கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 7 நிமிட வாசிப்பு
உங்கள் செல்பேசி உளவு பார்க்கப்படுகிறதா?
காலை நம் கண் விழித்ததும் முதலில் தேடுவது நமது செல்பேசியைத்தான். இரவு நாம் உறங்கப்போகும் முன்னர் கடைசியாகப் பார்த்துக்கொண்டிருப்பதும் அதுவே. தொலைபேசியாக அறிமுகமாகி, செல்பேசியாக வடிவம் கொண்டு, பிறகு திறன்பேசியாக உருமாறி நிற்கிறது இத்தொழில்நுட்பம். இப்போது அழைப்புகளுக்காக மட்டும் மொபைல் இல்லை, அனைத்துமே மொபைல்தான்.
நமது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், லாக்கர் பின் எண், மருத்துவ விபரங்கள், ஏன் நமக்கு மட்டுமே தெரிந்த நமது அந்தரங்க ரகசியங்களைக்கூட தெரிந்து வைத்திருக்கும் நம் குட்டி நண்பன் நமது மொபைல். அரக்கனின் உயிர் ஏழு கடல், ஏழு மலை கடந்து கூண்டுக்குள் இருக்கும் கிளிக்குள் இருக்கிறது எனக் கதைகளில் படித்திருப்போம். நாம் அரக்கனா தெரியாது, ஆனால் ஒவ்வொருவர் உயிரையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் கிளி, இன்று நிச்சயமாக நமது மொபைல்தான்.
அப்படிப்பட்ட நமது மொபைலை யாரேனும் ஹேக் செய்துவிட்டார்களா! ஒட்டுக்கேட்டு வந்தியத்தேவனாக உளவு பார்க்கிறார்களா? இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதிலிருந்து எப்படி விடுபடுவது? இதைத்தான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
உளவுச் செயலிகள்
மொபைல் உளவிற்கு மிக முக்கியமாக உதவுவது உளவுச் செயலிகள். ஸ்பை ஆப்ஸ் என அழைக்கப்படும் இவை இயங்கும் விதம், இதன் மறைந்துகொள்ளும் குணங்களை முந்தைய கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளோம். உளவுச் செயலிகளை மூன்று விதங்களாக வகைப்படுத்தலாம்.
- அடிப்படைச் செயலிகள் (Basic)
- மேம்படுத்தப்பட்ட செயலிகள் (Advanced)
- அரசு வகை உயர்மட்ட வணிகச் செயலிகள் (Government Grade Commercial Spyware)
அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட உளவுச் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டார், ஆப் ஸ்டோர் போன்ற செயலிச் சந்தைகளில் கிடைப்பவை. அரசு வகை உயர்மட்ட வணிகச் செயலிகள் என்பது, பெகசஸ், ஹெர்மிட் போன்று மக்களின் நடவடிக்கைகளை உளவு பார்க்க ஓர் அரசாலோ அல்லது அதற்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்புகளாலோ பயன்படுத்தப்படுபவை. உலக அரசியலின் பில்லியன் டாலர் நவீன வியாபாரம் இது. இதை விடுத்து, ஒரு சாதாரண மனிதனை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் முதல் இரு வகைகளைப் பார்க்கலாம்.
‘எம்எஸ்பி’ (Mspy), ‘உமோபிக்ஸ்’ (Umobix), ‘ஹோவ்வாட்ச்’ (Hovewatch), ‘ஸ்பைபப்புள்’ (Spybubble) இப்படி நிறைய உளவுச் செயலிகள் சந்தைகளில் கிடைக்கின்றன. முதல் சில நாட்களுக்கு இலவசமாகச் செயல்படும்போது அடிப்படைத் தகவல்களையும் பணம் செலுத்தி பிரீமியம் சந்தாதாரரான பின் மேம்படுத்தப்பட்ட சேவைகளையும் வழங்கும். ஒரு மொபைலில் இது நிறுவப்பட்டதும் அதன் மைக்ரோபோன், ஸ்பீக்கர், தட்டச்சு (Key logging), காமிரா, ஸ்கிரீன் ரெக்கார்டர் போன்ற முக்கியமான அம்சங்களில் நுழைந்துகொள்ளும். இதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகள், நாம் மொபைலில் தட்டச்சு செய்யும் அனைத்து வார்த்தைகளும் அதன் வசம் சென்றுவிடும். நீங்கள் மொபைலில் என்ன தேடுகிறீர்கள், என்ன பார்க்கிறீர்கள், என்ன புகைப்படம் எடுக்கிறீர்கள் என அனைத்தையும் பதிவுசெய்து, தன்னை அனுப்பிய வந்தியத்தேவனின் மேகக் கணினிக்குத் தாரை வார்த்துவிடும். ஸ்கிரீன் ரெக்கார்டிங் அம்சமும் அதன் வசம் இருப்பதால், வீடியோ அழைப்புகள், வாட்ஸப் அழைப்புகள் எதுவும் உளவுச் செயலியிடம் இருந்து தப்பாது.
இந்த உளவுச் செயலிகள் எப்படி நமது மொபைலில் நுழைகின்றன?
இதை க்ளிக் செய்யுங்கள், அதைத் தரவிறக்குங்கள் எனக் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், சமூக வலைதள இன்பாக்ஸ் செய்தி மூலம் அனுப்பப்படும் ‘ஃபிசிங்’ (Phising) இணைப்புகள்.
பொது இடங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால் போன்றவற்றில் தரப்படும் இலவச, பாதுகாப்பற்ற பொது வைபை (WIFI) பயன்பாடு... இவற்றின் மூலம் ஹேக்கர்கள் மிக எளிமையாக உங்கள் மொபைலில் நுழைந்துவிட முடியும்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நிறுவப்படும் சார்ஜிங் நிலையங்களை உபயோகிப்பதன் மூலம், அதன் பின்னணியில் இதுபோன்ற செயலிகளை நிறுவக்கூடிய சிறிய சிப்பைப் பொருத்தி இருப்பார்கள். இவை வழியாகவும் உளவுச் செயலிகள் உள் நுழையும்.
சரி விஷயத்துக்கு வருவோம்!
நமது செல்பேசியில் இதுபோன்ற உளவுச் செயலிகள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
- பாப் அப்ஸ் (POP UPs) எனப்படும் தேவையில்லாத விளம்பரங்கள் உங்கள் மொபைல் திரையில் வந்துகொண்டே இருக்கிறதா, குறிப்பாக ஆபாச விளம்பரங்கள், பெண்களின் புகைப்படங்களுடன் வரும் சர்வேக்கள் என ஏதோவொரு செய்தி உங்கள் மொபைலில் வந்துகொண்டே இருந்தால் உளவுச் செயலிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம் உளவுச் செயலிகளுக்கான மறைமுக வருமானம் இதுபோன்ற விளம்பரச் செயலிகளிடம் (Adware) இருந்தும் கிடைக்கிறது.
- உங்களது இணைய அளவு (மொபைல் டேட்டா) கட்டுக்கடங்காமல் உபயோகிப்படுகிறதா? எந்தச் செயலி இத்தனை டேட்டாவை உபயோகிக்கிறது எனத் தேடியும் கிடைக்கவில்லை எனில் உளவுச் செயலிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், உங்கள் தகவல்களைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் உளவுச் செயலிகள் தங்களது மேகக் கணினிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். அதற்காக அது பயன்படுத்துவது உங்களது சொந்த இணைய அளவைத்தான். ஆகவே, அதன் மீதும் ஒரு கண் வைத்திருங்கள்.
- மொபைல் தொடர்ந்து சுணங்குகிறதா, எதைத் திறந்தாலும் தடுமாறி நேரம் பிடித்துத் திறக்கிறதா? தினசரி வரும் அப்டேட்களால் மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட மொபைலில் இது இயல்பாகவே நிகழ வாய்ப்புண்டு. ஆனால், உங்கள் மனதிற்குத் தெரியும். நேற்று வரை நன்றாக இயங்கிக்கொண்டிருந்த மொபைல் திடீரென்று சுணங்கி மக்கர் செய்தால் சுதாரித்துக்கொள்ள வேண்டும். காரணம், உளவுச் செயலிகள் தாங்கள் நன்றாகச் செயல்படுவதற்கு நமது மொபைலின் ரேம் வேகத்தைப் பயன்படுத்திக்கொள்வதால் இந்தச் சுணக்கம் நிகழும்.
- எவ்வளவு முறை நீக்கினாலும் தேவையில்லாத செயலிகள் தொடர்ந்து மொபைலில் நிறுவப்படுகிறதா! உளவுச் செயலிகள் காரணமாக இருக்கலாம். இவை செயல்பட இன்னும் சில செயலிகளின் துணை தேவை. ஆகவேதான், அவற்றை நாம் நீக்கினாலும் இவை மீண்டும் நிறுவிவிடும்.
- மொபைலின் பேட்டரி இருப்பு விரைவில் தீர்ந்துவிடுவதும் ஓர் அறிகுறி. உளவுச் செயலிகள் பின்னணியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதே இதன் காரணம். பேட்டரியை மாற்றிப்பாருங்கள், அப்போதும் இது நிகழ்ந்தால் மொபைலை மாற்றுவது உசிதம்.
- பேட்டரி நன்றாக இருப்பினும் மொபைல் அணைந்து மீண்டும் தானாக உயிர் பெறுவது, நாம் அழைக்காத எண்கள் அழைப்பு பகுதியில் இருப்பது, செயலிகள் தாமாக திறப்பது, அழைப்பு பேசும்போது பின்னணியில் ஏதோவொரு சத்தம் அல்லது எதிரொலி தொடர்ந்து கேட்பது, நெட்ஒர்க் முழுமையாக இருப்பினும் அழைப்பு செல்லாமல் திணறுவது, உங்களது தொடுதிரை சலனமற்றுப் போவது போன்றவையும் உளவுச் செயலிகள் மொபைலில் இருப்பதற்கான அறிகுறி. தொடர்ந்து பின்னணியில் இயங்கும் ஒரு செயலி மொபைலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படுத்தும் விளைவுகளே இவை.
கட்டுப்படுத்துவது எப்படி?
சரி! மொபைலில் உளவுச் செயலி இருப்பதை உறுதிசெய்துகொண்டீர்கள். இப்போது அதை எப்படி நீக்கலாம்?
இது போன்ற செயலிகளை நீக்குவதற்கான வசதியை ‘மால்வேர்பைட்ஸ்’ (Malwarebytes), ‘அவஸ்ட்’ (Avast), ‘பிட்டிபெண்டர்’ (Bitdefender) போன்ற வைரஸ் எதிர்ப்பு தயாரிப்புகள் வழங்கின்றன. மொபைலில் நிறுவி ஒரு ஸ்கேன் தட்டினால் நீக்கிவிடும். இதை நிறுவும்போது சரியான தயாரிப்பைத்தான் நிறுவுகிறோமா என இரு முறை உறுதிசெய்துகொள்ளுங்கள். காரணம், இதே பெயரில் போலிகள், உளவுச் செயலி இணைப்புகள் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு ‘கூகுள் ப்ளே ப்ரொடெக்ட்’ (Google Play Protect) என்றொரு சேவை ப்ளேஸ்டோர் செட்டிங்ஸ் பகுதியில் இருக்கிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலன் மொபைலில் நிறுவப்படும் அனைத்துச் செயலிகளும் உடனடியாக ஸ்கேன் செய்து அதன் தரம் உறுதிசெய்யப்படும்.
உங்களது மொபைல் பிரவுசர் உலாவியில் பாதுகாப்பான தேடலை (Safe Browsing) நீங்கள் பயன்படுத்தலாம். தீங்குநிரல்கள் இருக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்தால் அது திறக்கும்போது இந்தத் தளம் ஆபத்தானது என எச்சரிக்கும்.
உங்களது மொபைலில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளின் பட்டியலை அடிக்கொரு முறை சோதித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செயலிகள் அல்லது மொபைலின் இயக்கத்திற்குத் தேவைப்படும் முக்கியமான செயலியின் பெயரில் இரு செயலிகள் இருந்தாலும் உஷார். உளவுச் செயலிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள இதுபோன்ற மாறுவேட வேலைகள் செய்யும். மொபைலில் இயக்கத்திற்குத் தேவைப்படும் முக்கியமான செயலி என்றால் அதை நீக்குவதற்கான தேர்வே அதில் இருக்காது. அப்படி இருந்தால் அதுதான் மாறுவேட உளவுச் செயலி என பொருள்.
இது எல்லாம் செய்தாயிற்று, ஒன்றும் கைகூடவில்லை என்றால் மொபைல் தரவுகளை முழுவதுமாக அழித்து (Factory Reset) புதுப்பித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வழக்கமாகச் சொல்வதுதான், மூன்றாம் தரப்புச் செயலிகள் (Third party apps ) பாதுகாப்பற்றவை, ஆபத்து நிறைந்தவை. எவருக்கும் கட்டுப்படாதவை. ஆகவே, மொபைலில் இருக்கும் செயலி சந்தையைத் தவிர வேறு எங்கிருந்தும் செயலிகளைத் தரவிறக்காதீர்கள். தேவையில்லாத இணைப்புகளைக் க்ளிக் செய்யாதீர்கள். அவற்றின் மூலமும் இதுபோன்ற செயலிகள் தாமாகவே தரவிறங்கும்.
மொபைலைச் செயலிகளால் நிறைக்காமல் எளிமையாக சில செயலிகளை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். மொபைலுடன் செலவிடும் நேரத்தை முடிந்தவரை குறைக்க முற்படுங்கள். எவ்வளவு அதிகம் நாம் செயலிகளை சார்ந்து இருக்கிறோமோ, அவ்வளவு அதிகம் நாம் செயல்படாமல் நேரத்தைச் செலவழிக்கிறோம் என்பதே உண்மை நண்பர்களே!
(தொடர்ந்து பேசுவோம்...)
4
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ramesh Ramalingam 2 years ago
Another excellent article. Not sure if you have already written about `App Permission`, I have seen a lot of people where lethargic about it.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.