கட்டுரை, அரசியல், சட்டம், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது

கோபால்கிருஷ்ண காந்தி
20 Sep 2022, 5:00 am
1

ரு காலத்தில் – மிக நீண்ட காலத்துக்கு முன்னால் அல்ல – ஆங்கிலம் பேசத் தெரிந்த தென்னிந்தியர்கள் இந்தியாவின் வடக்குப் பகுதியை ‘மேல் இந்தியா’ என்றே குறிப்பிடுவார்கள். இப்படி அவர்கள் அழைத்ததற்கு வரைபடத்தில் அதன் இருப்பிடம் உள்பட பல காரணங்கள் இருந்தன. இந்தியாவின் அரசியல் விவகாரங்களில் வட இந்தியாவுக்கு இருந்த செல்வாக்கு, பரப்பளவில் அதன் பெரும்பங்கு, அதற்கிருந்த மக்கள்தொகை ஆகியவையும் வட இந்திய மாநிலங்களை, ‘மேல் இந்தியா’வாகக் கருத வைத்தன. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைநகரமாக கல்கத்தாவும் பிறகு தில்லியும் கோலோச்சின. நாட்டின் கோடைக்கால தலைநகரமான சிம்லாவும் வடக்கிலேயே இமயத்தில் ஒரு நட்சத்திரம் போல மின்னியது. 

அரசியல் உச்சம்

பிரிட்டிஷ் அரசாட்சிக்கு உள்பட்ட இந்திய நாடாளுமன்றம், மக்கள் பிரதிநிதிகளின் அவை - மாநிலப் பிரதிநிதிகளின் அவை என்ற இரண்டு அவைகளுடன் தில்லியில் உயர் பிரதிநிதித்துவப் பீடமாக இருந்ததும் வட இந்தியாவை மேல்புற இந்தியாவாக நிலை உயர்த்தியது. முகம்மது ஹபீபுல்லா, ஏ.ரங்கசுவாமி ஐயங்கார், எஸ்.சீனிவாச ஐயங்கார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆர்க்காடு ராமசாமி முதலியார், தங்கதூரி பிரகாசம், அனந்தசயனம் ஐயங்கார், டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், வி.வி.கிரி, எஸ்.சத்தியமூர்த்தி, என்.ஜி.ரங்கா, சி.என்.முத்துரங்க முதலியார், டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், எம்.சி.ராஜா, பொப்பிலி ராஜா, என்.சிவராஜ் போன்ற ஆளுமை மிக்கத் தலைவர்கள் நாடாளுமன்ற கூட்டங்களுக்காகத் தொடர்ந்து வடக்கே செல்லும் ரயில்களில்தான் அடிக்கடி பயணித்தார்கள். இதனாலும் இந்தியாவின் அரசியல் உச்ச ஸ்தலமாகவும் வடக்கு ஆதிக்கம் பெற்றது.

அரசமைப்புச் சட்டப்பேரவையை என்.கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ராஜாஜி, ஜெரோம் டிசௌசா, கே.காமராஜ், ஓ.வி.அழகேசன், சி.சுப்பிரமணியம், வி.ஐ.முனுசாமிப் பிள்ளை ஆகியோர் அலங்கரித்தனர். பெண்களில் மிகவும் குறிப்பிடத்தக்க தென்னிந்திய மகளிர் தலைவியர் அம்மு சுவாமிநாதன், ஜி.துர்காபாய், ஆனி மாஸ்கரேன், தாட்சாயணி வேலாயுதம் ஆகியோர். 

நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் தென்னிந்தியாவிலிருந்து சென்ற ஏ.கே.கோபாலன், டி.நாகி ரெட்டி, சி.என்.அண்ணாதுரை, பி.சுந்தரய்யா, பனம்பிள்ளி கோவிந்த மேனன், சி.எச்.முகம்மது கோயா, எம்.ரத்தினசாமி, கே.டி.கே.தங்கமணி, இரா.செழியன் போன்றோர் ரயிலில் மட்டுமல்ல விமானங்களிலும் சமயத்தில் பயணப்பட்டு இந்தியாவின் உச்சம் - வடக்குதான் என்ற தோற்றம் மனதில் பதியப் பெற்றனர். ஆனால், அந்த உச்சத்திலும் தங்களுடைய அரசிய நாடாளுமன்றப் பேச்சுகளாலும் பங்களிப்புகளாலும் அந்தத் தலைவர்கள் சிகரம் தொட்டனர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

காங்கிரஸ் - இடதுசாரிகள் ஒற்றுமை

இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களுக்கிடையே நான் பெரியவன், நீ சிறியவன் என்ற பேதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பம் முதலே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டது. எந்த ஒரு பகுதியையும் உயர்வாகவும், எந்த ஒரு பிரதேசத்தையும் தாழ்வாகவும் அது கருதியதில்லை. பம்பாய் (1885), கல்கத்தா (1886) மாநாடுகளுக்குப் பிறகு மூன்றாவது மாநாட்டை மதறாஸில் (1887) நடத்தியது காங்கிரஸ். அதற்குப் பிறகும் பல மாநாடுகளை தென்னிந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறச் செய்தது. அமராவதி (1897), காகிநாடா (1923), பெல்காம் (1924), எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட்ட ஆவடி (மதறாஸ் – 1955) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆவடி காங்கிரஸ் மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக யூகோஸ்லாவியாவின் அதிபர் மார்ஷல் ஜோசப் பிராஸ் டிட்டோ வந்திருந்தார். அந்த மாநாட்டில்தான், ‘சமத்துவ (சோஷலிச) சமுதாயத்தை அமைப்பதே நோக்கம்’ என்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய கிசான் சபை – விவசாயிகள் பிரிவு – தொடக்க மாநாட்டை லக்னௌ நகரில் 1936இல் நடத்தியது. அதன் ஐந்தாவது மாநாடு 1940இல் அப்போதைய மதறாஸ் மாகாணத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் பலாசா என்ற இடத்தில், ராகுல சாங்கிருத்தியாயன் தலைமையில் நடத்தியது. வட இந்திய நகரங்களில் மாநாடு நடத்திய போதெல்லாம் அடுத்து தென்னிந்தியாவிலும் அது மாநாடுகளைத் தொடர்ந்தது.

இப்படி மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஏற்பாடுகள்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூராக, ‘இந்தியா - அதாவது பாரதம்’ என்கிற சொல்லாட்சியுடன் தொடங்குகிறது. அந்த வாக்கியமே இந்தியா, பாரத் என்கிற பாரதம் என்கிறது. அதாவது இந்தியாவும் - பாரதமும் ஒன்று மற்றொன்றுக்கு உரிமையானது, இந்தியாதான் பாரதம்.

ஆனால், இன்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இந்தியா என்பது எது? இந்தியா வேறு, பாரதம் வேறா? பாரதம் என்பது எது? இந்தக் கேள்வி ஏன் இன்று எழுகிறது?

தொகுதி மறுவரையறை விளைவு

இன்றிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகம் முக்கியமான கட்டத்தை அடைந்துவிடும். பத்தாண்டுகளாக எடுத்த மக்கள்தொகை அடிப்படையில், மக்களவைத் தொகுதியின் எல்லைகள் மறுவரையறை செய்யப்படும், தொகுதிகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப கூட்டப்படும். 2026இல் அது நடைபெற வேண்டியிருக்கிறது.

அது நல்லதுதானே? கோடிக்கணக்கில் மக்கள்தொகை அதிகரிக்கும்போது மக்களவைப் பிரதிநிதிகள் எண்ணிக்கை மட்டும் அதே 543 என்ற அளவில் நீடிக்க முடியாது, நீடிக்கவும் கூடாது. கணக்கியல் அடிப்படையில் பார்த்தால் வாக்காளர்கள் எண்ணிக்கை கூடக்கூட, மக்களவைப் பிரதிநிதித்துவத்தின் வீரியம் குறைந்துவிடும். இது விரும்பத்தகாத நிலை.

இந்திய அரசமைப்புச் சட்டம் இதை உணர்ந்துதான் அவ்வப்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கேற்ப தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யவும் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யவும் வழி செய்துள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்தால் அவர்களுடைய பிரதிநிதிகளுடைய எண்ணிக்கையும் அதற்கேற்ப உயர்ந்தாக வேண்டும், இது எளிமையான, இயல்பான விஷயம் இல்லையா – நிச்சயம் இல்லை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 82வது பிரிவு கூறுகிறபடி மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றும்போது, மக்கள்தொகையைப் பெருக்கிக்கொண்ட மாநிலத்துக்கும், மைய அரசின் நேரடி ஆட்சிக்குள்பட்ட ஒன்றியப் பகுதிகளுக்கும் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை பெருகாமல் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு – அந்தக் கடமைக்குப் பரிசாக – தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும்! இந்த முரண்பாட்டை உணர்ந்து 1976இல் அரசியல் சட்டத்துக்கு 42வது திருத்தம் கொண்டுவந்து, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் - அப்படியே உறைய வைத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. இதே செயலை 84வது திருத்தம் மூலம் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டித்தார் அவருக்குப் பிறகு ஆட்சி செய்த பிரதமர் வாஜ்பாய். இந்த நீட்டிப்பு 2026இல் முடிவுக்கு வருகிறது. நாம் முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.

தரவுகள் சொல்லும் தகவல் இதிலிருந்து மீள வழி என்ன?

இதில் 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் பார்க்கும்போது மொத்தமுள்ள 138 கோடி மக்கள்தொகையில் சரிபாதிக்கு அருகில் - அதாவது 48.6% - உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்த மக்கள்தொகை எதிர்காலத்தில் எப்படி, எங்கே உயரும் என்று, மக்கள்தொகைக்கான தேசிய ஆணையம் நிறுவிய தொழில்நுட்பக் குழு 2011-36 ஆண்டுகள் தொடர்பாக ஓர் அறிக்கை அளித்திருக்கிறது.

இந்திய மக்கள்தொகையில் உத்தர பிரதேசத்தின் பங்கு 1.74% அதிகரிக்கும். 1971இல் 15.30%ஆக இருந்த அதன் பங்களிப்பு 2026இல் 17.03%ஆக உயரும். பிஹாரின் பங்களிப்பு 1.59% அதிகரிக்கும். 1971இல் 7.69%ஆக இருந்தது 2026இல் 9.28%ஆக உயரும். ராஜஸ்தான் மக்கள்தொகை 1.17% அதிகரிக்கும். 1971இல் 4.70%ஆக இருந்தது 2026இல் 5.87%ஆக உயரும்.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 2.08% குறையும். 1971இல் நாட்டின் மக்கள்தொகையில் 7.52%ஆக இருந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு 2026இல் 5.44%ஆக குறைந்துவிடும். பிரிக்கப்படாத ஆந்திரத்தில் (ஆந்திரம் – தெலங்கானா சேர்ந்த பகுதி) 1.46% மக்கள்தொகை குறையும். 1971இல் 7.94% பங்களிப்பு செய்த இவ்விரு மாநிலங்களும் 2026இல் 6.48% அளவுக்குக் குறைந்துவிடும். கேரளத்தில் 1.36% மக்கள்தொகைப் பெருக்கம் குறையும். 1971இல் நாட்டின் மக்கள்தொகையில் 3.89% கேரளத்தில் இருந்தது. 2026இல் இது 2.54%ஆக சுருங்கிவிடும். மேற்கு வங்கத்தில்கூட மக்கள்தொகை 1.03% அளவு குறையும். 1971இல் 8.008%ஆக இருந்தது 2026இல் 7.05%ஆகக் குறைந்துவிடும்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை வரையறுத்தால், மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தொகுதிகள் குறையும், அதில் அக்கறை செலுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு அதிகத் தொகுதிகள் கிடைக்கும்.

இதை அமல்படுத்தினால் அரசியல்ரீதியாக என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஊகிப்பது சிரமம் அல்ல. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அரசியல் அரங்கில் செல்வாக்கை இழக்கும் மாநிலங்கள் அதைக் கடுமையாக எதிர்க்கும். வடக்கு வாழ்கிறது – தெற்கு தேய்கிறது என்று ஒரு காலத்தில் பேசப்பட்ட அரசியல் கருத்து மீண்டும் உயிர்பெறக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் பல்வேறு பதற்றங்களுக்கு இடையே தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாக வட – தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே புதிய மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது.

மாற்று மாதிரிகள்

மோதல் ஏற்படாமல் தடுக்க இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை மேலும் சில ஆண்டுகளுக்கு அப்படியே நிறுத்திவைக்கலாம். இந்த முறை, அடுத்து சில ஆண்டுகளுக்கு காலவரம்பு எதையும் குறிப்பிடாமல், எல்லா மாநிலங்களும் மக்கள்தொகையைக் குறைப்பதில் வெற்றி காணும்வரையில் என்று முடிவெடுக்கலாம்.

இரண்டாவது, ‘கேம்பிரிட்ஜ் சமரசம்’ என்பதைப் போன்ற வழிமுறையைப் பின்பற்றலாம். இது கணக்கியல் அடிப்படையிலானது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிறியதும் பெரியதுமான வெவ்வேறு நாடுகளுக்கிடையே சமச்சீரான பிரதிநிதித்துவம் நிலவ இந்த வழிமுறையே பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்திய சூழலுக்கு ஐரோப்பிய சமரச மாதிரி பொருந்திவராது. ஆனால், அதே அடிப்படையில் நாம் வேறு தீர்வு காணலாம். அனைத்து மாநிலங்களும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறும்வரையில் தொகுதிகளை மறுவரை செய்வதை நிறுத்தி வைக்கலாம் என்பதையே வலியுறுத்தலாம்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களே ‘பாரதம்’ – அதில் தென்னிந்திய மாநிலங்களும் அடங்கும். அவை தொடர்ந்து நம்முடைய நாடாளுமன்ற, சட்டமன்ற ஜனநாயக மரபுகளை வளப்படுத்த அனுமதிக்க வேண்டும். இதை அவை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே செய்துவருகின்றன. இவ்வளவு பொறுப்பாகச் செயல்படும் அவற்றைத் தண்டிக்கும் வகையில் செயல்பட்டுவிடக் கூடாது. நாம் நம்முடைய மக்கள்தொகையைத்தான் கட்டுப்படுத்த வேண்டும், பிரதிநிதித்துவத்தை அல்ல.

 

தொடர்புடைய கட்டுரைகள்: 
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?
தமிழ்நாட்டுக்கு வேண்டும் தனி மக்கள்தொகைக் கொள்கை

கோபால்கிருஷ்ண காந்தி

கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர். வெளியுறவுத் துறையிலும் இந்திய ஆட்சிப் பணியிலும் அலுவலராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ' காந்தி இஸ் கான். ஹு வில் கைட் அஸ் நவ்?' உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர். காந்தி, ராஜாஜியின் பேரன்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Christopher J Aalan   5 months ago

வரி பங்கீட்டில் மிக பலத்த சேதத்தை தென் மாநிலங்கள் சந்திக்கின்றன. கட்டுரையாளர் சொல்வதை போல மக்கள் தொகை கட்டுப்படுத்தியதற்கு பரிசாக தொகுதி குறைப்பு என்ற பலத்த சேதம் நடந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. காரணம் தெற்கு எப்போதும் சம்பாதிக்கும் ஆளாகவும் வடக்கு எப்போதும் செலவழிக்கும் ஆளாகவுமே இருந்து வருகிறது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் பேட்டிஞானபீடம்பூர்வீகக்குடி மக்கள்சென்னை மழைஇளம் பிரதமர்ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிநாக்பூர்புத்தக வெளியீட்டு விழாகுஜராத் முதல்வர் மாற்றம்யுஏபிஏத.செ.ஞானவேல்காந்தியமும் இந்துத்துவமும்அண்ணாவின் வலியுறுத்தல்தூய்மைப்பணிகாந்திய சோஸலிஷம்அம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைஅருஞ்சொல் மு.க.ஸ்டாலின்வேளாண்மைஇரக்கத்துடன் துடிக்கும் இந்திய மனச்சாட்சி நயன்தாராசிதம்பரம் கட்டுரைசென்னை போக்குவரத்து நெரிசல்ஆசாதிமைக்ரேன்ரவிக்குமார் கட்டுரைவெள்ளை அறிக்கைஊடகங்கள்வரிவிதிப்புஎஸ்பிஐஎல்லோருக்குமான வளர்ச்சிகருக்கலைப்பு உரிமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!