கட்டுரை, அரசியல், ஆரோக்கியம் 5 நிமிட வாசிப்பு
எப்படி இருக்கிறது தேசிய குடும்ப நலம்?
ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பானது, சென்ற 2019-21 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முந்தைய கணக்கெடுப்பு 2015-16இல் மேற்கொள்ளப்பட்டது. இவ்விரண்டுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக் காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்விரண்டுக்கும் இடையிலான மாற்றங்கள், முன்னேற்றங்கள், பின்னடைவுகள் அனைத்துமே 2014-15 முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த முடிவுகளின் விளைவுகள்தான்.
இதற்கு முந்தைய கணக்கெடுப்புகளில் இருந்ததைப் போலவே இந்தக் கணக்கெடுப்புகளிலும் சுகாதாரம் மேம்பட்டது தொடர்பான அடையாளங்களாக மக்கள்தொகை, குடும்ப அமைப்பு, எழுத்தறிவு, திருமணம் நடைபெறும் வயது, கருத்தரிப்பு விகிதம், கருவுற்ற தாய்மார்கள் - குழந்தைகளின் சுகாதார நிலை, தடுப்பூசிகள் தொடர்பான தரவுகள், மருத்துவ சிகிச்சையின் தரம், ரத்தசோகை அளவு, மகளிருக்கு வழங்கப்பட்ட அதிகாரம், புகையிலை – மதுபானம் போன்றவற்றின் பயன்பாடு ஆகியவை திகழ்கின்றன.
நான்கு ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்ட இரு கணக்கெடுப்புகளிலும் உள்ள எண்கள்தான் புள்ளிவிவர மதிப்பீடுகள். இரண்டு கணக்கெடுப்புகளும் ஒரே வழிமுறை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை. இரண்டுக்கும் உள்ள எண்ணிக்கை வேறுபாடுகள்தான் நமக்குப் பாடங்களாக இருக்கின்றன. சில மாற்றங்கள் நமக்குப் பெருமை தருபவை. சில மனச் சோர்வை அளிப்பவை. சில சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புபவை.
நல்ல செய்தி
பெரியதும் மகிழ்ச்சி தரக் கூடியதுமான செய்தி, கருவுறுதல் விகிதம் 2.2 என்பதிலிருந்து 2.0 ஆகக் குறைந்திருக்கிறது. அதாவது சராசரியாக பெண்கள் குழந்தை பெறும் அளவு குறைந்திருக்கிறது. இப்போதுள்ள மக்கள்தொகையை அப்படியே இடப்பெயர்வு செய்யும் விகிதம் 2.1 ஆக இருக்கிறது.
கருத்தரிப்பு விகிதம் 2.0 ஆகக் குறைந்திருப்பது நல்ல செய்திதான் என்றாலும் எதிர்மறையான விளைவுகளைக்கூட ஏற்படுத்தவல்லது என்பதால் அதைத் தனியாக – விரிவாக விவாதிப்பது அவசியம். அதேவேளையில், இந்திய மக்கள்தொகை வருங்காலத்தில் மேலும் அதிகமாகிவிடாது என்று நிம்மதி அடையலாம். முன்னர் எதிர்பார்த்ததைவிட, மக்கள்தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவிடாமல் இதே எண்ணிக்கையிலேயே தொடரவிருக்கிறது.
முதலாவது, நல்லதொரு செய்தி. இந்தியாவில் பிறந்த 88.6% குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகளிலேயே பிறந்துள்ளன. இது 2014-15இல் 78.9% ஆக இருந்தது. பெண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பெண் குழந்தையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. 1,000 ஆண் குழந்தைகளுக்கு 991 ஆக இருந்த பெண் குழந்தைகள் விகிதம் இப்போது 1,020 ஆக அதிகரித்துள்ளது. மின்சார இணைப்புள்ள வீடுகளில் 88.0% குடும்பங்கள் 2015-16இல் வாழ்ந்தன. இப்போது அந்த விகிதம் 96.8%ஆக அதிகரித்திருக்கிறது (ரோமப் பேரரசு ஒரே நாளில் உருவாகிவிடவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது).
மோடி அரசு 8.8% வீடுகளுக்கு கூடுதலாக மின் இணைப்பு வழங்கியிருக்கிறது. சட்டப்பூர்வமான திருமண வயது 18-21 ஆகியவற்றுக்கு முன்னால் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் - ஆண்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் 18 வயதுக்கு முன்னதாகத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுடைய எண்ணிக்கை, திருமணமான பெண்களில் 23.3% ஆக இருக்கிறது. இதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது.
அவ்வளவாக நல்ல செய்தி அல்ல
இந்திய மக்களில் சரிபாதிப் பேர், பத்தாண்டுகள் பள்ளிப் படிப்பை முடிக்காமல் இடையிலேயே நின்றுவிடுகின்றனர். பெண்கள் 59%, ஆண்கள் 49.8% பள்ளிப் படிப்பை முழுதாகப் முடிக்காமல் பள்ளியைவிட்டு வெளியேறிவிடுகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் மக்களில் சரிபாதிப் பேரால் 21வது நூற்றாண்டில் அதிக வருவாய் தரக்கூடிய வேலைகளுக்கோ, தொழில்களுக்கோ செல்ல முடியாமல், கல்வித் தகுதியில் பின்தங்கியுள்ளனர். நவீனத் தொழில்நுட்பங்களையும் தொழில் திறமைகளையும் கற்றுக்கொள்ள முடியாத நிலையில் பின்தங்கிவிட்டனர்.
இந்திய மக்கள்தொகை பெரும்பாலும் இளைஞர்களையே கொண்டிருக்கிறது. 15 வயதுக்குக் கீழுள்ளவர்கள் மொத்த மக்கள்தொகையில் 26.5%. ஆனால், இந்த விகிதமும் குறைந்துவருகிறது. அதாவது, முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இளைய சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கிடைக்கக்கூடிய ‘சமுதாய லாபம்’ இனி குறையும்.
பெண்களில் பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆள்பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுள்ள பெண்களில் 57% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 15 வயது முதல் 19 வரையுள்ள இளம் பெண்களிலேயே 59.1% பேர் ரத்த சோகையில் சிக்கியிருப்பது மிகவும் கவலைக்குரியது. இவ்விரண்டு விகிதங்களும் தேசிய குடும்ப நல நாலாவது கணக்கெடுப்புக்குப் பிறகு அதிகரித்திருக்கிறது.
அடுத்த கசப்பான செய்தி, ஆறு மாதம் முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 11.3% குழந்தைகள் மட்டுமே போதிய அளவுக்கு உணவு பெறுகின்றனர். இதன் காரணமாக ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளில் 35.5% குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் குட்டையாக இருக்கின்றனர். 19.3% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையும் உயரமும் இல்லாமல் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். 7.7% குழந்தைகள் வளர்ச்சி அதிகம் குன்றியவர்களாக இருக்கின்றனர். சிசு மரணம் ஆயிரம் குழந்தைகளுக்கு 35.2% என்பதும் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே இது 41.9% என்பதும் உலக சராசரியுடன் ஒப்பிட்டால் மிக மிக அதிகம்.
கேள்விகளை எழுப்பும் தகவல்கள்
சில தரவுகள், விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக கேள்விகளையே எழுப்புகின்றன. மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரங்களுடன் 95.9% மக்கள் வசிப்பதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரங்கள் என்பதைக் குழாய் மூலமான குடிநீர், பொதுக் குழாய், ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றின் மூலமான நீராதாரங்களையும் உள்ளடக்கியது என்கிறது அறிக்கையின் அடிக்குறிப்பு.
ஆக, பாதுகாக்கப்பட்ட கிணறு, பாதுகாக்கப்பட்ட ஊற்று நீர், மழை நீர் ஆகியவற்றையும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கணக்கில் சேர்த்துத்தான் 95.9% என்ற கணக்குக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. காலங்காலமாகக் குடிநீருக்குப் பயன்படுத்தப்படும் திறந்தவெளிக் கிணறு, ஓடைகள், வழிந்தோடும் மழை நீர் ஆகியவற்றையும் சேர்த்திருக்கிறார்கள். இப்படித் தரவுகளைத் தயாரித்து, 2024இல் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி சாதனை படைத்துவிட்டதாக அறிவிப்பார்கள் என்று கருதுகிறேன்.
மேம்படுத்தப்பட்ட சுகாதாரக் கழிப்பிட வசதி தரவும் இப்படியே கேள்விக்குறியதாகிறது. குழாய் நீர் இணைப்புடன் கூடிய கழிப்பறை, நீரை ஊற்றிக் கழுவிடச் செய்யும் கழிப்பறை, கழிப்பறை நீரைத் தேக்கி வைக்கும் மிகப் பெரிய தொட்டியுடன் கூடிய கழிவறை என்றெல்லாம் சேர்த்திருக்கிறார்கள். கழிப்பறையில் கால் பதித்து உட்கார இடமும், அதிலிருந்து கழிவு வெளியேறுவதற்கான குழாய் இணைப்பும் இருந்தாலே அதைக் கழிப்பறையாகக் கருதிவிடும் அவசரமும் தெரிகிறது. திறந்தவெளியில் மலம் கழிக்காமல் கண் மறைவாக உட்கார்ந்தாலே, கழிப்பறை சுகாதாரத்தில் மேம்பட்டதாகிவிடுகிறது!
கிராமப்புறங்களிலும் ஏழைக் குடும்பங்களிலும் விறகு அடுப்புக்குப் பதிலாக சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தச் செய்யும் உஜ்வலா திட்டம் தொடர்பாக அரசின் பிரச்சாரம் பெரிதாக இருந்தாலும் அத்தகைய குடும்பங்களில் 58.6% மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அது 43.8%. இந்த சதவீதம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கையைத்தான் குறிக்கிறது. உண்மையில் அவர்கள் அனைவருமே கேஸ் விலை உயர்வுக்குப் பிறகும் அதைத் தொடர்ந்து பயன்படுத்த முடிகிறதா என்பதைச் சொல்லவில்லை.
இப்படி வளர்ச்சி வீதமானது வெவ்வேறு விதமாக இருந்தாலும் கோடிக்கணக்கானவர்கள் இன்னும் ஏழையாகவும் பல கோடிக்கணக்கானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயும்தான் வாழ்கின்றனர். ஏழ்மையை அறிய, உண்ணும் உணவை மட்டுமே குறியீடாகக் கொண்டு கணக்கிடுவோம். குடும்பங்களின் முதல் முன்னுரிமைச் செலவு உணவுக்காகத்தான். அப்படியிருக்க பெண்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்து இல்லாமல் ரத்தசோகை உள்ளவர்களாகவும், கணிசமான குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் நோஞ்சானாகவும் இருக்கிறார்கள் என்றால் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துகள் இல்லை என்பதே காரணம்.
சாப்பிடுவதற்குப் போதிய அளவிலும் போதிய தரத்திலும் உணவு இல்லையென்றால் அந்தக் குடும்பம் வறுமையில் இருப்பதைத் திட்டவட்டமாகக் காட்டும் அடையாளம் அதுவே. இப்படி ஏழைகளின் குழந்தைகள் - அதிக செல்வாக்கில்லாத கடவுளர்களின் குழந்தைகள் – இப்போதைய அரசால் மறக்கப்பட்டுவிட்டனர் என்பதே உண்மை.
3
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 2 years ago
கேஸ் விலை உயர்வுக்குப் பிறகு, பிற மாநில கூலித்தொழிலாளர்கள் இண்டக்சன் மற்றும் விறகடுப்புக்கு மாறியிருக்கிறார்கள் என்கிறது இன்றய இந்து ஆங்கிலப் பதிப்பு.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Vijaysekar 2 years ago
சிறப்பான கட்டுரை .. ஒவ்வொரு துறையிலும் கீழ்தட்டு மக்கள் நம்மை அரசுகள் ஒருபடியாவது ஏற்றிவிட மாட்டார்களா ஏன ஏங்கிகொண்டிருக்க, சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் ஆகியும் விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரமுடியதது ஏமாற்றமே மிஞ்சும்.. தற்போதய விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசாங்கம்.. அவர்களை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது..
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.