எழுத்தும் பேச்சும் முக்கியமானது. எழுதுவதற்கு முதலில் தகுதியான சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தச் சொல்லை வெல்ல பிறிதொரு சொல் இருக்கலாகாது என்கிறார் வள்ளுவர். இப்படியான சொற்களைக் கோர்த்துப் பொருள் பொதிந்த வாக்கியங்களும், வாக்கியங்களை இணைத்துத் தர்க்கரீதியிலான பத்திகளும் எழுத வேண்டும். ஆகவே, கொள்குறிக் கேள்விகளின் அடிப்படையில் மட்டும் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்குவது ஆபத்தானது. 

மீண்டும் நீட்டின் கதை

நீட் தேர்வில் இன்னும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன.

முதலாவது, கட்டணங்களில் இருக்கும் படிநிலைகள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.13,610. சுயநிதிக் கல்லூரிகளில் அரசு இடங்களும் மேனேஜ்மெண்ட் இடங்களும் ஏகதேசம் சம அளவில் இருக்கும். இதில்  அரசு இடங்களுக்கான ஆண்டுக் கட்டணம் சுமார் ரூ.4 லட்சம். மேனேஜ்மெண்ட் இடங்களுக்கான கட்டணம் இதைப் போல் மூன்று முதல் ஐந்து மடங்கு இருக்கும். இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் வெளிநாட்டு இந்தியர்களுக்கான இடங்கள் 15% வரை இருக்கும். ஓர் உள்நாட்டு மாணவர் இரவோடிரவாக ஓர் அயல்நாட்டு இந்தியரின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினால், அடுத்த நாள் அவரும் வெளிநாட்டு இந்தியராக மாறிவிடலாம். இந்த இடங்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.45 முதல் ரூ.60 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்.  ஆகவே தகுதியை நிலைநிறுத்துவதாகச் சொல்லப்படும் நீட் தேர்வுகள் அதீதமான கட்டணம் செலுத்தக்கூடியவர்களுக்கு இடம் அளிக்கிறது.

இரண்டாவதாக, இந்த நீட் சகாப்தத்தில் உருவாகும் மருத்துவர்களின் சமூக அக்கறை குறித்தும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மருத்துவம் படிக்கிற மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவார்கள். பலதரப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதனால், அவர்கள் மீது கரிசனமும் உணர்ச்சிகளைச் சமநிலையில் பேணுகிற ஆற்றலும் உருவாகும். ஆனால் இனிமேல் மருத்துவமனைப் பயிற்சி முக்கியத்துவம் இழக்கும். மருத்துவப் படிப்பு முடிந்ததும் நெக்ஸ்ட் எனப்படும் போட்டித் தேர்வு வரப்போகிறது. அதில் தேறினால்தான் பட்டம் கிடைக்கும். அடுத்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான பிஜி-நீட் தேர்வுக்கான தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும்.

இப்படித் தேர்வுகளைத் துரத்திக்கொண்டிருக்கும் மாணவர்களில் எத்தனை பேரால் கரிசனமிக்க மருத்துவர்களாக முடியும்?  இப்படிப் பணத்தை வாரி இறைக்கும் மாணவர்களில் எத்தனை பேர் சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் பணியாற்றுவார்கள்? 2015-க்கும் 2017-க்கும் இடைப்பட்ட காலத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களில் 40% பேர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள் என்கிறது ஓர் ஆய்வு (தி வீக், 17.8.2019). 

சமூகத்தில் சிறந்து விளங்கும் மருத்துவரோ, பொறியாளாரோ, ஆசிரியரோ, அறிவியலாளரோ அதிக மதிப்பெண் நேடியவர்களாக இருப்பதில்லை. அதற்கு மாணவர்கள் சமூக அக்கறை மிக்கவர்களாக வளர வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுகள் அதற்கு உதவுவதில்லை. மாறாக அந்த நோக்கத்திற்கு எதிராகவும் இயங்குகிறது.

இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. இங்கே உயர்நிலைப் பள்ளியில் தேறியவர்களில் சரி பாதிப் பேர் கல்லூரிக்குப் போகிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்கள் இந்த நிலையை எட்ட இன்னும் பல தசாப்தங்கள் ஆகக்கூடும்.

தனக்கான கல்லூரி அனுமதி நடைமுறைகளைப் பல்லாண்டு காலப் பயன்பாட்டின் வழியாகக் கண்டடைந்தது தமிழகம். ஓர் அதிகாலைப் பொழுதில் ஒன்றிய அரசு ஆட்டத்தைக் கலைத்துவிட்டு நாடு முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வைக் கொண்டுவருகிறது. இந்த நுழைவுத் தேர்வுகள் பிள்ளைகள் பள்ளித் தேர்வில் ஈட்டிய மதிப்பெண்களை நிராகரிக்கின்றன; செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன.

இந்தத் தேர்வு முறை எழுதும் கலைக்குரிய மதிப்பை வழங்குவதில்லை. இதன் வழிமுறைகள் சமூக அக்கறை உள்ளவர்களை உருவாக்க உதவுவதில்லை. ஆகவே ஒன்றிய அரசு தனது நுழைவுத் தேர்வுகளை விலக்கிக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிக்கிற பொறுப்பை முன்புபோலவே மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.

(* பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)

 

மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

நுழைவுத்தேர்வு என்பது tie breaker போல். அதையும் coaching centerகள் மூலம் கெடுத்துவிட்டார்கள். இதிலும் rote learners மட்டுமே பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவார்கள். பெற்றோர்களுக்கு பணமும் மாணவர்களுக்கு நேரமும் விரயம் ஆவதுதான் ஒரே பயன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

கண்ணியமான மொழியில் என் கோபத்தை வெளிப்படுத்த முடியாது. So no comments.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Senthilkumar   1 year ago

அருமையான கட்டுரை. இந்த தேர்வுகள் மாணவர்களின் 12 வருட படிப்பை புறந்தல்வது எவ்வகையிலும் எற்க முடியாதது. தகுதித்தேர்வு ஒரு பகுதியாக இருக்கலாம். மரு. செந்தில் குமார் M.D திருச்சிராப்பள்ளி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ் அருஞ்சொல் பேட்டிவிவியன் போஸ்ஹாங்காங்கின் 25 ஆண்டுகள்குளோபலியன்_ட்ரஸ்ட்பரவசம்சென்னை கோட்டைசமஸ் - நல்லகண்ணுஜனநாயக மையவாதம்வியக்க வைக்கும் ஹரப்ப நகரம் ‘பனவாலி’பா வகைஅ.ராமசாமி கட்டுரைஒரு ஆங்கில ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்தமிழ்நாடு பட்ஜெட் 2022லும்பனிஸம்நிதிச் சீர்திருத்தம்பாரத ஒற்றுமை யாத்திரைகல்வி நிறுவனங்கள்பெரிய மாநிலம்அண்ணாவின் ஃபார்முலாதிருமாவேலன்மும்மொழிக் கொள்கைஅருஞ்சொல் புத்தகம்மகாராஷ்டிரம்காதுவலிமாதிரிப் பள்ளிகள் திட்டம்மாநில கீதம்தமிழ் ஒன்றே போதும்ஆ.சிவசுப்பிரமணியன் புத்தகம்ஹைக்கூநிஹாங்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!