கட்டுரை, ஆரோக்கியம், பொருளாதாரம், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு
மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை
சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான், போதும் இனி இலங்கை வாசம் என்று லஹிரு பிரபோதா கமகே முடிவெடுக்க காரணமாக அமைந்தது.
கமகே (35) இலங்கையைச் சேர்ந்த மருத்துவர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து 2023 ஜனவரியில் பிரிட்டனில் பணிபுரியத் தொடங்கினார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 120கி.மீ தொலைவிலுள்ள ஹட்டன் நகரில் மருத்துவராக, சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இப்போது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் (என்ஹெச்எஸ்) முதுநிலை அதிகாரியாக இருக்கிறார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரம் நெருக்கடியால் விலைவாசிகள் உயர்ந்தன – 2022ஆம் ஆண்டு இறுதியில் பணவீக்க அளவு 73% ஆனது. இனி நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார் கமகே. “அது அவ்வளவு எளிதான முடிவாக இல்லை. ஆம், நாம் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். அது என்றுமே மாறாது. நான் அங்கு எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்பது முக்கியமல்ல, அதேசமயம் படிப்புக்காகவும் வாழ்க்கைச் செலவுகளுக்காகவும் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கடமையும் இருந்தது” என்கிறார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இது ஒருவரோடு முடிவுபெறும் விஷயம் அல்ல. இலங்கையின் மிகப் பெரிய அரசு மருத்துவர்கள் தொழிற்சங்கமான ‘அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் சங்க’த்தின் (ஜிஎம்ஓஏ) சொற்படி, கடந்த இரண்டு ஆண்டுகளின் சுமார் 1,700 மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள், அதற்குப் பொருளாதார காரணங்களே பிரதானம் என்கிறது அச்சங்கம். வெளியேறியவர்கள் எண்ணிக்கை மொத்த மருத்துவர்களில் 10%.
இலங்கையின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே வலுவிழந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கொழும்புக்கு தெற்கில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்பிலிப்பிட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 2 மயக்கவியல் மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிட்டதால் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இடைக்கால ஏற்பாடாக அருகில் உள்ள இன்னொரு அரசு மருத்துவமனையிலிருந்து மயக்கவியல் நிபுணர் இடம் மாற்றப்பட்டார். அவரோ மேல் படிப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.
கொழும்பிலிருந்து வடகிழக்கில் 200கி.மீ தொலைவில் உள்ள அனுராதாபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் நலப் பிரிவில் பணிபுரிந்த மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பிரிவையே தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் புலப்பெயர்வு காரணமாக, சுமார் 100 ஊரக மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருக்கின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் பதிரானாவை எச்சரித்துள்ளது ஜிஎம்ஓஏ சங்கம். இவை அனைத்தையும் தவித்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு
இயற்கை விவசாயம்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணமா?
20 Apr 2022
பணமும் இல்லை மரியாதையும் இல்லை
இலங்கையின் பண மதிப்பில் ரூ.64,000 காமேஜின் அடிப்படை சம்பளம். ஓவர்-டைம் ஊதியத்தையும் சேர்த்தால் ரூ.2,20,000.
“நான் கார் வைத்திருந்தேன், உணவு உறைவிடத்துக்கான செலவு, அதுபோக கடன் தொகை, பெற்றோருக்கானச் செலவு. இவை எல்லாவற்றுக்கும் பிறகு கையில் நிற்பது ரூ.20,000 மட்டும்தான், கேளிக்கைகளுக்காகச் சென்றால் அதுவும் மிஞ்சாது” என்கிறார் கமகே. பண நெருக்கடிகளுடன் அரசு அதிகாரிகள் மரியாதையின்றி நடத்தியதும் அவரை இந்த முடிவை எடுக்கச் செய்தது.
ஒரு சிறிய கிராமத்தில் இளநிலை மருத்துவராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தனது பணி நேரத்துக்குப் பின் சுகாதார முகாம்களை நடத்தியிருக்கிறார் கமகே. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிற மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளை அடையாளம் காணும் செயலி ஒன்றையும் உருவாக்கினார். அன்றைய அதிபர் கோதபய ராஜபக்சே, இவரது முயற்சியைப் பாராட்டி ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியை ஒரு தனியார் நிறுவனத்துக்கு லாபம் வரும்படி ஒப்பந்த அடிப்படையில் மாற்றிக் கொடுத்துவிட்டார்.
“நாங்கள் எங்கள் செயலி குறித்து கோவிட்-19 தலைமைக் குழுக்கு விளக்கவுரை அளித்தோம். அவர்கள் கவனமாக கேட்டும் குறிப்பெடுத்தும் கொண்டனர். பின்னொரு நாள், தனியார் நிறுவனம் ஒன்றுதான் இந்தச் செயலியை – சில குறைகளுடன் – உருவாக்கியது என்பதைக் கேள்விப்பட நேர்ந்தது” என்கிறார் கமகே.
கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையின் இதய நிபுணர் எராண்டா ரணசிங்கே அராச்சி (35), இலங்கையைவிட்டு வெளியேறும் முடிவை எடுக்கத் தூண்டிய மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவை, “முதலாவதாக, அடிப்படையில் பொருளாதார காரணங்கள். இரண்டாவது, நல்ல பணிச் சூழல் தேவை. மூன்றாவது, நமக்கும் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும்” என்கிறார்.
இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு
ராஜபக்ஷ குடும்பமே இலங்கை வீழக் காரணம்: கே.எஸ்.ஆர். பேட்டி
07 Apr 2022
மருத்துவ சேவைக்கு சமூகத்தில் பெரியளவில் மரியாதை கிடைக்கவில்லை, குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு இதை உணர்ந்ததாகச் சொல்கிறார்.
“கோவிட் பெருந்தொற்றின்போது மிகவும் கஷ்டபட்டோம், ஆனால் எங்களால் சாத்தியப்பட்ட வரையில் பல உயிர்களைக் காப்பாற்றினோம். கோவிட் மிகத் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த வேளையில் அதிக பணிச்சுமை காரணமாக பல நாள்கள் வீட்டுக்கூட செல்லவில்லை, என் வயதான பெற்றோருக்கும் கிருமி தொற்றிவிடுமோ என்ற பயமும்கூட. அந்த நேரத்தில் இப்படிப் பல மருத்துவர்கள் இப்படித்தான் தவித்தனர்” என்கிறார் ரணசிங்கே அராச்சி.
பெருந்தொற்றுக்குப் பிறகு அதற்கு முன்பு இருந்திராத வகையில் நாடே பெருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. உணவு, மருந்து, எரிபொருள் (பெட்ரோல், டீசல்) உள்பட பல அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, மக்கள் நீண்ட நேர வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. அதில் மருத்துவர்களும் விதிவிலக்கு அல்ல.
மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பு எரிபொருள் ஒதுக்கீடு செய்திட ஜிஎம்ஓஏ மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது, அதற்குப் பொதுவெளியில் எதிர்ப்பு கிளம்பியது. “நான் பல நாள்கள், பல மணி நேரம் வரிசையில் நின்றேன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட இத்தனை மணி நேரங்களை நான் செலவுசெய்ததில்லை – ஆனால் மக்கள் பலர் இதைக் கேட்கும் மனநிலையிலேயே இல்லை” என்றார் ரணசிங்கே அராச்சி.
ஒரு நல்ல எதிர்காலம்
உயரும் பணவீக்கம், வெளிநாட்டுக் கடன் நிலுவை, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து, உணவு ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டத்தின் உச்சமாக 2022 ஜூலை மாதம் ராஜபக்சே வெளியேற்றப்பட்டார். நிதி நிர்வாக முறைகேடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தடுமாறியது தொடர்பாக கோதபயாவும் அவரது சகோதரர்கள் மஹிந்தா ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் 2023 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
ஆனால், ரணசிங்கே அராச்சி, ஓய்வுபெற்ற பெற்றோருடன் அவரது உடன்பிறப்புகள் மூவராலும் அதுவரைக்கும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால், 2022 ஆகஸ்டு மாதம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தார் ரணசிங்கே.
“இலங்கையில் நான் நடுத்தர நிலை மருத்துவராக பணிபுரிந்தபோது, மாதம் 400 பவுண்டுகள் சம்பாதித்தேன். இதே தரத்தில் பிரிட்டன் போன்ற நாட்டில் உள்ள டாக்டர் 3,000 பவுண்டுகள் சம்பாதிப்பார்” என்கிறார் ரணசிங்கே. மேலும், அந்த நேரத்தில் கழுத்தை நெரிக்கும் பணவீக்கம் ஏற்பட்டதால் இலங்கையில் ஆன செலவும் பிரிட்டனில் ஆகும் செலவும் ஏகதேசம் ஒன்றுதான் என்கிறார்.
இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பே தனது கடனில் ஒரு பகுதியை அடைத்ததால், சற்றே சமாளித்தார். “ரூ.15 லட்சம் கடன் தொகையை ஓர் ஆண்டுக்குள் அடைத்தேன். இலங்கையில் இருந்திருந்தால், அதை நினைத்துகூட பார்த்திருக்க முடியாது” என்கிறார் கமகே.
இதன் பின்விளைவுகளை நோயாளிகளும் மருத்துவமனைகளும் எதிர்கொண்டனர். ஜிஎம்ஓஏ – மருத்துவர்கள் தொழிற்சங்கம் – மருத்துவர்களை அவர்கள் இன்னல்களிலிருந்து மீட்க முயற்சி எடுக்க வேண்டி அரசிடம் பல கோரிக்கைகளை வைத்தனர்.
“மருத்துவர்கள் நினைப்பது என்ன, அவர்கள் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர்கள் பணியும் நாட்டுக்கு செய்யும் சேவையும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இதுதான் மிக முக்கியமான பிரச்சினையாக நாங்கள் இனங்கண்டுள்ளோம்” என்கிறார் ஜிஎம்ஓஏ சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹன்சமால் வீரசூர்யா.
மேலும், சரியான தொழில் வளர்ச்சி அமைப்பு இல்லாததும் நாட்டின் தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் இருக்கும் பற்றாக்குறையும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது என்கிறார்.
சமூகத்தில் ஆழமாக புரையோடியிருக்கும் சமூகப் பாகுபாடுகளும் சில மருத்துவர்களை பாதிக்கிறது. “இலங்கையில், சில மருத்துவர்கள் ஒன்றாக உட்காரவோ அல்லது செவிலியர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ மாட்டார்கள், அங்கு, ‘தான்’ என்ற அகங்காரத்துடன் சமூகப் படிநிலை கட்டமைப்புகளும் உள்ளன. பிரிட்டனில் யாரும் முழுதாக அறியும் முன் இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதில்லை. அப்படிப் பார்ப்பது மனங்களைக் காயப்படுத்திவிடும் என்கிறார் கமகே.
இதையும் வாசியுங்கள்... 20 நிமிட வாசிப்பு
சொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடு: ஷெஹான் பேட்டி
20 Nov 2022
“இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முறை எனக்கு அலுத்துவிட்டது. பொருளாதார விஷயங்கள் போதுமான அளவுக்கு மேம்பட்டால் – பணவீக்கப் பிரச்சினை குறைந்தால் – சில மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்ப தயாராக உள்ளனர். இந்தக் குறைந்த கால இடைவெளியில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன், ஆனால் இலங்கையைப் போல் வேறொரு நாட்டைப் பார்க்க முடியவில்லை. நாட்டின் நிலைமைகள் சீராகுமேயானால், எங்கள் பணி முறையாக அங்கீகரிக்கப்படுமானால், எங்களுக்கான உரிய சம்பளம் கொடுக்கப்படுமேயானால், மீண்டும் இலங்கைக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்கிறார் ரணசிங்கே அராச்சி.
இவை அனைத்தும் விரைவாக நடக்கும் என்பதற்கான சாத்தியப்பாட்டை ரணசிங்கே அராச்சி பார்க்கவில்லை. இப்போதைக்கு வடக்கு அயர்லாந்துதான் அவரது வீடு.
© அல்ஜஸீரா
தொடர்புடைய கட்டுரைகள்
இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வருமா?
இயற்கை விவசாயம்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணமா?
ராஜபக்ஷ குடும்பமே இலங்கை வீழக் காரணம்: கே.எஸ்.ஆர். பேட்டி
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?
இலங்கை நெருக்கடிநிலை: என்ன காரணம்?
சொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடு: ஷெஹான் பேட்டி
தமிழில்: ச.ச.சிவசங்கர்
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.