கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு

கூட்டாட்சியத்தின் ஆன்மா எது?

23 Sep 2021, 12:00 am
1

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் காணப்பட்ட ஒருதலைப்பட்சம் குறித்துப் பல்வேறு மாநில அரசுகள் கவலை தெரிவித்தன. பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்து மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாகச் சட்டம் இயற்றியது என்பது கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றுவதாக இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மாநிலப் பட்டியலிலும் பொதுப் பட்டியலிலும் உள்ள விஷயங்களை ஒன்றிய அரசு கைப்பற்றிக்கொள்வதற்கு எதிராகத் தமிழ்நாடு முதல்வர் பிற மாநில முதல்வர்களுடன் பேசினார். மின்சார (திருத்த) சட்டம் - 2020-க்கு எதிராகக் கேரளச் சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றமும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு பல சட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கூட்டாட்சித் தத்துவங்களை வலுவிலக்கச் செய்திருக்கும் வேளையில் மாநிலங்களும் சட்டமன்றங்களும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

ஓராண்டுக்கு முன்பு, மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமல் வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்தச் சட்டங்கள், அடிப்படையாக மாநிலப் பட்டியலின் பதிவு 14-ஐ (வேளாண் பிரிவு) சேர்ந்தவையாகும். அவை, பொதுப் பட்டியலின் பதிவு 33-ஐ (வணிகம் மற்றும் வர்த்தகம் பிரிவு) சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றம் பாம்பே மாநிலம் எதிர் எஃப்.என்.பல்சாரா வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அளித்திருக்கும் தீர்ப்புகள், ஒரு விஷயம் மாநிலப் பட்டியலுக்கு உரியதாக இருக்கும் என்றால் மாநிலப் பட்டியலுக்கே அதிக அதிகாரம் கொடுக்கின்றன.

வேளாண்மை சார்ந்த விவகாரங்களைக் கையாள்வதற்குச் சட்டரீதியான வல்லமை இல்லாதபோதும்கூட நாடாளுமன்றத்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கோடி விவசாயிகளுடன் தொடர்புள்ள ஒரு விஷயத்தில் பலரையும் கலந்தாலோசிக்காததும்கூட இந்தியாவின் தெருக்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற வழிவகுத்தது; அந்தப் போராட்டங்கள் இன்னமும் தொடரவே செய்கின்றன.

உள்ளூர்ச் சட்டங்கள் தேவையற்றுப் போகின்றன

பெரும் துறைமுகங்கள் சட்டம் - 2021, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டபோது பாஜகவால் ஆளப்படும் கோவா அரசாங்கமே அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அது, ‘கோவா டவுன் அண்டு கன்ட்ரி பிளானிங் சட்டம்’, ‘கோவா ஊராட்சிகள் சட்டம்’, ‘கோவா பஞ்சாயத்து ராஜ் சட்டம்’, கோவா மனை-நிலம் மேம்பாடு மற்றும் கட்டிடம் கட்டுதல் விதிமுறைகள் - 2010, கோவா நில வருமான விதிமுறை உள்ளிட்ட ஏற்கெனவே உள்ள உள்ளூர்ச் சட்டங்களைத் தேவையற்றதாக ஆக்கிவிடும் என்று கூறியது.

சிறிய துறைமுகங்களைப் பொறுத்தவரை அவை பொதுப் பட்டியலின் பதிவு 31-ல் வைக்கப்பட்டிருக்கின்றன. சிறிய துறைமுகங்கள் தொடர்பான இந்தியத் துறைமுகங்கள் சட்டம் - 1908-ஐப் பொறுத்தவரை சிறிய துறைமுகங்களின் செயல்பாடும் கட்டுப்பாடும் மாநில அரசுகளின் எல்லைக்குள்தான் இருக்கின்றன. எனினும், இந்தியத் துறைமுகங்கள் மசோதா - 2021-ன் புதிய வரைவானது சிறிய துறைமுகங்களைத் திட்டமிடுதல், மேம்படுத்துதல், கட்டுப்படுத்துதல் போன்றவற்றை மேரிடைம் ஸ்டேட் டெவலப்மென்ட் கவுன்சிலின் (எம்எஸ்டிசி) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுசெல்ல உத்தேசித்திருக்கிறது. இந்த கவுன்சிலானது ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படுவது. சிறிய துறைமுகங்களின் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் இந்த மசோதாவுக்கு ஒடிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் போன்ற கடற்கரை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. 

வங்கம், தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் மின்சார (திருத்த) மசோதா - 2020-ஐ எதிர்த்துவருகின்றன. மின்சாரம் தொடர்பான பிரிவைப் பொதுப் பட்டியலின் பதிவு 38-ல் அடையாளம்காண முடியும். மின் துறையை ஒழுங்காற்றுவதற்கான அதிகாரமானது மாநில மின்சார ஒழுங்காற்று ஆணையங்களிடம் (எஸ்ஈஆர்சி) இருக்கிறது. இந்த ஆணையங்கள் மாநில அரசால் நியமிக்கப்படுபவர்களால் நிர்வகிக்கப்படுபவை. எனினும், உத்தேசித்துள்ள சட்டத் திருத்தமானது மின்சாரம் தொடர்பான அதிகாரத்தை அந்த ஆணையத்திடமிருந்து பிடுங்கி, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்களே பெரும்பாலும் இருக்கும் விதத்தில் அமைக்கப்படும் தேசிய தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இந்தத் தேர்வுக் குழுதான் மாநில மின்சார ஒழுங்காற்று ஆணையங்களுக்கு நியமனங்களைச் செய்யும். மேலும், இந்தச் சட்டத் திருத்தமானது மைய அமைப்பால் நியமிக்கப்படும் ‘மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணைய’த்தை (ஈசிஈஏ) நிறுவுவதை உத்தேசித்துள்ளது. இந்த ஆணையமானது மின் விற்பனை, கொள்முதல் போன்றவை தொடர்பான விஷயங்களில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுப்பாடு கொண்டிருக்கும்.

நடைமுறையில், மின் துறை மீதான அதிகாரமானது அரசின் கையிலிருந்து பிடுங்கப்படும் என்பதுதான் இதன் அர்த்தம். இது தவிர, மாநில அரசின் ஒப்புதல் இன்றித் தனியார் துறைக்கு உரிமம் வழங்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன.

கவலைக்குரிய விஷயம்

பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள் மீது ஒன்றிய அரசின் கட்டுப்பாடு தொடர்வது மிகுந்த கவலைக்குரிய விஷயம். ஏனெனில், இது அரசமைப்புச் சட்டத்தின் சமநிலையைத் தலைகீழாக்கம் செய்வதாகும். இந்திய அரசுச் சட்டம் - 1935-ல் இடம்பெற்ற மாதிரியைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பிகள் பின்பற்றினார்கள். ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான அதிகாரங்களைத் தருவதன் மூலம் சில விஷயங்கள் பொதுப் பட்டியலில் வைக்கப்பட்டன.

பொதுப் பட்டியலில் உள்ள புலங்கள் (fields) ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பொதுவானவையாக வைக்கப்பட்டன. பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் சீராக நாடு முழுவதும் வைக்கப்பட்டன. எனினும், அரசமைப்பு நிர்ணய அவையின் உறுப்பினர்களுள் ஒருவரான கே.டி.எம்.அஹ்மது இப்ரஹீம் சாஹீப் பஹதூரின் அச்சங்களுள் ஒன்று உண்மை ஆகியிருக்கிறது. ஏனெனில், ஒன்றிய அரசின் யதேச்சாதிகாரத்தனத்தால் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவருகின்றன.

“பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் ஒத்துழைப்பும் பரஸ்பரம் கருத்துக் கேட்பும் இருக்க வேண்டும்” என்று சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள் மீது ஒன்றிய அரசு தன் அதிகாரத்தைச் செலுத்தும்போது தேசிய அளவிலான அடிப்படை விஷயங்களில் ஒரு சீர்மையை நிலவச் செய்வதுடன் தனது எல்லையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘அரசமைப்பின் செயல்பாட்டைச் சீராய்வதற்கான தேசிய ஆணையம்’ (என்சிஆர்டபிள்யுசி), அல்லது வேங்கடாச்சலய்யா ஆணையமானது அரசமைப்புச் சட்டக்கூறு 263-ன் கீழ் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான குழு மூலம் மாநிலங்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.

எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், மாநிலங்களெல்லாம் ஒன்றியத்தின் ஒட்டுறுப்பு அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மாநிலங்களின் அதிகாரம் நசுக்கப்படாமல் இருப்பதற்கு ஒன்றிய அரசு உத்தரவாதம் தர வேண்டும். மக்கள் நலன் காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே அரசமைப்புச் சிற்பிகளின் நோக்கமாகும். அதற்கான அடிப்படையானது அனைவருடைய கருத்துகளையும் கேட்பதில் அடங்கியிருக்கிறது. கலந்தாலோசனை, பேச்சுவார்த்தை போன்றவைதான் கூட்டுறவுக் கூட்டாட்சியத்தின் அடிப்படைகளாகும். மாநிலங்களைக் கலக்காமல் யதேச்சாதிகாரமாகச் சட்டங்கள் இயற்றுவது மேன்மேலும் மக்களைத் தெருவில் இறங்கிப் போராடவே வைக்கும்.

தமிழில்: வி.பி.சோமசுந்தரம்பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

யஸோ   1 year ago

எவ்வளவு தான் நல்ல நோக்கங்கள் இருந்தாலும் கூட மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு குறுக்கு வழியில் புகுவது தவறே. அது இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கை இழப்புக்கே இட்டுச்செல்லும். நல்ல கட்டுரை ஆனாலும் மொழிபெயர்ப்பில் சிறு சரளமின்மை இருக்கிறது. முந்தைய மொழிபெயர்ப்புகளை சாரி அவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

கும்ப்ளேகொலிஜியம்கல்லீரல்பாரதி 100தனியார் மருத்துவக் கல்லூரிகள்மறை ரத்தம்இந்து முன்னணிபொது விநியோகத் திட்டம்கெளதம் அதானிவிவாசாயிகள் போராட்டம்kelvi neengal pathil samasசர்வதேச வங்கிகள்குடிசை மாற்று வாரிய வீடுகள்பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்சமஸ் வள்ளலார் கட்டுரைமொழிவாரி மாநிலங்கள்மதம் 2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாது-சேஷாத்ரி தனசேகரன் எதிர்வினைஆரிய வர்த்தம்அருந்ததி ராய் அருஞ்சொல்சின்னம்மாதகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?தொழில்நுட்ப அறிவுமூட்டுத் தேய்மானம்கடுமையான வார்த்தைகள்அல்சர் துளைசு.வெங்கடேசன்ஊடகர் கலைஞர்பழகுதல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!