கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 5 நிமிட வாசிப்பு

சைபர் வலையிலிருந்து சிறாரை மீட்பது எப்படி?

ஹரிஹரசுதன் தங்கவேலு
03 Sep 2022, 5:00 am
0

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் இழுத்துப் பிடித்து இணைத்து வைத்திருக்கும் தொழில்நுட்பம், இணையம். கணினியும் இணையமும் சர்வ நிச்சயமாகக் கற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய சிறார். கல்வி, கலை விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பு என எல்லா வகைகளிலும் அவர்களுக்கு உதவும் இணையத்தில் சில பேராபத்துகளையும் அவர்கள் கடந்து வரத்தான் வேண்டியிருக்கிறது.  

ஆம், சைபர் குற்றவாளிகள் சிறாரைக்கூட விடுவதில்லை. அவர்களை இணையத்தில் பின்தொடர்ந்து, அவர்களை அச்சுறுத்தி உளவியல் மற்றும் உடல்ரீதியாக மிகப் பெரும் தாக்குதலை நடத்துகிறார்கள். சிறார் மீதான சைபர் குற்றங்கள் பற்றிய அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த மாதம் வெளியிட்டது. 

அதன்படி, 2017 - 2020 வருடங்களில் சிறார் மீதான சைபர் குற்ற வழக்குகள் 1,727 தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், முழுமையாக விசாரிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டது வெறும் 9. இவற்றில் 6 வழக்குகளில் குற்றம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 3 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு விடுதலை அளிக்கப்பட்டிருக்கிறது. இதர 98% வழக்குகள் இறுதி நிலையை எட்டாமல் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. இவற்றிலும் 479 வழக்குகளுக்கு (27%)தான் சார்ஜ் ஷீட் எனப்படும் காவல் துறைத் தரப்பின் முழுமையான விசாரணை அறிக்கை நீதிமன்றங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதர ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு காவல் துறை இன்னும் முழு விசாரணையை முடிக்கவில்லை.  

இந்திய அளவில் சிறார் மீதான சைபர் குற்றங்களில் 2017இல் பதிவான புகார்களின் எண்ணிக்கை 88. இது 2020இல் 1,102 குற்றங்களாக உச்சம் தொட்டது, குற்றங்களின் எண்ணிக்கை 2021இல் 1,081ஆக சற்றே குறைந்திருக்கிறது.  

இதில் 67% குற்றங்கள், சைபர் ஆபாசம் / பாலியல்ரீதியாக சித்தரித்து சிறார் புகைப்படங்கள் பதிவிடுதல் எனும் பிரிவில் நிகழ்ந்துள்ளது.  2020இல் பதிவான 1,102 குற்றங்களில், மகாராஷ்டிரா மாநிலம் 207 குற்றங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் (197), கர்நாடகம் (144). தமிழ்நாடு 35 குற்றங்களுடன் 8வது இடத்தில் இருக்கிறது.

சிறார் மீதான சைபர் குற்றங்களில் 2020இல் மூன்றாவது இடத்தில் இருந்த கர்நாடகம், 2021இல் 164 குற்றங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. பதிவான மொத்த 1,081 குற்றங்களில் 15% இது. 172 சிறார்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூருவில் மட்டுமே 57 சம்பவங்கள், புகார்களாகப் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து டெல்லி (161), கேரளம் (138) என 2021ஆம் ஆண்டு குற்றங்கள் அணிவகுக்கிறது. இங்கே மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, 2019இல்  கர்நாடகத்தில் வெறும் 10 வழக்குகள் மட்டுமே இப்பிரிவில் பதிவாகியிருக்கின்றன. ஆனால், இரண்டே வருடங்களில் 164 குற்றங்களாக, சுமார் 1,340% அது உயர்ந்துள்ளது.

சிறார் மீதான சைபர் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன? 

மிக நிச்சயமாக இணையப் பயன்பாடும், ஸ்மார்ட் சாதனங்களின் உபயோகமும்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிள்ளைகள் என்று வந்துவிட்டால் செலவழிக்க நாம் தயங்குவதில்லை. கடந்த இரு வருடங்களில் ஆன்லைன் கல்வி, அதற்கேற்ப தொடர்ந்த அதிவேக இணையம், பெரிய திரை கொண்ட கணினி அல்லது கைபேசி எனச் சமூகத்தில் அனைத்து வர்க்கமும் அவர்களால் முடிந்த வசதிக்கு இதை உறுதிசெய்தார்கள். அதன் இலவச இணைப்பாக குற்றங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. 

சிறார் டிஜிட்டல் விளையாட்டுகளைக்கூட தனிநபராக விளையாடாமல் ஆன்லைனில் குழுவாக இணைந்து விளையாடுகிறார்கள். புதிய நண்பர்கள், அவர்களிடமிருந்து வரும் இன்பாக்ஸ் செய்திகள் அவர்களுக்கு ஓர் ஆர்வத்தை உருவாக்குகிறது. தங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அறியாதோரிடம் பகிரத் துவங்குகிறார்கள். இதன் விளைவே சைபர் சிக்கல்களில் மாட்டிக்கொள்வது.

சைபர் கிரிமினல்கள் எப்படி சிறார்களை அணுகுகிறார்கள்? 

சிறாரை அணுகுவதற்கு சைபர் கிரிமினல்கள் அதிகம் தேர்ந்தெடுப்பது சமூக வலைதளங்களைத்தான். தேடுதல் வசதியைப் பயன்படுத்தி, ஸ்பைடர்மேன், டோரா, பிரின்சஸ் எனச் சிறாரின் பயனர் பெயர் மற்றும் வயதை யூகித்துத் தேடுவர். பிறகு அவர்களைப் போலவே தங்களையும் சிறார் எனக் காட்டிக்கொண்டு செய்திகள் அனுப்புவர். உனக்குப் பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும் என ஒருமித்த ரசனையை உருவாக்குவர். நாம் நண்பர்களாக இருக்கலாமா எனக் கேள்வி எழுப்பி நம்பிக்கையைப் பெறுவார்கள்.   

சமூக வலைதளங்களுக்கு அடுத்தகட்டமாக, ஆன்லைன் விளையாட்டுகளில் இணைந்து விளையாடும் குழுக்களில், சில சமயங்களில் எல்லோருக்கும் பகிரப்படும் பள்ளி ஆன்லைன் வகுப்பின் இணைப்புகளைப் பயன்படுத்தியும் இவர்கள் சிறாரை அணுகிறார்கள்.  

குழந்தையின் நட்பைப் பெற்ற பிறகு அவர்களது பெற்றோர், குடும்ப சூழ்நிலை குறித்த தனிப்பட்ட தகவல்களைப் பெறுவர். அவற்றைக் கொண்டு குழந்தைகளை மிரட்டத் துவங்கி, பாலியல்ரீதியாக அவர்களைத் துன்புறுத்துவது, மிரட்டிப் பணம் பறிப்பது, அவர்களது உடலைப் புகைப்படமாக எடுத்துத் தரச் சொல்வது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சவால்களில் ஈடுபடச் சொல்வது என அச்சுறுத்தல்களை நிகழ்த்துவர். 

தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர் மிக நிச்சயமாக குழந்தைகளின் இணைய உலகைக் கண்காணிக்க வேண்டும். தேவையில்லாதபட்சத்தில் ஆன்லைனில் அதிக நேரம் செலவிட அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்களை ஒரு நண்பனைப் போல அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.

எப்போதும் இல்லாமல் திடீரென அவர்கள் அமைதியாக இருப்பது, பயம் கொள்வது, உறக்கமின்மை போன்றவை இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். அறியாதவர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் அவர்களுக்கு வருகிறதா, புதிய நபரிடம் ரகசிய வார்த்தைகளில் பேசிக்கொள்கிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும். 

யார் கேட்பினும் உனது உடலைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, அது தவறு என அறிவுறுத்த வேண்டும். குடும்பத்தினரின் இதர புகைப்படங்களையும் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். சைபர் குற்றங்கள் அவை தொடர்பான சமூக நிகழ்வுகளை அவர்களிடத்தே பேச வேண்டும். சமூக வலைதளங்களில் எது செய்யலாம், எது கூடாது என்ற விழிப்புணர்வைப் பள்ளியில் இருந்தே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

மிக முக்கியமாக எது நிகழ்ந்தாலும் அதைத் தனது பெற்றோரிடம் மறைக்காமல் சொல்லும் நம்பிக்கையைப் பெற வேண்டும். ஒருவேளை, உங்கள் பிள்ளைக்கு சைபர் அச்சுறுத்தல்கள் நிகழ்வது தெரிந்தால் சிறிதும் தாமதிக்காமல் காவல் துறையை அணுக வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


3

1





மதங்கள்நெல்மழைநீர் வெளியேற்றம்இந்திய சோஷலிஸம்புதுமடம் ஜாஃபர் அலி கட்டுரைதேர்தல் வாக்குறுதிசுயாதிகாரம்பதற்றம்பச்சிளம் குழந்தைகள்சோடாவிக்டோரியா ஏரிஜொஹாரி பஜார்ந.முத்துசாமிஇந்திர விழாஆலயம்உருவக்கேலிbalasubramaniam muthusamy articleதிராவிடக் கதையாடல்அறிஞர்கள்இந்தியப் புரட்சிசமஸ் - தினமலர்ஆர்.எஸ்.நீலகண்டன் கட்டுரைஜாட்டுகள்நல்ல ஆண்என்சிஇஆர்டிமகேஸ் பொய்யாமொழிகற்றல்வ.உ.சி. வாழ்க்கை வரலாறுஅரசுதமிழ்நாடு முதல்வர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!