கட்டுரை, அரசியல், விவசாயம், சுற்றுச்சூழல் 4 நிமிட வாசிப்பு

போராட்டங்களுக்கு இடையே காவிரி விவசாயிகள்

வ.சேதுராமன்
11 Apr 2023, 5:00 am
1

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2012, ஜனவரியில் மன்னார்குடி மீத்தேன் திட்டம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் தஞ்சாவூரில் சுமூகமாக முடிந்த அதே திட்டத்துக்கான கூட்டத்தை மனதில் வைத்து, பாமணி ஆற்றை சுத்தம் செய்வதற்கான கூட்டம் என்று கூறி, நிறுவனத்தால் அழைத்து வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூலம் சுமூகமாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் கேள்விகளை மீத்தேன் எடுக்க உரிமம் பெற்ற நிறுவனம் எதிர்கொள்ள முடியாத சூழலில் அக்கூட்டம் பாதியில் முடிந்தது. அந்தக் கூட்டம்தான் காவிரிப் படுகை மக்கள் இடையே மண் வளம் மற்றும் நீர் வளத்தைக் காக்கும் போராட்டத்தின் புதிய அத்தியாயமாக அமைந்தது. 

ஒற்றை அனுமதி முறை

கடந்த பதிமூன்று ஆண்டு காலத்தில் காவிரிப் படுகை, பல்வேறு எதிர்மறைத் திட்டங்களையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ந்து சந்தித்துவந்துள்ளன. படுகையில் 3 குறுவட்டாரங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அனுமதித்து, டெண்டர் விடப்பட்ட சமீபத்திய செய்தி வெகுமக்களுக்கு தெரிந்த 48 மணி நேரத்துக்குள், திட்டத்தைத் தடைசெய்ய சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் ஒன்றிய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, டெண்டர் பட்டியலில் இருந்த தமிழ்நாட்டின் மூன்று குறுவட்டாரங்களை நீக்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது, காவிரிப் படுகையில் நிலம் மற்றும் நீர் வளத்தைக் காப்பாற்றும் முனைப்பு சரியான திசை வழியில் செல்வதை உறுதிசெய்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலக்கரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுப்பது என்பது வாழ்வாதாரத்தையும் நிலம் மற்றும் நீர் வளத்தையும் பாதிக்கும் என்று கூறபட்டாலும், 2012 செப்டம்பர் மாதம் தனியார் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதானது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம், எதிர்ப்பு துவங்கி 18 மாதங்கள் முடிந்த நிலையில் திட்டத்துக்கு தற்காலிக தடையும், வல்லுநர் குழு அமைத்து மூன்று மாதக் காலத்துக்குள் அறிக்கையும் கேட்டார். வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 26 மாதம் நடைமுறையில் இருந்த இடைக்கால தடையைக் கடந்த 2015 அக்டோபர் மாதம் நிரந்தரத் தடையாக மாற்றினார். பல சர்வதேச நாடுகளில் நிலக்கரிப் படுகை மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தடை இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அதுதான் முதல் தடையாகும். 

காவிரிப் படுகை தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், ஒன்றிய அரசு 2016ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்புக் கொள்கையில் கொண்டுவந்த மாற்றம் காரணமாக, மரபு சார்ந்த கச்சா எண்ணெய் மற்றும் நீர் - நில வளத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடிய மரபுசாரா திட்டங்களாகிய ஷேல், நிலக்கரிப் படுகை மீத்தேன், இறுக்கமான பகுதி வாயு உள்ளிட்ட திட்டங்களை ஒருசேர செய்ய வழங்கப்பட்ட ‘ஒற்றை அனுமதி’ மீண்டும் மக்கள் இடையே பதற்றத்தையும் போராட்டத்தையும் உருவாக்கியது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?

தங்க.ஜெயராமன் 24 Mar 2023

எண்ணெய் எரிவாயு எடுக்கும் வட்டாரங்களை நிறுவனங்களே அடையாளம் காட்டும் திறந்தவெளி அனுமதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ஏலம் விடப்பட்டுள்ள ஏழு சுற்று திறந்தவெளி அனுமதியில், காவிரிப் படுகை பகுதியில் மூன்று தரைப்பகுதி வட்டாரம் உள்ளிட்டு தமிழ்நாட்டில் ஐந்து இடங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும், ஒரு புதிய திட்டமாகிய ‘கண்டறியப்பட்ட சிறு மற்றும் குறு எண்ணெய் வயல்’களுக்காக இதுவரை இரண்டு சுற்று ஏலம் விடப்பட்டுள்ளது, அதில் தமிழகம், பாண்டிச்சேரி பகுதியைச் சார்ந்த நெடுவாசல் உள்ளிட்ட மூன்று இடங்கள் ஏலத்தில் விடப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட பகுதி

தமிழ்நாட்டின் பெரிய வட்டாரங்களில் எதிர்ப்புகள் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும், நெடுவாசல் கிராமத்தில் 2017 பிப்ரவரி 16இல் தொடங்கிய போராட்டம் 190 நாட்களுக்கு மேல் நீடித்தது. அந்தப் போராட்டம் மிகப் பெரிய கவனத்தைப் பெற்றது. திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று மாவட்ட ஆட்சியர் மூலம் கொடுத்த உத்தரவாத அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

பல ஆண்டுகளாகக் காவிரிப் படுகையில் கச்சா எண்ணெய் எடுப்புப் பணியின்போது விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் 2017 மே மாதத்தில் தொடங்கி பல வாரங்கள் தொடர்ந்த கதிராமங்கலம் போராட்டம் முக்கியமானது.

காவிரிப் படுகையில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் மையக் கருத்தாக முன்வைக்கப்பட்டது காவிரிப் படுகை பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மூலம் காவிரிப் படுகை பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் முழுமையாகவும், கடலூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் பட்டியலில் உள்ளது, அரியலூர், திருச்சி உள்ளிட்ட விடுபட்ட பகுதிகளை இணைக்க கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூழலில்தான் 2023 மார்ச் 29 அன்று ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரியோ, நிலக்கரிப் படுகை மீத்தேனாகவோ அல்லது நிலத்தடியில் நிலக்கரியை வாயுவாக மாற்றி எடுக்கும் திட்டத்தையோ செயல்படுத்தி கனிம வளத்தை எடுத்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மூன்று இடங்களும் காவிரிப் படுகை பகுதிக்குள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்ட வடசேரி பழுப்பு நிலக்கரி பகுதி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாரத்தைச் சேர்ந்த சேத்தியாத்தோப்பு கிழக்கு பழுப்பு நிலக்கரிப் பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி பகுதியும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் இடம்பெற்றுள்ள வடசேரி பகுதி, 2010இல் ஏலம் விடப்பட்ட மன்னார்குடி பழுப்பு நிலக்கரி பகுதியின் நீட்சி ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அறிக்கைகளில் இந்தப் பகுதி நிலத்தடியில் நிலக்கரியை வாயுவாக்கி (Underground Coal Gasification) எடுக்கும் திட்டத்துக்குச் சாதகமான இடமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி ஐரோப்பியாவின் ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதிகளில் ஆய்வுக்கு பின் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மாநில அரசின் நடவடிக்கை

இத்தகு பின்னணியில் ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பு வெளிவந்த ஒரு சில மணிநேரத்தில் மாநில அமைச்சர்கள், விவசாயத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று கூறியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினமே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதும் உணர்வுபூர்வமான செயல்பாடுகள். 

மேலும், அடுத்த நாளே சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அனைத்து கட்சியினரும் நிலக்கரி எடுப்பதற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க, மாநில தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் விரிவான உரையைத் தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும், தான் காவிரிப் படுகை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், விவசாயத்துக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும் கூறியது குறுகிய காலத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கும் செயலாகும். 

ஒன்றிய நிலக்கரி அமைச்சருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலம் வழங்கப்பட்டது. மேலும், பாஜக சார்பாக அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் திட்டத்தை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டர் மூலம் ஏலப் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளை நீக்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்றாலும்,  நிலக்கரி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளது. 

மக்களின் எதிர்பார்ப்பு

வேளாண் பகுதியில் இந்த எதிர்மறை திட்டத்துக்கு எதிராக விரைந்து செயல்பட்டதுபோல், தமிழ்நாடு அரசு வேளாண் சார்ந்த, நிலம் மற்றும் நீர் வளத்தை பாதிக்காத தொழில்களைக் கொண்டுவரும் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,000 கோடி திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக இந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம், அதற்கான கூடுதல் நிதியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். 

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யும் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாய பொருட்களைக் குறைந்த செலவில் கூடுதல் உற்பத்தி செய்வதற்கும் நவீன தொழில்நுட்பங்கள், நீர் பாசனம், நில மேம்படுத்தல் போன்றவற்றுக்கான ஆய்வு நிறுவனங்கள் அமைக்க வேண்டும். 

அதேபோல், நவீன தொழில்நுட்பத்தால் விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துவரும் சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்தும் நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்குவது போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநில அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைப்பதோடு, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கருத்துக்களையும் பெற்று செயல்படுத்த வேண்டும். 

இத்தகைய விவசாயத்தை ஊக்குவிக்கும் நேர்மறைச் செயல்பாடுகள், விவசாயத்துக்கு எதிரான எதிர்மறைச் செயல்பாடுகளை முறியடிக்கும் ஆயுதமாக இருக்கும். தமிழ்நாடு அரசு விரைவாக செயல்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி விவசாயிகள் காத்திருக்கிறோம்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?
முதல்வரே... காவிரிப் படுகையைக் கொஞ்சம் கவனியுங்கள்
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.சேதுராமன்

வ.சேதுராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர். தொடர்புக்கு: mannaisethu1@gmail.com


2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

வேகமாக வளரும் மரவகைகள் வளர்ப்புக்கு அரசுகள் முயற்சி செய்யவேண்டும். நிலக்கரிக்கு மாற்றாகவும், கட்டிட பணிகளில் இரும்பின் பயனை குறைக்கவும் பயன்படும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பேரண்டப் பெரும் போட்டிஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மைகூட்டரசுதிராவிடக் கதையாடல்அ அ அ: ஜெயமோகன் பேட்டிமதச்சார்பற்றமாஇரட்டை வேடம்சமூக அறிவியல்தேவேந்திர பட்நவிஸ்நியாண்டர்தால் மனிதர்கள்அராத்து கட்டுரைசர்வாதிகாரம் பெற சட்டம் இயற்றுவதுஎலும்பு மூட்டுஇந்தியப் பிரதமர்கள்அர்னால்ட் டிக்ஸ்அராத்துகலைஞரின் முதல் பிள்ளைதமிழ்நாடு நௌஅண்ணாகுஜராத் பின்தங்குகிறதுஓப்பிஹைதராபாத்அமைதியாக ஒரு பாய்ச்சல்ஜம்மு காஷ்மீர்குடல்வால் அழற்சிஅண்ணாவின் கடைசிக் கடிதம்அம்பேத்கர் எனும் குலச்சாமிஅரசு கட்டிடங்களின் தரம்சுவடுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!