கட்டுரை, உற்றுநோக்க ஒரு செய்தி 5 நிமிட வாசிப்பு
கல்லணையில் கரிகாலனோடு கொண்டாட்டம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மேலும் தனித்துவம் சேர்க்கும் வகையில், இந்தக் கொண்டாட்டத்தில் மேலும் வண்ணம் சேர்க்கும் பல நிகழ்வுகள் பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் சமீபக் காலத்தில் அதிகரித்துவருகின்றன. அவற்றில் ஒன்றாகக் கவனம் ஈர்க்கிறது, உலகின் உயிரோட்டம் மிக்க பழம் அணையான கல்லணையைக் கட்டிய கரிகாலச் சோழனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு. இந்த நிகழ்வின் முக்கியத்துவம் கருதி, ‘உற்றுநோக்க ஒரு செய்தி’ பகுதி வழி ‘அருஞ்சொல்’ தன் வாசகர்கள் கவனத்துக்கு இதைக் கொண்டுவருகிறது.
பொங்கல் நாளுக்கு மறுநாளில் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் உள்ள பேரரசன் கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கல் படைத்து, விருந்தைப் பரிமாறிக்கொண்டு, பழந்தமிழர் பெருமைகளையும், அவற்றின் இன்றைய பொருத்தப்பாட்டையும் பேசிக் கலையும் நிகழ்ச்சியாக இது நடக்கிறது. காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
“ஆர்ப்பரித்துவரும் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லணையைக் கட்டி, பாசனத்திற்கு நீரைப் பயன்படுத்திய பெருவேந்தன் கரிகாலன். தைப் பொங்கல் நாள் அறுவடைத் திருவிழாவாக - கால்நடைத் திருவிழாவாக - தமிழர் மரபு விழாவாக நெடுங்காலமாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த இரண்டையும் ஏன் இணைத்துக் கொண்டாடுகிறோம் என்றால், இரு விஷயங்களுமே தமிழ் மக்களுடைய தனித்துவத்தைப் பறைசாற்றுவன ஆகும். இந்த நிகழ்ச்சியிலிருந்து, கரிகாலனிடமிருந்து தமிழ்ச் சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. ‘தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கையையும் தன்மான உணர்வையும் தூக்கிப் பிடிப்பேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்வதே அது ஆகும்” என்று இந்நிகழ்வில் பேசினார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.
கல்லணையில், காவிரித் தாய்க்கும் கரிகாலனுக்கும் ராஜராஜனுக்கும் சர் ஆர்தர் காட்டனுக்கும் சிலைகள் உண்டு. யானை மீது அமர்ந்திருக்கும் கரிகாலனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பொங்கல் படையல் போடுகிறார்கள். அடுத்து, பழங்காலக் கல்லணையை அடையாளங்காட்டி, அதே இடத்தில் புதிய அணையை எழுப்பத் திட்டம் தந்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் சிலைக்கும், பேரரசன் ராஜராஜன் சிலைக்கும், காவிரித் தாய் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவுகிறார்கள். இதன் பின்னர் பழந்தமிழர் பெருமைகளையும், அவர்களுடைய இன்றைய பொருத்தப்பாடுகளையும் பற்றிப் பேசிவிட்டு, சமகாலப் பிரச்சினைகளையும் விவாதித்துவிட்டு கலைகிறார்கள்.
ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் சிலைக்கு மரியாதை
இந்த முறை மேக்கேதாட்டு அணை விவாதப்பொருள் ஆக இருந்தது. “கர்நாடகத்தில் மேக்கேதாட்டு கட்டப்பட்டுவிட்டால், மிகை வெள்ளம் என்று இங்கே ஒன்றும் வராது. இந்த அணை விவகாரத்தில் கர்நாடக ஆளுங்கட்சியான பாஜகவும், எதிர்கட்சியான காங்கிரஸும் ஒரே குரலில் பேசுகின்றன. கர்நாடகத்தின் இம்முயற்சிகளைத் தடுக்கும் எதிர் நடவடிகைகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, மேற்கண்ட அணை முயற்சிக்கு இடைக்காலத் தடை கோருவதோடு, தமிழ்நாட்டில் காவிரிக் காப்பு நாள் அறிவித்து, எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதன் மூலம் தமிழ் மக்களின் நியாயத்தையும், உணர்வையும் உலகுக்கு உணர்த்தும் முயற்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்” என்று பேசினார்கள்.
செயல்பாட்டாளர்கள் த.மணிமொழியன், நா.வைகறை, பழ.இராசேந்திரன், துரை.இரமேசு, சாமி.கரிகாலன், தனசேகர், பார்த்திபன், விஜய், இராமலிங்கம், கல்லணை குமார், இராமு, தென்னவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தஞ்சை இராமு அடிசில் உணவக உரிமையாளர்களான கைலாசம் - செம்மலர் இணையர் பொங்கல் விருந்தை அளித்தனர். இந்த விழாவை அரசின் விழாவாக, கரிகாலனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக நடத்த வேண்டும் என்று மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டமைத்த பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக்குக்குப் பல்லாண்டு காலமாக இத்தகு பொங்கல் மரியாதை செலுத்தும் மரபு அப்பகுதி மக்கள் இடையே உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
KMathavan 3 years ago
நல்ல கட்டுரை!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.