கட்டுரை, இலக்கியம், தொழில்நுட்பம் 4 நிமிட வாசிப்பு

திரை அடிமைகள் ஆகிறோமா?

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
21 Mar 2023, 5:00 am
1

ங்கேயும் ஒரு திரை (Screen / Monitor), எப்போதும் ஒரு திரையின் முன்னே வாழ்தல் எனும் நிலை மனித வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் இருந்ததில்லை. தொலைபேசியும், தொலைக்காட்சியும் வந்துபோது தொலைவு என்பதே இல்லாது போயிற்று என்றோம். இணையம் வந்த பிறகு உலகம் சுருங்கிவிட்டது என்றோம். ஆம், உலகம் சுருங்கிப்போய், திரை பரந்து விரிந்துவிட்டது.  

நம்முடைய கண்கள் திரையிலிருந்து அகல மறுக்கின்றன. நாம் சர்வ காலமும் திரையினால் ‘ஹிப்னாடிஸம்’ செய்யப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம்.   ஊடகமே உலகம். காலம், இடம் எனும் தடங்கல்களைக்கூட கையகலத் திரை தகர்த்திருக்க, நாமோ காலத்தையும், இடத்தையும் மறந்தவர்களாகக் காட்சிகளில் திளைக்கிறோம். இன்றைக்குக் கிடைக்கும் போதைப் பொருட்களில் தலையாயது திரைகளில் விரியும் காட்சி. இதனை அரசு, குடும்பம், கல்விக்கூடங்கள் எனும் எந்த அமைப்பும் தடைசெய்துவிட முடியாது. 

திரை எனும் ஆயுதம் 

ஒரு பொருளின் மதிப்பு மட்டுமல்ல, ஒரு மனிதரின் மதிப்பையும் இன்று திரையே தீர்மானிக்க, நாம் ஒவ்வொருவரும் திரைக்கு இடம்பெயர விரும்புகிறோம். நாம் உருவாக்க விரும்பும் அர்த்தம் திரையில்தான் சாத்தியம் எனும் நிலையில், திரையில் தோன்றாதவர்கள் வாழும் காலத்திலேயே கடந்த காலத்துக்குள் நுழைந்துவிட்டவர்கள். இதற்காக நாம் கொடுத்திருக்கும் விலை நமது அந்தரங்கம். எனினும், நாம் அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை.  

குழந்தைகளைப் பாருங்கள். ஒரு திரையைக் கைப்பற்ற அவர்கள் பெற்றோர்களோடு சண்டையிடுகிறார்கள். பதின்பருவத்தினர் தங்களுடைய முதல் திறன்பேசியை, மடிக்கணிணிக்காக, பெற்றோர்கள் அனுமதிக்காக அல்ல, பெற்றோர்கள் இவை இரண்டையும் அனுமதிக்கும் சூழலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அழும் குழந்தையை சமாதானப்படுத்த பெற்றோர்களின் கையிலிருக்கும் ஒரே கருவி திரை. 

உழைப்பின் கருவியான கைகள், இன்றைக்கு உழைப்புக்கான கருவி மட்டுமா?  இல்லை. எனது உள்ளங்கை ஒரு திரையரங்கம், ஒரு சூப்பர் மார்கெட், மேலும் எனது படுக்கையறையும்கூட. 

தொடர்புறுத்தலுக்கான (communication) மனிதர்களின் தீராத ஏக்கம் இன்றைக்கு தொடர்பு அறுத்தலுக்கான ஏக்கமாக மாறியிருக்கிறது. திரையில் தோன்றும் ஒரு காட்சி எடையற்றது. ஆனால், அது உருவாக்கியிருக்கும் சலனங்களின் எடை உள்ளம் சுமக்க முடியாத நிலையை எட்டியிருக்கிறது.  

ஒரு பரிசோதனை 

எனது நண்பரும், நானும் எங்கள் இருவரது செல்பேசிகளையும் கடலில் தூக்கி எறிந்துவிடுவது என்று ஒரு நள்ளிரவு முடிவெடுத்தோம். அவர் அப்போது திறன்பேசிக்கு மாறியிருந்தார். நான் பழைய மாடல் செல்பேசி வைத்திருந்தேன்.  செல்பேசி டார்ச்சை முடுக்கிவிட்டு, வங்கக் கடலில் என்னுடைய செல்பேசியைத் தூக்கி எறிந்தேன். ஒளிர்ந்து, சுழன்று அது கடலில் அமிழ்ந்ததும் நான் உணர்ந்த அமைதியை விடுதலையின் ஆரம்ப நிலை என்றே அப்போது பொருள் கொண்டிருந்தேன். நான் அன்றாடம் தொடர்புகொண்டே ஆக வேண்டியிருந்த நபர்களின் எண்கள் நினைவில் இருந்தன. மற்ற எண்களைப் பற்றிக் கவலை இருந்திருக்கவில்லை.

அந்த நள்ளிரவில், கிரேக்க மெய்யியலாளர் டெமொக்ரிடஸ் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உலகை அதன் இயல்பில் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்கிறது என்று அவருடைய கண்களைக் குருடாக்கிக்கொண்டவர் எனச் சொல்லப்படுவது உண்டு.   

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. ஒரே ஒருநாள் அழைப்புகளில் இருந்து விடுதலை பெறுவதோடு, ஓயாமல் தொந்தரவூட்டும் உலகின் முகத்தின் முன்னே என்னுடைய அடையாள எதிர்ப்பாகவும் இருக்கட்டும் என்ற எண்ணம். அடுத்த நாள் முதலில் செய்த செயல் புதியதாக ஒரு செல்பேசியை வாங்கியதுதான்.  பழைய உலகமும், அதன் புலப்படாத நுகத்தடியும் திரும்ப வந்துவிட்டன.  எங்களுடைய குறைந்தபட்ச டெமொக்ரிடஸ் தருணம் என்று அதனை அழைத்துக்கொள்வோம். விடுதலை உணர்ச்சி பைத்தியத்தின் சாயல் உடையதல்லவா!

ஒரு நாளைக்கு ஒருவருடைய திரைநேரம் (Screen Time) கூடிக்கொண்டே போகிறது. இணையதளங்களை வாசித்தல் என்பதேகூட குறைந்துவிடுமென்று, இணையத்தின் ஆரம்ப நாட்களில் அதன் வருகையில் வாய்பிளந்தவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

இன்றைக்கு இணையம் என்பது வெறும் சமூக ஊடகமும், யுடியூப் மட்டுமே. இணையம் மாபெரும் கேளிக்கைக் கூடமாக மாறிவிட்டது. இங்கே கிடைக்கும் கேளிக்கை என்பது வழமையான கேளிக்கை வடிவங்கள் மட்டுமல்ல. நாம் வடித்து, தேர்ந்தெடுத்துப் பார்க்கும் எல்லையைக் கடந்து பெருவிட்ட காட்சித் துண்டுகளின் முன்னே நாம் கொஞ்சம் கொஞ்சமாக துண்டுத் துண்டுகளாகச் சிதைகிறோம். காட்சிகளின் பேரோசையின் முன்னே நாம் மெளனமாகிறோம்.  

முதல் ஆவணக் கருவி

மனிதர்களின் வரலாற்றை அவர்கள் எழுப்பிய ஒலிகளால் அறியலாம் என்கிறார், ஃப்ரெஞ்ச் சிந்தனையாளரான ழாக் அட்டாலி ‘ஓசை: இசையின் அரசியல் பொருளாதாரம்’ எனும் நூலில். ஆனால், மனிதர்களின் வரலாற்றை அதன் ஆரம்ப நிலையிலேயே பதிவுசெய்தவை கண்கள். குகை ஓவியங்களில் இருந்து துவங்கியதே கலைகளின் பயணம். மனிதன் அறிந்த முதல் கலை கண்களால் அறிந்ததே.  

சேலத்தைச் சேர்ந்த, மறைந்த கவிஞர் சி.மணி, சி.சு.செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ இதழில் 1968ஆம் ஆண்டு ‘இலக்கியத்தில் கண் வர்ணனை’ எனும் நீள் கட்டுரையை எழுதி இருக்கிறார். சங்க காலம் ஈறாக நவீன கவிதைகளின் காலம் வரை இலக்கியத்தில் கண் எவ்வாறெல்லாம் வரணிக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருக்கிறார். கண் ஏன் ஒரு கவிதையில், ஒரு குறிப்பிட்ட நிலையில் உவமையாக வருகிறதென்றும் விவரித்து இருக்கிறார். 

மனித உறுப்புகளில் அதிகம் உவமையாக்கப்பட்டது கண்.  அதற்கு அடுத்ததாக இதயம் இருக்கலாம். குறிப்பாக இலக்கியங்களில் பெண்களின் கண்கள்தான் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. மான், மீன், மலர், வலை, விண்மீன் என பல்வேறு உவமைகளால் கண் எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் நமது பேச்சிலும்கூட கண்கள் உவமை பெறுகின்றன. கண்களில் தெரியும் உணர்ச்சிகளைக் கொண்டே நாம் மனிதர்களின் உளநிலையை அளவிடுகிறோம்.   

ஆனால், இன்றைக்கு கண் ஒரு நுகர்வு உறுப்பு. குப்பைத் தொட்டியை, எவற்றையும் விழுங்கும் பூதத்தை உவமையாகச் சொல்லலாம். தன்னையே நுகர்ந்துகொள்ளும் மனிதர்கள் எத்தனை ஜிகா பைட்டுகளை ஒரு மாதத்திற்கு சராசரியாக கண்களின் வழியாக நுகர்கிறார்கள் என அளவிட்டுப் பாருங்கள்.

புலன்களால் அறியப்படுவது மட்டுமல்ல உலகம், புலன்களால் நுகரப்படுவதும்கூட. ஒவ்வொரு புலனின் நுகர்வுப் பரப்பும் சுருங்கிச் சுருங்கி இன்றைக்கு கண்ணில் விரிந்திருக்கிறது. அயற்சியற்ற கண்களைப் பார்க்க விரும்பினால் பச்சிளங்குழந்தைகளின் கண்களைத்தான் பார்க்க வேண்டும்.  அவையும் பெரும்பாலான நேரம் உறக்கத்தில் கண் மூடியிருக்கும். 

போர்ஹேஸும் கோவை ஞானியும்

காட்சி ஊடகம் நமது பாலியல் அனுபவங்களை எவ்விதம் மாற்றி அமைத்திருக்கிறது என்று பாருங்கள். ஒளிப்படத் துணுக்காக தங்கள் பாலுறவை மாற்றிப் பார்க்கவில்லை என்றால் அதில் என்னதான் சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது!  

எழுத்து இல்லாத காலத்திலும் கதை இருந்தது. அப்போது அதைச் சொல்லக்கூடியவர்கள் இருந்தார்கள். அவர்கள் விவரித்துச் சொல்லும் கதைகளின் முன்னே வாய்பிளந்து கேட்டவர்கள் இருந்தார்கள். இடையில் எழுத்து வந்தது, புத்தகங்கள் வந்தன. அமைதியாக தலைகுனிந்து வாசிக்கும் உயிரிகள் வந்தன. இன்று எழுத்து மறைகிறது. மீண்டும் கேட்கும் நிலைக்குச் செல்கிறோம். ஆனால், ஒரே வேறுபாடு இப்போது சொல்பவர்கள் திரையில் இருக்கிறார்கள். ஆனால், கண்கள் அகலத் திறந்திருக்கின்றன.  

பார்வை இழத்தல் என்பது ஒருவகை அமைதி. இவ்வாறு சொன்னவர், தன்னுடைய மத்திம வயதில் பார்வைத்திறனை இழந்த ஜோர்ஜ் லூயி போர்ஹேஸ். முரண் என்னவென்றால் அவர் பார்வைத் திறனை இழக்கும்போது அர்ஜெண்டினிய தேசிய நூலகத்தின் இயக்குநர். பல்லாயிரம் புத்தகங்களின் நடுவே ஒரு கண் தெரியாதவர். ஒரு மனிதர் தன்னுடைய ஊழைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க இதைவிடவும் பொருத்தமான ஒரு முரண்நிலை அவருக்குக் கிடைத்திருக்காது. தமிழ்நாட்டில் கோவை ஞானி கண் பார்வை முற்றிலும் இழந்த பின்னும் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் வாசிப்போடும், எழுத்தோடும் தொடர்ந்து இயங்கிவந்திருக்கிறார். எப்படித்தான் அவ்வளவு துணிச்சலாக வாழ்ந்தார்களோ என்று காட்சிப் புலனின் அடிமையான நான் இருவரையும் வியக்கிறேன்.

பார்வை இழத்தல் என்பது கண் தனது திறனை இழந்துவிடுவதல்ல, மாறாக ஒரு சில மணிநேரங்கள் திரையிலிருந்து விலகி இருப்பதே. இந்தக் கட்டுரையைக்கூட நீங்கள் ஒரு திரையில் வாசிப்பீர்கள். நாம் நிரந்தரமாக திரையில் பூட்டப்பட்டிருக்கிறோம்.  

 

தொடர்புடைய கட்டுரைகள்

திரும்ப வரும் ஆண்டுகளின் நிரந்தர எண்: 1984
வசீகரமான நவீன கட்டிடங்களைக் கட்டிடுமா தமிழ்நாடு அரசு?
வெறுப்பு: நரகத்தில் செய்யும் முதலீடு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தமிழ் எழுத்தாளர். வங்கியாளர். 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.


4

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

jaimadhan amalanath   1 year ago

இந்த கட்டுரையை வாசித்தவுடன் வரும் உணர்ச்சி, திரையை கூடிய வரையில் தொலைவில் வைக்க வேண்டும் என்று. ஒரு 10 நிமிடங்கள் தள்ளி வைக்க நினைக்கிறேன். இந்த கட்டுரை நினைவில் வரும்போதெல்லாம் 10 நிமிடங்கள் திரையை ஒதுக்கி வைத்தாலே நலம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சிற்றரசர்கள்சர்வதேச உறவுஉலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம்குழந்தைபால்யம் முழுவதும் படுகொலைகள்கல்விச் சீர்திருத்தம்புத்தகத் திருவிழாவிஜய் ரூபானிபயிர்வாரிபிரசாத் நிச்சனமெட்லா கட்டுரைநாடாளுமன்றம்ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - அரிய வகை ஏழைகள்செயல் தலைவர்அரசியல் அடைக்கலம்ஒற்றைத்துவ திட்டம்கடல்வழி வாணிபம்உழவர்கள்கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்காங்கோ: விதியே... விதியே என்ன செய்ய நினைத்தாய்?சாதியும் நானும்சாதி முறைசமத்துவத்தின் தாய்மால்கம் ஆதிசேசய்யாதமிழ் வரலாறுஎக்ஸலென்ட் புக் சென்டர்கழிவு மேலாண்மைகுடியரசுத் தலைவர்மாநிலக் கட்சிகள்மலையாளம்சுயராஜ்யம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!