கட்டுரை, அரசியல், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு
முதல்வரே... காவிரிப் படுகையைக் கொஞ்சம் கவனியுங்கள்
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளும் சமச்சீர் வளர்ச்சி காண வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல கூட்டங்களில் பேசியுள்ளார். பொருளாதார வளர்ச்சியில் இது பொதுவாகவே விரும்பத்தக்க இலக்கு. சில பகுதிகள் வளர்ச்சியில் பின்தங்கிவிடுவது இயல்புதான். ஆனால், காவிரிப் படுகை - குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய படுகையின் கடைமடைப் பிராந்தியத்தை, அன்றைய கீழத் தஞ்சையை - வாழ்ந்து கெட்ட பகுதி என்ற ஒரு புது வகையில் வைத்துப் பார்க்க வேண்டும்.
எதற்கும் சளைத்ததல்ல கீழத் தஞ்சை!
இப்பகுதி திரங்கிப்போனது என்பதற்கு நான் புள்ளிவிவரங்கள் கொடுக்க இயலாது. இது என் மட்டிலான வெறும் அபிப்பிராயம் அல்ல. நாட்டின் பல பகுதிகளைப் பார்த்திருக்கும் ஒரு நண்பர், “மக்கள் இங்கு வளர்ச்சி குன்றியவர்களாகத் தெரிகிறார்கள்” என்றார். இன்னொருவர், “இங்கு பெரிய கட்டடங்களையே பார்க்க முடிவதில்லையே!” என்று வியப்படைந்தார். பேருந்தில் என்னோடு இருந்த ஒரு சக பயணி, “இரண்டு மணி நேரமாக ஏன் ஊர்ந்துகொண்டிருக்கிறோம்? தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் ஐம்பத்தாறு கிலோமீட்டர்தானே!” என்று நொந்துகொண்டார்.
ஒரு சிக்கலான பிரசவம் என்றால் நாகப்பட்டினத்திலிருந்து தஞ்சாவூர் விரைவது வழக்கம். விழுந்து காலை முறித்துக்கொண்டால் வசதி குறைவானவரும் எப்பாடுபட்டாவது திருவாரூரிலிருந்து கோயம்புத்தூர் செல்கிறார். ஓரளவு வசதி உள்ளவர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பதற்கு அவர்களைத் திருச்சி அல்லது அதற்கும் மேற்கே அனுப்பிவிடுகிறார்கள். இங்கு இருக்கும் மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் அலுவலர்களும், “ஆசைக்குச் சாப்பிட வேண்டுமென்றால் தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் போக வேண்டி இருக்கிறது” என்றார்கள். விரும்பி இங்கு இடமாறுதல் கேட்டுவரும் உயர் அதிகாரிகளைக் காண்பது அரிது.
இப்படி, உடல் நலம், மருத்துவம், கல்வி, போக்குவரத்துக் கட்டமைப்பு, அரசு அல்லது தனியார் முதலீடு என்று எதை எடுத்துக்கொண்டாலும் கீழத் தஞ்சை பின்தங்கிய பகுதிதான். ஆனால் நீர், நிலம், மனிதவளம் போன்றவற்றிலும் பருவ மழை, கடற்கரை போன்ற சாதகமான புவியியல் காரணிகளிலும் தமிழ்நாட்டின் சிறப்பான பகுதிகளுக்குத் கீழத் தஞ்சை சளைத்ததல்ல. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் சராசரி 83 சதம். சமூக இணக்கத்தால் வரும் நீடித்த அமைதியும் மற்ற பகுதிகளைவிட இங்கு சிறப்பாகவே உள்ளதாகச் சொல்லலாம்.
திட்ட வகுப்பில் போதாமையா?
நில உச்சவரம்புச் சட்டமும் பெருவாரியாக வெற்றிபெற்றது. ஏக்கருக்கு நெல் 1.2 டன் விளையுமா என்றிருந்த நிலைமை 1960களில் அறிமுகமான பசுமைப் புரட்சியால் இன்று சராசரி 1.8 டன் என்றானது. கீழத் தஞ்சையின் மூன்று மாவட்டங்களிலும் குறைந்தது ஏழேகால் லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. தமிழ்நாட்டின் நெல் சாகுபடி பரப்பில் இது ஏழில் ஒரு பங்குக்குக் கூடுதல். குறுவை, தாளடி, சம்பா மூன்றையும் சேர்த்துப் பார்த்தால் இங்கு விவசாயிகள் ஆண்டுதோறும் நாலாயிரம் கோடிக்கு குறையாமல் நெல் சாகுபடியில் முதலீடு செய்கிறார்கள். இது ஒரு சாகச முயற்சி என்று தெரிந்தேதான் அதில் ஈடுபடுகிறார்கள். 22 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி ஆகிறது. இது தமிழ்நாடு நெல் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கைத் தொடக்கூடும்.
இங்கு உள்ள மக்கள்தொகை ஏறத்தாழ 29 லட்சம். சதுர கிலோமீட்டருக்குச் சராசரியாக நெருக்கி அறுநூறு நபர்கள். அதாவது, தமிழ்நாட்டின் சராசரி மக்கள்தொகை அடர்த்திக்குச் சற்று கூடுதல். சாதிய கட்டமைப்பின் இறுக்கமும் காலப்போக்கில் மற்ற பகுதிகளைவிட விரைவாகத் தளர்ந்தது. கலாச்சாரரீதியாக பெரும் மரபு ஒன்றுக்குச் சொந்தமான பகுதி. பிறகு என்ன காரணத்தால் இது வளர்ச்சி குன்றிய பகுதியானது? கீழத் தஞ்சையை ஒன்றிய அரசும், மாநில அரசும் போட்டியிட்டு வஞ்சிக்கின்றன என்று சொல்ல முடியுமா? அல்லது அரசுகளின் வளர்ச்சித் திட்டப் போதாமை என்ற வழக்கமான காரணத்தைச் சொல்லலாமா?
முப்பது ஆண்டுகளாக பேரளம் - காரைக்கால், மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் வழித்தடங்களில் வண்டிகள் செல்லவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருத்துறைப்பூண்டி- வேதாரணியம் ரயில் தடத்தில் நின்றுபோயிருந்த போக்குவரத்து இப்போதுதான் சன்னமாகத் துவங்கி இருக்கிறது. பதின்மூன்று ஆண்டுகளாக போக்குவரத்து இல்லாமல் இருந்த திருவாரூர் - காரைக்குடி ரயில் தடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரேயொரு வண்டியோடு பெயரளவு பயன்பாட்டுக்கு வந்தது.
காலனிய அரசு உருவாக்கிய வசதிகளைச் சுதந்திர இந்தியா பரமரித்துக்கொள்ளக்கூட வழி செய்யவில்லை என்று கூறத் தோன்றுகிறது. திருக்குவளை வழியாக வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைபூண்டிக்கான புது ரயில் தட வேலை ஒரு மாமாங்கமாக நடந்துகொண்டிருக்கிறது. அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தன் ஊரிலிருந்து ஏழு மைல் சென்றுதான் ரயில் நிலையம் அடைய முடியும் என்ற நிலைமை மாறி தன் ஊருக்கு விரைவில் ரயில் வரப்போவதாக மகிழ்ந்திருந்தார்.
சீரற்ற போக்குவரத்து வசதி
நாகப்பட்டினம் - தஞ்சாவூர் ரயில் தடத்தில் அரை நூற்றாண்டுக்கு முன் புகை வண்டிகளுக்குக் கூடுதலாக மணிக்கு ஒரு கோச் வண்டியும் ஓடியது. இந்த ரயில் தடம் 1859ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றில் இரண்டாவது தடமாக உருவானதாக இருக்கலாம். மயிலாடுதுறை வழியாகச் செல்லும் கடலூர் - தஞ்சாவூர் ரயில் தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்ற ஐம்பது ஆண்டுகளாகவே முன்மொழிவு இருக்கிறது. மன்னார்குடிக்கும் திருத்துறைப்பூண்டிக்குமான புதுத் தடத்துக்கு 1952 வாக்கில் நில அளவை நடந்திருந்தது. பல ரயில்வே பிரிவுகளாக இருந்தவற்றைத் தொகுத்து அந்த தொகுதிகளில் ஒன்றாக தென்னக ரயில்வே அமைப்பை உருவாக்கிய அன்றை இந்திய ரயில்வே அமைச்சரும் துணை அமைச்சரும் கீழத் தஞ்சையைச் சேர்ந்தவர்கள்.
தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையை அகலப்படுத்த 2009 வாக்கில் துவங்கிய வேலை இன்னும் முடியவில்லை. இது எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி என்று எனக்கு நினைவு. முடிந்தவர்கள் பல ஆண்டுகளாக இந்தச் சாலையைத் தவிர்த்து மன்னார்குடி வழியாகத் தஞ்சை செல்கிறார்கள்.
காவிரியின் பெருங்கிளைகள் சுமார் இருபத்தைந்தும் அவற்றுக்கான வாரி, வடிகால், வாய்க்கால் என்று அரச இலையின் நரம்பாகக் கிடக்கும் இந்தப் பகுத்திக்கு வேண்டிய பாலங்களும் சாலைகளும் போதிய அளவுக்கு இங்கு இல்லை. கீழத் தஞ்சை டெல்டாவின் கடைமடை. இதன் புவி அமைப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும் சாலைக் கட்டமைப்பும் வாகன வடிவமைப்பும் தேவை. ஆனால், கீழத் தஞ்சையில் ஓடும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் அரசின் விரைவுப் பேருந்துக் கழகம் காலாவாதியானதாகக் கழித்த வண்டிகள்.
உருவாக்கப்படுமா போக்குவரத்து வசதி?
அது 1985ஆம் ஆண்டு என்று நினைவு. நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் ஆதரவில் கீழத் தஞ்சை பிரச்சினைகள் குறித்து ஒரு கூட்டத்துக்கு நானே முயன்று ஏற்பாடு செய்திருந்தேன். பல ஆண்டுகள் தலைமைச் செயலர்களாகப் பணியாற்றி அப்போது ஒய்வுபெற்றிருந்த கார்த்திகேயன், சொக்கலிங்கம் இருவருடன் ஓய்வுபெற்ற போக்குவரத்துச் செயலர் பசுபதியும் கூட்டத்தில் கலந்துகொண்டார். சொக்கலிங்கமும் பசுபதியும் கீழத் தஞ்சையைச் சேர்ந்தவர்கள். தாம்பரம் அருகில் பொன்மார் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்ட ஆட்சியராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். மூவருமே இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குப் போக்குவரத்து வசதியைக் குறிப்பாக வலியுறுத்தினார்கள். பசுபதி தன் முயற்சியில் இங்குள்ள கிராமங்களுக்கு தொலைபேசி வசதியை ஏற்பாடு செய்ததைச் சொன்னார். ஒரு பகுதியின் வளர்ச்சிக்கும் அதன் வெளி உலகத் தொடர்புக்கும் நேர்விகிதத் தொடர்பு.
அதற்கும் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கழிந்து 2009இல் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் மத்திய பல்கலைக்கழகத் துவக்க விழா திருவாரூரில் நடந்தது. விழாவில் பேசிய ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் திருவாரூருக்கு ரயில் தொடர்பு, வான்வழித் தொடர்பு இல்லை என்பதைக் குறிப்பிட்டார். பல்கலைக்கழக அமைவிடம் பற்றிய பொதுக் கருத்தாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அதன் பிறகு பதின்மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டன. அன்றைய நிலைமையிலிருந்து இப்பகுதி இன்றைக்கும் மீண்டு வரவில்லை. இப்போது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் தனக்கு ஒரு வளாகம் அமைத்துக்கொள்ளத் துவங்கி இருக்கிறது. பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்படும் பேராசிரியர்களும் மற்றவர்களும் இரண்டு நாட்கள் ரயில் பயணத்தில் செலவழித்து திருவாரூர் வந்து செல்ல சம்மதிப்பதில்லை. அமைவிடரீதியில் திருச்சிராப்பள்ளிக்கு இருக்கும் அனுகூலம் திருவாரூருக்கு இருக்காதுதான். ஆனால், அந்த குறைக்கு ஈடு செய்யும் வழியில் கீழத் தஞ்சைக்கு போக்குவரத்து வசதி உருவாக்குவது இயலாதது அல்ல.
இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு
தமிழகத்தின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?
17 Mar 2022
புதிர் நிறைந்த மக்கள் மனம்!
நாகப்பட்டினம் ரோட்டரி சங்கச் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைமைச் செயலர் சொக்கலிங்கம் தன் அனுபவம் ஒன்றை இப்படி விவரித்தார்: “சிறிய பிரச்சினையானாலும் நான் தலைமைச் செயலாராக இருந்தபோது கோயம்புத்தூர் பகுதி மக்களிடமிருந்து ஏகமாக தந்திகள் வரும். ஆனால், பெரிய பிரச்சினை என்றாலும் நம் பகுதியிலிருந்து (கீழத் தஞ்சை) ஒரு இன்லண்ட் கடிதம்கூட வந்ததில்லை.”
மக்களின் மனப்பான்மையில் பகுதிக்குப் பகுதி உள்ள வேறுபாடு என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுத் தேர்தல்களும், தன்னார்வ நிறுவனங்கள் அனைத்தும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துமே என்றும் நினைக்க முடியாது. முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஒருமுறை, ”தற்போது யார் சென்றாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் முறையீடுகளும் மனுக்களும் தருகிறார்கள்… ஜனநாயக முறையில் மக்கள் தங்களை எவ்வளவு தூரம் ஈடுபடுத்திக்கொள்ள விழைகிறார்கள் என்பதையும் இதனால் தெரிந்துகொள்கிறோம்” என்றார்.
சில தசாப்தங்களாகவே அன்றாடம் அனுபவிக்கும் போக்குவரத்து இன்னல்களைக் கீழத் தஞ்சை மக்கள் ஏன் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்வதில்லை? இவை ஏன் உரிய மட்டத்தில் பிரதிபலிப்பதில்லை? ’இதற்கெல்லாம் நிவாரணமே இல்லை, நம்மால் தீர்த்துக்கொள்ளப்படும் பிரச்சினைகள் அல்ல இவை’ என்பதாக ஒரு அவநம்பிக்கை அவர்களுக்கு வந்திருந்தால் அது சந்தடி இல்லாமல் வந்த பெரிய ஆபத்து! தமிழ்நாட்டின் வேறு பகுதிகள் இந்தப் பிரச்சினைகளை இவ்வளவு காலம் சகித்துக்கொண்டிருக்கும் என்று தோன்றவில்லை.
அரசியல் சூட்டிப்புக்குப் பெயர்போன இப்பகுதி மக்களின் இந்த மனப்போக்குதான் எனக்குப் புதிராக இருக்கிறது.
இடம்பெயர்ந்த அமைப்புகள்
இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும். எழுத்தில் உள்ள நுட்பங்களை விளக்கும் என் துறைத் தலைவர், “முறையீட்டைப் பொருத்தவரை அதைத் தெளிவாகவும் தகுந்த விவரங்களோடும் எழுதிவிட்டாலே உங்கள் பிரச்சினையில் பாதி தீர்ந்த மாதிரிதான்” என்பார். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இது உண்மை என்பது தெரியும்.
அண்மையில் கீழத் தஞ்சை போக்குவரத்துப் பிரச்சினையை கவனப்படுத்தும் நோக்கில் ரயில் மறியல் ஒன்று நடந்தது. கவனப்படுத்தும் முயற்சி இப்படி போராட்ட வடிவம் எடுப்பது மக்களாட்சியில் இயல்பு. வெகுஜனங்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களாகவே சொல்லும் எளிய வடிவங்களுக்கும் பழக வேண்டும். அவ்வாறு அவர்கள் சொல்லும்போது நிர்வாகம் அதை மதிக்கவும் பழக வேண்டும். அது மக்களாட்சியில் மக்கள் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் செயல்.
கீழத் தஞ்சையில் இருந்த அமைப்புகள் மேற்கே நகர்வது அல்லது மெல்லத் தேய்வது 19ஆம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது. முதலில் நினைவுக்கு வருவது நாகப்பட்டினத்தில் 1844இல் துவங்கி, 39 ஆண்டுகள் அங்கே இயங்கி, 1883இல் திருச்சிராப்பள்ளிக்கு இடம்பெயர்ந்த புனித சூசையப்பர் கல்லூரி. தேசிய முக்கியத்துவ தகுதி பெற்ற இந்திய உணவுப் பதனிடும் தொழில்நுட்பக் கழகம் 1967இல் திருவாரூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சோதனைக்கூடமாகத் துவங்கி 1972இல் ஒரு சிறப்பான வளர்சிக் கட்டத்தை எட்டியது.
பின்னர் 1984இல் தஞ்சாவூருக்கு இடம் மாறிய இந்த ஒன்றிய அரசின் அமைப்பு, ஆராய்ச்சி மற்று கல்வி நிலையமாக (NIFTEM –T) இப்போது அங்கே வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. திருச்சி தூவாக்குடியில் உள்ள தமிழ்நாடு பாசன மேளாண்மை பயிற்சி நிலையத்தின் (IMTI) திருவாரூர் மையம் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
17 Nov 2022
வரலாற்று பாரம்பரியம்
நான் பள்ளியில் படித்த காலத்தில் மலேசியா, சிங்கப்பூரிலிருந்து எஸ்.எஸ்.ரஜூலா, எம்.வி.சிதம்பரம் என்று இரண்டு பயணியர் கப்பல்கள் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வரும். அவற்றின் வருகை நின்றுபோனது. அங்கே இயங்கிய இரும்பு வார்ப்பு ஆலையும், பின்னர் இரும்பு உருக்கு ஆலையும் மூடப்பட்டன. இவை தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட முதல் சில ஆலைகளுள் இரண்டாக இருக்கலாம். அன்றைய காப்பி பிரியர்கள் வீட்டிலேயே உடனுக்குடன் காப்பிக் கொட்டையை வறுத்து அரைத்துக்கொள்ளும் கை இயந்திரம் நாகப்பட்டினத்தில் வார்க்கப்பட்டதை அறிவார்கள். இரும்பு வார்ப்பில் இப்பகுதிக்கு ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு.
வடபாதி மங்கலத்தில் இயங்கிய ஆரூரான் சர்க்கரை ஆலை கொல்லுமாங்குடிக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மேலத் தஞ்சைக்குச் சென்றுவிட்டது. மயிலாடுதுறைக்கு அருகில் இயங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை சில காலமாக இயங்கவில்லை. திருவாரூருக்குத் தெற்கில், திருக்குவளைச் சாலை சூரமங்கலத்தில் ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கியது. ஐந்து தாலுக்காவில் கிளைகளோடு சிறப்பாக இயங்கிய இச்சங்கம் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்திய உணவுக் கழகம் இப்பகுதியில் துவங்கிய நெல் அரவை ஆலைகள் செயல்படுவதில்லை.
திருவாரூரின் விடுபடல்கள்
நாகப்பட்டினம் சிறுதொழில் வளர்ச்சிக் கழக தொழிற்கூடங்கள், 1954 வாக்கில் துவங்கிய திருத்துறைப்பூண்டி, கொருக்கை, உம்பளச்சேரி மாட்டுப் பண்ணை என்று தேக்கநிலையில் இருப்பவற்றையும் நான் குறிப்பிட வேண்டும். எல்லா ஊர்களிலும், சிலவற்றில் ஒன்றுக்கு இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையிலும் இருக்கும் உழவர் சந்தை இன்றுவரை திருவாரூருக்கு வரவில்லை.
1970களின் துவக்கத்தில் வந்த காவிரி நவீனப்படுத்தும் திட்டத்தில் பாசனத்துக்காக பல வேலைகள் நிறைவேறின. கிராம மட்டத்தில்கூட விவசாயிகளுக்கான கதிரடிக்கும் களங்கள், வாய்க்கால் சந்திப்புகளில் பலகை செருகும் மதகுகள், கான்க்ரீட் கவணைகள் என்று கடைக்கோடி மக்கள் மீதும் அப்போது உண்மையான அக்கறை இருந்தது. ஆனால், 1986 வாக்கில் பேசப்பட்ட டெல்டா வளர்ச்சி ஆணையம் (Delta Development Authority) அந்தக் கட்டத்திலேயே மறைந்துவிட்டது. பெரும் ஆரவாரத்தோடு 2020இல் வந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்துக்குத் தொடர் நடவடிக்கை எதுவும் இல்லை.
விரைவான நடவடிக்கை தேவை
கீழத் தஞ்சைக்கு பருவ மழைக்கால வெள்ளப் பிரச்சினை ஆண்டுதோறும் வரும். தஞ்சைக்கு மேற்கிலிருக்கும் முதலைமுட்டி வாரிக்கும் இந்தப் பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்பு. இன்றைய முதல்வர் ஸ்டாலின் முதலைமுட்டி வாரியைச் சென்று பார்த்தார் என்ற நாளிதழ் செய்தியை ஒராண்டுக்கு முன்னர் பார்த்தேன். கீழத் தஞ்சை வெள்ளப் பிரச்சினை பற்றிய அரசின் வழக்கமாகிப்போன அனுகுமுறையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஒரு நம்பிக்கை வந்தது.
அந்த நம்பிக்கையின் உந்துதலால் கீழத் தஞ்சை வளர்ச்சியின் தேக்கநிலை குறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. மருத்துவம், கல்வி, சாலை மற்றும் ரயில் தொடர்பு இங்கு விரைவில் மேம்படாவிட்டால் வளர்ச்சியை எதிர்பார்க்க இயலாது. இது எல்லா பகுதிகளுக்கும் பொதுவானதுதான்.
இருந்தாலும் கீழத் தஞ்சை இந்த வகையில் மிகவும் பாவப்பட்ட பகுதி என்பதை நான் மீண்டும் சொல்ல வேண்டும். இந்த நிலைமை தொடர்வது வளர்ச்சியில் தமிழ்நாட்டு பகுதிகளுக்கிடையே விட்டோட்டம் என்ற பிரச்சினை மட்டுமல்ல. சென்ற நூற்றாண்டு முதல் கீழத் தஞ்சை பெரும் அளவில் மக்கள் இடப்பெயர்வு தொடரும் பகுதி. வெளியிலிருந்து வருபவர்களும் இங்கு நிலைப்பதில்லை. விளைவாக, எஞ்சி இருக்கும் மக்கள்தொகையின் தன்மையிலும் வேறுவகை பிரச்சினைகள் வரும் என்பதை மக்கள்தொகையியலர்கள் அறிவார்கள்.
தொடர்புடைய பதிவுகள்
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Abi 2 years ago
Kallakurichi, Villupuram district also considered as underdeveloped region.. (Kallakurichi district, Thirukoilur taluk,) in soraiyapattu village, கழிவு நீர் சாக்கடை தெருவில் ஓடி கொண்டே இருக்கும். பல ஆண்டுகளாக இது குறித்து பல PETITION போட்டும் ஒரு பயனும் இல்லை... இறுதியாக நான் அந்த ஊரை காலி செய்து விட்டு வேறு ஒரு பட்டணத்தில் குடி வந்துவிட்டேன்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.