கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மணிப்பூர்: அமைதியின்மை தொடர யார் பொறுப்பு?

ராமச்சந்திர குஹா
09 Nov 2023, 5:00 am
1

டகச் செய்திகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை இரண்டு; முதலாவது இந்தியாவில் நடந்துவரும் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், அடுத்தது இஸ்ரேலில் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திவரும் மிருகத்தனமான குண்டு வீச்சுகள்.

தன்னுடைய மக்கள் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் ராணுவம் இதில் இறங்கியிருக்கிறது. அடுத்தடுத்து வரும் சம்பவங்களில் கவனத்தைச் செலுத்தும்போது, நம்முடைய நாட்டுக்குள்ளேயே நடந்த ஒரு சோகம் கிட்டத்தட்ட நினைவிலிருந்து மறைந்தே விட்டது, மணிப்பூரில் மிகப் பெரிய இனக் கலவரமும் மோதல்களும் தொடங்கி ஆறு மாதங்களாகியும் இன்னமும் அவ்வப்போது தொடர்கிறது.

ஏழு மாத நெருக்கடி

மணிப்பூர் கலவரம் தொடங்கிய சில வாரங்களுக்கெல்லாம் அதைப் பற்றி ‘த டெலகிராப்’ நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தேன். ஓர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அந்த மோதல்களின் தீவிரம் கருதி அரசுகள் உடனடியாக அதைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாசகர் ஒருவரிடமிருந்து குத்தலும் எரிச்சலுமாக எதிர்வினை வந்தது:

“மணிப்பூர் மோதல்களைத் தேசியப் பிரச்சினையாக பாரதிய ஜனதா கருதவே இல்லை. ஃபிரான்ஸில் அந்த நாட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள்தான் தேசியப் பிரச்சினை என்கிறது, பாகிஸ்தானியப் பெண் இந்திய ஆணைத் திருமணம் செய்துகொண்டதை தேசியப் பிரச்சினையாகப் பார்க்கிறது, பாஜகவைச் சேர்ந்த ஒருவர்கூட சென்றே பார்த்திராத கிராமத்தில் ஒரு முஸ்லிம் பையன் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதைத் தேசத்தின் நெருக்கடியாகக் கருதுகிறது, படுக்கையறையில் இருக்கும்போது ஓப்பன்ஹைமர் பகவத் கீதை சுலோகங்களைச் சொல்வதை (திரைப்படத்தில்தான்) தேசத்தின் நெருக்கடியாக பாவிக்கிறது. இவையெல்லாம்தான் பாஜகவுக்கு தேசியப் பிரச்சினைகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மணிப்பூரில் கலவரம் தொடங்கி ஏழாவது மாதத்தை எட்டிவிட்டது, அந்த நெருக்கடி மீது நம்முடைய கவனத்தை மீண்டும் குவிக்க – இது பயனில்லாத முயற்சிதான் - இந்தக் கட்டுரையில் முயல்கிறேன். மணிப்பூரில் எனக்கு ஆர்வம் ஏற்பட முதல் காரணம் நான் வரலாற்றாசிரியன், 1949இல் அது எப்படி இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக இணைந்தது, அதிலிருந்து அது எப்படி இருக்கிறது என்பது தெரிந்ததால் சொல்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்த மாநிலத்துக்கு நேரில் சென்று பார்த்ததும் என்னை எழுதத் தூண்டுகிறது. அதன் இயற்கை அழகும், செறிவான இசையும், நாட்டிய பாரம்பரியமும், அந்த மாநிலப் பெண்களுக்குள்ள சுதந்திரமும், அம்மாநிலத்தின் முப்பெரும் இனங்களான மெய்திகள், நாகர்கள், குகிக்கள் ஆகியோரிடையேயான போட்டித்தன்மையால் நிரம்பிய உறவும் என்னை மிகவும் கவர்ந்தன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன?

கே.வி.மதுசூதனன் 14 Jun 2023

சுயாதீன ஊடகங்களின் பங்கு

வரலாற்றாசிரியனாகவும் சுற்றுலாப் பயணியாகவும் சென்று பார்த்தபோதே அவர்களிடையே நிலவிய பதற்றமான உறவு வெளிப்படையாகத் தெரிந்தது, ஆனால், இந்த அளவுக்கு ஆழமாகவும் விரிவாகவும் மோதல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கவுமில்லை, இதுவரை நடந்ததும் இல்லை. மெய்தி, குகி-சோ இன தீவிரவாதிகள் இனி தங்களால் சேர்ந்து வாழ முடியாத அளவுக்குப் பகைமை வளர்ந்துவிட்டதாகக் கடந்த சில மாதங்களாகக் கருதுகின்றனர். களத்தில் இருந்த மோதல்கள் இப்போது இணையதளங்களுக்கும் பரவிவிட்டது, இருபுறமும் கனல் கக்கும் கருத்துகளைத்தான் பரிமாறிக்கொள்கின்றனர்.

மோடி அடிவருடிகளான ‘கோடி ஊடகம்’ மணிப்பூர் கலவரச் செய்திகளை அப்படியே புறக்கணித்து, கண்ணுக்குத் தெரியாத இடத்துக்குத் தள்ளிவிட்டது. ‘ஸ்கிரால்’, ‘த வயர்’ போன்ற சுயாதீன இணையதளங்கள் மட்டுமே அங்கு நடப்பவற்றைத் தொடர்ந்து தெரிவிக்கின்றன. ‘ஸ்கிரால்’ கள அறிக்கைகளைக் கவனமுடன் திரட்டித் தருகிறது, ‘த வயர்’ வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களைப் பேட்டி கண்டு தகவல்களைத் தருகிறது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த என் நண்பர்களுடனும் தொடர்ந்து பேசி, தகவல்களைத் திரட்டிவருகிறேன். அந்த அடிப்படையில்தான் என்னுடைய ஆய்வுக் கருத்துகளை முன்வைக்கிறேன்.

குகிக்களும் மெய்திகளும் 2023 மே மாதத்துக்கு முன்னாலும் சுமுகமாக வாழ்ந்துவிடவில்லை. அவர்கள் மதங்களால் வேறுபட்டிருந்தார்கள். பெரும்பாலான குகிக்கள் கிறிஸ்தவர்களாகவும் பெரும்பாலான மெய்திகள் இந்துக்களாகவும் இருக்கின்றனர். குகிக்கள் குன்றுப்பகுதிகளிலும் மெய்திகள் இம்பால் பள்ளத்தாக்கிலும் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

மெய்தி அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரவணைப்பில்தான் குகிக்கள் இருக்க வேண்டும் என்ற பாவனையில் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. குகிக்களுக்கு இருக்கும் ‘பழங்குடிகள்’ என்ற அரசமைப்புச் சட்ட அந்தஸ்து காரணமாக, அரசு வேலைகளில் அவர்கள் முன்னுரிமை பெறுகின்றனர் என்ற எண்ணம் இன்னொரு பழங்குடி இனமான மெய்திகளுக்கு நீண்ட காலமாகவே தொடர்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கசந்த உறவு

இருவேறு இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மோதல்கள் ஏற்படுவது நம் நாட்டில் வழக்கமல்லாதது அல்ல. சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது இப்படிப்பட்ட பல மோதல்கள்தான். அப்படிப்பட்ட மோதல்களுக்கிடையே இந்த மோதல்தான் அதன் அளவு, தீவிரம், போக்கு காரணமாக தனித்துக் காணப்படுகிறது. இன அடிப்படையில் மட்டுமல்ல - மத அடிப்படையிலும் மக்கள் இரு அணிகளாகப் பிரிந்துவிட்டார்கள்.

ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரான மெய்திகளிடம் இருப்பதால் குகிக்களுக்கு சேதம் அதிகம் என்று, தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்சினையை ஆராயும் பலர் தெரிவிக்கின்றனர். மெய்தி சமூக அரசியலர்கள் கையில்தான் மாநில அரசு நிர்வாகமும் காவல் துறையும் இருக்கின்றன. இந்த மோதல்களில் சேதம் எப்படி ஒரு பக்கமாகவே அதிகம் இருக்கிறது என்பதற்கு உதாரணம், இருநூறுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இதில் 2023 மே மாதத்துக்கு முன்னால் இரு இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையின்மை நிலவியது. அதிலிருந்து உறவு கசப்பாகியது. ஒரு காலத்தில் குகிக்கள் இம்பால் பள்ளத்தாக்குக்கு வந்தும், மெய்திகள் குன்றுப்பகுதிகளுக்குச் சென்றும் வேலைபார்த்தனர். இப்போது பிளவு நிரந்தரமாகிவிட்டது. குகிக்கள் பள்ளத்தாக்கிலிருந்து முழுதாக வெளியேறிவிட்டனர், மெய்திகள் குன்றிலிருந்து இறங்கிவிட்டனர்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்

ராமச்சந்திர குஹா 25 Jul 2023

மூன்று பேருக்குப் பொறுப்பு

இந்த துயரகரமான நிலைக்கு மூன்று பேர் முக்கியமாகப் பொறுப்பேற்றாக வேண்டும்.

முதலாவது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங். இவர் அப்பட்டமாக மெய்திகள் பக்கம் சாய்ந்து, ஒரு சார்பாகவே செயல்பட்டார். சித்தாந்தரீதியாக அரசு நிர்வாகம் மெய்திகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன், கலவரத்தைக் கட்டுப்படுத்தவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கும் திறமையில்லாமல் மாநில அரசு நிர்வாகம் நிலைகுத்தி நின்றுவிட்டது. இந்த மோதல்கள் தொடங்கிய பிறகு அரசின் ஆயுதக் கிடங்குகளை இரு தரப்பையும் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் சூறையாடவும் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் அள்ளிச் செல்லவும் அரசு வேடிக்கை பார்த்ததுடன், உடந்தையாகவும் இருந்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அப்படி கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் சிறிதளவு மட்டுமே பெயருக்கு மீட்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் சம்பவங்களுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டிய இரண்டாமவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா. கலவரம் நடந்த பிறகு மாநிலத்துக்கு வந்து சில மணிநேரம் சுற்றிப் பார்த்த அவர் வன்முறையை ஒடுக்கவும் அமைதியை ஏற்படுத்தவும் எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக, சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் வாக்காளர்களை, மத அடிப்படையில் திரட்ட தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் பிரச்சாரத்தில் செலவிட்டுவருகிறார்.

மூன்றாமவர், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி; கலவரம் நடந்த மாநிலத்தை இதுவரை வந்துகூட பார்க்கவில்லை. மாநில முதல்வரும் ஒன்றிய உள்துறை அமைச்சரும் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டார், நெருக்கடியைத் தீர்க்க ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பிரச்சினையைப் புரிந்துகொள்ளவில்லையா அல்லது இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நினைக்கும் அகந்தையா, மணிப்பூர்தானே அங்கு என்ன நடந்தால் என்ன என்ற அக்கறையின்மையா? 

எதுவாக இருந்தாலும் பிரதமர் பதவியிலிருக்கும் ஒருவருக்கு இது அழகே இல்லை. மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி பயணித்து இம்பால் பள்ளத்தாக்குப் பகுதிக்கு மட்டும் அல்லாமல் குன்றுப்பகுதிகளுக்கும் சென்று இரு தரப்பையும் சேர்ந்தவர்களை அழைத்து சமரசம் பேசவைத்து, அமைதியை நிலைநாட்டுவதுடன் அதைக் கண்காணிக்க குழுக்களையும் நியமித்திருந்தால், மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கும். அவருடைய வருகைக்குப் பிறகு இரு இனங்களையும் சேர்ந்தவர்கள் சமரசமாகப் போக முதல்படியாக, சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பாவது உருவாகியிருக்கும்.

மெய்திகளுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட அவர்களைத் தூண்டிக்கொண்டிருந்தால்தான் அரசியலில் தன்னால் உயர் பதவியில் நீடிக்க முடியும் என்று முதல்வர் பிரேன் சிங் நம்பியிருக்கக்கூடும். அமித் ஷாவும் நரேந்திர மோடியும் ஏன் மனசாட்சியே இல்லாமல் மணிப்பூரையும் மணிப்பூரிகளையும் இப்படிப் புறக்கணிக்க வேண்டும்?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி

சமஸ் 06 Jul 2023

யார் ஊற்றிய எண்ணெய் இது?

முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங்கை நீக்கினால் – அதுதான் முதல் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும் – அது அவர்களுடைய இரட்டை என்ஜின் அரசின் பலவீனமாக பார்க்கப்படும் என்ற அச்சமா? குகிக்களை ராட்சசர்களாகச் சித்தரித்தால் பொதுத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் தங்கள் பக்கம் சாய்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பா? அல்லது இந்த நெருக்கடியை எப்படித் தீர்ப்பது என்று உண்மையாகவே தெரியாத கையாலாகத்தனமா?

தங்களை வழிநடத்தும் தலைவர் என்று இருவரும் பெருமைபாராட்டும் வல்லபபாய்க்கு இருந்த நிர்வாகத் திறமையும் துணிவும் நடுநிலையான நடத்தையும் இருவரிடமும் இல்லை, வெறும் பிரச்சாரத்துக்காகத்தான் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள், நாட்டு மக்கள் அனைவரையும் தங்களுடையவர்களாகக் கருதும் சமூக அக்கறையும் அன்பும் அறிவும் இருவரிடத்தும் இல்லை என்பதே மணிப்பூர் விவகாரத்தில் வெளிப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே உள்துறை அமைச்சரும், பிரதமரும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வாயை இறுக மூடிக்கொண்டிருக்கிறார்கள், அதேசமயம் பிற விஷயங்கள் குறித்து வம்பளக்கிறார்கள். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா பிரச்சாரக் கூட்டங்களின் பேச்சுகளைப் படித்தாலே இது புரியும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் (சர்சங்கசாலக்) மோகன் பாகவத், நாகபுரியில் நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சுருக்கமாகப் பேசியிருக்கிறார். “நீண்ட காலமாக சேர்ந்து சுமுகமாக வாழ்ந்த மெய்திக்களும் குகிக்களும் இடையில் ஏன் இப்படியொரு மோதல் ஏற்பட்டிருக்கிறது? இதனால் லாபம் அடைகிறவர்கள் யார்? இந்த விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றனவா? ஒன்றியத்தில் வலிமையான அரசு ஆட்சியில் இருக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்பும் என்ற நிலை வரும்போதெல்லாம் ஏதோ ஒரு சம்பவம், சோகம் நிகழ்கிறது. யார் இதைச் செய்கிறார்கள்? மணிப்பூரில் பற்றி எரியும் கலவரத்துக்கு யாரோ எண்ணெய் ஊற்றுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

என்ன ஆனது இரட்டை என்ஜின்?

மோகன் பாகவத்தின் பேச்சுக்கு முன்பிருந்தும், பிறகும்கூட சமூக ஊடகங்களில் வலதுசாரிகள் இப்படி அன்னியக் கரங்கள் குறித்து தொடர்ந்து பதிவிட்டுவருகின்றனர். குகிக்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் இந்திய உணர்வு குறைவாகவும் மெய்திகள் இந்துக்கள் என்பதால் நம்பகமானவர்களாகவும் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் இருப்பதைப்ப்போலவும் பதிவுகள் இருக்கின்றன. இவை தவறானவை மட்டுமல்ல நச்சுத்தன்மை வாய்ந்தவை. இம்பாலிலும் புதுதில்லியிலும் தங்களுடைய தலைவர்கள் செய்யத் தவறியவற்றுக்காக குகிக்களைச் சதிகாரர்களாக்கும் தவறை இந்துத்துவ சித்தாந்திகள் செய்கின்றனர்.

மணிப்பூர் கலவரம் பல மாதங்களாகத் தொடர்கிறது, இது தணியும் என்பதற்கு அறிகுறிகளே இல்லை என்பது இரட்டை என்ஜின் அரசின் முழுத் தோல்வியையே காட்டுகிறது. ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பெரும்பான்மை வலுவுள்ள அரசு இருந்தும், ராணுவம் – காவல் துறை இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தும் மணிப்பூர் மாநிலத்தையும் மக்களையும் இப்படிப் பரிதவிக்க விட்டுவிட்டது மோடி – ஷா இணை. தன்னுடன் சகாக்களாக இருந்த பிரச்சாரகர்கள் வலுவான அரசை நிர்வகிப்பதாக மோகன் பாகவத் பெருமிதப்படுகிறார்.

உண்மையில் அந்த அரசு திறமையற்றதாகவும் தீய உள்நோக்கம் கொண்டதாகவும்தான் இருக்கிறது என்பதுதான் சரியான விமர்சனமாக இருக்கும். சட்டம் – ஒழுங்கை சரிசெய்யும் வேலையைத் தனியாரிடம் அயல்பணி ஒப்படைப்புபோல கைமாற்றிவிட்டார்கள் என்பது வெட்கப்படத்தக்கது; நாட்டின் எல்லைப்புற மாநிலமொன்றில் பெரும்பான்மையினவாதம் ஆதிக்கம் பெற, தீய நோக்குடன் ஆதரிக்கிறது - அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன?
மோடி அரசின் அலட்சியமே மணிப்பூர் எரியக் காரணம்
மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி
ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்
மூன்றே மூன்று சொற்கள்
எரியும் மணிப்பூர்

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

1






1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   24 days ago

பிஜேபி எங்கே சென்றாலும் அங்குள்ள பெரும்பான்மையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும். அதனால்தான் மோடி போன்றவர்கள் தங்கள் பேச்சு எடுபடாது என்று எண்ணுவதால் மணிப்பூர் போன்ற பிரச்சினைக்குரிய இடங்களுக்கு செல்வதையே தவிர்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள்தான் தொடர்முயற்சி எடுக்கவேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒரு கம்யூனிஸ்டின் மரண சாசனம்தஞ்சைசுழல் பந்துபூர்வீகக்குடி மக்கள்டிடி கிருஷ்ணமாச்சாரிபிடிஆர் பேட்டிபள்ளிகுற்றவியல் நடைமுறை (அடையாளம் காணல்) மசோதா-2022ஃபேஸ்புக்ச.ச.சிவசங்கர் பேட்டிகண்கள்புற்றுநோய்சிபி கிருஷ்ணன்வாசகர்கள் எதிர்வினைகோம்பை அன்வர்சமூக – அரசியல் விவகாரம்ஹைக்கூஆம்பர் கோட்டைபல் சொத்தைபரம்பரைக் கோளாறுநாட்டின் எதிர்காலம்தனி வாழ்க்கைசந்தேகத்துக்குரியதுபூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்சாஸ்திரங்கள்யூரியாராகுல் காந்தி பேச்சுமாதிரி பள்ளிகள்செலவுகூகுள் பே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!