கட்டுரை, வரலாறு, கல்வி, ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

சுவாமிநாத உடையார்: மக்கள் நேசர்

எஸ்.அன்பரசு
01 Sep 2022, 5:00 am
1

தமிழில் உள்ளூர் வரலாறுகளை எழுதும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் 'அருஞ்சொல்' ஆசிரியர் குழுவானது, 'குளோபலியன் அறக்கட்டளை'யுடன் இணைந்து அப்படி உருவாக்கியிருக்கும்  முதல் நூல் 'ஒரு பள்ளி வாழ்க்கை'. இந்திய கல்வியின் மீதான விமர்சனத்தையும், தீர்வாகக் கல்வியை உள்ளூர்மயப்படுத்துவதையும் முன்வைக்கும் இந்த நூலானது, கூடவே உள்ளூர் அளவில் பெரும் பணிகளை ஆற்றி அங்கேயே புதைக்கப்பட்டுவிட்ட ஆளுமைகள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நூலில் அப்படி இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரை இது.

ன்னார்குடி கண்ட மகத்தான அரசியல் ஆளுமைகளில் ஒருவர் சுவாமிநாத உடையார். நவீன மன்னார்குடியின் உள்கட்டமைப்புக்குப் பல வகைகளிலும் பங்களித்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்றத் தலைவர் என்று மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகள் தொடங்கி அறங்காவல் பணிகள் வரை கேந்திரமான இடங்களில் அமர்ந்து நற்பணி ஆற்றியவர்.

மன்னார்குடி மக்களால் பெரிய அளவில் நேசிக்கப்பட்டவர் சுவாமிநாத உடையார். தயாளச்சிந்தை நிறைந்தவர். சுவாமிநாத உடையாரின் புகழ் எத்தகையதாக இருந்தது என்பதைச் சொல்ல அந்தக் காலத்தில் ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. பிள்ளை இல்லாதவர்கள், ‘எங்களுடைய சொத்துகளும் நாங்கள் செய்த புண்ணியமும் உடையாரைச் சென்றடையட்டும்!’ என்று சொல்லி சாவார்கள் என்பதே அந்தக் கதை. அந்த அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர் அவர்! 

தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர் சுவாமிநாத உடையார். அவர் நகர்மன்றத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் மன்னார்குடி நகர வீதிகள் அத்தனையும் வீதி விளக்குகள் வழி இரவிலும் ஒளிரலாயின. எல்லாத் தெருக்களுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. நீர்நிலைகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சுத்தமாகப் பராமரித்ததோடு, யாரும் அவற்றை நாசமாக்கிடாத வகையில், காவலாளிகளை நியமித்து, பாதுகாத்தார். இப்படி மேற்கொண்ட ஒவ்வொரு காரியத்துக்குமான செலவில் கணிசமான தொகை அவருடைய சொந்தப் பணத்திலிருந்து செலவிடப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 

கல்வித் துறையிலும் இப்படித் தன்னுடைய முத்திரையைப் பதித்தார் சுவாமிநாத உடையார். தமிழ்நாட்டுக்கே முன்னுதாரணமாக ‘தேசிய பள்ளியின் பொற்காலம்’ என்று நாம் சொல்லும் காலகட்டத்தில் மன்னர்குடி தேசிய பள்ளியானது சுவாமிநாத உடையாரின் நிர்வாகத் தலைமையிலேயே இருந்தது. தாளாளர் சுவாமிநாத உடையார் – தலைமையாசிரியர் ஸ்ரீநிவாசன் இணைதான் அப்போது நடந்த சாதனைகளுக்குக் காரணமாக இருந்தது. தன்னுடைய தம்பிபோல  ஸ்ரீநிவாசனைப் பாவித்த சுவாமிநாத உடையார், பள்ளியின் முன்னேற்றத்துக்காக ஸ்ரீநிவாசன் முன்னெடுத்த எல்லா நல்ல காரியங்களுக்கும் பின்பலமாக நின்றார். 

எப்படி சிங்காரவேலு உடையார் - ராமதுரை ஐயர் இணை மன்னார்குடி தேசிய பள்ளியைப் பெரும் உத்வேகத்துடன் தொடங்கியதோ அதுபோலவே சுவாமிநாதன் உடையார் - ஸ்ரீநிவாசன் இணை அந்தப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மாற்றி அமைத்தது. பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சுவாமிநாதன் உடையார் செய்துகொடுத்தார்.

ஒரு பள்ளியின் தரம் அதன் ஆசிரியர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்ன சுவாமிநாத உடையார், தன்னுடைய பள்ளிக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டார். அவர் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களே அடுத்த ஐம்பதாண்டுகளுக்குப் பள்ளியை முன்னோக்கி வழிநடத்திச் சென்றார்கள். 41 ஆண்டுகள் (1952 - 1990, 1995-1998) பள்ளி நிர்வாகத்தில் இருந்த சுவாமிநாத உடையார் முக்கியமான ஓர் உதாரணத்தை மன்னார்குடியில் உருவாக்கினார். இதேபோல, கும்பகோணம் நகரப் பள்ளியிலும், பாணாத்துறைப் பள்ளியிலும் நிர்வாகக் குழுத் தலைவர் பதவியில் இருந்து பல நற்காரியங்களை மேற்கொண்டார். 

உள்ளூர் அரசியல் தலைவர்கள் எப்படித் தங்களுடைய ஊரில் கல்விக்கான வளர்ச்சியைத் தங்களுடைய கடமைகளில் ஒன்றாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்பதற்குத் தன் வாழ்க்கையையே உதாரணம் ஆக்கினார். இது அவருடைய சமகாலத்திலேயே சக அரசியலர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

மன்னார்குடியின் கல்விக்கும், கல்வி நிலையங்களுக்கும் பெரும் பங்களித்த மன்னை ப.நாராயணசாமி தன்னுடைய முன்னோடிகளில் ஒருவராக சுவாமிநாத உடையாரைக் கருதினார் (இருவரும் நேர் எதிர் அரசியல் இயக்கங்களில் அன்று இருந்தனர்). சுவாமிநாத உடையாரின் சொந்த தம்பியான சிங்காரவேலு உடையார் அவர் நகர்மன்றத் தலைவராக இருந்த காலகட்டத்தில் கல்வித் துறை சார்ந்து முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கும் அவருடைய அண்ணனே முன்னுதாரணராக இருந்தார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும் எப்படி தனிமனித உறவை ஆரோக்கியமாகப் பேணுபவராக சுவாமிநாத உடையார் இருந்தார் என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் சம்பவம் ஒன்று உண்டு. மன்னை ப.நாராயணசாமி திமுக சார்பில் தேர்தலுக்குத் தயாரானபோது எதிரே சர்வ பலம் மிக்க காங்கிரஸின் சுவாமிநாத உடையாரை அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பெரும் வசதி கொண்டவரைத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும். திமுக அப்போது வளர்ந்துவரும் கட்சி. காங்கிரஸோ மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும்  கட்சி.

தேர்தல் நிதியைத் திரட்டுவதற்காக அண்ணாவிடம் தேதி கேட்டு வாங்கிவிட்டார் மன்னை ப.நாராயணசாமி. அப்போதெல்லாம் அண்ணாவின் பேச்சைக் காசு கொடுத்து, டிக்கெட் வாங்கிக் கேட்பார்கள் மக்கள். அண்ணாவின் பேச்சுக்கு அவ்வளவு மவுசு. இப்படியெல்லாம் நிதி திரட்டித்தான் தேர்தல்களை அந்நாட்களில் திமுக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தேதி வாங்கிவிட்டாரே தவிர, இடம் அமையவில்லை. மன்னை ப.நாராயணசாமிக்கு ஒரு யோசனை. நேராக சுவாமிநாத உடையாரைச் சென்று பார்த்தார். அப்போது அவருடைய நிர்வாகத்தில் ஒரு திரையரங்கம் இருந்தது. அதில் தேர்தல் நிதிக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். சுவாமிநாத உடையார் துளியும் தாமதிக்கவில்லை. தன்னை எதிர்த்துப் போட்டியிட பலம் சேர்க்க தானே உதவுபவராக இருந்தார். பின்னாளில், சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சரானபோதும்கூட மன்னை ப.நாராயணசாமி மிகுந்த மதிப்போடு சுவாமிநாத உடையாரை அணுக இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. 

மன்னார்குடியிலும் கும்பகோணத்திலுமாக வாழ்ந்தார் சுவாமிநாத உடையார். காமராஜர் இந்த ஊர்களுக்குச் செல்லும்போது சுவாமிநாத உடையார் வீட்டில்தான் பெரும்பாலும் உணவருந்துவார். இருவருக்கும் நல்ல நட்பு உண்டு.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவந்ததில் சுவாமிநாத உடையாருக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த மருத்துவக் கல்லூரியை அங்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய பரிசுத்த நாடார் இவருக்கு நல்ல நண்பர். தஞ்சாவூருக்கு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை காமராஜரிடம் எடுத்துச் சொல்ல அவர் உடன் அழைத்துச் சென்ற நண்பர்களில் இவரும் ஒருவராக இருந்தார். காமராஜரைப் போலவே அண்ணாவும் சுவாமிநாத உடையார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒருமுறை அண்ணா ஆற்றிய உரையில் சுவாமிநாத உடையாரைப் பற்றி அவர் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்ட விஷயங்களைக் கேட்டு உள்ளூர் திமுகவினரே திகைத்துப்போயினர். "மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், உடையாரைப் பற்றிப் பேசுகையில் இதயத்தால் பேசுவதாகிவிடுகிறது அந்தப் பேச்சு!" என்றாராம் அண்ணா. 

சுவாமிநாத உடையார் ஆன்மிகத்தில் பெரும் நாட்டத்துடன் ஈடுபட்டவர். பல கோயில்களின் அறங்காவல் குழுக்களில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால், கிறிஸ்தவர்களிடமும் முஸ்லிம்களிடமும் மிகுந்த நேசத்தோடு இருந்ததோடு, அவர்களுடைய உரிமைகளுக்காகப் பேசுபவராகவும் மத நல்லிணக்கராகவும் இருந்தார். 

எல்லாவற்றினும் அவருடைய அடையாளமாக இருந்தது தயாள குணம். “தண்ணீர்க்குன்னம் பண்ணை சுவாமிநாத உடையாரின் தயாள சிந்தையாலேயே கரைந்தது” என்று சொல்வோர் ஊரில் இருந்தனர். சுவாமிநாத உடையார் அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொண்டது இல்லை. அவர் வீடு தேடிச் சென்றவர்களுக்கு, அவராலான உதவிகள் பெரும்பாலும் கிடைத்தன. 

மக்களுக்காக எவ்வளவோ சொத்துகளை இழந்தார். ஆனால், காலம் தாண்டியும் சுவாமிநாத உடையாரின் பெயர் இன்றும் மன்னார்குடி மக்களால் போற்றப்படுகிறது!

- 'ஒரு பள்ளி வாழ்க்கை' நூலிலிருந்து...

 

நூலைப் பெற அணுகவும்:

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
எஸ்.அன்பரசு

எஸ்.அன்பரசு, ஆசிரியர். தொடர்புக்கு: anbuhereforu@gmail.com2

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சமஸ் கலைஞர்மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்எப்படிப் பேசுகிறது உலகம்ராம் – ரஹீம் யாத்திரைடபுள் என்ஜின் ரயில்ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்விஹாங் ஜும்லெSuriyaபெரும்பான்மைக் குறிபாரத் ராஷ்ட்ர சமிதிசுயசார்புநிதி மேலாண்மைருவாண்டா: கல்லறையின் மீதொரு தேசம்தென்னகத்துக்கு தண்டனைசுட்டுச் சொற்கள்சில்லறை விற்பனைஓய்வுபெற்ற அதிகாரிகள்திருநாவுக்கரசர் பேட்டிகிறிஸ்தோஃப் ஜாப்ஃரிலா பீட்டருக்கே கொடு!வரி வருவாய்உத்தர பிரதேசம் பெயர் பெற்ற வரலாறு!சீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?ஆசை கட்டுரைசுதந்திரத்தின் குறியீடு மயிர்நாசிஸம்பால் தாக்கரேஎழுத்தாளர் ஜெயமோகன்மனுஷ் விமர்சனம்ஷாம்பு எனும் வில்லன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!