கட்டுரை, ஆரோக்கியம், சர்வதேசம், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு
அரக்க மனத்தவருடன் இரவுப் பணி
பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிக் கட்டம் ஆகஸ்ட் 8இல் நிகழ்ந்தது. பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இடையிலான போட்டியில் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார். பாகிஸ்தானுக்குத் தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் அது. அந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்பதை இறுதிவரை கணிக்க முடியாததால் இரு நாடுகளிலும் லட்சக்கணக்கானவர்கள் தொலைக்காட்சியில் அதைப் பார்த்தனர்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் அந்தப் பார்வையாளர்களில் அடக்கம். அடுத்த நாள் இரவு (ஆகஸ்ட் 9) அந்த மருத்துவமனையில், உலகையே உலுக்கி எடுத்த அந்தக் கோர சம்பவம் நடந்து முடிந்திருந்தது.
இன்னொரு நிர்பயா சம்பவம்!
மருத்துவமனையில் நடந்தது என்ன என்று அடுத்த சில நாள்களில் எவருக்குமே முழுதாகத் தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் தகவல்களோ நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கின்றன. அதற்குப் பிறகு இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் மருத்துவர்கள் பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தியதுடன் இறந்த மருத்துவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். இரவு நேரமானாலும் பலர் இருக்கும்போது மருத்துவமனையில் இப்படியொரு சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று பலரும் திகைத்தனர்.
இரண்டாமாண்டு பயிலும் முதுகலை மருத்துவ மாணவியான அந்த மருத்துவர் தொடர்ந்து 36 மணி நேரம் பணியாற்றிய பிறகு களைத்துப்போய், கருத்தரங்குகள் நடைபெறும் கூடத்தில் உறங்கச் சென்றிருக்கிறார். சம்பவம் நடந்து வெகு நேரம் ஆன பிறகும்கூட அவருடைய பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. முதலில் தொலைபேசியில் தகவல் சொன்னபோது அவர்களுடைய மகள் உடல் நலமில்லாமல் இருப்பதாகத்தான் சொன்னார்கள். பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோதும் நீண்ட நேரம் மகளுடைய உடலைக்கூடப் பார்க்க முடியாமல் தடுத்து நிறுத்தியிருந்தனர். பார்க்க அனுமதித்தபோது, அவருடைய உடலின் பல இடங்களில் ரத்த காயங்களையும் கீறல்களையும் பார்த்தனர். அவருடைய மூக்குக் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டு அந்தத் துகள்கள்கூட அவருடைய முகத்தில் பதிந்திருந்தன. கண்ணிலிருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்று உடல் பரிசோதனைக்குப் பிறகு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாங்கள் சிக்கிவிடாமலிருக்க இறுதியாக கழுத்தை நெரித்தும் கொன்றுவிட்டனர். தடயங்களை அழித்துவிடும் நோக்கில் அவருடைய சடலத்தையும் எரிக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் எப்படிப்பட்ட சூழலில் வேலை பார்க்கின்றனர் என்ற உண்மை, முதல் முறையாக இதன் மூலம் ஏராளமானோருக்குத் தெரியவந்திருக்கிறது. இது கொடூரமாகவும் அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது.
பாகிஸ்தானிலும் இதே நிலை…
இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். மருத்துவர்களில் ஆண் – பெண் இருவருமே தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு வேலை வாங்கப்படுகின்றனர். மருத்துவர்கள் – மருத்துவப் பணியாளர்கள், உதவியாளர்கள் என்று எல்லாப் பதவியிடங்களிலும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதால் இப்படி அதிக நேரம் வேலை பார்க்க நேர்கிறது. பிரசவ வார்டுகளில் மருத்துவர்கள் தாங்கள் கவனிக்கத் தொடங்கிய நோயாளி பிரசவித்து மீண்டும் படுக்கைக்குப் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்படும் வரையில் உடனிருந்து சிகிச்சை தர வேண்டியிருக்கிறது.
இப்படி ஒன்றல்ல பல பிரசவங்களையும் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் மேற்கொள்ள நேர்கிறது. உதவிக்கு இன்னொரு மருத்துவர் இல்லாமல் தனியாகவே பெரும்பாலான நேரங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மருத்துவர்களுக்கு அதிலும் பெண் மருத்துவர்களுக்கு - தனி ஓய்விடம், கழிப்பறைகள்கூட கிடையாது.
அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளைப் பார்க்க உறவினர்கள், நெருக்கமானவர்கள் என்று வரம்பில்லாமல் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் நோயாளியின் உடல் நிலை, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், நோயாளியின் உடல்நிலை மோசமானாலோ, இறந்துவிட்டாலோ மருத்துவர்கள்தான் காரணம் என்று கூறி நேரடியாகவே தாக்கத் தொடங்குகின்றனர். அதற்கும் முன்னால் அவர்கள் போடும் கூச்சலும் ஆவேசமும் மருத்துவர்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன.
அவர்களுடைய தாக்குதலுக்கு மருத்துவர்கள்தான் இறுதி இலக்காகிவிடுகின்றனர். ஆண் – பெண் என்று இரு மருத்துவர்களுக்குமே இந்த நிலை என்றாலும் பெண் மருத்துவர்கள் தாக்குதலுக்கு மட்டுமின்றி அவமானகரமான செயல்களுக்கும் ஆளாகின்றனர். சாதாரண நேரங்களில்கூட வார்டுகளில் பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே இருப்பதால், நோயாளிகளின் உறவினர்களும் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களும் அத்துமீறுவதும் தொடர்கிறது.
இதையும் வாசியுங்கள்... 12 நிமிட வாசிப்பு
வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?
25 Sep 2021
என்னவாக இருக்கிறது அரசு மருத்துவமனைகள்?
கொல்கத்தா சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் காவல் துறைக்காக உதவும் தன்னார்வலர் என்பதால் மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி சென்றுவர முடிந்திருக்கிறது. பாகிஸ்தானிலும் இப்படி அரசு மருத்துவமனைகளின் எல்லா இடங்களிலும் திரியும் பலர் எவராலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று எல்லோருக்கும் அச்சுறுத்தலாகத்தான் இருக்கின்றனர்.
கொல்கத்தாவில் நடந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் காணும் முயற்சியும் தெரிகிறது. மோடி தலைமையிலான அரசு, நாட்டின் எந்தப் பகுதியிலும் மருத்துவர்கள் நன்மை கருதி எந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டையும் பெரிதாகச் செய்துவிடவில்லை என்றாலும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை அரசியல்ரீதியாக செல்வாக்கிழக்க வைக்க இதைப் பயன்படுத்துகிறது.
அதேசமயம், இதை ஒரு கட்சி அல்லது ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் என்றும் கருதிவிட முடியாது. தெற்காசிய நாடுகள் பெரும்பாலானவற்றில் அரசு மருத்துவமனைகள் என்பவை இப்படிச் சமூக விரோதிகள் எளிதில் நுழைந்து சுற்றிவரும் விதத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல்தான் இருக்கின்றன.
பெண்கள் மீதான வல்லுறவுத் தாக்குதல்கள் ஊடகங்களில் ஓரிரு நாள்கள் தீவிரமாக பேசப்பட்டு பிறகு மறக்கப்பட்டுவிடுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தங்களால் தப்பித்துவிட முடியும் என்று தெரிந்தே ஆண்கள் இதில் ஈடுபடுகின்றனர். கைதான பிறகு வழக்கு - விசாரணை என்று வந்தாலும் இறுதியாக தண்டனை வழங்க தாமதமாகிறது அல்லது சாட்சியங்கள் போதவில்லை என்று விடுதலையேகூட கிடைத்துவிடுகிறது. சமூகமும் குற்றம் செய்தவர்களை விலக்கி வைக்கத் தவறிவிடுகிறது.
அபத்தமான யோசனை
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பெண் மருத்துவர்களை இரவு நேரப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று முட்டாள்தனமான யோசனை கூறப்பட்டுள்ளது. பெண்கள் படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக் கூடாது, வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும் – அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்று காலங்காலமாக முடக்கிவைக்கப்பட்ட பெண்கள், படிக்கவும் வேலைபார்க்கவும் பெற்ற உரிமைகளை மறுப்பதற்கே இத்தகைய யோசனைகள் பயன்படும். அதற்கு மாறாக, அவர்களுடைய பாதுகாப்புக்கு என்ன செய்யலாம், தவறு செய்பவர்களை எப்படி உடனடியாக தண்டிக்கலாம் என்றுதான் யோசிக்க வேண்டும்.
போதிய மருந்துகளும் கருவிகளும் உதவிக்கு ஆள்களும் இல்லாத நிலையில்கூட நோயாளிகளின் நலன் கருதியே ஓடி ஓடி உழைத்த இளம் மருத்துவர் இரக்கற்ற முறையில் அரக்கத்தனமாக கொல்லப்பட்டிருக்கிறார். அவரை வன்புணர்வு செய்ததல்லாமல் தாங்கள் பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக தாக்கிக் கொன்ற விதம், எந்த அளவுக்கு மனிதப் பண்பே இல்லாதவர்கள் சமூகத்தில் எளிதாக நடமாடுகிறார்கள் என்பதையும் காட்டியுள்ளது.
மருத்துவமனையாக இருந்தாலும், பாதுகாப்பானது என்று கருதும் வீடானாலும் மூர்க்கத்தனமான மனித மிருகங்கள் உடனிருந்தால் பெண்களுக்கு இப்படிப்பட்ட தீங்குகளைச் செய்ய அவர்கள் தயங்க மாட்டார்கள். எந்த இடமாக இருந்தாலும் பெண்கள் தங்களுடைய கடமையை பாலியல் வல்லுறவு, தாக்குதல், மரணம் என்ற ஆபத்துகள் இல்லாமல் செய்வதற்கான நிலையை உருவாக்குவதே அரசு மற்றும் சமூகங்களின் கடமையாகும். அதை வலியுறுத்தித்தான் இந்தியா முழுவதும் மருத்துவர்களும் மருத்துவத் துறைப் பணியாளர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.
© த டான்
தொடர்புடைய கட்டுரைகள்
பில்கிஸ் பானு: நீதிதேவன் கண் திறந்தார்
அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை எங்கே?
உருவாகிறார்களா எழுத்தாளப் பார்ப்பனர்கள்?
வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?
‘அந்தரங்க’த்தைப் பணமாக்கும் சமூக ஊடகம்!
தமிழில்: வ.ரங்காசாரி
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.