பேட்டி, இலக்கியம், மொழி, சர்வதேசம் 20 நிமிட வாசிப்பு

சொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடு: ஷெஹான் பேட்டி

ஆசை
20 Nov 2022, 5:00 am
2

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசானது இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமானது. பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக இலங்கையைச் சேர்ந்தவர் என்பது மட்டும் அதற்கான காரணம் இல்லை; அவர் எழுதிய ‘த செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ நாவல் பல வகைகளில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ளும் வாழ்கையைக் கொண்டிருக்கிறது.

இலங்கையை ரத்தச் சுவடுகளால் நிரப்பிய 1980களைக் கதைக் களமாகக் கொண்ட இந்த நாவல் இலங்கையின் அனைத்து மக்கள் தரப்புகளின் துயரங்களையும் பேய்களின் உலகத்திலிருந்து சொல்கிறது. இலங்கை அரசு, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சித் தலைவர்கள், புலிகள், ஜேவிபி, பௌத்த பிக்குகள், ஐநா சபை, இந்தியாவின் அமைதிப்படை, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஆயுதத் தரகர்கள், தொண்டு நிறுவனங்கள் என்று எந்தத் தரப்பையும் ஷெஹன் இந்த நாவவில் விட்டுவைக்கவில்லை. எல்லோரது மனசாட்சியையும் குறிவைக்கும் இந்த நாவல் பேசுவது அன்பின் மொழி என்பதால் அவர் மீது யாரும் கோபம்கொள்ளவும் முடியாது.

அடிப்படையில் சிங்களரான ஷெஹான் தன்னுடைய கல்வியை இலங்கையிலும் பின்னர் நியுஸிலாந்திலும் முடித்தவர். லண்டன், ஆம்ஸ்டர்டாம், சிங்கப்பூரில் பணியாற்றியவர். புக்கர் பரிசு வென்ற பிறகு பேட்டிகள், நிகழ்ச்சிகள் என்று ஷெஹான் இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாலும் புக்கர் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள் ‘அருஞ்சொல்’லில் வெளியான அவரது புத்தகம் குறித்த மதிப்புரையைப் படித்துவிட்டு “அற்புதமான கட்டுரை” என்று நன்றி சொல்லி செய்தி அனுப்பவும் தவறவில்லை. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தனியன்பு அவருக்கு இருப்பதை இந்த உரையாடலின்போது வெளிப்படுத்தினார் ஷெஹான். ‘அருஞ்சொல்’லுக்காகப் பிரத்யேகமாக ஷெஹான் அளித்த பேட்டியின் சுருக்கமான வடிவம் இது.

இலங்கையிலிருந்து உங்களைப் போன்ற மிதப்போக்கு கொண்ட குரல்களைப் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், எந்தச் சமூகத்திலும் இதுபோன்ற குரல்கள் இன்று முக்கியத்துவத்தை இழந்துவருகின்றன. பெரும்பான்மைவாதம் சூழ்ந்த பின்னணியிலிருந்து இப்படி ஒரு பார்வையை நீங்கள் பெறுவதற்கு உங்கள் வாழ்வில் எந்த விஷயம் கருவியாக அல்லது திருப்புமுனையாக அமைந்தது?

மிதப்போக்காளர்கள் நிறைய பேர் இலங்கையில் இருந்தாலும் அவர்கள் குரல் வெளியில் கேட்பதில்லை. ஏனெனில், தீவிரப் போக்கு கொண்டவர்கள், கூச்சலிடுபவர்களுக்குதான் ஒலிப்பெருக்கிகள் கிடைக்கின்றன, மேடைகள் கிடைக்கின்றன.

என்னை நான் இப்படியானவன், அப்படியானவன் என்று அடையாளப்படுத்திக்கொள்ள உண்மையில் விரும்பவில்லை. ஆனால், இலங்கை எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் மொழிகளுக்கும் சொந்தமானது என்ற கருத்தை சர்ச்சைக்குரியதாக நான் நினைக்கவில்லை. இது எனக்கு மிகவும் இயல்பான, வெளிப்படையான விஷயமாகத்தான் தோன்றுகிறது. இந்தியாவும் எல்லா இனங்கள், மதங்கள், மொழிகளுக்குச் சொந்தமானது என்பது போலத்தான் இலங்கையும். இவையெல்லாம் மனிதர்களுக்கே உரித்தான, மிகவும் இயல்பான, உலகளாவிய கருத்துகள். இவற்றைக் குழந்தைகள்கூட உள்வாங்கிக்கொள்ள முடியும்.

நான் இந்த நாவலில் சித்தரிக்கும் காலகட்டமான 1980களில் சிறுவனாக இருந்தேன். இலங்கையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அப்போது நாங்கள் நியூசிலாந்துக்குப் புலம்பெயர்ந்துவிட்டோம். அதன் பிறகு, புதிய சூழலில் நிறையப் படிக்க ஆரம்பித்தேன். இலங்கையைப் பற்றி அதிகமாகப் படிக்க ஆரம்பித்தது கொஞ்சம் தாமதமாகத்தான். அதாவது என் முப்பதுகளில்தான். அதுதான் இந்தப் புள்ளியை நோக்கி நகர்த்திய காரணி.

உங்கள் நாவலின் நாயகன் மாலிக்கு நிறைய அடையாளங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். தமிழர், சிங்களவர், பர்கர் ஆகிய மூன்று இனங்களின் கலவை அவன். மேலும், தன்பாலின உறவாளன், போர் ஒளிப்படக்காரன், பாப் இசைக் காதலன், நாத்திகன், சூதாடி, சாத்தியங்களின் மீதும் நிகழ்தகவுகளின் மீதும் பித்துகொண்டவன். இவ்வளவு அடையாளம் இருந்தும் இறுதியில் கொத்துக்கறியாகவே மிஞ்சுகிறான். பன்முக அடையாளம் கொண்டிருந்தும் இன்று சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைக்கும் அவனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இலங்கையின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் இலங்கையில் இவ்வளவு இருள்? 

என்னுடைய நாவல் இதற்கு பதில் சொல்லியிருக்கிறதா என்று தெரியவில்லை. பலருக்கும் இதில் பல கருத்துகள் இருக்கின்றன. இலங்கை ஒரு அழகிய நாடு. கொழும்பில் இப்போது நான் இருக்கும் இந்த அறையின் கதவைத் திறந்தால் கொழும்பின் அற்புதமான பகல் பொழுது நம்மை ஆட்கொள்ளும். இலங்கை ஒரு சொர்க்க தீவுதான். ஆனாலும், இங்கே எவ்வளவு துயர இருள்!

இன்று மட்டுமல்ல, இதுவரையிலான என் வாழ்நாள் முழுவதும்.

என் கதையில் இலங்கையில் நிறைய பேய்களும் ஆவிகளும் உலவுவதாக எழுதியிருப்பேன். அது எனது கற்பனை. இது உங்கள் கேள்விக்குச் சரியான பதிலா என்று தெரியவில்லை. இப்போது 2022ஐப் பார்த்தால் நிறைய சம்பவங்கள் நடந்துவிட்டன. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது கொஞ்சம் நிலைமை ஸ்திரத்தன்மையை அடைந்துவிட்டது. ஆனாலும், நிறைய சவால்கள் நம் முன்னே இருக்கின்றன. இலங்கை என்பது ஒளியையும் இருளையும் ஒருங்கே கொண்ட நாடு. இருள் இருந்தாலும் எங்களுக்கு எதிலிருந்தும் மீளும் தன்மை உண்டு. எந்தச் சூழ்நிலையும் எங்களை நசுக்கிவிடாமல் சமாளித்துக்கொள்வோம். 

இறப்புக்கும் மறுபிறப்புக்கும் இடையிலான பார்டோ போன்ற உலகத்தைச் சித்தரிக்கும் வகையில் ஜார்ஜ் சாண்டர்ஸ் (George Saunders) எழுதிய ‘லிங்கன் இன் த பார்டோ’ (Lincoln in the Bardo) நாவலுக்கு 2017இல் புக்கர் விருது கிடைத்தது. தற்போது உங்கள் நாவலும் அதே போன்றதொரு உலகத்தைச் சித்தரிக்கிறது. ஒளிப்பட இதழியர், ரஜனி திரணகம, அழகிப் போட்டியில் வென்றவர் என்று படுகொலை செய்யப்பட்ட பலரையும் இந்த உலகத்தில் உலவவிட்டிருக்கிறீர்கள். இந்த உலகம் ஒரு அரசு அலுவலகம் போன்ற பின்னணியைக் கொண்டிருக்கிறது. இப்படியொரு களத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

நீங்கள் குறிப்பிட்டதுபோல் படுகொலை செய்யப்பட்ட எல்லோரையும் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். அவர்களுடன் தொடர்புகொள்வதற்கு என்ன உத்தியைப் பின்பற்றலாம் என்று யோசித்தேன்.  இறப்புக்குப் பிந்தைய உலகத்தைச் சித்தரிக்க இந்தச் சூழலைத் தேர்ந்தெடுத்தேன். இது உண்மையானது மட்டுமல்லாமல், வேடிக்கையானதும்கூட.

ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் உங்கள் நாவலைப் படிக்கும்போது தமிழில் செயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப்பரணி’ (12-ம் நூற்றாண்டு) என்ற படைப்புடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.  அந்தப் படைப்பிலும் பேய்கள் கதை சொல்வது போன்ற பகுதிகள் உண்டு. போரில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களைத் தின்பதற்குப் பல வகைப் பேய்கள் வரும். அதிலும் காளி வருகிறாள்; உங்கள் நாவலிலும் காளி வருகிறாள். நீங்கள் கலிங்கத்துப்பரணி பற்றி அறிந்ததுண்டா? 

ஓ… அப்படியா! கலிங்கத்துப்பரணி பற்றி எனக்குத் தெரியாது. ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தால் நான் அவசியம் வாங்கிப் படிக்கிறேன்.

என் நாவலில் நான் சித்தரித்திருக்கும் இறப்புக்குப் பிந்தைய உலகம், பேய்கள் எல்லாம் என்னுடைய கற்பனையில் உருவானவை. இவற்றுக்கான தாக்கத்தை நான் வெவ்வேறு மரபுகளிலிருந்து பெற்றுக்கொண்டேன்.

எனக்கு காளி ஒரு பெரும் புதிர். அவள் மீது பெரும் பித்து உண்டு. காளி பெரும்பாலும் எதிர்மறையாகவும் மூர்க்கமாகவுமே சித்தரிக்கப்படுபவள். காளியை வலுவான ஒரு பெண்ணிய பிம்பமாகக் கருதிய வாசிப்புகளை நான் படித்திருக்கிறேன். நாவலுக்காக இந்து மதத் தொன்மங்கள் தொடர்பாக நான் படித்தேன். ஆனால், என்னுடைய நாவலில் நான் உருவாக்கியிருக்கும் மகாகாளி வேறுபட்டவள்.   

இறப்புக்குப் பிந்தைய உலகில், நாவலின் இறுதிப் பகுதியில் டாக்டர் ராணீ (ரஜனி திரணகமவின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட பாத்திரம் இது) நாயகன் மாலிக்கு ஐந்து வகை பானங்களைக் கொண்ட கோப்பைகளைக் கொடுத்து அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார். உலகத்தையே மன்னிக்கும் மனதைத் தரும் கோப்பையைப் பரிந்துரைப்பார். அந்தக் கணத்தில் எனக்கு ஏசுவையும் காந்தியையும் ராணீ நினைவுபடுத்தினார். மிகவும் அற்புதமான கணம் அது. ஆனால், மாலி ஏன் வேறு கோப்பையை, அதாவது அவன் எங்கு போக விரும்புகிறானோ அங்கே கொண்டுசெல்லும் கோப்பையைத் தேர்ந்தெடுக்கிறான். அதை ஏன் அவன் தேர்ந்தெடுத்தான்?   

இதை நான் வாசகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அந்தக் கணம் ரொம்பவும் இயல்பாக எனக்கு வந்த ஒன்று. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பானங்கள் எல்லாம் எனக்கு ரொம்பவும் பிடித்தவை. எனக்குத் தேநீர் பிடிக்கும், போர்ட்டெல்லோ பிடிக்கும். ஒருவேளை மாலி தான் மன்னிக்கப்பட்டதாகவோ தனது கதை முடிந்துவிட்டதாகவோ நினைத்து அந்தக் கோப்பையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். என்ன வேண்டுமானாலும் விளக்கங்கள் கொடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்தக் கோப்பைகள் அனைத்தும் முக்கியமானவை.

ராஜபக்ச ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளர் என்ற குறிப்பு ஒரு இடத்தில் வருகிறது. கடந்த காலத்தில் அது ஓர் உண்மையும்கூட. ஆனால், நாவலில் அதை நீங்கள் பொருத்தியிருக்கும் இடம் புத்திசாலித்தனமானது. அமைச்சருக்கு அவரது பாதுகாவலரின் ஆவி இன்னும் பாதுகாவலராக இருப்பது நான் ரசித்த விஷயங்களுள் ஒன்று. இறப்புக்குப் பிறகும் அவரது அடிமைத்தனம் தொடர்கிறது. இந்தப் பாத்திரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?

ராஜபக்ச ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளராக இருந்தார் என்பது என் கற்பனை அல்ல. 1980களில் அவரது இளமைப் பருவத்தில், எதிர்க் கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தபோது அவர் அப்படித்தான் இருந்தார். எங்கள் நாட்டிலோ உலகெங்கிலுமோ பல விஷயங்கள் நல்ல நோக்கத்துக்காகத்தான் தொடங்கப்பட்டன என்று எனக்குத் தோன்றியது. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் எடுக்க ஒரு அடிப்படை நோக்கம் இருந்தது. எல்லாம் அகிம்சையில் தொடங்கி வன்முறையில் முடிகின்றன. ஏன் இப்படி நடக்கிறது என்று எண்ணிப் பார்க்க முயல்கிறேன். ஜேவிபியும் அப்படித்தான். ஏழை மக்களுக்கு உதவுவதற்குத்தான் அந்த இயக்கத்தைத் தொடங்கினார்கள். பிறகு விஷயங்கள் அவர்கள் கைகளை மீறிப் போய்விட்டது.

அப்புறம், அமைச்சரின் பாதுகாவலர் பாத்திரம் எனக்கு ரொம்பவும் சுவாரசியமான ஒன்றாகத் தோன்றியது. நீங்கள் அரசியல் படுகொலைகள் பலவற்றையும் பற்றி எண்ணிப் பாருங்கள். பாதுகாவலர்களும் தாங்கள் யாரைப் பாதுகாத்துக்கொண்டிருந்தார்களோ அவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் தலைவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாது. பாதுகாவலருடைய உயிரும் மதிப்பு மிக்கதுதான் இல்லையா? படுகொலை செய்யப்படுபவர் அதிபர், இவர் பாதுகாவலர் என்பதால் உயிரின் மதிப்பில் ஏதும் வேறுபாடு இருக்கிறதா என்ன? அவர்களுடைய பெயர்கள்கூட நமக்குத் தெரியாது. ராஜீவ் காந்தி படுகொலையின்போது அவருடைய பாதுகாவலர்களும் கொல்லப்பட்டார்கள் என்றுதான் சொல்வோமே தவிர அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது. அவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை. ஏதோ அவர்களின் உயிர் முக்கியத்துவம் அற்றது என்பதைப் போல. ஆனால், அவர்களின் குடும்பத்துக்கு அவர்களின் உயிர் முக்கியமானது.

நான் இதுபோன்ற விஷயங்கள் குறித்து எப்போதும் ஆய்வு செய்ய முயல்வது உண்டு. அதன் அடிப்படையில் பாதுகாவலர் பாத்திரத்தை உருவாக்கினேன். 

நீங்கள் ஒரு எழுத்தாளராகவோ இதழியராகவோ இருந்தால் உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒரு பாதுகாவலருக்கு ஒரு முக்கியமான நபரைப் பாதுகாப்பதுதான் பணி. இந்த நாவலில் வரும் பாதுகாவலர் அதில் தோற்றுவிடுகிறார். அவரை ஒரு நல்ல மனிதர் என்றோ கெட்ட மனிதர் என்றோ நீங்கள் வரையறுத்துவிட முடியாது. தனது வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அவ்வளவுதான்.   

இலங்கை தேசியத்தை அதன் தொன்மத்தைப் பற்றி விவாதிப்பதன் வழியே கேள்விக்குள்ளாக்குகிறீர்கள் அல்லவா? அரசுகளை, ஆட்சியாளர்களை விமர்சிப்பதுகூட சாத்தியம்; ஆனால் தேசியத்தை விமர்சிப்பது மிகவும் கடினம். எங்கிலும் மூர்க்கமான தேசியம்  பலம்பெற்றுவரும் காலத்தில் இதை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். எப்படி இதைச் செய்தீர்கள்?

இதை நான் சொல்வதற்காக என்னைத் தாக்குவார்கள். ஆனாலும், என்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கருத்தாக்கம் - அதாவது பெரும்பான்மைவாதம், வெற்றி பெறவில்லை, அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்றுதான் சொல்வேன்.

பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதற்கு நாங்கள் முயன்று பார்த்துவிட்டோம். 1950களில் முயன்றோம், 1960களில் முயன்றோம், 1970களில், 1980களில் முயன்றோம். இப்போதுகூட முயன்றுகொண்டிருக்கிறோம் என்று கூறலாம். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், இலங்கை என்பது முழுவதும் இலங்கையர்களால் ஆனது. அவர்கள் அனைவரும் மனிதர்கள். சிலர் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள், சிலர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள், பெரும்பான்மையினர் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். மொழியிலும் அப்படித்தான். தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகள் பேசப்படுகின்றன.

இலங்கை இந்த இனத்துக்கு மட்டும்தான், இந்த மொழிக்கு மட்டும்தான் என்று நீங்கள் சொல்லலாம்; ஆனால், இந்த அணுகுமுறை வெற்றி அடையவில்லை. நான் சொல்வதெல்லாம் இதைத்தான். எது பலனளிக்கிறதோ, எது வெற்றி தருகிறதோ அந்த அணுகுமுறையைப் பின்பற்றுங்கள்.

நான் சிங்கப்பூரில் இருந்திருக்கிறேன். அங்கே, இந்தியர்கள், சீனர்கள், மலேசியர்கள் என்று பலரும் இருக்கிறார்கள், பல மொழிகளும் பேசப்படுகின்றன. ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள். அதுதான் சிங்கப்பூரின் இயல்பான, அடிப்படையான அமைப்பு. சிங்கப்பூரின் முக்கிய நோக்கம் அங்கே தொழில், வணிகம் நன்றாகவும் முறையாகவும் நடைபெற வேண்டும் என்பதே. அதற்காகத்தான் அவர்கள் அறியப்படுகிறார்கள். இந்த நல்லிணக்கம் குலைந்தால் தொழில் வளர்ச்சியும் குலைந்துவிடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே, நல்லிணக்கம் சீரழிக்கப்படுவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

கிரிக்கெட்டைப் பாருங்கள். இலங்கை கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரனைக் கொண்டுவந்தது எவ்வளவு மிகுந்த பலனை அந்த அணிக்கு அளித்தது. அதுவும் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில். அதுபோன்ற முயற்சிகள், எண்ணங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. ஆகவே, இலங்கைக்கு எது நன்மையும் வெற்றியும் தருமோ அதைச் செய்வோமே. இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்!       

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மனிதக் கசாப்புக் களத்தின் மாய-யதார்த்த நாவல்

ஆசை 30 Oct 2022

போரின் நடுவே இறந்த குழந்தையை ஏந்தியிருக்கும் தாய், வெடிப்புத் துணுக்குகள் உடலில் பாய்ந்திருப்பதால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கிழவர், ஒரு நாய் என்று மூவருக்கும் நாயகன் மாலி சயனைடு குப்பிகளைத் தரும் தருணம்தான் நாவலிலேயே எனக்கு மிகவும் பயங்கரமான தருணமாகத் தோன்றியது. ஒருவர் சாவதற்கு உதவுவது என்றால் வாழ்வதற்கு நம்பிக்கை தரும் எதுவும் அவருக்கு அந்தச் சூழலில் இல்லை என்பதுதானே அர்த்தம்…?

உலகின் எல்லா இடங்களிலும் அப்படித்தான் என்றாலும், இலங்கையில் சிலருக்கு வாழ்வதைவிட சாவதே மேல் என்று நினைக்கக்கூடிய அளவுக்குக் கொடுமையான துயரம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சிலரைப் பொறுத்தவரை அதற்கு மேலும் வாழ முடியாத அளவுக்கு மிகவும் பயங்கரமானதாக வாழ்க்கை இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் கணத்திலும் அப்படித்தான். நாவலில் இந்த இடத்தில் மாலி கொலை செய்யவில்லை, அது கருணை அடிப்படையிலான செயல். துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கானது. புத்த மதமும் அதைத்தான் சொல்கிறது. துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீங்கள் சில விஷயங்களைச் செய்தாக வேண்டும் என்கிறது. என்னைப் பொறுத்தவரை அது அந்தக் கணத்தின் சத்தியம்.

இலங்கையின் எதிர்காலம் குறித்து உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

என் குழந்தைகள் இங்கே வளர்கிறார்கள், என்னுடைய குடும்பத்தின் பெரியவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆகவே, இலங்கை ஒரு அழகான நாடாக, நாங்களெல்லாம் மகிழ்ச்சியாகவும் வளத்துடனும் இருக்கக் கூடிய நாடாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். பல முறை புது அரசுகளுக்கு நாங்கள் வாக்களிக்கிறோம். அவர்களும் நிறைய வாக்குறுதி தருகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மேலும் மோசமாகிறது. நாங்கள் போராடுகிறோம். போர்களை முடிவுக்குக் கொண்டுவருகிறோம். புதிய போர்களைத் தொடங்குகிறோம். அதுதான் என்னை மேலும் துயரத்துக்குள்ளாக்குகிறது.

இந்த நாவலின் நாயகன் மாலியைப் போல நான் ஒரு சூதாடி அல்ல. அவனைப் போல் இருந்திருந்தால் நான் இலங்கையின் மீது பந்தயம் கட்டுவேனா என்று தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் வீதிகளிலும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் இலங்கையின் இளைய தலைமுறை மேற்கொண்ட போராட்டங்களைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. எங்களுக்கு முந்தைய தலைமுறையினர் எங்களுக்குக் கையளித்துவிட்டுப் போன எண்ணங்கள், சித்தாந்தங்கள் தற்போதைய இளைஞர்களிடம் கிடையாது என்பது நல்ல விஷயம். தங்களால் ஏதும் செய்ய முடியும் என்ற உணர்வு அவர்களிடம் இருக்கிறது. அதுதான் எனக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது. 

இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி... தமிழ் மொழியானது தொடர்ந்து புறக்கணிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டிருக்கிறது. ஆகவேதான், சர்வதேச மேடைகளில் தமிழ் ஒலிக்கும்போது எங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது. ஆஸ்கர் வென்றபோது ஏ.ஆர்.ரஹ்மான். புக்கர் பரிசு மேடையில் நீங்கள். உங்கள் உரையைத் தமிழில் முடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது ஏன்?

எனக்குத் தமிழ் பேசத் தெரியாது என்பதை நினைத்து நான் வெட்கப்பட வேண்டும். இலங்கையில் வளர்ந்தேன். ஆங்கிலம் பேசுவேன். என் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய அளவு இல்லாவிட்டாலும் சிங்களம் பேசுவேன். இப்போதுதான் தமிழ் கற்றுக்கொள்கிறேன்.

இலங்கையைப் பற்றிய நாவல் எழுத வேண்டும் என்றால் அதில் பேசப்படும் மொழிகளில் பரிச்சயம் வேண்டும். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். புக்கர் பரிசு விழாவில் பேசிய உரையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நாம் பரிசு வெல்வோம் என்று தெரியாது. அப்படி வெல்லும்போது உங்களுக்கென்று சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கும். அங்கே போய் திடீரென்று யோசித்துப் பேசிவிட முடியாது.

எல்லா இலங்கையர்களுக்கும் சேர்த்து நான் பேச நினைத்தேன். ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் கொழும்பு நகரைச் சேர்ந்த, ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்க இலங்கையர்களுக்கான செய்தியாக அது மாறிவிடும். எனது உரை என்பது எங்களைப் போன்ற ஆங்கிலம் பேசும் இலங்கையர்களுக்கானது அல்ல. வெவ்வேறு மொழிகள் பேசும் இலங்கையின் அனைத்துக் கதைசொல்லிகளுக்குமானது. ஆகவேதான், எது அலுவல் மொழி எது அலுவல் மொழியல்ல என்றெல்லாம் பார்க்காமல் சிங்களம், தமிழ் என்று இலங்கையில் பேசும் அனைத்து மொழிகளிலும் உரையாற்ற விரும்பினேன். எனக்குத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் பேசும் மொழிகள் இவை. எனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.   

ஈழத் தமிழ் இலக்கியம் ஏதும் உங்களுக்குப் பரிச்சயம் உண்டா?  ஷோபாசக்தியின் எழுத்துகளைப் படித்திருக்கிறீர்களா? உங்கள் நாவலைப் படிக்கும்போது எனக்கு ஷோபாசக்தியின் எழுத்துகள் நினைவுக்கு வந்தன என்பதால் கேட்கிறேன்...

நான் ஷோபாசக்தி குறித்துக் கேள்விபட்டிருக்கிறேன். நிச்சயம் படிக்கிறேன்.

தங்கள் எழுத்தாளர்களுக்கு முக்கியமான பரிசுகள் கிடைக்கும்போதோ அவர்கள் படுகொலை செய்யப்படும்போதோ தாக்கப்படும்போதோ இந்திய அரசும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்வதில்லை. கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கர் பரிசு கிடைத்தபோதும் சல்மான் ருஷ்தி தாக்கப்பட்டபோதும் அப்படித்தான். உங்கள் நாட்டை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது விருது கிடைத்திருக்கிறது. இலங்கையர்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது?

புக்கர் பரிசு வென்ற பிறகு இலங்கையர்கள் பெரும்பாலும் என்னை அன்பினால் திக்குமுக்காடவே செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு தற்போது இருக்கும் இக்கட்டான தருணத்தில் இந்த விருது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இலங்கையர்களுக்குக் கிடைத்திருக்கிறது. நிறைய பேரிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிகின்றன. இருந்தாலும் சிலர், அவர்களை நான் சிறுபான்மை எண்ணிக்கை என்றே சொல்வேன், என்னை துரோகி என்று முத்திரை குத்தவும் செய்கின்றனர்.

சரிதான், உங்கள் சொந்த நாடு குறித்து விமர்சித்தீர்கள் என்றால் துரோகி என்றுதான் அழைக்கப்படுவீர்கள். அதை ஒன்றும் செய்ய முடியாது. எல்லோரும் எல்லா புத்தகங்களையும் விரும்புவார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லிவிட முடியாது இல்லையா? இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நான் பல தடவை சொல்லிவிட்டேன். ஒருவர் தன் நாட்டை விமர்சிப்பது என்பது தேசத் துரோகம் கிடையாது, அது அந்த நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடு. நீங்கள் உங்கள் நாட்டை நேசிப்பதால்தான் அதன் குறைகளை விமர்சிக்கிறீர்கள், இல்லையென்றால் நீங்கள் பாட்டுக்கும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டுக்குச் சென்றுவிடுவீர்கள். ஆகவே, இலங்கை மீதான அன்பின் அடிப்படையில்தான் அதை நான் விமர்சிக்கிறேன்!

உங்களுடைய அடுத்த நாவல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தைப் பற்றியதா?

இல்லை. எனது முதல் நாவல் கிரிக்கெட்டைப் பற்றியது. அதற்குப் பிறகு விளையாட்டு தொடர்பாக எழுதுவதற்கு நிறைய பேர் கேட்டார்கள். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்; ஆனால், விளையாட்டில் பெரிய வல்லுநர் இல்லை. ஆகவே அடுத்த நாவலை அதிலிருந்து வேறுபட்டதாக எழுத நினைத்தேன். அது போர், பேய்கள், ஆவிகளின் உலகமாக அமைந்தது. எனது அடுத்த புத்தகம் போர் குறித்ததாக இருக்காது. தீவிரமான விஷயங்களிலிருந்து விலகி ஒரு நாவல் எழுதலாம் என்று இருக்கிறேன். பின்னாளில் வேண்டுமானால் போர் குறித்த கருப்பொருளுக்கு நான் வரக்கூடும்! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

மனிதக் கசாப்புக் களத்தின் மாய-யதார்த்த நாவல்

ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


2

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   10 months ago

Asai's article on the book-The Seven Moons of Maali Almaida and the interview with its author Shehan Karunatilaka give a good introduction to the Booker prize winning novel. Arunchol deserves appreciation for this initiative to revisit the book in the context of the present situation prevailing in Sri Lanka and the responses of the people there. In my opinion, Shehan's decision to write on Maali's after-death encounters in the imaginary world is borne out of his understanding the people of his country and their super-natural beliefs.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Senthilkumar   10 months ago

அமைதியின் மீது அக்கறையுள்ள, எழுத்தாளரின் பேட்டி. நாவலை வாசிக்கத் தூண்டுகிற.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வல்லரசு நாடுஇருமொழிக் கொள்கைதிருநெல்வேலி அரசு மருத்துவமனைசாகுபடிதாகூர்சமஸ் முரசொலிமுன்னெடுப்புஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்ஹவுஸ் ஹஸ்பெண்ட் நகரங்களும்நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்அணிவதாவாட் வரிபத்திரிகையாளர் ரோஷன் கிஷோர்சித்தாந்த முரண்தனிப்பாடல்கள்ராஜன் குறை கிருஷ்ணன் உதயநிதி ஸ்டாலின் கட்டுரைரத்தசோகைசர்வாதிகாரம்தெய்ஷிட்சுஜாமீன் மனுநகரமாஆஃப்கன்வடகிழக்குபைத்தியக்காரத்தனங்கள்அரசு கட்டிடங்களின் தரம்பழைய ஓய்வூதிய திட்டம்பழங்குடி கிராமம்அமரத்துவம்வயிற்றில் அடிக்கிறார்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!