கட்டுரை, பொருளாதாரம், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

ஆர்.ராமகுமார்
01 Apr 2022, 5:00 am
2

கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்த நெருக்கடிக்கான மூல காரணத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காலனியாக இருந்த காலகட்டத்திலிருந்தும்,  உள்நாட்டுப் போருக்குப் பிறகும்கூட நாட்டின் வளர்ச்சி முயற்சிகளில் நடந்த தவறுகள் வரையிலும் எழுதலாம் என்றாலும், நம்முடைய தேவைகளுக்காக, கடந்த பத்தாண்டுகளில் இலங்கை அரசு எடுத்த முடிவுகள் - நடந்த சம்பவங்கள் பற்றி மட்டும் அதிகக் கவனம் செலுத்துவோம்.

21ஆம் நூற்றாண்டில்கூட இலங்கையின் பொருளாதார எதிர்காலம் தேயிலை, ரப்பர், ஏலம் – மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியைச் சுற்றியே தொடர்ந்து பிணைந்திருக்கிறது. தேயிலை – ரப்பர் போன்ற பிரதான பொருள்களின் ஏற்றுமதி, சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம், வெளிநாடுவாழ் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த வருமானம் ஆகியவற்றின் மூலமே அது தனக்குத் தேவைப்பட்ட அன்னியச் செலாவணியைப் பெற்றுவந்தது. அந்த அன்னியச் செலாவணியைக் கொண்டுதான் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டது.

இருபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் அதுவரை அடக்கிவைத்திருந்த நுகர்வுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முற்படுவர் என்பதால் பொருளாதாரம் வளரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் 2009 முதல் 2012 வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) ஆண்டுக்கு 8%-9% ஆக உயரவும்செய்தது.

2013-க்குப் பிறகு உலக அளவில், பண்டங்களுக்கான சந்தை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் இலங்கையின் பொருளாதாரமும் வீழ்ந்தது, ஏற்றுமதி மந்த கதியை அடைந்தது, இறக்குமதி அதிகரித்தது.

2013-க்குப் பிறகு ஜிடிபியானது முன்பிருந்ததில் பாதியாகக் குறைந்துவிட்டது. மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) 2009இல், 260 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் வாங்கியபோது ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் காரணமாக, இந்த வீழ்ச்சிக்கு எதிராக மாற்றுப் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க முடியாதபடிக்கு அரசின் கைகள் கட்டப்பட்டிருந்தன.

உள்நாட்டுப் போர் நடந்தபோது இலங்கை அரசின் நிதிநிலை அறிக்கைகளில் வரவைவிட செலவு அதிகமாகவே இருந்ததால் பற்றாக்குறை பட்ஜெட்டுகளாகவே அவை தொடர்ந்தன. 2008இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய முதலீடுகளை வேகமாகவும் கணிசமாகவும் திரும்ப எடுத்துச் சென்றனர். இதனால் இலங்கை வசமிருந்த அன்னியச் செலாவணி கையிருப்பு சடுதியில் கரைந்துவிட்டது.

இந்தச் சூழலில்தான், அரசின் நிதிநிலைப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 5%-க்கும் குறைவாக 2011-க்குள் கட்டுப்படுத்தப்படும் என்கிற உறுதிமொழியின் பேரில் 2009இல் பன்னாட்டுச் செலாவணி நிதியம் கடன் கொடுத்தது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்காமலும் ஏற்றுமதி உயராமலும், அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து கரைந்துவந்த வேளையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) தலைமையிலான கூட்டணி அரசு 150 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் கேட்டு பன்னாட்டுச் செலாவணி நிதியத்தை 2016இல் அணுகியது. இந்தக் கடனை 2016 முதல் 2019 வரையில் தருமாறு கோரியது. 2020-க்குள் அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான பற்றாக்குறை அளவு ஜிடிபியில் 3.5% அளவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் நிபந்தனை விதித்தது. "நாட்டின் வரி விகிதங்களைக் குறைத்து சீர்திருத்த வேண்டும், வரி நிர்வாகம் எளிமைப்படுத்தப்பட வேண்டும், அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்தி படிப்படியாகக் குறைக்க வேண்டும், அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வணிக நிறுவனங்களைப் போல லாபமீட்டும் வகையில் செயல்பட வேண்டும், அன்னியச் செலாவணி மாற்று விகிதங்களில் நீக்குப்போக்காக நடந்துகொள்ள வேண்டும், தொழில் உற்பத்தியிலும் வியாபாரத்திலும் போட்டிச் செயல்பாட்டு உணர்வை அரசு வளர்த்துக்கொள்ள வேண்டும், வெளிநாட்டு முதலீடுகள் உள்ளே வர கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்த வேண்டும்" என்று அது நிபந்தனைகளை விதித்தது.

செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகளால் இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமானது. 2015இல் 5%-ஆக இருந்த ஜிடிபி 2019இல் 2.9%-ஆகக் குறைந்தது. 2015இல் 31.2%-ஆக இருந்த முதலீட்டு விகிதம் 2019இல் 26.8%-ஆக சரிந்தது. 2015இல் 28.8%ஆக இருந்த சேமிப்பு விகிதம் 2019இல் 24.6%-ஆகக் குறைந்தது. 2016இல் அரசின் வருவாய் ஜிடிபியில் 14.1%-ஆக இருந்தது 2019இல் 12.6%-ஆகக் குறைந்தது. அரசின் மொத்தக் கடன் அளவு 2015இல் ஜிடிபியில் 78.5%-ஆக இருந்தது, 2019இல் 86.8% ஆக அதிகரித்தது.

பொருளாதாரத்துக்குப் புதிய அதிர்ச்சிகள்

இலங்கைப் பொருளாதாரத்துக்கு 2019இல் மேலும் இரண்டு புதிய அதிர்ச்சிகள் ஏற்பட்டன.

முதலாவது, 2019 ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு நகரிலும் பிற இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் 253 பேர் உயிரிழந்தனர். இச்செய்தி ஏற்படுத்திய அச்சத்தால் வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வருவது வெகுவாக வீழ்ச்சி அடைந்தது. அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்துகொண்டிருந்த வேளையில், புதிதாக மேலும் சேருவது நின்றுவிட்டது. அதனால் பொருளாதாரம் புத்துயிர் பெறும் வாய்ப்புகளும் அருகிவிட்டன.

இரண்டாவது, 2019 நவம்பரில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது. கோதபய ராஜபட்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. "வரி விகிதங்களைக் குறைப்போம், விவசாயிகளுக்குச் சலுகைகளை அளிப்போம்" என எஸ்எல்பிபி தேர்தலில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றிருந்தது. இந்த வாக்குறுதிகள் இலங்கைக்குக் கடன் கொடுத்த பன்னாட்டுச் செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு நேர் எதிரானவை. நிதியம் அளித்த புதிய நிதியுதவித் திட்டங்களுக்கு வலுவான மாற்று கொள்கைத் திட்டம் ஏதும் புதிய அரசிடம் இருக்கவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் அவற்றுக்கு முரணாகவே இருந்தன.

ஆட்சிக்கு வந்தவுடன் அதிபர் கோத்தபய ராஜபட்ச வரி விகிதங்களை வெகுவாகக் குறைத்தார். 2019 டிசம்பரில் மதிப்பு கூட்டப்பட்ட விரி விகிதங்கள் (வாட்) 15%-லிருந்து 8%-ஆகக் குறைக்கப்பட்டது. ‘வாட்’ பதிவுக்கான வருடாந்திர குறைந்தபட்ச விற்றுமுதல் வரம்பு 1.2 கோடி இலங்கை ரூபாய் என்ற அளவிலிருந்து 30 கோடி இலங்கை ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது.

தேசிய வளர்ச்சிக்கான வரி, வருவாய் பெறும்போதே வரி செலுத்தும் திட்ட நடைமுறை, பொருளாதார சேவைகளுக்கான வரி ஆகியவையும் ஒட்டுமொத்தமாக ரத்துசெய்யப்பட்டன. ‘வாட்’ வரி செலுத்துவதற்காக அரசிடம் பதிவு செய்திருந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2019 முதல் 2020-க்குள் 33.5% சரிந்துவிட்டது. இதனால் நாட்டின் ஜிடிபியில் 2% அளவுக்கு வரி வருவாயை அரசு இழந்தது. 2019இல் ஜிஎஸ்டி – வாட் வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் 2020இல் பாதியாகிவிட்டது.

2020இல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று, அதனால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நிலைமை படுமோசமான நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டது.  தேயிலை, ரப்பர், ஏலம் – மிளகு போன்ற வாசனைத் திரவியங்கள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருவதும் அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் மேலும் குறைந்தது. பெருந்தொற்றுக் காலத்தில் அரசு செய்ய வேண்டிய செலவு அதிகரித்தது. அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறை மட்டும் 2020, 2021ஆம் ஆண்டுகளில் 10% என்ற அளவையும் மிஞ்சியது. பொதுக் கடனுக்கும் நாட்டின் ஜிடிபிக்கும் இடையிலான விகிதம் 2019இல் 94%-ஆக இருந்தது 2020இல் 119% ஆக உயர்ந்தது.

இலங்கை ஆண்டுதோறும் உர மானியமாக 26 கோடி அமெரிக்க டாலர்களை (ஜிடிபியில் 0.3%) செலவிட்டு வந்தது. பெரும்பாலான உரம் இறக்குமதி மூலம்தான் பெறப்பட்டது. இறக்குமதியால் செலவாகும் அன்னியச் செலாவணிகளை மிச்சப்படுத்த கோத்தபய அரசு புதுமையான - அதேசமயம் மிகவும் வினோதமான முடிவை எடுத்தது. 2021 மே முதல் வெளிநாடுகளிலிருந்து உரம் இறக்குமதிசெய்யப்பட மாட்டாது என்று அறிவித்தது. ஒரே நாளில் இலங்கை முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகு 2021 நவம்பரில் இந்தக் கொள்கை முடிவு கைவிடப்பட்டது. ஆனால், அதற்குள் இலங்கையின் விவசாய உற்பத்தி கணிசமாகக் குறைந்து பேராபத்து ஏற்பட்டுவிட்டது.

ரசாயன உரங்கள் பயன்பாட்டை ஒரேயடியாகக் கைவிட்டுவிட்டு இயற்கை விவசாய முறைக்கு மாறினால் சாகுபடி கணிசமாகக் குறைந்து அத்தியவாசிய உணவுப் பொருள்களுக்கே கடும் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் ஏற்படும் என்று வேளாண் விஞ்ஞானிகள் உள்பட அனைவரும் கோத்தபயவை ஒரே குரலில் எச்சரித்தனர். நெல் சாகுபடியில் 25%, தேயிலைச் சாகுபடியில் 35%, தென்னைச் சாகுபடியில் 30% வீழ்ச்சி அடையும் என்று கூட்டாக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.

உரத் தடையால் தோல்வி

விஞ்ஞானிகளின் எச்சரித்தபடியே நடந்தது. “வேளாண் உற்பத்தியில் ரசாயன உரங்களைத் தடை செய்ததால் எதிர்பார்த்ததைவிட மோசமான பாதகங்களே விளைந்தன” என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் தனது மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடவடிக்கையாலும் பொருளாதார மீட்சி மேலும் பின்னடைவையே சந்தித்தது. வேளாண் உற்பத்தி குறைந்ததால் இறக்குமதியை அதிகப்படுத்துவது அவசியமாகிவிட்டது.

அன்னியச் செலாவணி பற்றாக்குறையாக இருக்கும்போது இறக்குமதி செய்வதும் இயலாததாகிவிட்டது. இதனால் பணவீக்க விகிதம் 2022 பிப்ரவரியில் 17.5% என்ற உயர் அளவை எட்டியிருக்கிறது. தேயிலை, ரப்பர் சாகுபடியில் ஏற்பட்ட உற்பத்தித்திறன் குறைவாலும் ஏற்றுமதி வருவாய் குறைந்துவிட்டது. அன்னியச் செலாவணி கையிருப்பைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்ட ரசாயன உரப் பயன்பாட்டுத் தடை நடவடிக்கை, இறக்குமதிக்காக அதிக செலாவணியைச் செலவிட வேண்டிய நிலைக்கு நாட்டை மேலும் தள்ளிவிட்டது.  

இலங்கையின் நடப்புப் பொருளாதார நெருக்கடிக்குப் பல காரணங்கள். நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில வரலாற்றுரீதியாகவே காணப்படும் சமமற்ற நிலை, கடனுக்காக பன்னாட்டுச் செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகள், தவறான கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து எதேச்சாதிகாரமாகச் செயல்படுத்திய ஆட்சியாளரின் மோசமான பொருளாதார முடிவுகள், இயற்கை உரம் எனும் போலியான அறிவியல் முறையை அதிகாரப்பூர்வமாகத் தழுவிய நிலை ஆகியவை நெருக்கடி முற்றக் காரணங்களாகிவிட்டன. எதிர்காலமும் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடமே அரசு கடன் கேட்டு மீண்டும் செல்லும், அதுவும் புதிய நிபந்தனைகளை விதிக்கும். உலக அளவில் இப்போது விலைவாசி உயர்வு, அவசியப் பண்டங்களுக்கு பற்றாக்குறை நிலவும் நேரத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக பன்னாட்டுச் செலாவணி நிதியம் விதிக்கப் போகும் கொள்கைகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் கட்டுப்படுத்தப் போவதில்லை, நாட்டு மக்களின் துயரங்களையும் பல மடங்கு அதிகரிக்கப்போகிறது!

© 'தி இந்து' 

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆர்.ராமகுமார்

ஆர். ராமகுமார், மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனப் பேராசிரியர். 'தி இந்து', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழில் அவருடைய கட்டுரைகள் 'அருஞ்சொல்' இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

5

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

KARTHIK P   2 years ago

IMF நிபந்தனை //நாட்டின் வரி விகிதங்களைக் குறைத்து சீர்திருத்த வேண்டும், வரி நிர்வாகம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்// //வரி விகிதங்களைக் குறைப்போம், விவசாயிகளுக்குச் சலுகைகளை அளிப்போம்" என எஸ்எல்பிபி தேர்தலில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றிருந்தது. இந்த வாக்குறுதிகள் இலங்கைக்குக் கடன் கொடுத்த பன்னாட்டுச் செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு நேர் எதிரானவை// இது எப்படி ஒரே கட்டுரையில் மேலே ஒன்று கூறுகிறார் கீழே ஒன்று கூறுகிறார். வரி விகிதம் குறைத்தது எப்படி IMF க்கு எதிரானதாகும். கட்டுரையை வெளியிடும் அருஞ்சொல் இவற்றையெல்லாம் கவனிப்பதில்லையா அல்லது படிப்பதில்லையா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

///செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகளால் இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமானது. 2015இல் 5%-ஆக இருந்த ஜிடிபி 2019இல் 2.9%-ஆகக் குறைந்தது. 2015இல் 31.2%-ஆக இருந்த முதலீட்டு விகிதம் 2019இல் 26.8%-ஆக சரிந்தது. 2015இல் 28.8%ஆக இருந்த சேமிப்பு விகிதம் 2019இல் 24.6%-ஆகக் குறைந்தது. 2016இல் அரசின் வருவாய் ஜிடிபியில் 14.1%-ஆக இருந்தது 2019இல் 12.6%-ஆகக் குறைந்தது. அரசின் மொத்தக் கடன் அளவு 2015இல் ஜிடிபியில் 78.5%-ஆக இருந்தது, 2019இல் 86.8% ஆக அதிகரித்தது/// இல்லை. Over simplification. இதே காலகட்டத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளார வளர்ச்சி இதே அளவுக்கு வேகம் குறைந்ததை கணக்கில் கொள்ள வேண்டும். IMFஇன் நிபந்தனைகள் இல்லாமல் போயிருந்தால், இலன்கையின் நிலை இன்னும் மோசமாகியிருக்கும். கட்டுரையாளர் தாராளமயமாக்கல் கொள்கைகளை நிராகரிப்பவர். 2015இல் மேலும் அதிக அளவில் கடன் வாங்கி பொருளார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைபவர். ஆனால் அதை இலங்கை பின்பற்றியிருந்தால், கடன் சுமை மேலும் அதிகரித்து, முன்பே திவாலாகியிருக்கும். 1980களில் இந்தியா இதே போன்ற இடதுசாரி, கீயின்ஸிய பொருளியலாளர்களின் 'வழிகாட்டுதலில்' மிக அதிகமாக கடன் வாங்கி, 1991இல் திவால் நிலையை இதே போல எட்டியது. இன்றைய ஜிம்பாவே, வெனிசூலா, லெப்னான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதே பாணியில் அதீத அளவுக்கு கடன் வாங்கி திவாலாகியுள்ளன. ஆனால் இடதுசாரி பொருளியாளர்கள் இந்த வரலாற்றில் இருந்து என்றும் பாடம் கற்க மாட்டார்கள் என்பதற்கு இந்த கட்டுரையே சான்று. IMFஇன் நிபந்தனைகள் விவேகமானவை, பிரச்சனையை தீர்க்க வகை செய்பவை (இது இந்தியாவின் 1991க்கு பிறகான மீண்டெழுந்த பொருளாதார வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட ஒன்று). ஆனால் IMFஐ வில்லனாக சித்தரிக்கிறார் இந்த கட்டுரையாளர். பட்ஜெட் பற்றாக்குறை விகிதத்தை குறைக்க சொன்னால் அது குற்றம் என்கிறார்...

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பியூரின்வைசியர்கள்மோடியின் காலம்மாதையன்தமிழக வரலாறுஉள்ளூர் மொழிபனவாலிவினோத் காப்ரிபுதிய முன்னுதாரணம்பேட்ரிக் ஒலிவெல்எஸ்விஆர் கட்டுரைக்கு 'ஜனசக்தி'யின் எதிர்வினைஉத்தரப் பிரதேச வளர்ச்சிகப்பற்படைநூறாண்டு மழைமூளை வேலைமடாதிபதிகள்சோ.கருப்பசாமி கட்டுரைசவிதா அம்பேத்கர் கட்டுரைநகரமாமேம்படுத்தப்பட்ட செயலிகள்சமஸ் பேட்டிகள்இந்திய அடிமைப் பணியாகிவிடுமா இந்திய ஆட்சிப் பணி?அவை பாதுகாப்புகாங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்: சமஸ் பமுழுப் பழம்செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் பேட்டிதேசிய வருமானம்உத்தாலகர்ம்வாலிமு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!