கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

குழந்தைகளுக்குத் தடுப்பாற்றல் குறைந்திருப்பது, ஏன்?

கு.கணேசன்
05 May 2024, 5:00 am
0

லக அளவில் குழந்தைகளுக்குச் சளி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல் போன்ற சுவாசத் தொல்லைகள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாகவும், சுவாசம் தொடர்பிலான வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் மருத்துவப் புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன. இந்தியாவிலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இதே நிலைமைதான். என்ன காரணம்?

இன்றைய குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பாற்றல் குறைந்திருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறது அந்தப் புள்ளி விவரத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வறிக்கை.

இது கொரோனாவின் விளைவா?

இல்லை. கொரோனா பரவிய மூன்று முக்கிய அலைகளிலும் அது குழந்தைகளை அவ்வளவாக பாதிக்கவில்லை. அதனால் கொரோனா இதற்கு நேரடியான காரணம் இல்லை. அதேசமயம், கொரோனா காலத்தில் குழந்தைகளை நாம் பொதுவெளியில் விடவில்லை. தெருக்களில் விளையாடக்கூட அனுமதிக்கவில்லை. அடுத்தவீட்டுக் குழந்தைகளுடன் பழக அனுமதியில்லை. இரண்டு வருடங்கள் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டில்தான் அடைபட்டுக்கிடந்தார்கள்.

இப்போது பரவும் வைரஸ் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அப்போதும் இருக்கத்தான் செய்தன. ஆனால், நாம் குழந்தைகளை ‘ஹவுஸ் அரெஸ்ட்’ செய்துவிட்ட காரணத்தால், அந்தக் கிருமிகளை நம் குழந்தைகள் எதிர்கொள்ளவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தடுப்பாற்றல் இடைவெளி

பொதுவாக, ஒரு நுண்ணுயிரி அல்லது ஒவ்வாத பொருள் உடலுக்குள் புகுந்தால்தான், நம் உடலுக்குள் இயங்கும் தடுப்பாற்றல் மண்டலம் விழித்துக்கொண்டு, அவற்றை எதிர்த்துப் போராட நம்மை தயார்ப்படுத்தும். இல்லையென்றால், ஆள் இல்லாத கெஸ்ட் ஹவுஸில் காவலாளி தூங்கி வழிகிற மாதிரி சோம்பேறியாகிவிடும். இதுதான் இன்றைய குழந்தைகளுக்கு நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலைமையைத் ‘தடுப்பாற்றல் இடைவெளி’ (Immunity gap) என்கிறது நவீன மருத்துவம்.

இதன் காரணமாக, இதுவரை தடுப்பூசி சார்ந்த வைரஸ் நோய்களை மட்டுமே எதிர்கொண்ட குழந்தைகள், தற்போது பிற வைரஸ் சார்ந்த நோய்களை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே, இனி வரும் காலங்களில், நம் குழந்தைகளின் உடலில் புதிய நோய் எதிர்ப்பணுக்கள் (Antibodies) உருவாகவும், புதிய நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராட உடல் திசுக்களை அவை தயார்செய்யவும் நம் குழந்தைகளின் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதற்கு பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

சத்தான உணவு முக்கியம்!

உடலில் தடுப்பாற்றல் அதிகரிக்க வேண்டுமானால் முதலில் குழந்தைகளின் உணவில் மாற்றம் கொண்டுவர வேண்டும். காரணம், இன்றைய குழந்தைகள் சத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேல்நாட்டு உணவுகள் மீதுதான் அவர்களுக்கு மோகம் அதிகம். சத்துகளில் சமநிலை இல்லாத, சக்கை உணவுகளையே அதிக அளவில் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். முதலில் இந்தப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வரும் சவலை ஒரு பிரச்சினை என்றால், ஊட்டச்சத்து மிகுதியால் வரும் உடற்பருமன் அடுத்த பிரச்சினை. இந்த இரண்டுமே குழந்தைகளின் தடுப்பாற்றலைத் தடுக்கும் எதிராளிகள். ஆகவே, தேவையான கலோரிகளோடு, உணவில் எல்லா சத்துகளும் சரிசமமாக இருக்கும்படி பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

துரித உணவைக் குறை!

துரித உணவுகளைக் குறைத்துக்கொள்வது இதன் முதல் படி. இவற்றை முழுவதுமாகத் தவிர்ப்பது கடினம் என்பதால் இந்த யோசனை. நமக்கு தடுப்பாற்றல் தருவதே புரதங்கள்தான். ஆகவே, புரதம் மிகுந்த உணவுகளுக்கு முக்கிய இடம் வேண்டும். சிறுதானியங்கள், முளைகட்டிய தானியங்கள், பருப்பு, பால், தயிர், பனீர், பாலாடை, முட்டை, இறால், இறைச்சி, ஈரல், காளான், பாதாம்பருப்பு போன்றவை தடுப்பாற்றலைக் கூட்ட உதவும் ‘விஐபி’ புரத உணவுகள். இறைச்சியைப் பொறுத்தவரை எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுவதைவிட குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது. பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் தயாரித்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், வெளியில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கடைகளில் பலதரப்பட்ட செயற்கை வண்ணங்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு ‘டாடா’ காண்பியுங்கள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 03 Mar 2024

தினசரி பழங்கள், காய்கறிகள், கீரைகளைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். மாலை வேளைகளில் நிலக்கடலை, சுண்டல், பயறு நல்லது. அத்தோடு நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, தக்காளி, பப்பாளி, மாதுளை போன்றவற்றின் பழச்சாறுகளில் ஒன்றை அருந்தக் கொடுக்கலாம். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம். இன்னும் சொன்னால், பழச்சாறுகளைவிட முழுப் பழங்களாக எடுத்துக்கொள்வதுதான் இன்னும் நல்லது.

குழந்தைகள் காய்கறி, கீரைகளைச் சாப்பிட விரும்புவதில்லை என்று ஒரு புகார் உண்டு. துரித உணவில் அவர்கள் விரும்பும் வண்ணத்திலும் ருசியிலும் காய்களையும் கீரையையும் கலந்து கொடுக்க பெற்றோர் கற்றுக்கொண்டால் இந்தப் புகாருக்கு இடம் இருக்காது.

தண்ணீர்! தண்ணீர்!

தினமும் 2லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். இன்றைய குழந்தைகள் இதில் பெரிய தவறு செய்கின்றனர். பல பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியில்லாத காரணத்தால், வகுப்பு இடைவேளைகளில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க, தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கின்றனர். அதேசமயம், வீட்டில் மென்பானங்களை அருந்துகின்றனர். இது கூடாது.

அடுத்து, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகளையும் உடனடி உணவுகளையும் அடிக்கடி கொடுத்துப் பழக்க வேண்டாம். காரணம், இவற்றில் கலக்கப்படும் பலதரப்பட்ட வேதிப்பொருள்கள் நம் தடுப்பாற்றல் மண்டலத்துக்கு சயனைடுகள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஒல்லியாக இருப்பது ஏன்?

கு.கணேசன் 18 Feb 2024

உடற்பயிற்சி அவசியம்

தடுப்பாற்றலை அதிகரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக முக்கியம். உடல் எடையைப் பாரமரிக்கவும் இது உதவுகிறது. ஆனால், நடைமுறையில் குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் டியூசன், கோச்சிங், தனித்திறமைகளுக்கான வகுப்புகள் என்று பிஸியாகிவிடுவதால், உடற்பயிற்சிக்குத் தனியாக நேரம் ஒதுக்குவது மிக அரிது.

இவர்கள் வீட்டிலேயே யோகாசனம் செய்யலாம். ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சி செய்யலாம். மொட்டை மாடியில் நடக்கலாம். தோட்ட வேலைகளைச் செய்யலாம். எல்லாமே நல்லதுதான்.

கைப்பேசியைத் தள்ளி வை!

இன்றைய குழந்தைகளின் நவீன போதைப் பழக்கம் கைப்பேசிப் பயன்பாடு. குழந்தைகள் கைப்பேசியை பயன்படுத்துவது தினசரி 2 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்கிறது அறிவியல். ஆனால், அவர்கள் தினசரி 3 மணி நேரத்துக்கும் அதிகமாகச் செலவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அதிலும் விடுமுறை காலத்தில் அவர்கள் கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்களில் முழு நேரமும் மூழ்கிவிடுவதால், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தூக்கம் மட்டும் குறைவதில்லை, உடலியக்கமும் குறைந்துவிடுகிறது. மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு அவர்கள் தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும். விடுமுறையிலாவது நன்கு உறங்கவிடுங்கள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

வேண்டாம் மன அழுத்தம்!

மன அழுத்தம் அதிகரித்தால் தடுப்பாற்றல் குறைந்துவிடும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளையும் கையாள வேண்டும். உதாரணமாக, மாணவர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குள் பாடங்களைப் படிக்க முடியாமல் போவது, வீட்டுப்பாட வேலைகளை முடிக்க முடியாமல் திணறுவது போன்றவை மன அழுத்தத்தைத் தருகின்றன. திட்டமிட்டுப் படிப்பதையும் நேர மேலாண்மையையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். மன அமைதிக்காக தினசரி பத்து நிமிடம் தியானம், பிரணாயாமம் மேற்கொள்ளலாம்.

கோடைக்கால பயிற்சிகள்

இப்போது கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. மழைக்காலத்தில் புறப்படும் காளான்களைப்போல கோடைக்காலத்தில் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் தெருவெங்கும் தொடங்கப்படுவதை அறிவீர்கள். வருடம் முழுவதும் புத்தகங்களைச் சுமந்து மதிப்பெண்களை நோக்கியே ஓடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு மனதளவில் ஓய்வு தரும் வகையில் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்தான். அதேசமயம், எந்தக் குழந்தைக்கு எந்தப் பயிற்சி தேவை என்பதைப் பெற்றோர்தான் கணிக்க வேண்டும். அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள், நண்பர் வீட்டுக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள் என்றெல்லாம் காரணம் கற்பித்துத் தனிப்பயிற்சிகளுக்குக் குழந்தைகளை அனுப்பாதீர்கள்.

முக்கியமாக, விடுமுறையிலும் புத்தகங்களைச் சுமக்க வைக்காதீர்கள். நீச்சல் பயிற்சி, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பயிற்சி, இசைப் பயிற்சி, கலை போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்வதாக இருந்தால், இந்த விடுமுறையிலாவது, குழந்தைகளுடன் நேரம் செலவிடத் திட்டமிடுங்கள்.

தடுப்பூசிகள் உதவும்

தடுப்பாற்றலை அதிகரிக்க குழந்தைப் பருவத் தடுப்பூசிகளை முறையாகப் போட்டுக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அத்தோடு, வருடத்துக்கு ஒருமுறை ஃபுளூ தடுப்பூசியையும் தேவைப்படும்போது நிமோனியா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

களைப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 03 Dec 2023

கோடைச் சுற்றுலா

எந்த வருடத்திலும் இல்லாமல் இந்த வருடம் அக்னி அலை ரொம்பவும் படுத்துகிறது. குழந்தைகளைத் தகுந்த பாதுகாப்புடன் வெளியிடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள்.

சுற்றுலா இல்லையென்றால், சொந்த கிராமங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். தாத்தா பாட்டிகளுடன் உறவாடவிடுங்கள். உறவினர்களையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்துங்கள். புதிய குழந்தைகளுடன் பழக விடுங்கள். உளுந்தங்களி, அதிரசம், குழிப்பனியாரம், வெல்லமிட்டாய், கடலைமிட்டாய் போன்ற கிராமிய உணவுகளைக் கொடுத்துப் பழக்குங்கள்.

நகர்ப்புறக் குழந்தைகள் அடுக்கக வீடுகளில் ஷோபாக்களில் அமர்ந்து சுகம் கண்டவர்கள். கிராமங்களில் அவர்களை நன்கு விளையாட விடுங்கள். அரை மணி நேரம் வெயிலில் விளையாடினால் அன்றைக்குத் தேவையான வைட்டமின் – டி கிடைத்துவிடும். எலும்பு வலிமைக்கு இது உதவும். அதற்காக, இந்தக் கடுங்கோடையில் பகல் 11 மணி முதல் 4 மணிவரை விளையாட விடாதீர்கள்.

கிராமங்களில் அசுத்தமான புழுதியில் விழுந்து புரண்டாலும் தடுக்காதீர்கள். உடல் அழுக்கானாலும் கவலைப்படாதீர்கள். சின்னச் சின்ன காயம் பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியான புதுப்புது அனுபவங்கள் நோய்த் தடுப்பாற்றலை மேம்படுத்த உதவும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

கோடையில் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும், ஏன்?
நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?
ஒல்லியாக இருப்பது ஏன்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
களைப்பு ஏற்படுவது ஏன்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1






யார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி?தொடர்ந்து மறுக்குது அரசாங்கம்கலாச்சாரப் புரட்சிதமிழகம்பால் ஆஸ்டர் கட்டுரைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்புகழ்ச்சிக்குரியவர் இயான் ஜேக்அமைதியாக ஒரு பாய்ச்சல்கிக்யுசிசிவேளாண்மைமக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை!வேலைத் திறன் குறைபாடுசமஸ் கல்யாணி அருஞ்சொல் பேட்டிசமூகக் கல்விசுற்றுச்சூழலியல்நம் காலம்பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமைமானியக் குழுபெரியதோர் துண்டுராஜீவ் காந்திபாரம்பரியம்கட்டற்ற நுகர்வுஇந்தியப் பொருளாதாரம்அறம் எழுக!அண்ணா அருஞ்சொல் பொங்கல் கடிதம் கட்டுரைஇடைத்தேர்தலும் ஒரே தேர்தலும்மணி சங்கர் ஐயர்வெறுப்பரசியல் என்னும் தொற்றுநோய்நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!