கட்டுரை, அரசியல் 8 நிமிட வாசிப்பு

மாநிலக் கட்சிகளே எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன

பிரேர்ணா சிங்
13 Jan 2022, 5:00 am
1

ந்து மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் பல போட்டியிடுகின்றன; சார்-தேசியம் அல்லது துணை தேசியம் என்பது இந்திய ஜனநாயகத்துக்கு முற்போக்கான விசையாகச் செயல்படவல்லது என்ற - குறைவாக ஏற்கப்பட்ட உண்மையை – அம்சத்தை நினைவுகூர இது நல்லதொரு பின்னணியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த நாட்டின் நிலைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பற்றி கவலைகொள்ள வைத்த இரண்டு பெரிய நிகழ்வுகள் காரணமாக, தீவிர அச்சத்துக்கிடைய இந்திய அரசின் கூட்டாட்சித்தன்மை வரையறுக்கப்பட்டது.

முதலாவது, எப்போது நினைத்தாலும் துயரத்தையும் அச்சத்தையும் ஊட்டவல்ல மத அடிப்படையிலான இந்திய-பாகிஸ்தான் தேசப் பிரிவினை. அடுத்தது, சுதேச சமஸ்தானங்களையும் பிரிந்து செல்ல விரும்பிய வட கிழக்கு எல்லைப்புற மாநிலங்களையும், தமிழ்நாடு – காஷ்மீரம் உள்ளிட்டவற்றையும் நாட்டோடு இணைத்து வைத்திருக்க வேண்டிய சூழல்.

இதன் காரணமாகவே இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடித்தவர்கள் இந்தியக் கூட்டரசுக்கு ஒற்றைத்தன்மையை அதிகப்படுத்தி, மாநிலங்களைவிட மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களும் இறுதி அதிகாரங்களும் கிட்டச் செய்தனர். மொழி அடிப்படையில் மாநிலங்களை சுதந்திரத்துக்குப் பிறகு பிரிப்போம் என்ற அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்கூட, காங்கிரஸ் கட்சி பின்வாங்க வேண்டிய நிலைக்கு இவ்விரு நிகழ்வுகளும் தள்ளிவிட்டன. பிரிட்டிஷ் காலனியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட அதே மாநில எல்லைகளே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1950-களில், 'தெலுங்கு பேசும் பிரதேசங்களை ஒன்றாக இணைத்து ஒரே மாநிலமாக உருவாக்க வேண்டும்' என்ற கோரிக்கை முதலில் எழுந்தது. இதை நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான போராட்டமாகவே இந்திய அரசு முதலில் பார்த்தது. தன்னால் முடிந்தவரை இந்தக் கோரிக்கையை ஏற்காமல் தாமதப்படுத்திக்கொண்டேவந்தார் பிரதமர் நேரு. மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தால், இந்தியா துண்டு துண்டாகச் சிதறுவதுடன் ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு எதிராகக் கிளம்பிவிடும் என்று நேருவும் தேசியத் தலைவர்களும், அயல் நாடுகளைச் சேர்ந்த சில அரசியல் பார்வையாளர்களும்கூட அஞ்சினர்.

ஆனால் மொழி அடிப்படையிலான பிரிவினையானது, இந்திய நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தியதோடு ஜனநாயகத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரிய பங்களிப்பைச் செய்தது.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து வலுவான துணை தேசிய உணர்வுகள் பொதுவான அம்சத்தில் வேர்கொண்டு வளர்ந்தன. துலக்கமான பிராந்திய மொழிகள் - துணை தேசிய உணர்வுள்ள அரசியல் கட்சிகள் பிறக்க வழிகோலின. 1950-களிலும் 1960-களிலும் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸின் ஒரே கட்சி ஆட்சிமுறைக்கு இந்த மாநிலக் கட்சிகள், முக்கிய எதிர் அழுத்தக் கட்சிகளாக வளர்ந்தன. அவைதான் இப்போது பாஜகவின் மேலாதிக்கம் வளர்ந்துவிடாமல் பாதுகாப்பு அரண்களாகச் செயல்படுகின்றன.

1947-ல் ஜனநாயக சாகுபடிக்குத் தகுதியற்ற தரிசு நிலமாக இந்தியா இருந்தது. அப்போது இந்தியா மிகவும் ஏழ்மையான நாடு, எழுத்தறிவற்றவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம், இனரீதியாகவும் வெவ்வேறுவித மக்களைக் கொண்ட நாடு. இருந்தும் அது ஜனநாயக நாடாக நிலைபெற்று, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நிரந்தரமானது.

சர்வதேச அளவில் ஜனநாயகத்தை வரையறைசெய்யும் இரு பெரிய அமைப்புகளால், 2021-ம் ஆண்டில்தான் இந்தியா மிக மோசமாக தரம் குறைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜனநாயகக் கண்காணிப்பு அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ், இந்தியா ‘பகுதியளவுதான் சுதந்திர நாடு’ என்று அறிவித்திருக்கிறது. சுவீடனைச் சேர்ந்த 'வி-டெம்' நிறுவனமோ, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி’ இந்தியாவில் நடப்பதாக அடையாளமிட்டிருக்கிறது.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தன்மை குறித்து வகைப்படுத்தும் எந்த முறையுமே கேள்விக்குரியதுதான். ஆனால், இப்படி தரப்படுத்துவதற்காக ஆராய்ந்த துறைகள் பலதரப்பட்டவை, அதன் தீவிரம் அளப்பரியவை. நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகம் ஆகியவை தொடர்ந்து அவற்றின் மதிப்பைக் குறைக்கும் வகையிலேயே மிதிக்கப்படுகின்றன. விவசாயிகள், வழக்கறிஞர்கள், ஊடகர்கள், நகைச்சுவைப் பேச்சாளர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள், பாலிவுட் நடிகர்கள், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் சாதாரண மக்கள்கூட அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர்.

சித்தாந்தரீதியாகவும் அமைப்புரீதியாகவும் பாஜகவுக்கு வலுவான மாற்றாக செயல் வேகம் பெற காங்கிரஸ் கட்சியால் முடியாத நிலையில், பாஜகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்தக் கூடியவை மாநிலக் கட்சிகள்தான். 2021 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் வங்காளத்தில் பாஜகவைத் தடுத்து நிறுத்தியது ஒரு மாநிலக் கட்சிதான் (திரிணமூல் காங்கிரஸ்). தென் மாநிலங்களில் கர்நாடகத்தைத் தாண்டி பாஜக வேர்பிடிக்க முடியாமல் தடுத்துக்கொண்டிருப்பவையும் மாநிலக் கட்சிகள்தான். அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் பாஜகவுக்கு வலுவான போட்டியைத் தரக்கூடியவையும் மாநிலக் கட்சிகள்தான்.

அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் – மிகவும் ஆபத்துக்கு உள்ளாகிவிட்ட அம்சமான – மதச்சார்பின்மையை சேதமின்றி காப்பாற்றிக்கொண்டிருப்பது மாநிலக் கட்சிகளின் துணை தேசியம்தான்.

தெற்கில் கேரளம் முதல் தமிழ்நாடு வரையிலும் கிழக்கில் வங்காளத்திலும், ஏன் இப்போது இந்தி பேசும் மாநிலமான பிஹாரிலேயேகூட பாஜகவுக்குக் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதிலும் ஐக்கிய ஜனதா தளம் போன்றவை மதரீதியிலான பிரிவினை முயற்சிகளை எதிர்த்து உறுதியாக நிற்கின்றன. முஸ்லிம்களைப் பாகுபடுத்தும் குடியுரிமை (திருத்த) சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே திமுக அரசு தீர்மானம் இயற்றிக் கண்டித்தது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

2022-ல் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றப்போவது துணை தேசிய அரசியல் இயக்கங்கள் என்பது மட்டுமல்ல, நாட்டையே வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லப்போவதும் அவைதான்.

கரோனா பெருந்தொற்று மனிதர்களுக்கு தாங்க முடியாத துயரங்களை அளித்துவருகிறது. இருப்பினும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கும், 'பிரதான் மந்திரி போஷன் அபியான்' என்று பெயர் மாற்றப்பட்ட மதிய உணவுத் திட்டத்துக்குமான ஒதுக்கீடுகளை மோடி அரசு கணிசமாக வெட்டிவிட்டது.

பெருந்தொற்றால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இடைநிற்றல் அதிகமாகியுள்ளபோதும் கல்விக்கான ஒதுக்கீடும் அவ்வாறே குறைக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரரீதியாக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உச்சத்துக்கு சென்றிருக்கின்றன. உயர் வருவாய்ப் பிரிவு படிநிலையில் மேல்தட்டில் இருக்கும் 1% பேர், தேசிய வளத்தில் 45%-க்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர். கீழ்நிலையில் இருப்போரில் 50% பேரின் மொத்த சொத்து மதிப்பைக் கூட்டினாலும் 2.8%தான் வருகிறது.

சமூகநலத் திட்டங்கள் இந்திய அரசின் தேசிய முன்னுரிமையாக என்றுமே இருந்ததில்லை. அதிகாரப் பட்டியல் பிரிவினையைப் பார்த்தாலே இது புரிந்துவிடும். ஒன்றிய அரசு பெரும்பாலான முக்கிய துறைகளைத் தனக்கென்று ஒதுக்கிக்கொண்டுவிட்டு, கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகளை மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்றிவிட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்கள் அடைந்துள்ள வளர்ச்சிக்கு வலுவான துணை தேசிய உணர்வும் கொள்கைகளும்தான் காரணம் என்று நான் மேற்கொண்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  முற்போக்கான சமூகக் கொள்கைகள்தான் கல்வி, சுகாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கின்றன. சமூக நலத் திட்டங்களுக்கும் மாநிலங்களின் துணை தேசிய உணர்வுகள்தான் இந்தியாவுக்கு உந்துசக்தியாகத் திகழப்போகின்றன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பிரேர்ணா சிங்

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகப் பேராசிரியர், இந்திய மாநிலங்களின் அதிகாரத்துக்காக வாதாடும் ஆய்வறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். 'ஹவ் சாலிடாரிட்டி வொர்க்ஸ் ஃபார் வெல்ஃபேர்: சப் நேஷனலிஸம் அண்டு சோஷியல் டெவலப்மென்ட் இன் இந்தியா' (How Solidarity Works for Welfare: Subnationalism and Social Development in India) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshkumar    2 years ago

வணக்கம் ஐயா... துணைதேசியம் என்றால் என்ன? இந்தியா என்பது ஒரு தேசியமா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பெண் சிசுக் கொலைமுடி உதிர்வு18 லட்சம் வீடுகள்ஆசை பேட்டிதீவிரவாதம்நிகில் டே கட்டுரைமரிவாலாவரதட்சணைசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைலக்‌ஷ்மி ராமச்சந்திரன்ஆட்சிப் பணியும் மொழி ஆளுமையும்முகைதீன் மீராள்நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தௌலீன் சிங் கட்டுரைசமாஜ்வாதி கட்சிஇந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!அரசனே வெளியேறுமுரசொலி கலைஞர்ஷோயப் தன்யால் கட்டுரைதேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?பெவிலியன் முனைவிஹாங் ஜும்லெகட்டா குஸ்திசோழர்கள் இன்று: முரசொலி சொல்லும் செய்தி என்ன?5ஜி நெட்வொர்க்சிந்தனை வளம்மழைஅருஞ்சொல் எல்.ஐ.சி.பிஹாரிகள்புகழ்ச்சிக்குரியவர் இயான் ஜேக்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!