கட்டுரை, பொருளாதாரம், சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வருமா?

டி.வி.பரத்வாஜ்
22 Jul 2022, 5:00 am
2

லகம் இன்னொரு பொருளாதார மந்தநிலை நோக்கிச் செல்கிறது என்கிறார்கள். விலைவாசி உயர்வு, செலாவணி மதிப்பில் சரிவு, அவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம், அரசின் வரவைவிட செலவு அதிகரிப்பு, கடன் சுமை அதிகரிப்பு, வெளிவர்த்தகப் பற்று வரவில் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு வல்லரசு நாடுகளும் தப்பாத நிலையில், இந்தியா என்னவாகும் என்ற கவலை நம் நாட்டில் பலருக்கும் உண்டாகியிருப்பது இயல்பானது. அதிலும் அண்டை நாடான இலங்கையில் இன்று உருவாகியிருக்கும் மோசமான பொருளாதாரச் சீரழிவு அந்தக் கவலையை மேலும் அதிகமாக்குகிறது. இத்தகு நிலையில், இன்றைய சூழலில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது, என்னவாகும்? 

இந்திய - இலங்கை: சில ஒற்றுமைகள் 

இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏழை, நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துவருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம். இந்தியாவில் செய்திருந்த முதலீடுகளை அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து விலக்கிவருகின்றனர். பெட்ரோலியப் பொருள்களுக்கும் தங்கத்துக்கும் வழக்கம்போல அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இறக்குமதி அதிகரித்து, வெளிவர்த்தகப் பற்று வரவைப் பெரிதாக்குகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு வேகமாக சரிகிறது. நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமையும் அதிகரித்துள்ளது. எனவே இந்தியா தொடர்பான பலருடைய எச்சரிக்கைகளும் கவலைகளும் அர்த்தமுள்ளவையே.

இலங்கை, இந்திய அரசியல் – பொருளாதாரங்களுக்கு சில ஒற்றுமைகள் உள்ளன. இரு நாடுகளிலும் அரசுகள் மக்களுடைய வாக்குகளைக் கவர்வதற்காக வெகுஜன ஆதரவுத் திட்டங்களை அமலாக்குகின்றன. பேரினவாதத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன. சமூக ஒற்றுமை சீர்குலைவானது இரு நாடுகளிலும் இருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவும் இலங்கையும் ஒன்றுபடும் இடங்கள் என்றால், நிறைய வேறுபாடுகளும் இருக்கின்றன. அதற்கு முன் இலங்கை ஏன் வீழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை ஏன் வீழ்ந்தது?

மனித ஆற்றல் வளர்ச்சிக் குறியீட்டில் தெற்காசிய நாடுகளிலேயே பொறாமைப்படும் அளவுக்கு இலங்கை முன்னேறியிருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கல்வி, சுகாதார வளம் நிலவியது. அந்நாட்டு மக்களின் சராசரி மாத வருமானம் துணைக் கண்டத்தின் அனைத்து நாடுகளையும்விட அதிகமாகவே இருந்தது. இந்தியாவின் நபர்வாரி வருவாயைப் போல இரண்டு மடங்காக இருந்தது. இதையெல்லாம் பேசிவர்கள் ஒரு விஷயத்தைப் புறந்தள்ளினார்கள்.  இலங்கை, 1965 முதல் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) பெரும் தொகையை 16 முறை கடனாகப் பெற்றுத்தான் பொருளாதாரத்தைச் சமாளித்துக்கொண்டிருந்தது. 1960கள் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டிலும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ஐ.எம்.எஃப். கடன் மூலம்தான் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டது. 

ஆண்டுகள் செல்லச் செல்ல ஐ.எம்.எஃப்பிடம் கோரும் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில், இலங்கை உள்நாட்டுப் போரையும் சமாளிக்க வேண்டியிருந்தது. அரசியல் ஸ்திரமற்ற நிலையும் தொடர்ந்தது. இலங்கையின் அடுத்தடுத்த அரசுகள் தாராளவாத பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இருக்கவில்லை. மாறாக, அந்தக் கொள்கையை வரம்பில்லாமல் அனுமதித்துத்தான் இந்த நெருக்கடியில் நாட்டைத் தள்ளின.

இரட்டைப் பற்றாக்குறை சவால்

பெரும்பாலான வளரும் நாடுகளைப் போலவே இலங்கையும் இரட்டைப் பற்றாக்குறையால் தொடர்ந்து அவதிப்பட்டுவருகிறது. அரசின் வருவாயைவிட செலவு அதிகம் என்பது முதல் பற்றாக்குறை. ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு பல மடங்கு என்பதால் வெளிவர்த்தகப் பற்றுவரவில் இரண்டாவது பற்றாக்குறை. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னால் இவ்விரு பற்றாக்குறைகளையும் இலங்கை அரசு கட்டுக்குள்தான் வைத்திருந்தது. ஆனால், அதன் பின் நிலைமை மோசமானது.

எங்கெல்லாம் கோளாறுகள்?

முதலாவதாக, உள்நாட்டில் மக்களுடைய சேமிப்பு அளவு குறைவு. வங்கித் துறை அடித்தளக் கட்டமைப்பு வலுவாக இல்லை. மக்களிடமும் சேமிக்கும் பழக்கம் குறைவு. எனவே கடனுக்கு அசல், வட்டி தவணை ஆகியவற்றைச் செலுத்த அரசிடம் நிதியில்லை. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட, வெளிநாடுகளிலிருந்து இலங்கையை நோக்கி முதலீடுகள் அன்னியச் செலாவணிகளாக வரவில்லை. எனவே கல்வி, சுகாதாரத் துறைகளுக்கான செலவுகளுக்குக்கூட கடன் மூலம்தான் நிதி திரட்டியது இலங்கை அரசு.

இரண்டாவதாக, வெளிநாடுகள் குறைந்த வட்டியில் கடன் தந்தாலும் கடனுக்கான அசலின் ஒரு பகுதி, வட்டி ஆகியவற்றைத் தவணை தவறாமல் செலுத்தவும் நிதியில்லாமல் ஐ.எம்.எஃப். அமைப்பிடம் அடிக்கடி கடன் வாங்கியது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததால் ஏற்பட்ட நம்பிக்கையில் சர்வதேச அளவில் கடன் பத்திரங்களை விற்று ஏராளமாகப் பணம் திரட்டியது. கடன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்துவது எப்படி, அதற்கு இப்படி அதிக வட்டி கொடுப்பது கட்டுப்படியாகுமா என்றெல்லாம் யோசிக்காமல், மேலும் மேலும் நிதியைத் திரட்டிக்கொண்டே வந்தது. இப்படி வெளிநாடுகளில் கடன் பத்திரங்களை விற்றுத் திரட்டிய நிதியே வெளிநாட்டுக் கடனில் 50% என்ற உச்சத்துக்கு சென்றுவிட்டது.

மூன்றாவதாக, அரசின் நிதிநிலைமை மேம்படாததாலும் உள்நாட்டுச் சேமிப்பும் உயராததாலும் ஏற்கெனவே விற்ற சர்வதேச கடன் பத்திரங்களுக்கு வட்டி, அசல் தருவதற்கு மேலும் மேலும் புதிய கடன் பத்திரங்களை வெளியிட நேர்ந்தது. அதற்கான வட்டியையும் உயர்த்த வேண்டி நேரிட்டது. கடன் மூலம் அல்லாது வேறு வழிகளில் மூலதனத்தைத் திரட்ட முடியாத காரணத்தால், பெருந்தொற்று ஏற்பட்டபோது கடனையும் திருப்பித் தர முடியாமலும் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

சீனத்துடனான அபாய உறவு

சீனாவுடனான ‘ஒரே மண்டலம் – ஒரே பாதை’ திட்டத்தால் இலங்கைக்கு பொருளாதாரச் சிக்கல் நேரிட்டதா என்று கேட்கலாம். சீனத்திடம் இலங்கை வாங்கிய கடன், அதன் மொத்த வெளிநாட்டுக் கடனில் 10%தான். ஆனால், கடனுக்கான காரணமும் அதைப் பெறுவதற்கான நிபந்தனைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனத்திடம்  ஹம்பனதோட்டா துறைமுக வளர்ச்சி போன்ற நீண்ட காலத் திட்டங்களுக்கு, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே இலங்கை கடன் வாங்கியது. அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் ஒப்பந்தம் முழுக்க சீன ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்பட்டதால் (நிபந்தனையே அதுதான்) திட்டம் தாமதமானாலும் நிறைவேறாமல் போனாலும் தொடர்ந்து பணம் தந்தாக வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டது.

அப்படிப் பணம் தர முடியாதபட்சத்தில் சீன நிபந்தனைகளின்படி பல்வேறு உரிமைகளை அதற்கு எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தத் திட்டங்களால் இலங்கைக்கு உடனடி வருமானமோ, உள்ளூர் பொருளாதாரத்துக்கு ஊக்குவிப்போ கிட்டவில்லை. தொடர்ந்து வட்டியையும் அசலையும் செலுத்த வேண்டிய கட்டாயம் மட்டும் ஏற்பட்டது.

இறுதியாக, திடீரென்று ரசாயன உரப் பயன்பாட்டை நிறுத்திவிட்டு அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறியே தீர வேண்டும் என்கிற அரசின் கண்டிப்பால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன் உணவு தானியத்தைக்கூட இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நெல் சாகுபடியில் தன்னிறைவு கண்டதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த நாட்டுக்கு, இந்த ஒரே முரட்டுப்பிடிவாதக் கொள்கையால் பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது.

இந்தியா வீழாது, ஏன்?

இந்தியா பொருளாதாரத்தளத்தில் நிறையச் சிரமங்களை எதிர்கொள்ளலாம். ஆனால், இலங்கையின் நிலைக்கு அது வர இப்போதைக்கு வாய்ப்பில்லை. முக்கியமான காரணங்கள்:

முதலாவது, இந்தியா சர்வதேச சந்தையில் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதில்லை. இந்திய பட்ஜெட்டுக்கு வெளிநாட்டு நிதியுதவியை அரசு எதிர்பார்த்திருத்து காத்திருக்கவில்லை.

இரண்டாவதாக, மிகப் பெரிய பொருளாதார நாடாக இருப்பதால் வெளிவர்த்தகப் பற்று வரவில் ஏற்படும் பற்றாக்குறையை இட்டு நிரப்ப, கடன் அல்லாத வெளிநாட்டு முதலீடுகளே போதுமானதாக இருக்கின்றன. வெளிவர்த்தகப் பற்று வரவு, அன்னியச் செலாவணி கையிருப்பு போன்றவற்றைப் பராமரிக்க உலகத்தரம் வாய்ந்த நிர்வாக அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. மக்களுடைய சேமிப்பும் முதலீடும் கணிசம்.

மூன்றாவதாக, பேரினவாதம், சமூகத்தில் அமைதியின்மை ஆகியவை இருந்தாலும் இவை இந்தியப் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கும் அளவுக்கு இன்னும் மோசமாகிவிடவில்லை.

இதற்காக இந்தியா இப்படியே தொடரலாம் என்றும் அர்த்தமில்லை. இறக்குமதியைக் குறைக்கவும் ஏற்றுமதியைப் பெருக்கவும், பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் துரித திட்டங்களும் ஊக்கமிக்க செயல்பாடுகளும் அவசியம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


4


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

The message given at the end of the article that the situation prevailing in Sri Lanka may not arise in India for the present may give some sense of satisfaction to our countrymen, At the same time, going by the track record of BJP Party that, some sort of precipitative action by its cadres before 2024 parliamentary election may intensify polarization of people on religious lines, disturbing peace and tranquility within the country. It may have an impact on economy too. Economic failure and unabated rising prices for essential goods, combined with emotionally charged political atmosphere may see India passing through a widespread unrest.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

இந்தியா விழுமா? உலக பணக்காரர் 4 வது இடத்தை விட்டு முதலிடம் நோக்கி பயணம் செய்யும் நிலை...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நடிகர்கள்வெங்கய்ய நாயுடுகாங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்காரிருள்தான் இனி எதிர்காலமா?அருஞ்சொல் மு.க.ஸ்டாலின்தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்அகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?நாட்டுப்பற்றுPsychological Offensiveபி.சி.ஓ.டிஅண்ணா ஹசாரேநூற்றாண்டுமுன்னெடுப்புதிருநாவுக்கரசர் பேட்டிமறக்கப்பட்ட ஆளுமைசமஸ் - எஸ்.பாலசுப்ரமணியன்சிலப்பதிகாரம்ஒரே பாடத்திட்டம்சம்ஸ்கிருதமயமாக்கம்வேலையில்லா பிரச்சினைநிதியமைச்சரிடம் நாடு என்ன எதிர்பார்க்கிறது?ஒரு தேசம் ஈராட்சி முறை1963ஜிகாதிபரத நாட்டியம்சூத்திரர்கள் இடம்போராட்டம்அரவிந்தன் கண்ணையன் எதிர்வினைமெய்நிகர்ஏட்டுக் கல்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!