கட்டுரை, அரசியல், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு: அண்ணா ஃபார்முலா!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
28 Sep 2022, 5:00 am
3

ந்திய விடுதலைக்குப் பிறகு, 1952இல், 494 தொகுதிகளைக் கொண்டதாக மக்களவை உருவானது. மாறும் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மாற்றப்பட வேண்டும் என்கிறது நம் அரசமைப்புச் சட்டம்.

இதன்படி 1963இல் நியமிக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக் குழு, மக்களவைத் தொகுதிகளை 522 ஆக உயர்த்தியது. அதன் பின்னர், 1973ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழு, அதை 543 ஆக உயர்த்தியது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை இந்திய அரசு வரித்துக்கொண்டதால், இப்படியான தொகுதி மறுசீரமைப்பை நிறுத்திவைக்கும் முடிவு 1976இல் எடுக்கப்பட்டது. இந்திரா காலத்திலும், வாஜ்பாய் காலத்திலும் இரு முறை அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆக, 50 ஆண்டுகளாக மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளின் தொகுதிகள் எண்ணிக்கை அப்படியே நீடிக்கின்றன.

இந்த அரை நூற்றாண்டுக்குள் இந்திய மக்கள்தொகையில் பெரும் மாற்றங்கள் உருவாகிவிட்டதால் தொகுதிகள் மறுசீரமைப்பை இனியும் நிறுத்தி வைக்கக் கூடாது என்ற குரல்கள் இப்போது வட மாநிலங்களில் கேட்கின்றன. ஆக 2026இல், தொகுதி மறுசீரமைப்பு என்னும் நிகழ்வை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.

இதுபற்றிய மூன்று முக்கியமான கட்டுரைகளையும் (சமஸ், கோபாலகிருஷ்ண காந்தி, விஷ்வேஷ் சுந்தர் மற்றும் ஒரு தலையங்கத்தையும் ‘அருஞ்சொல்’ வெளியிட்டுள்ளது. தொகுதிச் சீரமைப்பின் முக்கியத்துவத்தையும், அதனால் உருவாகக்கூடிய அதிகாரச் சமநிலையின்மையையும் இவை பேசுகின்றன. 

தொகுதிச் சீரமைப்பு ஏன் தேவை?

சமஸ் தனது கட்டுரையில், ‘இந்திய விடுதலைக்குப் பின்னர், மக்கள்தொகை 34 கோடியாக இருந்தது. இன்று அது 140 கோடியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டாமா?’ என்னும் கேள்வியை எழுப்பி, அதற்கு ஆதரவாக இரண்டு உதாரணங்களை முன்வைக்கிறார்.

அதாவது, 100 பேர் இருந்த கிராமத்திற்கு ஒரு கவுன்சிலர் என இருந்த ஒரு கிராமத்தில், மக்கள்தொகை 1,000ஆக மாறிய பின்னரும் ஒரே கவுன்சிலர் என்பது, மீதியுள்ள 900 பேருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்குச் சமம் என்பது முதல் உதாரணம். இரண்டாவதாக தெலுங்கானாவின் மல்கஜ்கிரி பாராளுமன்றத் தொகுதியில், மொத்த வாக்காளர்கள் 31.5 லட்சம் பேர். அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து 5 நிமிடங்கள் செலவு செய்ய வேண்டியிருந்தால்கூட, அவர் 5 ஆண்டுகளில் 8 லட்சம் பேரை மட்டுமே சந்திக்க முடியும். மீதி 22 லட்சம் பேரை அவர் சந்திக்க முடியாது; வாக்காளர் - மக்கள் பிரதிநிதி இடையிலான உறவு இதனால் பாதிக்கப்படும் என்பது இரண்டாவது உதாரணம். இந்தப் புள்ளியில் இருந்து, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்னும் வாதத்தை முன்வைக்கிறார் சமஸ்.

மிக முக்கியமான வாதம். மக்களைச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மிகச் சரியான அளவில் மக்கள் பிரதிநிதிகள் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், இந்த வாதம் எல்லா அரசு அமைப்புகளுக்கும் பொருந்துமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73ஆவது மாற்றமாக, பஞ்சாயத்து ராஜ் என்னும் உள்ளாட்சி அமைப்பும் அரசமைப்புச் சட்டத்தினுள் கொண்டுவரப்பட்ட பின்னர், இந்தியாவில் மூன்றடுக்கு அரசியல் நிர்வாக அமைப்பு துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இதில் உள்ளாட்சி அமைப்புகள்தாம் பெரும்பாலும் மக்களின் தினசரி வாழ்க்கையின் பிரச்சினைகளை நேரில் எதிர்கொண்டு தீர்த்துவைக்கும் நிர்வாக அமைப்புகளாக உள்ளன. இங்கே சமஸ் சொல்லும் மக்கள்தொகை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சினைதான். அறிவியல் அடிப்படையில் எவ்வளவு மக்களுக்கு ஒரு கவுன்சிலர் தேவை என்பதை தீர்மானித்து, அதன் அடிப்படையில் கவுன்சிலர் இடங்களைக் கூடுதலாக்கலாம்.

ஆனால், மாநில சட்டமன்ற உறுப்பினர் என்பவர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குமான திட்ட வடிவமைப்புகள், தொகுதிக்கான தேவைகள் போன்றவற்றில் தமது நேரத்தைச் செலவிட வேண்டியவர். கவுன்சிலர் போன்ற அளவுக்கு மக்கள் பிரச்சினைகளை நேரில் சந்தித்து சரி செய்யும் பணியல்ல அது. 

அதேபோல, நாடாளுமன்றம் என்பது இந்திய ஒன்றியத்தை நிர்வாகம் செய்யும் அமைப்பு. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் இடத்தில், தன் தொகுதி மற்றும் மாநில மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொள்ளும் இடத்தில் உள்ளவர்கள். அவர்கள் தொகுதிகளில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து போன்ற விஷயங்களில், மக்களின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டியவர்கள். அதைத் தாண்டி, அவர்களுக்கு வாக்களிக்கும் அனைத்து மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியவர்கள் அல்ல.

நாடாளுமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசு வெளியுறவு, ராணுவம், தொலைத்தொடர்பு, சர்வதேச பொருளாதாரக் கொள்கைகள் முதலியவற்றில் மிகத் தீவிரமான பயிற்சிகள் கொடுத்து, அத்துறைகளில் செயற்குழுக்களில் ஈடுபடுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டிய தளம் வேறு.

அதிகாரச் சமநிலையின்மை

இந்திய அரசியலில், 80 உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் உத்தர பிரதேசம். கடந்த 75 ஆண்டுகளில், நேரடியாகவும், மறைமுகமாவும், இந்த மாநிலமே ஒன்றிய அரசை அமைப்பதில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்திவருகிறது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிகூட, தான் குஜராத்தில் ஜெயித்த பரோடா தொகுதியை விடுத்து, உத்தர பிரதேசத்தின்  வாரணாசி தொகுதியைத் தேர்ந்தெடுத்தது இந்தக் காரணத்தினால்தான். 

கடந்த 50 ஆண்டுகளில், வட இந்திய மாநிலங்களின் மக்கள்தொகை தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் வேகமாக வளர்ந்துள்ளன. ஒருகாலத்தில் கிட்டத்தட்ட தமிழ்நாடு அளவே மக்கள்தொகையைக் கொண்டிருந்த பிஹாரில் இன்று தமிழ்நாடு மக்கள்தொகையைவிட 50% அதிகமாக உள்ளது.

எனவே, மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுமானால், தென்னிந்திய மாநிலங்களின் உறுப்பினர் சதவீதம் மேலும் குறையும். இதனால், ஒன்றிய அரசு அதிகாரத் தளத்தில், நிதிப் பங்கீடுகளை முடிவுசெய்யும் இடங்களில், தென்னிந்தியாவின் அதிகார அளவு குறையும். நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில், குறைந்த எண்ணிக்கை காரணமாக தென்னிந்தியாவின் நலன் காக்கும் திட்டங்களை, கொள்கைகளை நிறைவேற்ற முடியாது.

இதற்கான தீர்வுகள் என்ன?

மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிவு செய்வது, தென்னிந்திய மாநில நலன்களுக்கு எதிராக இருக்கும் சூழலில், இவற்றைத் தென்னிந்திய மாநிலங்கள் பலமாக எதிர்க்கும். இது வட இந்திய மாநில நலன்களுக்கு ஆதரவாக இருக்கும்போது அவை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும்.

இதுபற்றிய தீர்வுகளைப் பேசும் கோபாலகிருஷ்ண காந்தி, தன் கட்டுரையில் இரண்டு தீர்வுகளை முன்வைக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியிருக்கும் ‘கேப்ரிட்ஜ் சமரசம்’ என்னும் பெரிய, சிறிய நாடுகளுக்கிடையில், ஒரு கணிதவியல் அடிப்படையிலான சமச்சீரான உறுப்பினர் எண்ணிக்கை என்பது ஒரு வழி. இந்த ஏற்பாட்டை விரிவாகப் பேசுகிறது விஷ்வேஷ் சுந்தர் கட்டுரை. இம்முறைக்கு மாற்றாகப் பேசப்படும் இன்னொரு வழிமுறை இப்போதிருக்கும் எண்ணிக்கையை மாற்றாமல் முன்னெடுப்பது. 

இதில் ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒரு இறையாண்மை கொண்ட அமைப்பல்ல. இறையாண்மை கொண்ட பல நாடுகள் ஒன்றிணைந்து இறையாண்மையைத் தாண்டிய தளத்தில் உருவான அமைப்பு. எனவே, இந்த வழிமுறை சரியாக வராது. ஆனால், அதே திசையில் ஒரு தீர்வை எட்ட முயலலாம். அதுவரை, இப்போதிருக்கும் முறையையே தொடரலாம் எனத் தன் கட்டுரையை முடிக்கிறார்.

சமஸ் தன் கட்டுரையில், மக்களவையில் 1976ஆம் ஆண்டு மக்கள்தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவமும், மாநிலங்களவையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் சமமான பிரதிநிதித்துவமும் என்னும் ஒரு ஃபார்முலாவை முன்வைக்கிறார். இது மாநிலங்களவையில் நிலவும் அதிகாரச் சமநிலையின்மையைக் குறைக்கும் என்றாலும், மக்களவையில் நிலவும் சமநிலையின்மையில் ஒரு மாறுதலும் நிகழாது.

அண்ணாவின் ஃபார்முலா

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்னும் தலைப்பில் தென்னிந்தியாவிலிருந்து முன்வைக்கப்படும் வாதங்கள் பலவற்றிலும், ஏற்கெனவே தம்மிடம் இருக்கும் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்னும் பதற்றம் தென்படுவதைக் காண முடிகிறது. 2026ஆம் ஆண்டு நாடாளுமன்ற மறுசீரமைப்பினால், அரசியல் சிக்கல்கள் எழுந்துவிடக் கூடாது என்னும் நல்லெண்ணமும் தென்படுகிறது. ஆனால், இவை இரண்டுமே தடுப்பாட்டங்கள்.

‘தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல் யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்’ என்பது அண்ணாவின் கூற்றுகளில் ஒன்று. இதன் அடிப்படை சமத்துவம் என்னும் மானுடக் கனவு.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களுக்கு, குறிப்பாக சிறிய மாநிலங்களுக்குப் பொருந்தும். அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் என்பது, தற்போது நிலவும் அதிகாரச் சமநிலையின்மையை மாற்றி, அரசியல் பேர மேசையில் அனைத்து மாநிலங்களுக்குமான பிரதிநிதித்துவத்தோடு, சம அதிகாரத்தையும் தரும். இந்தியாவின் எதிர்காலத்தை அனைவரும் சமமாக இணைந்து உருவாக்கும் ஒரு நிலை உருவாகும். இந்தப் பிரதிநிதித்துவம் மூலம் கிடைக்கும் சமத்துவ அதிகாரம் எல்லா மாநிலங்களையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும்.  இந்தியாவை என்றென்றைக்குமாக ஒன்றிணைக்க இதுவே சரியான வழி.

இதை எப்படிச் செயல்படுத்தலாம்? 

உத்தர பிரதேச மாநிலத்தில் 80 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் 39 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எல்லா மாநிலங்களுக்கும் சம அதிகாரம் என்னும்போது, இரண்டு மாநிலத்துக்கும் 100 புள்ளிகள் அதிகாரம் என வைத்துக்கொள்வோம். உத்தர பிரதேச மக்களவை உறுப்பினரின் வாக்கின் மதிப்பு, 100/80 = 1.25.  தமிழ்நாட்டில் 39 உறுப்பினர்கள் எனில், தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினரின் மதிப்பு, 100/39 = 2.56. உருவாக்கப்படும் சட்டங்கள், வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதே முறையை மாநிலங்களவையிலும் பின்பற்ற வேண்டும். 

இதுபோன்ற நடைமுறையில் மாநிலங்களின் நலன் காக்கப்படும். எந்த ஒரு மாநிலத்தையும் ஒன்றிய அரசு புறக்கணிக்க முடியாது. இன்று 30%-40% மட்டுமே வாக்குகள் வாங்கி, அதிக வாக்குகள் வாங்கிய கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று சட்டங்களை எண்ணிக்கை பலத்தின் மூலம் மட்டுமே நிறைவேற்றும் சிக்கல்கள் குறையும். அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்கள் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளால் அலசப்பட்டு உருவாக்கப்படும். இம்முறையில் உண்மையான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நிகழும். நீண்ட கால நோக்கில், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் மேன்மை அடையும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்: 
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது

இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?
தமிழ்நாட்டுக்கு வேண்டும் தனி மக்கள்தொகைக் கொள்கை
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?

அது சோழர் செங்கோலே இல்லை
காஷ்மீர் சட்டமன்ற மறுவரையறைத் திட்டம் ஆபத்தான விளையாட்டு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

1





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

550 சாதிக்காத செயலை 800 செய்யுமா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

அண்ணா சொன்னதுபோல் தான் அமெரிக்காவில் உள்ளது. ஒரு மாநிலத்துக்கு இரண்டு வாக்குகள். ஆனால் அது ஒரேயடியாக சிறிய மாநிலங்களுக்கு சாதகமாக போய்விடும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

மக்கள்தொகை ஐந்து 50 வருடங்களில் கிட்டத்தட்ட 50-60% அதிகரித்துள்ளது. அதனால் ஒவ்வொரு மாநிலத்தின் எண்ணிக்கையையும் 50-60% அதிகப்படுத்திவிடலாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

குத்தகைத் தொழிலாளர்கள்பள்ளிக்கூடங்கள்தெலங்கானா ராஷ்டிர சமிதிகல்வித் தரம்நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்சமஸ் கருணாநிதிசாலைவிவசாயிகள் கோரிக்கைமால்கம் ஆதிஷேஷய்யாவழக்கொழிந்து போன வர்ண தர்மமும்மதச் சிறுபான்மையினர்பள்ளிக்கல்விஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்தாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?ஆரிஃப் முஹம்மது கான்மிஸோரம்: தேசம் பேச வேண்டிய விவகாரம்தென்னாப்பிரிக்க நாவல்காம்யுகைவிட்ட ஊடகங்கள்வரவு - செலவுசொத்துரிமைவடக்கு: மோடியை முந்தும் யோகிவசுந்தரா ராஜ சிந்தியா - அருஞ்சொல்இரண்டு வயதுஉங்கள் ஆரோக்கிய பிளேட்டில் என்ன இருக்க வேண்டும்?ஜன்பத்புதிய பயணம்கீதிகா சச்தேவ் கட்டுரைகல்வி சந்தைப் பண்டம்சண்முகநாதன் கலைஞர் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!