கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 5 நிமிட வாசிப்பு

கூகுள் பே: சுரண்டும் அட்டை மோசடி

ஹரிஹரசுதன் தங்கவேலு
27 Aug 2022, 5:00 am
0

ன்று மொபைலில்தான் பெரும்பான்மை பணப் பரிவர்த்தனைகளைச் செய்கிறோம். ‘போன் பே’, ‘கூகுள் பே’, ‘பே டிஎம்’ என எண்ணற்ற பணப் பரிமாற்றச் செயலிகள் இதற்கு உதவுகின்றன. இவை ஒரு தொழில்நுட்ப வரம்.

வெளியில் செல்லும்போது நமது பணப் பையை எடுத்துச்செல்ல வேண்டியது இல்லை. அது தொலைந்துபோகும், பிக் பாக்கெட் களவுபோகும் என்றெல்லாம் அஞ்சத் தேவை இல்லை. பணத்திற்காக ஏடிஎம் மையங்களில் கால் கடுக்க நிற்க தேவை இல்லை. ஒரு ரூபாய் என்றாலும் லட்சம் என்றாலும் ஒரே அழுத்தில் பணம் கைமாறிவிடும். ஒருவேளை, கைபேசி தொலைந்துபோனால்கூட அதை வைத்து நமது சேமிப்பைக் களவாட முடியாது. எல்லாம் சரிதான்; ஆனால், இதுபோல பலவிதங்களில் உதவியாக இருக்கும் இச்செயலிகளைக் குறிவைத்தும் மோசடிகள் அரங்கேறுகின்றனவே, என்ன செய்வது? 

நாம் ஏமாறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கும் மிக முக்கியமான மோசடி, ‘சுரண்டும் அட்டை’ (Scratch Card) மோசடி. இந்த வகைச் செயலிகளில் ஒவ்வொரு முறை பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் போனஸ் அல்லது ரிவார்ட்ஸ் என்ற பெயரில் கணிசமான தொகையை (கேஷ் பேக் - Cash Back) திரும்ப நமக்குத் தருவார்கள். ஒரு நீல நிற அட்டை வடிவில் கிடைக்கும் இதைத் தேய்த்தால் நமது கேஷ் பேக் தொகை எவ்வளவு எனத் தெரியும். பெரும்பான்மையாக இதில் ஒன்றும் கிடைக்காது. அதிர்ஷ்ட தேவதை நம் பக்கம் இருந்தால் ஐந்து ரூபாய் கிடைக்கலாம்.

நீங்கள் அண்மையில் வாங்கிய பொருளுக்கான கேஷ் பேக்கைப் பெற்றிட கீழ்கண்ட கூகுள் பே இணைப்பை க்ளிக் செய்யவும் என நண்பருக்கு வாட்ஸப்பில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நண்பர் அதை க்ளிக் செய்ய அது கூகுள் பே போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அங்கு இவருக்காக நீல நிற அட்டை காத்திருக்க, அட இது தெரியாதா என அதைச் சுரண்டியிருக்கிறார். ரூ.1,756 உங்களுக்கு கேஷ் பேக் கிடைத்திருக்கிறது என அதில் வரவும், மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, இதைப் பெற்றுக்கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் என இருந்ததை அழுத்தியிருக்கிறார்.

அது கூகுள் பே செயலிக்கு அழைத்துச் சென்று, பணப் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கான ஆறிலக்க பின் எண்ணை இடச் சொல்லியிருக்கிறது. அது தந்ததும், இவருக்கு ரூ.1,756 வருவதற்கு பதிலாக, இவரிடம் இருந்து அத்தொகை இன்னொருவர் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பிறரது போன் எண்ணோ, வங்கி கணக்கோ,  ‘க்யூஆர்’ (QR) குறியீடு எதுவுமே தராமல் எப்படி இந்த பணம் இவரது கணக்கில் இருந்து பறிபோனது என நண்பருக்கு உறக்கமே வரவில்லை.

இந்த மோசடி எப்படி நிகழ்கிறது?  

மொபைல் பணப் பரிமாற்ற செயலிகளில் ‘யுபிஐ ஐடி’ (UPI ID) அல்லது ‘விபிஏ’ (VPA) என்று அழைக்கப்படும் மெய்நிகர் பணப் பரிமாற்ற முகவரி ஒவ்வொரு பயனருக்கும் வழங்கப்படும். உங்களது பெயர் அதன் பிறகு உங்கள் வங்கியைக் குறித்து உருவாக்கப்படும் உங்களது பிரத்யேக முகவரி இது. நமது மொபைல் எண்ணோ அல்லது இந்த பரிமாற்ற முகவரியைத் தந்தால்தான் நம்மால் பணத்தைப் பெற முடியும். 

ஆனால், விற்பனையாளர்களுக்கு இந்த விபரங்களை ஒரு இணைப்பாக அனுப்பும் வசதியை ‘ரேஸர்பே’ (RAZORPAY), ‘இன்ஸ்டாமோஜோ’ (INSTAMOJO) போன்ற தளங்கள் தருகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை எளிமையாக நிர்வகித்துத் தருவதுதான் இத்தளங்களின் வணிகம். ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்காக அவர்களது கணக்கிற்கு நேரடியாகப் பணம் வருவதற்காக, அவர்களது வங்கி விபரங்களைப் பிறரிடத்தில் பகிரக்கூடிய ஒரு இணைப்பாக (பேமென்ட் லின்க் - Payment Link) இவர்கள் உருவாக்கித் தருகிறார்கள்.

வாடிக்கையாளர் ஏதேனும் பொருளை வாங்க நினைத்தால் அதற்கு கீழே இருக்கும் இந்த இணைப்பைக் கிளிக் செய்தால் போதும், அவரது மொபைலில் இருக்கும் பணப் பரிவர்த்தனைச் செயலி மூலம் நேரடியாக பின் எண் தரும், பிறகு இறுதிக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிடும். வாடிக்கையாளர் பின் எண் மட்டும் தந்தால் போதும், பரிவர்த்தனை வெற்றிகரமாக நிகழ்ந்து பொருள் ஆர்டர் செய்யப்பட்டுவிடும்.

இந்த சேவையைத்தான் மோசடியாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களது ‘யுபிஐ’ (UPI) செயலிகளுக்கான இணைப்பை இங்கு உருவாக்கி, அதை நேரடியாக அனுப்பாமல், கேஷ் பேக் சலுகை என ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பணப் பரிவர்த்தனைச் செயலிகளில் இருப்பது போலவே போனஸ் அட்டையைப் போலியாக உருவாக்கி, அதை சுரண்டியதும் ஒரு கணிசமான தொகை வருவதுபோல அனிமேஷன் செய்கிறார்கள். விஷயம் இதற்குப் பிறகுதான் நிகழ்கிறது. இந்தத் தொகை வேண்டுமெனில் இங்கு கிளிக் செய்யுங்கள் எனப் பட்டியைக் காட்டுகிறார்கள் அல்லவா, அதனுள் ஹைப்பர்லிங்க் எனப்படும் பின்னணி இணைப்பாக, தாங்கள் உருவாக்கிய பணப் பரிமாற்ற இணைப்பைச் (பேமென்ட் லிங்க் -  Payment Link) செருகிவிடுவார்கள். 

ஆகவேதான், அதைக் க்ளிக் செய்ததும் நேரடியாக பின் எண் தரும் இறுதிக் கட்டத்திற்கு அது எடுத்துச் செல்கிறது. அங்கு சற்று சுதாரிப்பவர்களைக் குழப்புவதற்காக, எதற்காக இந்த பரிவர்த்தனை என குறிக்கும் (ரிமார்ஸ் அல்லது நோட்ஸ் - Remarks or Note ) பகுதியில், உங்களுக்கான கேஷ் பேக் இது என எழுதிவிடுவார்கள். இங்கு உணவு, வாடகை, எரிபொருள் என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். 

உங்களுக்கான கேஷ் பேக் என ஒரு அட்டையைச் சுரண்ட வைத்து அதில் ஒரு தொகையைக் காட்டி, இணைப்பைக் க்ளிக் செய்ய வைத்து, அங்கும் இது கேஷ் பேக் எனக் குறிப்பில் எழுதியிருப்பதால் எவ்வித சந்தேகமும் இன்றி நாம் நமது பின் எண்ணைத் தந்து பணத்தை இழந்துவிடுகிறோம். 

இந்த மோசடிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது எப்படி?

  1. மொபைல் பணப் பரிவர்த்தனைச் செயலிகளில் நாம் பணம் அனுப்புவதற்குத்தான் ஆறிலக்க பின் எண் தர வேண்டுமே தவிர, பணம் பெறுவதற்கு எதுவும் தரத் தேவையில்லை. ஆகவே, பின் எண்ணை அழுத்தினால் நாம் பணம் வெளியில் போகும் என்பதை நீங்கள் நிச்சயமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 
  2. இந்தச் செயலிகளைத் தவிர வேறெங்கும் உங்களுக்குப் பரிசுகள், பணத் திருப்பல்கள் கிடைக்காது. ஆகவே வாட்ஸப், இன்ஸ்ட்டா என வெளியில் இருந்து பரிசு, பாராட்டு, நம்பிக்கை, உங்கள் நல்ல மனசுக்கு இது தருகிறோம் என எது வந்தாலும் அது போலிதான். பதிலே அனுப்பாதீர்கள், பகிரும் எதையும் க்ளிக்கும் செய்யாதீர்கள்.
  3. அப்படியே இணைப்பை க்ளிக் செய்தாலும் அது அழைத்து செல்லும் தளத்தை ஒரு நொடியாவது கவனியுங்கள். அதன் இணைய முகவரி ஏன் நீளமாக ‘-எக்ஸ்ஒய்ஸெட்’, ‘ஏபிசி’ (-xyz, abc) என இத்தனை உடைசல்களுடன் இருக்கிறது. தளத்தின் வடிவமைப்பு ஏன் பயங்கர வண்ணங்களில் ஒரு குறைந்த பட்ஜெட் தெலுங்கு படம்போல தனித்துத் தெரிகிறது. ஏன் தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் எழுத்துகள் இருக்கிறது என்பனபோல இருந்தால் கவனியுங்கள். 'இங்க என்னமோ தப்பா இருக்கே!' ஒரு சிறிய இடறலை இவை உங்கள் மனதில் ஏற்படுத்தினாலும் பரிவர்த்தனையைக் கைவிட்டுவிடுங்கள்.
  4. அப்புறம் முக்கியமாக போனஸ், பரிசு, லாட்டரி எல்லாம் யாருக்கு கிடைத்தாலும் நமக்குக் கிடைக்காது. அது நமக்கே தெரியும் என்பதால் மோசடிகளில் சிக்காமல் உழைத்துக் கரையேறும் வழியைப் பார்ப்போம். 

(தொடர்ந்து பேசுவோம்...)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


9

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சமஸ் - நல்லகண்ணுஇளைஞர்கள்சங்கராச்சாரியார்பொங்கல்குதிகால் வலிவருமான வரி விலக்குவங்கி ஊழியர்கள்அம்பேத்கரை அறிய புதிய நூல்சமத்துவமின்மைபத்திரிகையாளர் சமஸ்காட்சி ஊடகமும்முத்துலிங்கம் சிறுகதைகள்சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்பாத பாதிப்புவர்ணாசிரமம்அறிவியல் எனும் ஜன்னல் திறந்தே இருக்கட்டும்பக்க வாதம் தவிர்ப்பது எப்படிஒரு ஆங்கில ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்வரவு – செலவுசேவை மையம்இரவிச்சந்திரன்மார்க்ஸிய ஜிகாத்பண்டிட்டுகள் மீதான வெறியாட்டம்103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019ஆர்பிஐசாய்நாத்காடுகள்தாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?எரிபொருள் வரிஆலென் ஆஸ்பெ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!