கட்டுரை, கலாச்சாரம், விவசாயம் 10 நிமிட வாசிப்பு

ஆடிப்பெருக்கின் கதை

தங்க.ஜெயராமன்
22 Jul 2022, 5:00 am
0

ஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சகஜி 1704ஆம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கில் ஒரு நாட்டிய நாடகம் அரங்கேற்றுகிறான். ‘காவிரி கல்யாணம்’ என்ற யக்ஷ்கான வகையிலான அந்தத் தமிழிசை நாட்டிய நாடகம் சகஜியே எழுதியது. காவிரிக்கும் கடலரசனுக்கும் அகத்தியர் திருமணம் செய்விப்பதாக நாடகத்தின் கற்பனை. அந்த ஆண்டு பதினெட்டாம் பெருக்கு காவிரி பிறந்த மிருகசீரிட விண்மீன் நாள். 

இந்த விவரங்களைத் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டிருக்கும் ‘ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள்’ நூலில் அதன் பதிப்பாசிரியர் வ.வேணுகோபாலன் தெரிவிக்கிறார். பதினெட்டாம் பெருக்கும், அதனோடு அந்த ஆண்டு சேர்ந்துகொண்ட காவிரி பிறந்தநாளும், அதைக் கொண்டாட ‘காவிரி கல்யாணம்’ நாட்டிய நாடகம் திருவையாறு காவிரிக் கரையில் மன்னன் முன்பாக அரங்கேறியதும் நாம் ரசிக்க வேண்டிய நிகழ்வுகள். இதையெல்லாம் வரலாறாகவோ, மதங்களோடோ இணைத்துவிட்டால் துயரம்தான்!

காவிரிப் பெண் கடலரசனோடு கலப்பதற்கு விரைகிறாள்...

எப்போதும் அப்படித்தான்! நிகழ்வுகளின் அதீதநிலையில்தான் நாடகம் பிறக்கிறது. ஆடி பதினெட்டு காவிரிக்கு அப்படியொரு நாடக அதீதம். பெண்ணாக, மணப்பெண்ணாக, புது மணப்பெண்ணாக கற்பிதம் செய்வது ஒரு கவி மரபு மட்டுமல்ல. பெண்களும் காவிரியை அப்படியேதான் காண்கிறார்கள்.

காவிரியின் முகக்களை இன்றைக்கும் நம் கண் நிறைந்த காட்சியாகும் நாள் ஆடி பதினெட்டு. நமக்கும் ஒரு நதிக்கும் உள்ள உறவு தன் உச்சத்தில் கலை அழகு கொள்வதை அன்றைய விழாவில் காணலாம். பொன் மினுக்கும் வண்டலை நிலம் பரப்பிவரும் வெள்ளம். அது பொன்னைச் சிந்தி, மணியைச் சிதறி, அகிலும் சந்தனமும் அள்ளி வருமாம். புகுந்த வீடு செல்லும் காவிரி தன் பிறந்த வீட்டுச் சீதனங்களாக இவற்றை வாரிக்கொண்டு கடலுக்குச் செல்கிறாள் என்று கவிகள் உண்டு.       

தை மாதத்திலிருந்து திருமணமானவர்கள் அந்த ஆண்டில் அதுவரை வைத்திருந்த தங்கள் மணமாலைகளைத் தம்பதிகளாகக் காவிரிக்குச் சென்று பெருகிவரும் வெள்ளத்தில் விட்டுவிடுவார்கள். சங்க இலக்கியம் நினைவுக்கு வந்தால் காதலர்களின் நீராடல் என்ற இலக்கிய மரபும் உங்கள் நினைவுக்கு வரலாம்.

 

அன்றைய தினம் மணப்பெண் தாலிகட்டிப் புடவை என்ற தன் திருமணப் புடவையில் காவிரிக்குச் செல்வார். அது காவிரித் தாயிடம் ஆசி கேட்பதுபோல் இருக்கும். புத்தம் புதிய தாலிச்சரடும், மஞ்சள் பொலியும் முகமுமாக கரை நெடுக அன்றைக்கு பெண்கள் கூட்டம் இருக்கும். புது மணப் பெண்ணுக்கு ஆடி பதினெட்டில் தாலி பிரித்துக் கோப்பது வழக்கம். நாளும் கோளும் அன்று பார்ப்பதில்லை. நல்ல நாள், நல்ல நேரம் என்பது காவிரியின் பெருக்கே. அன்று பெருகும் காவிரியைப் போல் என்றைக்குமே அவரவர்கள் வீட்டில் மங்களம் பொங்கும் என்ற நம்பிக்கை.

காவிரி என்ற ஒரு பெண் ஆயிரம் ஆயிரமாக அவதரித்து கரை பொழிவதுபோல் இருக்கும். ஆடி பதினெட்டில் அரங்கேறிய ‘காவிரி கல்யாணம்’ நாடகத்தையும் இவற்றையும் சேர்த்துத்தான் பாருங்களேன்! சித்திரை மாதம் மதுரை மீனாட்சி திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் பெண்கள் புதுத் தாலிச்சரடு அணிந்துகொள்கிறார்கள் என்பதுகூட நினைவுக்கு வரும். ஆடிப்பெருக்கில் மீனாட்சியின் இடத்தில் காவிரியை வைத்துக்கொள்வது காவிரிக் கரை தமிழர் மரபு.

முகம் பார்க்கும் கண்ணாடி    

ஆடி பதினெட்டில் வீடு கழுவி, மெழுகி மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம். தெருவுக்குச் சொல்லி, ஊரைச் சேர்த்துக்கொண்டு அன்றைக்கு குழுவாகத்தான் பெண்கள் காவிரிக் கரைக்குச் செல்வார்கள். புது வெள்ளத்தில் குளித்துக் கரையேறி ஈரப் புடவையைப் பிழிந்து கட்டிக்கொள்வார்கள். காவிரியிலிருந்து தாம்பாளத்தில் முங்கி அள்ளிய வெண் மணலால் கரையில் வாசல் வைத்து வீடு கட்டுவார்கள். நடுவில் மஞ்சளில் அல்லது மணலில் ஒரு பிள்ளையார் பிடித்து வைத்திருக்கும்.     

மணல் வீட்டுக்குள் தலை வாழை இலைபோட்டு ஒரு படையல் உண்டு. அந்த பருவத்தில் வரும் நாவல் பழம், விளாம் பழம், வெள்ளரிப் பிஞ்சு, மாம்பழம், பேரிக்காயோடு ஊறவைத்து வெல்லம் கலந்த பச்சரிசியும் காவிரிக்குப் படையலாகும். ஒரே மணல் வீட்டில் எல்லா பெண்களும் சேர்ந்துதான் இந்த வழிபாடு நடக்கும். முதிர்ந்த கட்டுக்கழுத்தி ஒருவர் எல்லாருக்குமாக வழிபாடு நடத்துவார். இப்படி காவிரிக்குக் குழு வழிபாடு நிகழ்வது பண்பாட்டில் இன்றைக்கும் தரித்திருக்கும் அரிய மரபு.

நம் வழிபாட்டு வழக்கத்தில் குழு வழிபாடு என்பது புரட்சிகரமாகக்கூடத் தோன்றும். வழிபாட்டின் முடிவில் பனை ஓலையால் ஆன சிவப்புக் காதோலையும், கருப்பு கருகமணி வளையலும் காவிரிக்கு அன்றைய நாளில் பெண்கள் தரும் அணிகலன்கள். காவிரியின் பிறந்தநாளை முன்பு குறிப்பிட்டேன். கருப்பு வளையல்களைப் பிறந்த குழந்தைக்கு பதினாறாம் நாள் அணிவிக்கும் வழக்கத்தை இது நினைவூட்டக்கூடும். பண்பாட்டு வழங்கங்களின் ஆதித் தொடர்புகளை அப்போது இருந்த வடிவிலேயே நாம் இன்றைக்கு எளிதாக ஊகிக்க இயலாது. அது பயணித்த தடங்களும் எப்போதுமே அழுத்தமாகப் பதிவதில்லை.    

கும்பிட்டு முடிந்தவுடன் பழங்களைக் காவிரி வெள்ளத்தில் வீசிவிடுவார்கள். பிறகு ஒருவருக்கொருவர் கழுத்தில் மஞ்சள் தோய்த்த சரடு அணிவிப்பார்கள். மஞ்சள் சரடு அணிந்துகொண்ட பெண்கள் கையோடு எடுத்துவந்த கண்ணாடியில் முதலில் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொள்வது ஒரு வழக்கம். அந்தப் பெண்களின் முகத்தைக் கண்ணாடியாகக்கொண்டு காவிரியும் தன் முகத்தை அங்கே பார்த்துக்கொள்வது போலிருக்கும் அன்றைய காவிரிக்கரை. காவிரி தன் முகக்களையைப் பெண்களுக்கு வழங்கி இருப்பாள். இலக்கிய நயத்தை எட்டும் முயற்சியில் இதை நான் சொல்லவில்லை. ஒரு பண்பாட்டு வழக்கம் தான் எடுத்துக்கொள்ளும் கலை வடிவத்தின் விவரங்களைச் சொல்லிவைத்தேன்.  

காவிரிக் கரையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் விளக்கேற்றி கும்பிடுவது வழக்கம். தாங்கள் கழுத்தில் மஞ்சள் சரடு அணிந்துகொண்டதுபோல் தங்கள் வீட்டு ஆண்களுக்கும் வலது மணிக்கட்டில் இந்த சரடு அணிவிப்பது உண்டு. ஆடியில் காவிரி நீர் புரண்டுவந்து வயல் வேலை துவங்கும்போது இந்த மஞ்சள் சரடை ஆண்களுக்கு அணிவிப்பது ஒரு பண்பாட்டுச் சுழற்சியின் துவக்கம். அந்த ஆண்டு விவசாய வேலைக்கு ஒரு சங்கல்பம் செய்துகொள்வது போன்ற துவக்கம் இது. ஆறு மாதங்கள் கழித்துத் தை பொங்கலின் மறு நாள் மாட்டுப் பொங்கல் முடிந்து வீடு திரும்பும் ஆண்களை ஆரத்தி எடுத்து பெண்கள் வீட்டுக்குள் அழைத்துக்கொள்வார்கள். ஆடி மாத சங்கல்பம் தை மாத விளைச்சலோடு நிறைவுபெறுகிறது. அந்த நிறைவும் கையில் காப்புக்காக மஞ்சள் சரடு கட்டிவிட்ட பெண்களாலேயே ஆரத்தியாக அடையாளப்படுகிறது.     

தண்ணீர்கண்ட இடத்தில் இப்போது காவிரியைக் கும்பிடுகிறார்கள். குளம், குட்டை, கிணறு, கை பம்பு, ஆழ்துளைக் கிணறு என்று அங்கே நீர் இருந்தாலும், அல்லது அவை நீரின் அடையாளமாகிவிட்டாலும் அந்த இடத்தில் காவிரியைக் கும்பிடுகிறார்கள். கடல் ஓரத்தில் இருப்பவர்கள் கடல் நீரில் காவிரியைக் கண்டு கடற்கரையில் காவிரியை வணங்குகிறார்கள். சிறுவர்கள் சப்பரம் கட்டி, சாமி படத்தை அதற்குள் வைத்து காவிரிக்கு இழுத்துச் செல்வார்கள்.

சில தெருக்களில் சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், தயிர் சாதம் போன்ற சித்திரான்னங்களைச் செய்து வண்டிகட்டிக்கொண்டு காவிரிக்குச் செல்வதும் இருந்தது. அங்கே பெண்களாகக் கூடியிருந்து அவற்றை உண்டு மகிழ்வார்கள். ஆற்றுக்குச் சென்றுவந்ததும் சிலர் அன்றைய நாளில் புலால் உணவும் சமைப்பது உண்டு. எப்போதாவது அமாவாசையும் அன்று சேர்ந்துகொண்டால் கவிச்சி சாப்பிடுவதில்லை. பல வீடுகளில் அன்றைக்கு வடை, பாயசத்தோடு உணவு இருக்கும். 

மணல் கூம்புகள்    

நீரும் மணலுமாக அள்ளி கரையில் ஊற்றினால் அது கூம்பு கூம்பாக வளரும். இந்த கூம்புகளை சாமியாகப் பாவித்து ஏழு கூம்புகளுக்குப் படையலிட்டு கும்பிடுவது சில இடங்களில் வழக்கம்.  

நிலத்தில் பரவி, வயலாகிய புலத்திலும் பரவி நிற்கும் காவிரி என்று பாடியிருக்கிறார்கள் புலவர்கள். காவிரிப் படுகை ஒரு புனல் நாடு என்பதற்கு ஆடி பதினெட்டு சரியான ஆதாரமாக இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அப்போது தண்ணீராகவே இருந்தது. காவிரியும் ஒரு மன அவசத்தில் விரைவதுபோலவே வெள்ளமாகச் செல்லும். சமுத்திர ராஜனான தன் கணவனைச் சேரும் அவசரம் அது என்று கவிகள் சொல்லியிருப்பது ஒன்றும் அதீத கற்பனையல்ல என்று அன்றைக்குக் கண்டுகொள்ளலாம். இத்தோடு அன்றைக்கு காவிரிக் கரைக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளையும், மஞ்சள் சரடு அணிந்துகொள்ளும் பெண்கள் கூட்டத்தையும் சேர்த்துப் பாருங்கள். காவிரியின் முகக்களை முழுதாகத் தெரியும் உங்களுக்கு. 

இவ்வளவு பெரிய கொண்டாட்டத்தில் சாமி எப்படி விலகி நிற்கும்? அந்தந்த ஊர் பெருமாளும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார். எங்கள் ஊரிலும் தீர்த்தவாரிக்கு அன்றைய நாளில் பெருமாள் காவிரிக்குச் செல்வார். ஸ்ரீரங்கத்திலும் சுவாமி அம்மா மண்டப படித்துறைக்கு தீர்த்தவாரி காணச் செல்வார். செல்வர் என்ற சுவாமியின் பிரதிமை ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி முடிந்ததும் பெருமாள் கோயிலுக்குத் திரும்புவார்.

எங்கள் ஊர் கோபாலன் கோயிலுக்குத் திரும்பியதும் அவரது நாயகி அவரை எதிர்கொண்டு அழைத்து வருவார். பிறகு கோயில் முற்றவெளியில் இருவரும் மாலை மாற்றிக்கொள்வார்கள். இருவரும் சேர்ந்தே தாயார் சன்னதி பிரகாரத்தில் ஊர்வலம் வருவார்கள். இதனோடு புது மணத் தம்பதிகள் அன்றை நாளில் காவிரிக்குச் செல்வதைச் சேர்த்துப் பாருங்கள். ஒரு பழைய பண்பாட்டு வழக்கம் எப்படியெல்லாம் புது வடிவங்களை எடுத்து மிளிர்கிறது என்பதை ஊகிக்கலாம்.   

காவிரிப் படுகையின் மையத்திலிருக்கும் திருச்சேறை என்ற ஊரில் பெருமாளுக்கு ஐந்து நாயகிகள். அவர்களுள் ஒருவர் காவிரி. தை மாதம் பூசத் திருவிழாவில் தேரிலிருந்து இறங்கிவரும் பெருமாள் காவிரி என்ற தன் நாயகியோடு மாலை மாற்றிக்கொள்வார். தி.ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’ திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டைக் கோயிலில் உள்ள பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் கல்வெட்டு ஒன்றைச் சொல்கிறது.

சிவனின் முடியில் அமர்ந்திருக்கும் கங்கை நதிக்கு தன் நாயகன் காவிரி என்ற பெண்ணிடம் மயங்கிவிடுவானோ என்று அச்சம். “காவிரி பல்லவனுக்கு உரிமையானவள்” என்று சிவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாளாம் கங்கை. வைகையும் காவிரியும் சிருங்கார கவி நளினங்களுக்குச் சுரங்கம். காவிரியின் அழகுக்கும், அதன் நீர் அரசனுக்கு முழு உரிமை என்ற அன்றைய கோட்பாட்டுக்கும் இந்த கவிதையைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும்?  

விதைக்கு அலைவதும், புது உழவு மாட்டுக்கு அலைவதும், வயலை விதை விடுவதற்கு தயார் செய்வதுமாக விவசாயிகள் மும்முரப்படும் நேரம் ஆடி பதினெட்டு. விவசாயம் என்ற மண்ணுடனான போராட்டத்தில் இறங்கும்போது காவிரியை வேண்டிக்கொள்வது இயற்கையை வேண்டிக்கொள்வதாகும். நமக்கு காவிரியோடு இருக்கும் உறவு பொருளாதார உறவு என்ற அந்த மட்டத்திலேயே நின்றுபோவதல்ல. அதைக் கடந்து சென்று அது கலையழகு பெற்ற பண்பாட்டு வழக்கமாகிறது இந்த உறவு. பொருளாதாரத்தால் வரும் மன நிறைவுக்கும் அப்பால் மனித இனம் ஒன்றைத் தேடுவதைக் காட்டுவதுதானே பெண்கள் விழாவான பதினெட்டாம் பெருக்கு!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தங்க.ஜெயராமன்

தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். மொழியியலாளர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பணியில் பங்கேற்றவர். ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com


1

3



1


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜெயமோகன் பாலசுப்ரமணியம் முத்துசாமிசவால்கள்குஜராத் மாநிலம் குஜராத் பின்தங்குகிறதுஇந்தியா என்ன செய்ய வேண்டும்?அயோத்திதாசர்கற்பூரி தாக்குர்சமஸ் கி.ரா. பேட்டிஅரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்ஆவணப்படுத்துவதில் அலட்சியம்பியூரின்மறைமுக வரிகூட்டுறவு நிறுவனங்கள்துணை தேசியம்மூன்றிலக்க சிவிவி எண்மேலும்ஜாதியும்அரசு மருத்துவமனையில் பிரசவ அனுபவம்திருநெல்வேலிபத்ம விபூஷன்வறுமைக் கோடுசினிமா நடிகர்கள்பட்டிமன்றம்அரவிந்தன்தமிழ் உரையாடல்சுட்டுச் சொற்கள்வாசிப்புக் கலாச்சாரம்தமிழ்நாடு முன்னுதாரணம்irshad hussainகாலவதியாகும் கருதுகோள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!