கட்டுரை, வாழ்வியல், கல்வி, சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

பிரிட்டன் குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை!

சாரா ஷமீம்
08 Sep 2024, 5:00 am
0

பிரிட்டனில் வாழும் குழந்தைகளும் இளைஞர்கள் – யுவதிகளும் மகிழ்ச்சியில்லாமலும் வாழ்க்கையில் திருப்தி அடையாமலும் வாழ்கின்றனர். அதே வயதுகளில் ஐரோப்பியக் கண்டத்தின் பிற நாடுகளில் வாழும் குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் நடத்திய ஆய்வுகள் மூலம் இது தெரியவந்திருக்கிறது. ‘த சில்ட்ரன்ஸ் சொசைட்டி’ என்ற அறக்கட்டளை நிறுவனம் ‘த குட் சைல்ட்ஹூட் ரிபோர்ட்-2024’ என்ற பெயரில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

பத்து வயது முதல் பதினேழு வயது வரையிலான குழந்தைகளில் 11% பேர், தங்களுடைய வாழ்க்கை வசதியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆறில் ஒரு பங்கு குழுவினர் வீடுகளில் விலைவாசி உயர்வு காரணமாக குடும்பச் செலவுக்குப் பணம் போதாமல் தவிக்கின்றனர், எனவே வாழ்க்கை திருப்தியாக இல்லை.

முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் இப்போதைய தலைமுறை ஏன் மகிழ்ச்சியோ உற்சாகமோ இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் ஆய்வுசெய்யப்படுகின்றன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மூன்று ஆய்வறிக்கைகள்

ஒன்றல்ல மூன்று நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஐந்து குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் அதாவது 40% குழந்தைகள் விலைவாசி உயர்வது குறித்து மிகவும் வருத்தப்படுகின்றனர். அது அவர்களுடைய விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு, உணவு, உடை என்று எல்லாவற்றையும் நேரடியாகவே பாதிக்கிறது.

தங்களுக்குப் பள்ளிக்கூடமே பிடிக்கவில்லை என்று 14% குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படியொரு ஆய்வு 2009இல் நடந்தது. மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியவர்களில் பெண் குழந்தைகள்தான் அதிகம்.

“பொதுவாக பிரிட்டனில் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சலிப்போ மகிழ்ச்சிக் குறைவோ ஏற்பட்டதாக இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இந்த அறிக்கையைத் தயாரித்து படித்துவிட்டு நாங்களே மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டோம்” என்கிறார் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி மார்க் ரஸ்ஸல்.

2009க்குப் பிறகு குழந்தைகளுடைய மகிழ்ச்சி பல்வேறு அம்சங்கள் தொடர்பாக குறைந்துகொண்டேவந்திருக்கிறது. குழந்தைகளுக்கு வாய்க்கும் நண்பர்கள், குழந்தைகளுடைய தோற்றம், பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தில் அளிக்கும் பாட வேலைகள் என்று பல அம்சங்கள் இந்த மகிழ்ச்சி குறைய காரணங்களாக இருக்கின்றன. பெரும்பாலான குழந்தைகளுக்கு அவரவர் குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமாகவே தொடர்கிறது என்பது ஆறுதல் தருகிறது.

2021 – 2022இல் குழந்தைகள், தங்களுடைய குடும்பச் சூழல் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக கூறியிருந்ததுடன் தங்களுடைய தோற்றம் பற்றி அதிகம் கவலைப்படவே இல்லை. இந்த முறை அதில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சமூக ஊடகங்கள்தான் என்கிறார் ரஸ்ஸல். சமூக ஊடகங்களில் வெவ்வேறு ஊர்கள், நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளையும் மற்றவர்களையும் படங்களாகப் பார்க்கின்றனர். அவர்களுடைய தோற்றம், உடை, அழகு ஆகியவை போலத் தங்களுக்கு இல்லை என்று மனச்சோர்வு அடைகின்றனர்.

‘குழந்தைகளை வெளியூருக்கு அழைத்துச் சென்றால் மாறுதல் ஏற்படும் - மகிழ்ச்சி அடைவார்கள், ஆனால் அதற்குப் பணம் இல்லையே?’ என்று 50% பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘வெளியூர் பயணம் வேண்டாம், உள்ளூரிலேயே அவர்கள் விரும்பும் விளையாட்டு, பாட்டு, நடனம் என்று பிற பொழுதுபோக்குகளுக்கு மாதச் சந்தா கொடுக்கக்கூட பணம் இல்லாமல் விலைவாசி உயர்ந்துகொண்டேவருகிறது’ என்று அவர்களில் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோவிட்-19

பிரிட்டனில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கும் மனச்சோர்வுக்கும் 2019இல் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று நோயும், சமீபகாலமாக மக்களுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துவரும் சமூக ஊடகங்களும் முக்கிய காரணங்கள் என்கிறார்கள். இவ்விரண்டும் பிரிட்டனை மட்டுமல்ல பிற ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தனவே என்கிறார் ரஸ்ஸல். அப்படியானால் பிரிட்டனில் மட்டும் ஏன் குழந்தைகளுக்கு அதிக சோகம்?

வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்று 15 வயதுக் குழந்தைகளில் 25% பேர் பிரிட்டனிலும், 7% பேர் டச்சு (ஹாலந்து – நெதர்லாந்து) நாட்டிலும் தெரிவித்துள்ளனர்.

விகிதாச்சாரப்படி பார்த்தால், பிற ஐரோப்பிய நாடுகளைவிட பிரிட்டனில் ஏழைக் குழந்தைகள் அதிகம் என்கிறார் ரஸ்ஸல். பிரிட்டனில் 43 லட்சம் குழந்தைகள் அதாவது 30% குழந்தைகள் வறிய குடும்பத்தில்தான் வாழ்கின்றனர். பிரிட்டனின் சராசரி தனிநபர் வருமானத்தில் 60%க்கும் குறைவாகப் பெறும் குடும்பங்களை, ‘வறிய குடும்பங்க’ளாக அரசு அறிவித்துள்ளது. நெதர்லாந்தில் (டச்சு – ஹாலந்து) 12.7% குழந்தைகள் வறுமையில் வாடுவதாக 2021 அறிக்கை தெரிவிக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஐன்ஸ்டைனும் குழந்தைகளும்

பி.ஏ.கிருஷ்ணன் 21 Sep 2021

பொருளாதாரம் காரணம்

பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் பொருளாதாரம் சார்ந்த துயரங்கள் அதிகம். நாட்டை இதற்கும் முன்னால் ஆண்ட கன்சர்வேடிவ் கட்சி, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அரசின் செலவுகளைக் குறைத்துக்கொண்டேவந்தது. 2013இல் ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது. சிக்கன நடவடிக்கையாக அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியளவும் சுகாதாரச் செலவுகளும் வெட்டப்பட்டேவந்தன. இவை போக, பிற சமூக நல்வாழ்வுச் செலவுகளும் படிப்படியாக குறைக்கப்பட்டன.

இதன் காரணமாக அனைத்து வருவாய்ப் பிரிவு மக்களும் அடிக்கடி போய்வந்த நூலகம், சமூக சமுதாயக் கூடங்கள், இளைஞர் மையங்கள் போன்ற பொதுஇடங்களில் பல மூடப்பட்டன. இதைக் கடுமையான வறுமை, மனித உரிமைகள் மீறலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்புப் பிரதிநிதி 2018இல் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுபோக, பிரிட்டனில் கல்விமுறையானது அனைத்து குழந்தைகளுக்குமானது அல்ல என்கிறார் ரஸ்ஸல். பின்லாந்து, ஹாலந்து நாடுகளைவிட பிரிட்டனில் குழந்தைகளுக்கு மாதாந்திர டெஸ்ட், வாராந்திர டெஸ்ட், காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு என்று தொடர்ந்து தேர்வுகளாகவே நடத்தும் வழக்கம் இருக்கிறது. இதனால் பள்ளிக்கூட மாணவர்கள் நிம்மதி இழக்கின்றனர்.

ஏட்டுக் கல்வியும் தொழில் கல்வியும் ஒரே வகையில் மதிப்பிடப்பட வேண்டும் என்கிறார் ரஸ்ஸல். ஏட்டுக் கல்வியுடன் குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் அப்போதுதான் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு தினந்தோறும் வந்தாலும் அவர்களுடைய மனம் பாடங்களில் ஒன்றும் என்கிறார்.

பெண் குழந்தைகள்

ஆண் குழந்தைகளைவிட அதிக எண்ணிக்கையில் பெண் குழந்தைகள் கவலைப்படுகின்றனர். தங்களுடைய குடும்பச் சூழல், தங்களுடைய தோற்றம், தங்கள் பள்ளியின் கெடுபிடிகள் ஆகியவற்றை நினைத்து அதிகம் வருந்துகின்றனர். மாணவர்களில் 20%, மாணவிகளில் 31% தங்களுக்கு, வாழ்க்கை திருப்தியாக இல்லை என்று கூறியுள்ளனர். வளர்ச்சிக்கான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ஓஇசிடி) என்ற அமைப்பு 2022இல் எடுத்த ஆய்வும் இதைத் தெரிவிக்கிறது. பெண் குழந்தைகள் ஏன் அதிகம் கவலைப்படுகின்றனர் என்பதை அரசும் சமூகமும் கவனிக்க வேண்டும் என்கிறது அறிக்கை.

பெண் குழந்தைகளைப் பற்றி வீடுகளில் என்ன பேசுகிறார்கள், வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதைப்போல உடன் படிக்கும் மாணவர்கள் அவர்களிடம் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதும் இந்தக் கவலைகளுக்கும் மகிழ்ச்சியற்ற நிலைக்கும் முக்கிய காரணமாகத் தெரிகிறது. ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைக் கேலிசெய்வது, மிரட்டுவது, அவமானப்படுத்துவது காரணமாக பெண் குழந்தைகளுக்குக் கவலையும் வருத்தமும் அதிகமாகிறது.

எப்படி அளவிடுவது?

ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறதா, இல்லையா என்பதை அளவிட இதுவரை பொதுவான வழிமுறையோ, உத்தியோ இல்லை. கேள்விக் கேட்டு பெறப்படும் பதில்கள் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் பொதுஇடங்களிலும் புறக்கணிக்கப்படுவது அல்லது ஒதுக்கப்படுவது, மோசமாக நடத்தப்படுவது ஆகியவற்றையும் ஆய்வுகளில் சேர்த்து ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய குடும்ப அரவணைப்பு, நண்பர்களின் ஆதரவு, உருவத் தோற்றம் குறித்த சுயமதிப்பீடு, பள்ளிக்கூடத்தின் தன்மை, பள்ளிக்கூடத்தில் தரப்படும் வீட்டுப்பாட வேலைகள் என்று ஒவ்வொன்றாக யோசித்து, திருப்தி இருந்தால் அதிகபட்சம் 7 மதிப்பெண்களும் குறைவாக இருந்தால் பூஜ்யம் அல்லது ஒன்று முதல் ஏழு வரை ஏதாவதொரு எண்ணும் தருமாறு மாணவர்களிடம் கூறப்பட்ட பிறகே ஆய்வு நடத்தப்பட்டது.

பரிந்துரைகள்

பிரிட்டனின் குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை என்று அறிக்கை தெரிவித்த உடனேயே அதை நடத்திய அறக்கட்டளை அரசுக்குச் சில பரிந்துரைகளையும் கூறியிருக்கிறது.

  • தேசிய அளவில் குழந்தைகளின் நலனுக்காக புதிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் உடல் நல - மனநல நிபுணரை அரசு அனுப்பிவைக்க வேண்டும். தேசிய சுகாதார திட்டத்தில் இதைச் சேர்ப்பதாக பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதியளித்திருக்கிறார்.
  • பெண் குழந்தைகளுக்கு ஏன் அதிகக் கவலை என்று மேலும் அதிகமாக தகவல்களைப் பெற்று உரிய பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசின் மானிய உதவிகள் கிடையாது என்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும். எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின் உதவிகள் வழங்கப்பட வேண்டும். அரசின் இந்தக் கட்டுப்பாட்டால் மூன்றாவது, நான்காவது என்று பிறந்த குழந்தைகள் கிட்டத்தட்ட 16 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
  • பள்ளிக்கூட சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். வலுத்த மாணவன் இளைத்த மாணவனை மிரட்டுவது, அடிப்பது, அவமானப்படுத்துவது போன்றவை தடுக்கப்பட வேண்டும்.
  • குழந்தைகள் இணைந்து விளையாடவும் சேர்ந்து சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர் தவிர பள்ளிக்கூட குழந்தைகள் நம்பிக்கையோடு பழக மூன்றாவது தரப்பினரும் அவசியம் என்கிறார் ரஸ்ஸல்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

திரை அடிமைகள் ஆகிறோமா?

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் 21 Mar 2023

பல குழந்தைகளுக்கு, பெற்றோர் வேலைக்குப் போவதாலும் ஆசிரியர்களுக்கு நேரம் இல்லாமல் போவதாலும் மூன்றாவது தரப்பு நபர்களை அணுக அச்சமாக இருக்கிறது. இதனால் அவர்கள் மொபைல் போனில் சமூக ஊடகங்களில் அதிகம் மூழ்குகின்றனர். இது அவர்களுக்கு மனமகிழ்ச்சியை அளிப்பதற்குப் பதிலாக அவர்களுடைய ஆளுமையை குறைத்து மதிப்பிடவைத்து, சோகத்தில் தள்ளுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார் ரஸ்ஸல்.

குழந்தைகளின் குறைகளைக் கேட்கவும் அவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி உற்சாகமூட்டவும் அரசு அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்கிறார்.

© அல் ஜஸீரா

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

‘ஸ்மார்ட்போன்’ தடையால் மேம்பட்டது படிப்பு!
ஐன்ஸ்டைனும் குழந்தைகளும்
குழந்தைகளுக்குத் தடுப்பாற்றல் குறைந்திருப்பது, ஏன்?
சைபர் வலையிலிருந்து சிறாரை மீட்பது எப்படி?
திரை அடிமைகள் ஆகிறோமா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






கேரள மாதிரிவினோத் கே.ஜோஸ்பாலசுப்ரமணியன்சோழர்களின் நிர்வாகக் கலை முக்கியமானது: அஷோக் வர்தனபன்னிரெண்டாம் வகுப்புashok selvan keerthiதேர்தல் ஜனநாயகம்உத்தர பிரதேச தேர்தல்சமஸ் கி.ரா. பேட்டிஅபர்ணா கார்த்திகேயன் கட்டுரைஇல்லம் தேடிகாங்கிரஸ் வளர்ச்சிபெட்டியோதாகூர்ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்வாக்கர்மொழியும் பிம்பங்களும்லலாய் சிங் பெரியார்வித்யாசங்கர் ஸ்தபதிஅருஞ்சொல் ஜல்லிக்கட்டு பெருமாள் முருகன்வாழ்வாதாரம்மரபியர்தீண்டாமையும்டாடா நிறுவனம்சீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!மருத்துவக் கட்டுரைகள்சார்லி சாப்ளின் அத்வானிநாம் தமிழர்உடை அரசியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!