கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 2 நிமிட வாசிப்பு

அடுத்த ஆர்எஸ்எஸ் தலைவரும் பிராமணர்தானா?

வைத் ராய்
13 Sep 2023, 5:00 am
2

ராஜேந்திர சிங் ராஜு பையா என்ற பெயரை இன்றைக்கு இந்தியாவில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. பலருக்கு நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை; இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் உருவாக்கத்துக்கு முக்கியமான பங்களித்தவர்களில் ஒருவர் அவர்! 

இந்திய அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் முக்கியமான அமைப்புகளில் ஒன்றான ஆர்எஸ்எஸ்ஸுடைய தலைவர் உள்ளிட்ட அதன்  முக்கிய நிர்வாகிகள் பொதுவாகத் திரைக்குப் பின்னால்தான் பெரும்பாலும் செயல்படுவார்கள். இதனால், பொதுவெளியில் இவர்களைப் பற்றி அதிகம் தெரிவதும் இல்லை; விமர்சனங்கள் அதிகம் இவர்களைப் பற்றி எழுவதும் இல்லை. 98 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் இப்போதைய தலைவர் மோகன் பகவத் அதன் ஆறாவது தலைவர். அவருக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த அதன் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் உள்பட ஐந்து பேர்களில் ஒருவர்தான் ராஜு பையா என்று அழைக்கப்பட்ட ராஜேந்திர சிங் தோமர்.

ராஜேந்திர சிங் தோமர்

ராஜேந்திர சிங் 1993 முதல் 2000 வரை ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தார். தனது 38வது வயதில் அலகாபாத் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் பணியைத் துறந்து, ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஆனவர் இவர். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆறு பேரில் ராஜேந்திர சிங்குக்கு ஒரு சிறப்பு உண்டு. அறுவரில் இவர் மட்டுமே பிராமணரல்லாதவர். தவிர, இவர்தான் முதன்முதலில் மஹாராஷ்டிரத்துக்கு வெளியிலிருந்து தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். 

பொதுவாகவே சங்க பரிவாரத்தையும் பாஜகவையும் பிராமண மேலாண்மையையும் கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர் திலீப் மண்டல் தனது சமீபத்திய கட்டுரையில், பாஜகவில் நிகழ்ந்திருக்கும் ஒரு ஆக்கபூர்வ மாற்றத்தைக் குறிப்பிட்டிருந்தார். பலருக்கு அது ஆச்சரியமாகக்கூட இருந்தது. ஆனால், அதுதான் உண்மை. இதுவரை காங்கிரஸ் உருவாக்கியிருக்கும் முதல்வர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பாஜக உருவாக்கியிருக்கும் முதல்வர்களின் எண்ணிக்கை அதிகம்: எதில்? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில்! 

இதற்கு யாரையேனும் கை காட்ட வேண்டும் என்றால், நான் ராஜேந்திர சிங்கை நோக்கித்தான் கை காட்டுவேன். சங்க பரிவாரத்திலும், பாஜகவிலும் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினத் தலைவர்கள் மேலெழுந்து வந்ததை கல்யாண் சிங்குடனும், உத்தர பிரதேசத்துடனும் இணைத்துப் பலரும் பேசுவது உண்டு. அதன் பின்னிருந்த சூத்திரதாரிகளில் ஒருவர் ராஜேந்திர சிங். அதோடு அவர் ஆர்எஸ்எஸ் தலைவரான பிறகு பாஜக உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகளில் பிராமணரல்லாதோர் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் அவர் களம் அமைத்தார். குஜராத்தில் இருந்து நரேந்திர மோடியின் அரசியல் வளர்ச்சி தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். சங்க பரிவார அமைப்புகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிப்பவராக இருந்தவர் ராஜேந்திர சிங்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவிய ஹெட்கேவருக்குப் பின் அதைப் பெரிய அளவுக்குத் தூக்கி நிறுத்தியவரான மாதவ சதாசிவ கோல்வால்கர் மறைவுக்குப் பிறகு 1973 முதல் 1993 வரை தலைவராக இருந்தவர் மதுகர் தத்தாத்ரேய தேவரஸ். அதுவரை ஒருவரின் மறைவுக்குப் பின்னரே அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மரபே ஆர்எஸ்எஸ்ஸில் இருந்தது; மதுகர் தத்தாத்ரேய தேவரஸ் முதுமையில் சக்கர நாற்காலியில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது அடுத்த தலைவர் தொடர்பான விவாதம் அமைப்புக்குள் எழுந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் பொதுச் செயலராக இருந்தவர் ஹெச்.வி.சேஷாத்ரி; கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர். இவருடைய பெயர்தான் தலைவர் பதவிக்கு அடுத்ததாக உச்சரிக்கப்பட்டுவந்தது.

ஆனால், மீண்டும் பிராமணர்தான் ஆர்எஸ்எஸ் தலைவரா என அந்த அமைப்புக்குள்ளேயே பலர் புழுங்கினர். அந்தப் புழுக்கம் கொஞ்சம், கொஞ்சமாக வெளியே கசிந்தது. ஊடகங்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் தேர்வு தொடர்பாக எழுதத் தொடங்கின. அம்பேத்கர் நூற்றாண்டு முடிந்திருந்த சமயம் அது; அதற்குக் கொஞ்ச காலம் முன்புதான் மண்டல் ஆணைய பரிந்துரைகளின் வழி ஒரு சூறாவளியை வி.பி.சிங் நாடு முழுவதும் உருவாக்கிவிட்டிருந்தார். ‘மண்டலா, கமண்டலா?’ என்று வி.பி.சிங்குக்கு எதிராக முண்டா தட்டினாலும், அவர் உருவாக்கிய அலைக்கு எந்த அமைப்பும் தப்ப முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் அது பிரதிபலித்தது. 

சேஷாத்ரியைத் தலைவராக்கும் முடிவை அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு அமைப்பு தள்ளிப்போட இதுவே காரணம் ஆனது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவராக, பிராமணர் அல்லாத ஒருவர்கூட கிடைக்கவில்லையா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மட்டுமல்லாது, அமைப்புக்குள்ளேயே பலர் எழுப்பியபடி இருந்தனர். 

இந்தச் சர்ச்சை ஓயாது என்பதை உணர்ந்துகொண்ட தேவரஸ், பிராமண சமூகத்தைச் சாராத ஒருவரை அடுத்த தலைமைப் பதவிக்கு முன்மொழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். இப்படித்தான் ராஜேந்திர சிங் தலைவர் பதவியில் அமர்ந்தார். நிறைய தடைகளைக் கடந்தே ராஜேந்திர சிங் தலைமைப் பதவி நோக்கி நகர முடிந்தது. எங்கே அவர் முன்னகர்ந்துவிடுவாரோ என்று பின்னுழுக்கும் வேலைகள் எல்லாம் நடந்தன. அதையும் தாண்டியே நகர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் அதன் பரிவார அமைப்பிலும் நிறைய மாற்றங்களை அவர் கொண்டுவந்தார். ஏழு ஆண்டு காலத்தில் அவரால் கை காட்டப்பட்ட, தூக்கிவிடப்பட்ட ஏராளமான தலைவர்கள் - பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் - ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தார்கள்.

அடுத்த ஏழே ஆண்டுகளில், அதாவது 2000இல் மீண்டும் ஆர்எஸ்எஸ் தலைமைப் பதவி மீண்டும் பிராமணர்களிடமே சென்றது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தைப் பின்னணியாகக் கொண்ட, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிராமணரான குப்பனஹள்ளி சீதாரமையா சுதர்சன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ஆனார். மங்கலான ஒரு காலகட்டம் அது என்று சொல்லலாம். பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசம் அடைந்தது அப்போதுதான். அனைத்துத் தரப்பு மக்களிடமும் செல்வாக்கு  பெற்றிருந்த பிரதமரான வாஜ்பாயுடனேயே மோசமான உறவைத்தான் சுதர்சன் பராமரித்தார். 2009இல் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய இடத்துக்கு அடுத்ததாக மோகன் பகவத்தை சுதர்சன் கை காட்டினார். மஹாராஷ்டிரத்தின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் மோகன் பகவத்.

ஆர்எஸ்எஸ், 70 வயதை கடந்தவர்களுக்கு எந்தப் பதவியும் இல்லை என்ற நடைமுறையை கடந்த 15 ஆண்டுகளாகவே பின்பற்றிவருகிறது. அதன்படி மோகன் பகவத் பதவி விலகி, அடுத்தவருக்கு வழிவிட வேண்டிய சூழல் உருவாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மோகன் பகவத்துக்கு 72 வயதாகிறது. அமைப்புக்குள் அடுத்த தலைமை தொடர்பான விவாதங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே எழுந்தன. சமீபத்தில் இது தொடர்பான பேச்சுகள் மீண்டும் எழுந்தன. மாற்றம் நடந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் மாற்றம் நடக்கவில்லை?

விஷயம் இதுதான்: இப்போது ஆர்எஸ்எஸ் பொதுச் செயலராக இருக்கும் தத்தாத்ரேய ஹொசபலேவைத் தலைவராக்கவே மோகன் பகவத் விரும்புகிறார்; தத்தாத்ரேய ஹொசபலேவ் கர்நாடகத்தைச் சேர்ந்த பிராமணர். ஆகையால், ‘இப்போதும் மீண்டும் பிராமணர்தான் தலைவரா?’ என்ற அதிருப்தி குரல் ஆரஎஸ்எஸ் அமைப்புக்குள் ஒலிக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு

ராமச்சந்திர குஹா 07 Jun 2022

ஆர்எஸ்எஸ்ஸில் பொதுச் செயலர், இணைப் பொதுச் செயலர்களாக இருந்தவர்கள்தான் இதுவரை தலைவர்களாக வந்துள்ளனர். இப்போது அப்பொறுப்புகளில் உள்ளவர்களில் 99% பிராமணர்கள்தான். மீண்டும் பிராமணரைத் தலைவராக்கினால், நூற்றாண்டைக் கொண்டாடவிருக்கும் நேரத்தில் பெரிய சர்ச்சையை, நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். மக்களவைத் தேர்தலிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு முடியும் வரை - 2025 வரை - தானே தலைவராக நீடிக்க மோகன் பகவத் முடிவுசெய்திருப்பதாக உள்ளுக்குள் பேச்சு அடிபடுகிறது. இது வெகுஇயல்பாக அமைப்புக்குள் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

சென்ற பிஹார் தேர்தல் சமயத்தில் மோகன் பகவத் இடஒதுக்கீடு தொடர்பில் பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால், அப்போது லாலு - நிதீஷ் கூட்டணியின் வாக்கு வீதத்தை சரசரவென்று கூட்டியதில் மோகன் பகவத்தின் இடஒதுக்கீடு எதிர்ப்புப் பேச்சுக்கு முக்கியமான இடம் இருந்தது. இன்று அதே மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசுவதையும் பார்க்கிறோம். ஆச்சரியப்பட ஏதும் இல்லை,  அடிக்கும் காற்றுக்கு ஏற்ப பேச்சு மாறுகிறது!

எனக்கு ஒரு கேள்வி உண்டு. காங்கிரஸின் தலைமைப் பதவி ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்பவர்கள் ஆர்எஸ்எஸ் தலைமைப் பதவி ஒரு சமூக ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்பதை விமர்சிக்க வேண்டாமா?    

தொடர்புடைய கட்டுரைகள்

சங்கராச்சாரியாரின் கிளியும் சாவர்க்கரின் புல்புலும்
இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு
தேவனூரா மகாதேவா: ‘உண்மையான மனிதர்’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வைத் ராய்

வைத் ராய், பத்திரிகையாளர். டெல்லியைப் பின்புலமாகக் கொண்டு எழுதுபவர். தொடர்புக்கு: vaidroydelhi@gmail.com


7






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

RSS is not a government institution for 69% reservation! "Arunchol" loves any article even if it is remotely anti-brahmin!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganesan   1 year ago

The rsuquare may change shirt but the subject remains the same!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

எலும்பு மஜ்ஜைமக்கள் மொழிமத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடிமகிழ் ஆதனின் காலத்தை எப்படிப் புரிந்துகொள்வது?பாரதிய ஜனதாவுக்கு சோதனைநெஞ்செரிச்சல்தூயன் கட்டுரைநாடாளுமன்ற உறுப்பினர்மேண்டேட்சமூக வலைதளம்பொதுப் பட்டியல்தமிழகப் பள்ளிக்கல்வித் துறைகாஸாகுமார் கந்தர்வாபாமணியாறுஜேம்ஸ் பால்ட்வின் பேட்டிகல்விமுறைபூடான்சுயவிமர்சனம்இயக்குநர்கேஜ்ரிவால் கைது: நீதி முறைமைக்கே ஒரு சவால்கல்வியும்உங்கள் ஆரோக்கிய பிளேட்டில் என்ன இருக்க வேண்டும்?பொதுத் தேர்தல்மோடி அரசுக்குப் புதிய யோசனை!பொதுச் சுகாதாரம்ஹிலாரிமுரளி மனோகர் ஜோஷிவெற்றியின் சூத்திரம்எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!