உற்றுநோக்க ஒரு செய்தி, உரைகள் 10 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு கற்றுக்கொடுக்கிறது: ராகுல் உரை

01 Mar 2022, 5:00 am
2

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையை அவருடைய முக்கியமான உரைகளில் ஒன்று என்று சொல்லலாம். கூட்டாட்சி தொடர்பிலான காங்கிரஸின் பார்வையிலும்கூட பெரும் திருப்பம் நிகழ்ந்துவருவதைச் சுட்டும் உரை அது. முக்கியத்துவம் கருதி தன்னுடைய வாசகர்களுக்கு ‘அருஞ்சொல்’ முழு உரையையும் தருகிறது.

"நண்பர்களே, சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஓர் அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய  அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட விரும்புகின்றேன். அவருடைய வாழ்க்கை என்பது நீண்ட நெடிய போராட்டம் நிறைந்ததாகும். பல ஆண்டுகள் அந்தப் போராட்டத்தின் விளைவாக அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்துவருவதற்காக நான் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நேற்றைய தினம் என்னுடைய தாயார் என்னை அழைத்து, 'நாளை மறுதினம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள்' என்று சொன்னார்கள். எனக்குத் தெரியும் என்று நான் சொல்லிவிட்டு, 'அவருக்கு எத்தனை வயது தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியாது' என்று என்னுடைய தாயார் சொன்னார். '69 வயது' என்று நான் சொன்னவுடன், 'சாத்தியமே இல்லை' என்று என்னுடைய தாயார் சொன்னார்.

நான் என்னுடைய தாயாரிடம் கேட்டேன், 'அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?' என்றேன். '50 அல்லது 60 வயதிற்குள்தான் இருக்கும்?' என்று என்னிடம் அவர் சொன்னார். நான் அப்படி சொன்னவுடன் என்னுடைய தாயார், கூகுளில் அந்தச் செய்தியை ஒப்பிட்டுப்பார்த்து, 'ஆம், நீ சொன்னது சரிதான்' என்று ஒப்புக்கொண்டார்.

நான் சொல்லப்போகின்ற செய்தி இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா; இல்லையா? எனக்குத் தெரியாது. ஆனால், ஸ்டாலின் அவர்கள் இன்னொரு புத்தகத்தை எழுத வேண்டும்; அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார்  என்பதைப் பற்றி!

நான், திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தந்தமைக்காக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.

நான் இதை மேலொட்டமாகச் சொல்லவில்லை; என்னுடைய அடிமனதிலிருந்து எழும் ஆழமான உணர்விலிருந்து சொல்கிறேன்.

சில நாள்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக, தமிழ்நாட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் என்னைப் பாராட்டியதாக அறிந்தேன்.

நாடாளுமன்றத்தில் இருந்து நான் வெளியே வந்தபொழுது, பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒருவர் என்னிடம் கேட்டார், 'உங்களுடைய உரையில் என்ன காரணத்திற்காக நீங்கள் தமிழ்நாட்டைப்பற்றி குறிப்பிட்டீர்கள்?' 

நான் பலமுறை அதனை உணர்ந்திருக்கின்றேன். தமிழ்நாட்டின் மீது எந்த அளவிற்கு எனக்கு அன்பு இருக்கிறது என்று. நாடாளுமன்றத்திலிருந்து நான் வெளியே வருகிறபொழுது, நான் தமிழன் என்று சொன்னேன்; என்னை அறியாமல் அந்த வார்த்தை வந்தது.

நான் என்னுடைய காரில் ஏறியதற்குப் பிறகு, ஏன் அப்படி சொன்னேன் என்று யோசித்தேன்.

ஏன் அந்த வார்த்தைகள் என்னுடைய வாயிலிருந்து வந்தன?

'நீ தமிழ்நாட்டில் பிறக்கவில்லை -

நீ தமிழ் மொழியை பேசுவதில்லை -

மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகம் உடைய மொழி தமிழ் மொழி -

அந்த நாகரிகத்தைப் பற்றி இன்னும் நீ தெரிந்துகொள்ளக்கூட முற்படவில்லை -

ஆனால், எப்படி நீ தமிழன் என்று சொல்லிக்கொள்கிறாய்?

இதை எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன்.

நான் எப்படி அந்த உரிமையை, அப்படிச் சொல்லுகின்ற அளவிற்கு எடுத்துக்கொண்டேன்?

நான் காரில் செல்லும்பொழுது, மீண்டும் தொடர்ந்து அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

பின்னர்தான் நான் உணர்ந்தேன், ஏன் அந்த வார்த்தையை ஏன் சொன்னேன் என்று ஏனென்றால், என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது.

ஒரு தந்தையை இழப்பது என்பது, குறிப்பாக எனக்கு மிகப் பெரிய வேதனையான, சோகமான அனுபவம்தான். நான் அந்த சோகமான அனுபவத்தைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கிறேன்.

அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன்; நான் ஒரு  தமிழன் என்று அழைத்துக்கொள்ளவதற்கான எல்லா உரிமைகளும் எனக்கு இருப்பதாக!

தமிழனாக இருப்பதின் பொருள் என்ன?

நான் முதலில் இந்த மண்ணுக்கு வருகிறபொழுது, பணிவான குணத்தோடு வருகிறேன். இதன் வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறவனாகவே இருக்கிறேன். இதன் எல்லாவிதமான பரிமாணங்களையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் நான் ஒவ்வொரு முறையும் இங்கு வருகிறேன்.

நான் என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசுகின்றபொழுது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன்.

நான் மாநிலங்கள் என்று சொல்கிறேன் என்றால், அந்த சொல் எங்கிருந்து வந்தது?  ஒரு மாநிலம் என்றால் என்ன?

அது, மண்ணுடைய வெளிப்பாடு - அது, மக்களிடமிருந்து அந்த மண்ணின் தன்மை வெளிப்படுவது - அது, மக்களிடமிருந்து அவர்களுடைய குரல் வெளிப்படுவது - அவர்களுடைய குரலிலிருந்து மொழி வெளிப்படுவது -  அவர்களுடைய மொழியிலிருந்து கலாச்சாரம் வெளிப்படுவது - அவர்களுடைய கலாச்சாரத்திலிருந்து வரலாறு வெளிப்படுவது - இப்படித்தான் வரலாற்றிலிருந்து அவர்களுடைய மாநிலம் வெளிப்படுகிறது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கின்றபொழுது, மாநிலங்களிலிருந்துதான் இந்தியா என்பதே வருகின்றது என்பதை நான் அழுத்தமாகச் சொன்னேன்.

எழுத்துகள் சேர்ந்து சொல்லாக மாறுகின்றன; சொற்கள் சேர்ந்து வாக்கியங்களாக மாறுகின்றன; வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதைகளாக மாறுகின்றன.

எழுத்துகளை மதிக்கவில்லை என்றால், சொற்களை மதிக்கவில்லை என்றால், வாக்கியங்களை மதிக்கவில்லை என்றால், நீங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாது.

பிரதமர் இங்கு வருகிறபொழுதெல்லாம் பொருள் புரியாமல், அப்படித்தான் தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார்.

இது மூவாயிரம் ஆண்டுகள் பழைமையுள்ள ஒரு பாரம்பரியமான நாடு. 

அவர் சொற்களைப் புரிந்துகொள்வதில்லை -

வாக்கியங்களைப் புரிந்துகொள்வதில்லை -

மொழியைப் புரிந்துகொள்வதில்லை -

பிறகு எந்த அடிப்படையில் அவர் தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார்?

உங்களுடைய குரலைப் புரிந்துகொள்ள முடியாமல், நான் உங்களுக்காகப் பேசுகிறேன் என்று ஒருவர் எப்படிச் சொல்ல முடியும்?

மக்கள் திருப்பித் திருப்பிக் கேட்கின்ற எதையுமே நீங்கள் உணர்ந்துகொள்ளாமல் நீங்கள் பேசுகிறபொழுது, அவர்கள் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறீர்கள்?

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.டி. என்பது நியாயமற்றது - அது எங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவது என்று கூறுவதைப்  புரிந்துகொள்ளாமல், நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள்.

நான் நாடாளுமன்றத்தில் பேசுகிறபொழுது சொன்னேன்; நீங்கள் தமிழ்நாட்டினுடைய வரலாற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளவில்லை; இந்த நாட்டினுடைய வரலாற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.

மூவாயிரம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை. மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்றுவரை யாராலும், எதையும் தமிழ்நாட்டின் மீது திணிக்க முடியவில்லை.

எனக்குத் தமிழ்நாட்டு மக்களைப் பற்றிய புரிதல் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களோடு அன்போடும், அக்கறையோடும் பேசினால், அவர்களிடமிருந்து எதையும் பெறலாம்.

நீங்கள் இங்கே வாருங்கள், இங்கே வந்து  தமிழர்களுடைய கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, மொழியைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள்  - அவர்கள் அதற்குப் பதிலாக அன்பையும், பரிவையும் உங்கள் மீது வாரி வழங்குவார்கள்.

பிரதமரிடம் இருப்பது சரியாக புரிந்துகொள்ளாத ஒரு தன்மை.

கிட்டத்தட்ட இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மாநிலங்களைப் பற்றியும் அவர் இப்படித்தான் புரிந்துகொள்ளாத ஒரு தன்மையில் இருக்கிறார்.

என்னுடைய நண்பரும், சகாவுமான உமர் அப்துல்லா இங்கே மிகச் சிறப்பாக உரையாற்றினார். மிக முக்கியமாக, எதைச் சொல்ல வேண்டுமோ, அவர் அதை இந்த மன்றத்தில் சொன்னார்.

அதுகுறித்து நான் சொல்ல விரும்புகிறேன்.

நாடு விடுதலைப் பெற்றதிலிருந்து இப்போதுதான் முதன்முறையாக ஒரு மாநிலத்திலிருந்த உரிமைகள் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பு எப்பொழுதும் இப்படி நடந்ததில்லை.

ஜம்மு காஷ்மீர் மக்களுடைய உரிமைகள், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள், தங்களைத் தாங்களே ஆள முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற பகுதியிலிருந்து சென்ற அதிகாரிகள், இப்பொழுது ஜம்மு காஷ்மீரை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இது ஜம்மு காஷ்மீருக்கு இன்றைய ஆட்சியாளர்கள் இழைத்திருக்கும் மிகப் பெரிய அநீதியாகும்.

யாரிடமும், எதைப் பற்றியும் கலந்து பேசுவதில்லை. இதையேதான் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்கிறார்கள்.

நாம் வேற்றுமையில் ஒற்றுமையைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசுகிறோம்.

இந்தியா என்கின்ற இந்த நாடு பல்வேறு மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்ட நாடாகும்.

வரலாற்றுரீதியாக இதன் காரணமாக, இந்தியா பல அனுபவங்களைக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவினுடைய பலம்.

இந்தப் பலத்தைத் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். 

தமிழ்நாடு, உத்தர பிரதேசத்து மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறது. தமிழ்நாடு, மகாராட்டிர மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு மாநில மக்களிடமிருந்தும், இன்னொரு மாநில மக்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் மதிக்கின்றோம். எங்களுடைய ஒட்டுமொத்தமான கருத்து வேற்றுமையில் ஒற்றுமை.

நான் சொல்வதும் இதுதான் - ஒரு உறுதியான வகையில்தான் இந்த ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும்.

நீங்கள் யார், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு? ஏன் இந்திய நாட்டு மக்கள், 'இந்தியா எப்படி இருக்க வேண்டும்' என்று தீர்மானிக்கக் கூடாது?

இதுதான் இன்றைக்கு இருக்கின்ற முக்கியமான  பிரச்சினையாகும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில்!

நம்முடைய அமைப்பானது, மக்களுடைய குரலைத்தான் எதிரொலிக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, மக்களுடைய உரிமைகளும், உணர்வுகள் நசுக்கப்படுகின்றன.

நீதித் துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை ஆகியவை எல்லாம் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.

பாஜக கற்பனையான உலகத்திலேயே வாழ முடியும்; அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அவர்கள் வரலாற்றை எதிர்த்துப் போரிடுகிறார்கள் அவர்கள் பாரம்பரியத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் - அது அவர்களால் முடியாது - இந்தப் போரில் அவர்கள் நிச்சயம் தோற்பார்கள்.

உங்கள் முன்னால் வந்து பேசுவதற்காக, மீண்டும் என் பெருமகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அவரைக் கவனித்தேன், முன்பே விட அவர் இன்னும் இளமையாகத் தோற்றமளிக்கின்றார். அதனால் அவர், நாளைக்கு அவர் பிறந்த நாள் கேக்கை நன்றாகவே சாப்பிட வேண்டும்.

நன்றி, வணக்கம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1

2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Sivabalan Kannan   2 years ago

எனக்கு உமர் அப்துல்லாவின் உரையும் வேண்டும் எனத் தோன்றுகிறது. வெளியிட முடியுமா?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

அற்புதமான உரை. ராகுல் தமிழ் மனம் எப்படி இயங்குகிறதென்பதைத் தொட்டுவிட்டார்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தன்னம்பிக்கை விதைமடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?வெளிவராத உண்மைகள்காந்திய சோஸலிஷம்நடராஜர் கோயில்ஆப்பிள் இறக்குமதிடி.கே.சிங் கட்டுரைஆண்களுக்கே உண்டான அவதி!நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கஜெய்லரும்: வெகுஜன ரசனையின் சீரழிவுஅ அ அ: ஜெயமோகன் பேட்டிகுயில்தாசன்மரணத்தின் கதைபால் உற்பத்தியாளர்கள்வேண்டும் வேலைவாய்ப்புஇலவசங்கள்புலனாய்வு இதழியல்நோக்கமும் தோற்றமும்ஜர்னலிஸம்வைக்கம்விழிப்பு கண்காணிப்புக் குழுஅப்துல் மஜீத்மாரிமுத்தாப் பிள்ளைகடினமான காலங்கள்அடிப்படையான முரண்பாடுகள்கேள்வி நீங்கள் பதில் சமஸ்ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்மயக்கம்வாய்வுத் தொல்லைக்ரூடாயில்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!