கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

பாஜகவின் புலப்படாத கரம்

சமஸ் | Samas
20 Dec 2022, 5:00 am
0

மிழக பாஜகவில் நடந்த இரு கட்சி நிர்வாகிகள் இடையேயான தகராறு முதல் முறையாகப் பொதுவெளிக்கு அந்தக் கட்சியின் உள் அடுக்கு மீது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது. மேலோட்ட சர்ச்சைகளுக்கு அப்பால், உள்ளே வெளிச்சம் விழுந்திருக்கும் இடத்தை நாம் உற்றுப் பார்க்க வேண்டும்.

பாஜகவின் தேசிய தலைமையானது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குப் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்திருப்பதும், மோடி - ஷா உபயத்தில் தமிழக பாஜகவில் அவர் செல்வாக்கு கொடி கட்டிப் பறப்பதும் வெளிப்படை. பாஜக தலைவர் வகிக்கும் அவ்வளவு பெரிய செல்வாக்கும்கூட எந்த எல்லைக்குள் வரை செல்லுபடியாகும் என்பதை டெய்ஸி - திருச்சி சூர்யா மோதல் அம்பலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. டெய்ஸியுடனான வாய்த் தகராறில் போகிறப்போக்கில் ‘கேசவ விநாயகன்’ பெயரைக் காய்ந்த காரணமே சூர்யா கட்சியிலிருந்து விலக பிரதான காரணம் ஆகியிருக்கிறது. 

தன்னுடைய விலகல் குறிப்பில் கட்சித் தலைவரான அண்ணாமலைக்கு மனதார நன்றி தெரிவிக்கும் சூர்யா அதேசமயம், கேசவ விநாயகனைப் பதவியில் இருந்து நீக்காவிட்டால் அண்ணாமலை எவ்வளவு உழைத்தும் தமிழக பாஜகவைக் கரை சேர்க்க முடியாது என்று முடித்திருக்கிறார். அண்ணாமலை முயற்சித்தும் சூர்யாவைக் கட்சிக்குள் தக்க வைக்க முடியாததையும் டெல்லியிலிருந்து அண்ணாமலைக்கு அழுத்தம் வந்ததையும் சூர்யாவின் கடிதம் உறுதிபடுத்துகிறது. எனில், கேசவ விநாயகன் வகிக்கும் அமைப்புப் பொதுச்செயலர் பதவியின் அதிகாரம் என்ன? எங்கிருந்து அவர் இந்த வல்லமையைப் பெறுகிறார்?

பாஜகவை எதிர்க்கும் ஒவ்வொரு கட்சியும் தீவிர கவனம் அளிக்க வேண்டிய விஷயம் இது.

பாஜகவின் ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்குப் பின்னரும், அது கையாளும் இணையப் பிரசாரம் போன்ற மேல் பூச்சு உத்திகளை அப்படியே பிரதி எடுக்கும் ஏனைய கட்சிகள் அதன் பலமான உள்கட்டமைப்பின் இயக்கத்தை அறிந்துகொள்ளக்கூட முற்படுவது இல்லை. இன்று நாட்டிலேயே சக்தி வாய்ந்த கட்சியாகத் திகழும் பாஜக பெற்றிருக்கும் பிரத்யேகமான பலங்களில் முக்கியமானது அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் வழியே அதற்குக் கிடைக்கும் தொடர் வரத்து. பாஜக - ஆர்எஸ்எஸ் இரண்டையும் இணைத்திருக்கும் அறுபடாத தொப்புள்கொடி என்று பாஜகவில் உள்ள அமைப்புப் பொதுச்செயலர் பதவியைக் குறிப்பிடலாம்.

கட்சியின் தேசியத் தலைவர் முதல் கிளைப் பொருளர் வரை எல்லா நிர்வாகிகளையும் கட்சிக்குள்ளேயே வளர்ந்த அல்லது வெளிக் கட்சிகளிலிருந்து உள்ளே வரும் ஆட்களை பாஜக நியமித்துக்கொள்ளலாம். அமைப்புப் பொதுச்செயலர் பதவி விதிவிலக்கானது. திட்டவட்டமாக ஆர்எஸ்எஸ் வழியாக மட்டுமே இந்தப் பதவிக்கானவர்கள் வர முடியும். ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் பாஜக தலைமைக்கும் இடையிலான தந்தி போன்ற அமைப்பு இது. ஆர்எஸ்எஸ் எண்ணவோட்டத்தைக் கட்சிக்கு செயல்வடிவில் கடத்தும் பணியை இவர்கள் செய்கிறார்கள். தேசிய அளவில், மாநில அளவில், மண்டல அளவில் என்று ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கென்று வைத்திருக்கும் நிர்வாகப் பகுப்புக்கு ஏற்ப அமைப்புச் செயலர்களையும், இணைச் செயலர்களையும் ஆர்எஸ்எஸ் நியமிக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழு நேர ஊழியராகப் பயிற்றுவிக்கப்படும் ஒருவர் அதன் பல நூறு அமைப்புகளில் எதிலும் பணி அமர்த்தப்படலாம்; பாஜக நோக்கி அனுப்பப்படும் ஒருவருக்கு அளிக்கப்படும் பதவிகளில் இது முக்கியமானது. பாஜகவின் அமைப்பு விதிகளின்படி கட்சித் தலைவருக்கு மட்டுமே பதில் கூற கடமைப்பட்டவர் அமைப்புப் பொதுச்செயலர் என்று இருந்தாலும், நடைமுறையில் ஆர்எஸ்எஸ் தலைமைக்கே அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் ஆகிறார். வெளி அதிகாரத்தில் கட்சித் தலைவரும் உள் அதிகாரத்தில் இணை அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார்கள். மேலோட்டமாக இப்படி விளக்கலாம்: சினிமா நாயகன் பாஜக தலைவர் என்றால், சினிமா இயக்குநர் அமைப்புப் பொதுச்செயலர்.

பாஜக கட்சித் தலைமையகத்தின் நிர்வாகப் பொறுப்பு அதன் அமைப்புப் பொதுச்செயலர் வசமே இருக்கிறது. கட்சியின் நிதியை அவரே கையாளுகிறார். கட்சியின் தலைவர் செய்யும் எந்த நியமனங்களிலும் நடைமுறையில் அமைப்புப் பொதுச்செயலரின் அங்கீகாரமும் முக்கியம். பாஜகவின் தலைவர் பொறுப்பில் ஒருவர் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அமைப்புப் பொதுச்செயலர் பதவிக்கு இப்படியான வரையறைகள் எதுவும் இல்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், கேசவ விநாயகன் இந்தப் பதவிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன; இல.கணேசன் இந்தப் பதவியில் 15 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

கட்சிக்குப் புதிதாக வரும் அண்ணாமலை போன்ற ஒருவர் வந்த வேகத்தில் பாஜகவின் தலைவர் பதவியில் அமர முடியும். அமைப்புப் பொதுச்செயலர் பதவிக்கு நெடிய அனுபவம் தேவை. கேசவ விநாயகனுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையிலான உறவு அரை நூற்றாண்டைக் கடந்தது. அந்த அமைப்பின் முழுநேர ஊழியராகப் பணியாற்ற ஆரம்பித்தே 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்கிறார்கள். வட்டார அளவில், மாவட்ட அளவில், மண்டல அளவில் என்று படிப்படியாக அமைப்புக்குள் இவர்களை மேல் நோக்கி அழைத்து வருவதால் பணியாற்றும் மாநிலத்தை மூலைமுடுக்குகளையும் இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

கட்சியின் அமைப்புப் பொதுச்செயலர் பொறுப்புக்கு என்று சில கடப்பாடுகளையும் ஆர்எஸ்எஸ் வைத்திருக்கிறது. பொதுமக்களின் பார்வையில் அவர் தோன்றக் கூடாது. அதாவது அமைப்புப் பொதுச்செயலர் பதவியில் இருக்கும் ஒருவர் பொது மேடையில் ஏறக் கூடாது; செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது; தேர்தலில் நிற்கக் கூடாது. முரண் என்னவென்றால் கூட்டங்களை அவர் திட்டமிடுவார்; செய்தியாளர்களுக்கான அறிக்கையை அவர் தயாரிப்பார்; தேர்தல் வியூகங்களை, பிரசாரங்களை அவர் வகுப்பார். கட்சி அலுவலகமே அவர் தங்குமிடம். ஒருவேளை திருமணம் செய்துகொண்டாலோ, தேர்தல் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினாலோ அந்தப் பதவியிலிருந்து அகற்றப்படுவார்.

இப்படி ஒரு பாதையிலேயே பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பத்தில் பயணப்பட்டார். ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியராக வெவ்வேறு அமைப்புகளில் பணியாற்றிவந்த மோடி 1987இல் பாஜகவுக்குள் கொண்டுவரப்பட்டார். அந்த ஆண்டு நடைபெற்ற அகமாதபாத் மாநாகரட்சித் தேர்தல் பணிகளைப் பின்னின்று மேற்கொண்டார். அந்தத் தேர்தலின் வெற்றி 1990 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு அளிக்கப்பட்ட பங்கேற்பை அதிகரித்தது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தேர்தல் அது. இதற்குப் பின்னர் தேசிய அரசியல் நோக்கி அவர் நகர்த்தப்பட்டார். 1998 - 1999 மக்களவைத் தேர்தல்களில் வாஜ்பாய் தலைமையில் பாஜக எதிர்கொண்டபோது அதன் தேசிய அமைப்புப் பொதுசெயலாளர் பதவியில் மோடி இருந்தார்.

குஜராத்தில் திடீரென்று முதல்வராக 2000இல் மோடி மேலிருந்து நுழைக்கப்பட்டது பொதுப் பார்வைக்குத் திகைப்பூட்டும் வருகையாக இருந்திருக்கலாம். ஏனென்றால், அதுவரை சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லை அவர். பாஜகவுக்குள் அது அவ்வளவு இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னணி அதற்கு முன்னர் அவர் வகித்த பொறுப்புகள்.

பாஜக அடுத்த ஐந்து ஆண்டுகளில், பத்து ஆண்டுகளில், கால் நூற்றாண்டுகளில் சித்தாந்தரீதியாக எந்தெந்த செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வகுக்கிறதோ அதற்கான நிரலைக் கட்சிக்குள் அரங்கேற்றுவதற்கான தொடர் அலைவரிசை இது.

கட்சிக்கு வெளியிலிருந்தோ, உள்ளிருந்தோ எந்த ஒரு கட்சிக்கும் கொள்கைத் துடிப்பான புதிய படையினர் தொடர்ந்து உருவாகிவருவது அவசியம்.

பாஜகவை முற்றிலுமாக நாம் நிராகரிக்கலாம்; எல்லா விமர்சனங்களையும் அதன் மீது வைக்கலாம்; சித்தாந்தரீதியாகக் கட்சி சார்ந்து, அதேசமயம் கட்சிக்கு வெளியே வெகுஜன அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு ஆட்படாத ஒரு தன்னார்வப் படையை அது மட்டுமே பராமரிக்கிறது. அப்படி உருவாகுகிவரும் தன்னார்வலர்களை வெறுமனே தம் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதோடு நிறுத்தாமல் உரிய அதிகாரம் மிக்க பதவியை அது மட்டுமே பகிர்ந்துகொள்கிறது. கடுமையான அதிகாரப் போட்டி நிலவும் ஒரு பெரிய கட்சிக்குள் இப்படி ஒரு பதவிக்குரிய முக்கியத்துவம் குறையாமல் அது மட்டுமே சமநிலையைப் பராமரிக்கிறது. தனக்கு உதவும் அமைப்பின் குரலை எச்சரிக்கையோடு அணுகுகிறது.   

பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை சமீபத்திய தேர்தலில் அது இழந்தது. இது தொடர்பான விமர்சனங்களில் கவனம் ஈர்த்த ஒன்று: “கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளோடு, மக்களவை உறுப்பினர்கள் ஏழு பேரையும் கொண்டது டெல்லி பாஜக தலைமை நிர்வாகம். இவர்கள் முற்றிலுமாகக் களத்தில் உள்ள தொடர்புகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. இவர்களில் ஒரு சிலரை இந்தத் தேர்தலின்போதுகூட மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை. மக்களவைத் தொகுதிகள் சிலவற்றில் பாஜக உறுப்பினர்களின் செயல்பாடு படுமோசம். அதனால், மக்களிடம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிற அதிருப்தியை மக்களவை உறுப்பினர்களுடைய செயல்பாட்டின் பிரதிபலிப்பாகவும் பார்க்க வேண்டும். தவிர, டெல்லி மாநகராட்சி மன்றம் ‘ஊழல் குகை’ என்று மக்களால் சுட்டப்படும் அளவுக்கு ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டிருந்தது. எல்லாமுமாக சேர்ந்துதான் பாஜகவைத் தோற்கடித்திருக்கின்றன. பாஜக ஆழ்ந்த சுயபரிசோதனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்.” இதை எழுதியிருந்தவர் ராஜீவ் டுல்லி. ஆர்எஸ்எஸ் உயர்நிலை நிர்வாகிகளில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் கதை இந்த விஷயத்தில் தலைகீழ். பாஜகவைத் தன்னுடைய அரசியல் பிரிவாக ஆர்எஸ்எஸ் உருவாக்கியதுபோல அல்லாமல், கட்சியின் தன்னார்வலர் பிரிவாக ‘சேவா தளம்’ அமைப்பை நெடுங்காலத்துக்கு முன்னரே காங்கிரஸ் உருவாக்கியது.

நாட்டிலேயே இந்த வகை தன்னார்வலர் அமைப்புக்கு முன்னோடி அந்த சேவா தளம் என்பதோடும், அதன் முதல் தலைவர் நேரு என்பதோடும், ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன் சேவா தளத்தில் ஒரு தன்னார்வலராகப் பணியாற்றியவர் என்பதோடும் காங்கிரஸ்காரர்களால் இன்று பைசாவுக்கு மதிக்கப்படாத பிரிவாகிவிட்ட சேவா தளத்தின் நூற்றாண்டு இது என்பதோடும் ஆர்எஸ்எஸ் - பாஜக பராமரிக்கும் உறவைப் பொருத்திப் பார்த்தால், நமக்கு ஒரு படம் கிடைக்கும். அந்தப் படத்தில் இன்றைய பாஜக - காங்கிரஸின் எழுச்சி - வீழ்ச்சிக்கான வேர்களில் ஒன்றும் வெளிப்பட்டிருக்கும்! 

-‘குமுதம்’, டிசம்பர், 2022 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


6

11


இன்னொரு சிதம்பரம் உருவாவது யார் பொறுப்பு?பால்புதுமையினர்குதிகால் வலியைக் குறைக்க என்ன செய்யலாம்?பொருளாதாரப் பங்களிப்புசமூகக் கண்காணிப்பு இதழியல்காந்தி - அம்பேத்கர்சும்மா இருப்பதே பெரிய வேலைஓம் சகோதர்யம் சர்வத்ரஅற்புதம் அம்மாள்சஞ்சய் பாரு கட்டுரைராம் – ரஹீம் யாத்திரைவிலங்குகள் மீதான கரிசனம்இதழ்கள்தெற்கும் முக்கியம்எழுத்துச் சீர்திருத்தம்அரசு கட்டிடம்எதிர்க்கட்சித் தலைவர்: ராகுலின் கடமைகள்அற்புதம் அம்மாள் பேட்டிஅரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்மயிர் பிரச்சினையே அல்ல!நர்சரி முனைரத்தக்குழாய்முக்கடல்மத்திய கிழக்கு நாடுகள்அறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!பஞ்சாங்கக் கணிப்புவிவேகானந்தர்மலக்குழி மரணம்மரபு மீறல்கள்தில்லி கலவர வழக்குகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!