எதிர்க்கட்சிகள் எங்கே? வேறு விதமாகக் கேட்க வேண்டும் என்றால், யார் உண்மையான எதிர்க்கட்சி? ஒன்றிய அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த ஆண்டு மிகப் பெரிய தோல்விகள் இரண்டு கிடைத்த பிறகும், ஆண்டின் முடிவில் வலுவான எதிர்க்கட்சியையோ, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையோ ஏற்படுத்த முடியவில்லை என்றால் ‘எதிர்க்கட்சி’ என்ற கருத்தாக்கத்திலேயே ஏதோ பெரிய கோளாறு அல்லது அதை நடைமுறைப்படுத்துவதில் எங்கோ பெரிய சிக்கல் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கு வங்க சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடும் முனைப்போடு போட்டி போட்ட பாஜகவுக்கு அந்த முயற்சியில் படுதோல்வி கிடைத்தது, அடுத்து ‘விவசாயிகளின் நலனுக்காக’ என்று கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை, ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தியும் விவசாயிகள் ஏற்க மறுத்ததால் திரும்பப் பெற நேர்ந்தது அடுத்த பெரிய தோல்வி. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளே தங்களைத் திருத்திக்கொண்டு வலுவான எதிர்ப்பைத் தரும் என்று இனியும் காத்திருப்பது சரியல்ல. அரசியல் கட்சிகளைச் சாராத, நாட்டின் நலனை விரும்பும் பொதுமக்கள் தலையிட்டாக வேண்டிய நேரம் இது.
எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தாக வேண்டிய மிகவும் அவசியமான காலகட்டம் இது. மோடி அரசு ஜனநாயக அமைப்புகளைக் கிள்ளுக்கீரையாக நடத்தாத நாளே கிடையாது. அரசியல் தார்மிக நெறிகளையும் அது வெட்கமில்லாமல் மீறுகிறது (உத்தர பிரதேசத்தில் விவசாயிகளின் கிளர்ச்சியின்போது காரை வேகமாக ஒட்டி விவசாயிகளைக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டவரின் தந்தையான மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா இன்னமும் பதவியில் ஓட்டிக்கொண்டிருக்கிறார். அது தற்செயலான செயல் அல்ல, திட்டமிட்ட சதி என்று சிறப்புப் புலானாய்வுக் குழுவின் அறிக்கை கூறுவதாக செய்திகள் வெளியான பிறகும்!)
ஒன்றிய அரசும் ஆட்சியாளரும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட விழுமியங்களை மட்டம் தட்டும் வகையில், காசியில் புதுப்பிக்கப்பட்ட விசுவநாதர் ஆலய நிகழ்வில் நாட்டின் பிரதமரே நேரில் பங்கேற்கிறார். இந்த அரசின் இமாலயப் புளுகுகளைச் சீரணிக்க முடியாமல், ஆதரவாளர்களே களைத்துவிட்டனர். ‘இந்த ஆட்சி மறையும் - நல்லாட்சி மலரும்’ என்ற நம்பிக்கை தரும் செய்திக்காக அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர், அத்தகைய மீட்பருக்காகக் காத்திருக்கின்றனர்.
அதேவேளையில், எதிர்க்கட்சிகளைப் பார்க்கும்போது அவர்களுடைய நம்பிக்கைகள் அனைத்தும் கரைந்துவிடுகின்றன. நாட்டின் ஆன்மாவைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதைவிட, தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக இருக்கின்றன. காங்கிரஸ் மீதான ‘அறிவிக்கப்படாத போரில்’, பல போர்க்களங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது திரிணமூல் காங்கிரஸ்: கோவா, வடகிழக்கு மாநிலங்கள், இன்னும் பிற என்று. பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடாமலிருப்பதை உறுதிசெய்யத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது இன்னோர் எதிர்க்கட்சியான ஆம்ஆத்மி கட்சி (ஆஆக). அங்கே அது பாஜகவுக்கு எதிராக அல்ல – காங்கிரஸுக்கு எதிராகத்தான் களம் காண விழைகிறது. வேறு எந்த மாநிலத்தையும்விட, உத்தரப் பிரதேசத்தில்தான் காங்கிரஸ் கட்சி சிறிது சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது; ஆனால் அங்கும், சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிக்குத்தான் அது சேதத்தை விளைவிக்கப்போகிறது. பாஜகவை எதிர்க்கப்போகும் முக்கிய எதிர்க்கட்சி யார் என்று எதிர்க்கட்சிகளுக்குள், சிறிதும் சமரசத்துக்கு இடமில்லாத - கடும் பூசல் தொடர்கிறது.
எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே போட்டி
பாஜகவை எதிர்க்கும் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியது யார் என்று எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் போட்டியிட உரிமை பெற்றவைதான். அவ்வாறு ஆரோக்கியமாகப் போட்டி போடுவது எதிர்க்கட்சிகளுக்கு இடையே இருக்கும் சோம்பலைப் போக்கக்கூட உதவுவதாக இருக்க முடியும். நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரே அணியில் இடம்பெற்றாக வேண்டிய அவசியம்கூட கிடையாது.
இருந்தாலும், இப்போது எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல் ஆபத்தானது. பெரிய தேசிய நோக்கங்களுக்காக, தங்களுடைய கட்சி அபிமானத்தை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நெருங்கிவர முடியாத நிலையில்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்ற பலவீனத்தையே இந்த மோதல்கள் பறைசாற்றுகின்றன. நாட்டை வழிநடத்திச்செல்லப் போவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளிடம் உள்ள மிகப் பெரிய குறை இதுதான். இப்படி எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் அசிங்கமான சண்டைகளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் கோஷ்டிப் பூசல்களும் எதிர்க்கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கையைத் தகர்த்துவிடும். மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்த முடியாமல் இது தடுத்துவிடும்.
இதில் மோசமான அம்சம் எதுவென்றால், இந்தப் பூசல்கள் வெகு விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகளும் தென்படவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு இடையிலான சண்டைகள் வெகு விரைவிலேயோ அல்லது பூரணமாகவோ முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் இல்லை. பாஜகவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமையோ, தார்மிக, வியூக உத்திகளை வகுத்து வழிகாட்டக்கூடிய அனுபவமோ உள்ள தலைவர் ஒருவர்கூட இல்லை. இப்படி நெல்லிக்காய் மூட்டைபோல பிரிந்து நின்றதால் 2019-ல் பெற்ற தோல்விகூட பாடத்தைக் கற்றுத்தர முடியவில்லை என்றால், வேறு எதுதான் இவர்களுக்கு புத்தியை வரவழைக்கும் என்பது தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் - பிரதான எதிர்க்கட்சிக்கான இடம் தொடர்ந்து களேபரமாகவும், அற்பமான சிந்தனைகள் கொண்ட அரசியல் விளையாட்டுக்கான திடலாகவும், பரஸ்பர கசப்புணர்வுக்குக் களமாகவும், அக முரண்பாடுகளுக்கான இடமாகவும்தான் தொடரும். இது இப்படியே இருக்க வேண்டும் என்று பாஜகவும் விரும்பும், அப்படி அமைவதற்காகத் திட்டமிட்டு அது உழைக்கவும் கூடும்.
மக்கள் இயக்கம்
இந்த முட்டுக்கட்டை நிலையிலிருந்து மீள ஒரு யோசனை. அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுடன் ஆழ்ந்த பிணைப்புள்ளவர்கள், அவற்றைக் காப்பதற்காக தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பவர்கள், எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள் முன்வந்து வலுவான எதிர்க்கட்சிக்கான இடத்தை அலங்கரிக்க வேண்டும். இந்த லட்சியத்தில் அவர்கள் உறுதியாகச் செயல்பட வேண்டும். கட்சிகளின் குறுக்கீடுகளுக்கு இடம் தரக் கூடாது.
ஒரே நேரத்தில் மூன்று பாட்டைகளில் பணிசெய்தாக வேண்டும். இந்தியா என்ற நாட்டைக் காப்பாற்ற – அதற்கு முரணான சிந்தனைகளுக்கு எதிராக குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால நோக்கில் செயல்பட்டாக வேண்டும். அவசியமான இந்தப் பணிக்கான அலைவீச்சு பிரதான எதிர்க்கட்சிகளிடம் இப்போது இல்லை. கலை, கல்விப்புலம், மக்கள் ஊடகம், சமூக ஊடகம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் இதற்காகச் செயல்பட்டாக வேண்டும். மேலாதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டங்களில் கலாச்சார வளங்களின் ஆற்றல் எப்போதும் சொற்பமாக இருந்ததே இல்லை. நம்முடைய தொன்மையான நாகரிகங்களின் வலுவான தொடர்ச்சி, சுதந்திரப் போராட்டத்தில் நமக்குக் கிடைத்த பாரம்பரிய அனுபவம், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் வலு ஆகியவை நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காக்க, புதிய மொழிநடையை உருவாக்க வேண்டும், அதை இந்திய மொழிகள் அனைத்துக்கும் கொண்டுசெல்ல வேண்டும், அதன் பிறகு ‘பொய்மைச் சேனை'யை எதிர்கொள்ள ‘வாய்மைச் சேனை'யைத் தயார்ப்படுத்த வேண்டும்.
இரண்டாவது களம், ஆட்சியாளர்களுக்கு எதிரான நியாயமான இயக்கங்கள், போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த ஆட்சி பல்வேறு பிரச்சினைகளில் எதிர்ப்புகளைத் தாங்க முடியாமல் பின்வாங்கியதே வரலாறாக இருக்கிறது. தேசிய கவனத்தை ஈர்க்காத - அதே சமயம், இப்போது நடந்துகொண்டிருக்கிற மக்கள் போராட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றை அனைவரின் ஒத்துழைப்புடன் வலுப்படுத்த வேண்டும். மக்களை நேரடியாக பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினை வேலையில்லாத் திண்டாட்டமாகும், அது கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வாதாரங்களையே சிதைத்து சின்னாபின்னமாக்கிவருகிறது. அது தேசிய அளவில் பெரிய போராட்டமாக உருவெடுப்பதற்காகவே காத்திருக்கிறது.
நம் அனைவருடைய முயற்சிகளும் ஒன்று சேர வேண்டிய கடைசி இடம் தேர்தல் களமாகும் – அதுவும் 2024-ல் நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலாகும். பாரதிய ஜனதா கட்சி தோற்றமளிப்பதைப் போல அப்படியொன்றும் வலுவான கட்சியல்ல. அது தோற்கடிக்கப்பட முடியாததும் அல்ல. எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதைவிட ஒருங்கிணைந்து செயல்படுவதும், ஒற்றுமைப்பட வேண்டியதும் அவசியம். இங்குதான் அறிவார்ந்த குடிமக்களின் குழு செயல்பட்டாக வேண்டும். எதிர்க் கட்சிகளுக்குள்ளும், கட்சி சார்பில்லாமல் வெளியிலும் இருக்கும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டும் பணியை அக்குழு செய்ய வேண்டும். ஒரு கட்சி அல்லது ஒரு கட்சியின் தலைவருடைய குறுகிய எண்ணத்தால் தடை ஏற்பட்டுவிடாதபடிக்கு எதிர்க் கட்சிகளிடையே அதனால் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். அந்தக் குழு எந்த அரசியல் கட்சியுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவோ, சேர்ந்து செயல்படவோ கூடாது. அதேபோல, எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளிலும், அக பதற்றங்களிலும் அந்தக் குழு சிக்கிக்கொண்டுவிடக் கூடாது. இப்படிப்பட்ட முயற்சிகள் அனைத்தும்தான், ‘வலுவான எதிர்க்கட்சி’ என்ற நம்முடைய கருத்தாக்கத்தை விரிவுபடுத்த உதவும். இது ஆளும் கூட்டணியை எதிர்ப்பதற்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், மக்களிடையே நம்பிக்கையை விதைக்கிற அமைப்பாகவும், மாற்றுத் தீர்வுகளைக் கூறுகிற சிந்தனைச் சுரங்கமாகவும் செயல்பட வேண்டும்.
2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. குடியரசை மீட்க நமக்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது என்பதையே அது நினைவூட்டுகிறது. வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் இந்த வேளையில், எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய கடமையை இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மட்டுமே விட்டுவிட முடியாது என்பதே உண்மை.
தமிழில்:
வ.ரங்காசாரி

3

1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.