கட்டுரை, பேட்டி, ஆளுமைகள், சர்வதேசம் 8 நிமிட வாசிப்பு

ராஜபக்‌ஷ குடும்பமே இலங்கை வீழக் காரணம்: கே.எஸ்.ஆர். பேட்டி

ச.ச.சிவசங்கர்
07 Apr 2022, 5:00 am
3

பொருளாதார நெருக்கடியில் நிலைகுலைந்திருக்கும் இலங்கை, அடுத்து அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வுகளை எதிர்கொள்கிறது. அடுத்தடுத்து வரும் பகீர் செய்திகளால் அதிர்ச்சியோடு இலங்கையை உற்றுநோக்குகின்றன உலக நாடுகள்.  தமிழ்ச் சமூகத்தைப் பொருத்தவரை இது இரட்டைத் துயரம். என்ன நடக்கிறது அங்கே? இலங்கை விவகாரத்தில் நெடிய அவதானமும் கூர்ந்த பார்வையும் கொண்ட மூத்த வழக்குரைஞரும் திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான  கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார். அவருடன் ‘அருஞ்சொல்’ தளத்துக்காக எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி இலங்கை விவகாரத்தின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. 

பிரபாகரன் காலத்தில் இருந்து பலமுறை இலங்கை சென்று வந்தவர் நீங்கள். உங்களுடைய சமீபத்திய பயணம் எப்படி இருந்தது?

வேதனை! இது என்னுடைய எட்டாவது பயணம். பிரபாகரன் அங்கே களத்தில் இருந்த காலத்திலிருந்து சென்று வருகிறேன். உள்நாட்டுப் போரால் மோசமாக இலங்கை பாதிக்கப்பட்டிருந்த காலத்தில்கூட சென்றிருக்கிறேன். போருக்குப் பின்னரும் சென்று வந்திருக்கிறேன். இப்போதுபோல மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டதைக் கண்டதில்லை. ஆனால், நெடுநாள் நிர்வாகச் சீரழிவின் விளைவு இது. முக்கியமாக ராஜபக்‌ஷ குடும்பமே இதற்கான பெரும் காரணம்.

மோசமான சூழல் என்றால், எதைச் சொல்கிறீர்கள்? கொஞ்சம் விவரிக்க முடியுமா?

மக்கள் சாப்பாட்டுக்கே அல்லுருகிறார்கள். பிழைப்பு என்னவாகும்; கையில் உள்ள சேமிப்புக் கரைந்தால் என்ன செய்வது; நாட்டின் எதிர்காலம் என்னவாகும்; இப்படி எல்லாம் ஏராளமான கேள்விகள்! முப்பது ரூபாய்க்கு விற்கும் பச்சை மிளகாய் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றால் மக்கள் என்னதான் செய்ய முடியும்? எல்லாப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டிருக்கின்றன. அங்கர் பால்மா ஒரு கிலோ 1960 ரூபாய்க்கு விற்கிறது. பெட்ரோல் டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு. பார்த்த இடங்களில் எல்லாம் மக்கள் வரிசையில் நின்றார்கள். இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும் என்றார்கள். ஆசியாவிலேயே இலங்கையில்தான் அதிக அளவுக்குப் பணவீக்கம் நிலவுகிறது. பொருளாதாரம் நிலைகுலைந்திருப்பதால் வேலைவாய்ப்புகள் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. அரசு மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. பெருகும் போராட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சர்வதேச அளவில் இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. அதனால் கண்ணுக்கு எட்டிய வரை குழப்பமும் கலக்கமுமே வெளிப்படுகின்றன.

நெடுநாள் நிர்வாகச் சீர்கேடுகள் இதற்கு காரணம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

இலங்கை சுயாதீனாமாகச் செயல்படுவதற்கேற்ற பொருளாதாரத்தை இலங்கை ஆட்சியாளர்கள் உருவாக்கவில்லை. சுதந்திரம் அடையும் காலத்தில் ஒரு நாடு பெரும் திட்டமிடலை நோக்கி நகர வேண்டும். இலங்கையில் அது நடக்கவில்லை. 26 ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டு போர் சூழலை மேலும் மோசம் ஆக்கியது. போருக்குப் பின் இலங்கையின் சூழல் மாறும் என்று பலரும் நினைத்தார்கள். பல நாடுகளும் முதலீடுசெய்வதற்கு வாய்ப்பான கேந்திரமாக இலங்கையைப் பார்த்தன. ஆனால், பொருளாதாரரீதியாக ஒரு நாடு மேலெழுந்து வர அரசியல் ஸ்திரத்தன்மையும், சமூக நல்லிணக்கமும் முக்கியம். ஒரு பெரிய உள்நாட்டுப் போரிலிருந்து விடுபட்ட பிறகும்கூட இலங்கை ஆட்சியாளர்கள் திருந்தவில்லை. குறிப்பாக, சிங்கள இனவாதம் அதே மேலாதிக்கத்தைத் தொடர்ந்தது. ஏற்கெனவே போர்க் காலத்தில், ஊழலில் திளைத்ததில் ருசி கண்ட ராஜபக்‌ஷ குடும்பம், ராணுவரீதியாகச் செலவழிப்பதைக் குறைக்கவில்லை. ஏனென்றால்,  பாதுகாப்புத் துறையில் ஊழல்களைக் கமுக்கமாகச் செய்யலாம் என்பது உலகப் போக்கு அல்லவா? ராஜபக்‌ஷ பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகும்கூட அடுத்து வந்த ஆட்சியாளர்களாலும் தேசிய வெறித் தீயிலிருந்து தப்ப முடியவில்லை. சரியாகச் சொல்வதானால், தேசியத்தின் பெயரிலான ஊழல் நிர்வாகம்தான் இலங்கையை இந்தச் சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது. 

ஆனால், கரோனாவுக்குப் பிறகுதானே இந்தச் சூழல்?

கரோனா இவர்களது ஆட்சியின் அலங்கோலத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அப்படிதான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்தது உலக அளவில் சுற்றுலா பயணிகளைப் பீதியில் தள்ளியது. கரோனா காலகட்டம் அந்த நாட்டின் பெரும் பொருளாதாரமான சுற்றுலா துறையை மூழ்கடித்தது. இதெல்லாம் உண்மை. ஆனால், கரோனா உலகளாவிய சவால் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நல்ல நிர்வாகிகளாக இருந்தால், அவர்கள் சங்கடத்திலிருந்து நாட்டை வெளியே கொண்டுவந்திருப்பார்கள்.

                                                                                    கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 

இன்றைய நிலைமைக்கு மரபுவழி வேளாண்மையையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். மரபுவழி வேளாண்மை தவறான முடிவா?

இல்லை. அது நவீன உர – பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர் லாபியினுடைய பிரச்சாரம். இருக்கிற அமைப்பிலிருந்து புதிய ஒன்றை நோக்கிச் செல்லும்போது நிதான அணுகுமுறை அவசியம். மரபுவழி வேளாண்மையில் விளைச்சல் குறைவாக இருக்கும்; அதற்கேற்ப உற்பத்தியைத் திட்டமிட்டு அமலாக்கியிருந்தால், இது பிரச்சினையாகி இருக்காது. திடீரென ஒருநாளில் நவீன உர – பூச்சிக்கொல்லி அத்தனைக்கும் தடை விதித்த அடாவடியால்தான் இன்றைய சூழல் ஏற்பட்டது. அரசு இப்படித் தடையைக் கொண்டுவந்துவிட்டு, சாகுபடியில் பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்டு தடையை நீக்கியது. ஆனால், போதிய சேதாரம் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. நெல் சாகுபடியில் 25%, தேயிலைச் சாகுபடியில் 35%, தென்னைச் சாகுபடியில் 30% அளவுக்கு விளைச்சல் குறைந்துவிட்டது. இப்படி ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடானது அத்தியாவசியப் பொருட்கள் விலையை மேலும் கூட்டிவிட்டது.

இந்த நிலைமைக்கு ராணுவமயக்கலை ஒரு காரணமாகக் கூறுகிறீர்கள்; கொஞ்சம் விளக்கலாமா?

போருக்குப் பின் இந்தியா உள்ளிட்ட பல தரப்புகளிலிருந்தும் ஏராளமான நிதி இலங்கையை வந்தடைந்தது. எல்லாம் தமிழர்கள் புனர்வாழ்வுக்காக அளிக்கப்பட்ட நிதி. இந்த நிதியை எல்லாம் ராணுவத்துக்கு மடை மாற்றியது இலங்கை அரசு. இந்தியா வழங்கிய பல நூறு கோடி ரூபாய் என்னவானது என்பதே ஓர் உதாரணம். தமிழர்களுக்கு 43,000 வீடுகள் கட்ட ரூ.1,300 கோடி கொடுத்தது மன்மோகன் சிங் அரசு. இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், விவசாயிகளுக்கு டிராக்டர், வவுனியாவில் மருத்துவமனை என்று பல வகையில் திட்டமிடப்பட்டது. அடுத்து வந்த மோடி அரசும்கூட உதவியது. இந்த நிதியெல்லாம் முறையாகச் செலவிடப்படவில்லை என்பதை என் கள ஆய்வில் அறிந்துகொண்டேன்.

போர் முடிந்து விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்ட பிறகும்கூட தமிழர்ப் பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட காரணம் என்ன? உள்நாட்டில் மட்டுமல்லாது, அயலக உறவிலும் ராணுவரீதி வியூகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தது இலங்கை. அப்படிதான் சீனாவோடு அளவுக்கு அதிகமான பிணைப்பை உருவாக்கிக்கொண்டது. இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் இதன் மூலம் பகைத்துக்கொண்டது. எல்லாமும் சேர்ந்துதான் இந்தச் சீரழிவிற்கு இலங்கையைத் தள்ளியுள்ளன.

ராஜபக்‌ஷ சகோதரர்கள் அறிவித்த இலவச திட்டங்களும் இதற்கு ஒரு காரணமா?

மக்கள் நலத் திட்டங்கள் காரணம் இல்லை; அது பொய். முன்யோசனை அற்ற வரிவிதிப்புகள்தான் காரணம். இதனால், அரசுக்கு வரும் வரி வருமானம் குறைந்தது.

சரி, தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்?

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளான தெற்கு தென்புலம் அம்பாரை, மட்டக்களப்பு, திரிகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளுக்கும், மலையகப் பகுதிகளான நுவரேலியா, கண்டி போன்ற இடங்களுக்கும் சென்றேன். எல்லா இடங்களிலுமே மக்கள் பரிதவிப்போடுதான் இருக்கிறார்கள்.

தமிழர்களைப் பொருத்தவரை இரண்டு சிக்கல்கள். முதலாவது ராணுவமயம், எங்கு பார்த்தாலும் துப்பாக்கிகளோடு உலவும் ராணுவத்தினர். தமிழர்கள் நிலத்தை ஆக்கிரமித்து பெரிய கட்டிடங்கள், முகாம்களைக் கட்டிக்கொண்டு தமிழர்களை அச்சத்திலேயே வைத்திருக்கின்றனர். இரண்டாவது, பொருளாதாரச் சிக்கல். ஏற்கெனவே போரில் அடிவாங்கிய சமூகம் இப்போது இந்தப் பொருளாதார நெருக்கடியால் மேலும் ஸ்தம்பித்து இருக்கிறது.

மூளும் எதிர்ப்பு ராஜப‌க்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுமா?

அகற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் ராஜப‌க்‌ஷ கட்சி வலுவான இடத்திலேயே இருந்தது. ஆனால், முதலில் கூட்டணி கலகலத்து, இப்போது கட்சிக்குள்ளேயுமே சலசலப்புகள் கேட்கின்றன. மூளும் மக்களின் எதிர்ப்பு எதிர்க்கட்சிகளுக்குப் புதிய பலத்தைத் தந்திருக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்‌ஷ குடும்பம் அரசின் 75% பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் துறைகளைத் தன் கையில் வைத்திருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலைமைதான் இன்றைய சூழலுக்குக் காரணம். ஆக, ராஜபக்‌ஷ சகோதரர்கள்  அகற்றப்படாமல் இலங்கைக்கு மீட்சி இல்லை.

இந்த இடத்தில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

இலங்கை மக்கள் விரும்பும் ஓர் ஆட்சி அமைவதற்கான சூழல் அங்கே உருவாவதற்கு இந்தியாவும் உதவ வேண்டும். தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக இலங்கை உறவுக்கான பார்வையை இனியேனும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள அசாதாரணச் சூழல் முடிவுக்கு வந்ததும், தற்போது உக்ரைன் பிரச்சினையில் இந்தியாவின் கோரிக்கையைப் போல, இலங்கையில் தமிழின அழிப்பு குறித்த சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட குரல் கொடுக்க வேண்டும். தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும். திரிகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் வலுவான இருப்பை நிலைநிறுத்த வேண்டும். சீன ஆதிக்கத்திலிருந்து அந்நாட்டை விடுவிக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தலாம். தமிழர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொதுக் கருத்தெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதற்கான சூழலை இந்தியா உருவாக்க வேண்டும்.

இனி இலங்கை என்ன செய்ய வேண்டும்?

தம்முடைய குடிமக்களைச் சமமாக அது பாவிக்க வேண்டும். சமூக நல்லிணக்கம்தான் சமூக அமைதிக்கான அடித்தளம். அதன் மீதுதான் எந்தத் தொழிலையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ச.ச.சிவசங்கர்

ச.ச.சிவசங்கர், பத்திரிகையாளர்.


2






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

Dear Samas, For the past days, didn't find any comments for recent articles. It seems readers not find them interesting. Kindly give us some interesting contents like minority affairs, atrocities against SC Communities or illicit relationships of K-Town. Then random intellectuals would pop up and take you lessons and it'd be interesting for others too. Give it a consideration. Thanks, Thiru

Reply 2 0

அ.பி   2 years ago

Yes.. சிலநேரங்களில் கட்டுரை யை விட கரு‌த்து அருமை யாக இருக்கும்

Reply 1 0

Ganeshram Palanisamy   2 years ago

Comments may not come if the articles are serious and too neutral.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கபில்தேவ்மனநிலை அத்வானிதமிழக அரசுடன் மோதும் ஆளுநர்பிரபாகரன் சமஸ்பி.ஆர்.அம்பேத்கர் கட்டுரைஇன்டியாஇந்திய தண்டனையியல் சட்டம்தமிழ்ப் பண்டிட்ரவிக்குமார் கட்டுரைகிராந்திஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்சசிகலாபண்பாடுபீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ் அருஞ்சொல் பேட்டிமுறைகேடு குற்றச்சாட்டு75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லஇந்திய தேசியம்தொடக்கப் பள்ளிமீனாட்சி தேவராஜ் கட்டுரைதசைகள்காஸாசசி தரூர்கல்வியாளர்கள்தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்களா?கார்கே: காங்கிரஸின் புதிய நம்பிக்கைவிடுதலைச் சிறுத்தைகள்கலாச்சார அடையாளங்கள்சிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிதத்துவார்த்தக் கருத்துகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!